எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

——————————————————————————————————————————————————

மே, 2023 மாத சிறந்த சிறுகதை –“ ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்.” – மா காமுதுரை –ஆனந்த விகடன் 24-05-2023.

————————————————————————————————————————————————-

50 வருடங்களுக்கு மேலாக மாதம் தோறும் சிறந்த சிறுகதை தேர்வு செய்து , பின் வருட முடிவில் 12 கதைகளில் ஒன்றை வருடத்தின் சிறந்த சிறுகதையாக தேர்வு செய்து , பரிசு , நூல் வெளியீடு என சிறப்பாக இயங்கி வந்த இலக்கிய சிந்தனை அமைப்பு இதனைtத் தொடர இயலாமல் போனது வருத்தமான செய்தி. அந்த பாரம்பரியத்தை இப்போது முன்னெடுத்துச் செல்லும் சிறப்பான பணியை குவிகம்-திருமதி சிவசங்கரி இணைந்து  ஜூலை 22 இல் தொடங்கி, 10 மாதங்கள் ஒடி விட்டன.  மாதா மாதம் 50 இலிருந்து 70 வரை அந்தந்த மாதச் சிறுகதைகளைப் படித்து , ஒரு குறும் பட்டியல் தயாரித்து , பின் சிறந்த சிறு கதை தேர்வு செய்கிற பணியை எனக்கு முன்னால் செவ்வனே செய்த ,சுவாமி நாதன், சுந்தரராஜன், லதா ரகுநாதன், ராஜாமணி,சுரேஷ் ராஜகோபால், சாந்தி ரசவாதி, ஆன்சிலா பர்னான்டோ, அழகிய சிங்கர், கிரிஜா பாஸ்கர், ஈஸ்வர் எல்லோருக்கும் என் நன்றிகள்.

எனக்கு 51 சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. சில சிறுகதைகள் கைவசம் கிட்டாமலும், கவனத்தில் வாராமலும் போயிருக்கக் கூடும். 51 லிருந்து, 7 சிறுகதைகள் என ஒரு குறும் பட்டியல் வரை வந்து, பின் அதில் மே23 இன் சிறந்த சிறுகதையை தேர்வு செய்துள்ளேன்.

மாதம் பூரா வந்த 51 சிறுகதைகள் ஒரு சேர வாசிக்கக் கிடைத்தது ஒரு அருமையான வாய்ப்பு. குறும் பட்டியலின் 6 சிறுகதைகள் பற்றி சொல்லி விட்டு ,இறுதியில் மாதச் சிறந்த சிறுகதை பற்றிச் சொல்கிறேன்.

1.குறி – -இமையாள்-ஆனந்த விகடன் 03-05.23.

குறி கேட்டு காணாமல் போனவனைக் கண்டு பிடிக்க முடியமா? என கிண்டலாகக் கேட்க ஆரம்பிக்கிற கதை சொல்லி , எப்படி குறி சொல்கிற மூர்த்தியைத் தேடி, பின் காணாமல் போன ரங்கன் பற்றி குறி கேட்கப் போன கதையை சுவாரசியமாகச் சொல்கிறார். ரங்கன் இருக்குமிடம் சரியாகச் சொல்லப்பட்டு, ரங்கன் வீடு திரும்பி அசட்டுத் தனங்கள் மாறி, பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றியும் பெறுகிறான். எல்லாம் மூர்த்தியின் அருள் வாக்குதான் என எல்லோரும் பாராட்ட, கதையின் இறுதி பாராக்களில் ஒரு வித்யாசமான முடிவோடு கதை முடிகிறது.

2. இடைவெளி – சிந்துஜா திண்ணை 15.05.23.

கல்லூரிப் பரீட்சை முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கிற எதிராஜ், தன் வீட்டில் எதிர் கொள்ள நேர்கிற தேவானை என்கிற இளம்பெண்- அவன் வீட்டில் வேலை செய்கிற செல்லாத்தாவின் மகள் – இவர்களைப் பற்றி ஒரு இளநகையோடு சொல்லப்பட்ட அழகான கதை.

3. சாப்பாடு- டாக்டர். ஜெ. பாஸ்கரன் – தினமணி கதிர் 21-05-23.

வீட்டுவேலை செய்ய வரும் கஸ்தூரிக்கு, வீட்டுக்கார ஜானகிஅம்மா , சூடான சோறு, குழம்பு , பொறியல், எல்லாம் ஒரு தட்டில் வைத்து சாப்பிடச் சொல்வதில் ஆரம்பிக்கிறது கதை. ஜானகி அமமாவின் இரு மகள்கள் – ரேணு, ப்ரிதம்- இருவரும் அம்மாவுடன், ஏன் வேலைக்காரி கஸ்தூரி அவர்களோடு சாப்பாடு மேசையில் அமர்ந்து சாப்பிடக் கூடாது? என விவாதம் செய்கிறார்கள், ஓரு முறை மேசையில் அமர்ந்து சாப்பிட பின் மறு முறை மறுக்கிறாள் கஸ்தூரி. அதற்கு அவள் சொல்லும் காரணம் , சிந்தனை தூண்டும் விதமான கருத்து சொல்லப்பட்டு முடிகிற வித்யாசமான சிறுகதை.

4. துணை வரும் நிழல் – ஹேமி கிருஷ் – ஆனந்த விகடன்- 17-05-23.

தன் கூடவே தன் துணையாக வரும் நிழல் போல தன் மீது அன்பு கொண்டவர்கள் கூடவேயிருந்து உதவிகள் செய்வது, வாழ்வின் பிரச்னைகளைக் கடக்க கை கொடுக்கும். யாழினியின் அப்பா மருத்துவமனையிலிருக்க, அவளின் முன்னாள் காதலன் வந்து உதவிகள் செய்கிறான். அவள் பி.எப் கடன் வாங்கி, தன் அப்பாவின் வீட்டுக் கடனை அடைத்து வீட்டை மீட்டு, அப்பாவுக்கு ஆச்சரிய அதிர்ச்சி அளிக்கிறாள். அவள் அப்பாவின் வலியை மீறி , மின்னல் கீற்று போல ஒரு மகிழ்வை அவர் முகத்தில் பார்க்கிறாள். மிகச் சிறப்பாகச் சொல்லப் பட்ட கதை. மனதுக்குப் பிடித்த ஒரு பாடல் வரியைக் கேட்டபின் மனம் பூரா அந்த வரிகள் ஓடிக் கொண்டேயிருக்கும். அதே மாதிரியான உணர்வை எழுப்புகிற கதை.

5. வெத்தலப்பட்டி – தெரிசை சிவா- சொல்வனம் 28-05-23

57 தடவை அடிமைப் பெண் படத்தைப் பார்த்த எம் ஜி ஆர் பக்தர் துரைப் பாட்டா, கால் ஊனமுற்றவர், கால்ல இருக்க ஊனத்தைப் பார்த்து கிடைச்ச வேலை, மயிருக்குச் சமானம் எனச் சொல்லிவிட்டு பெட்டிக்கடை வைத்து வாழ்கிறவர். இளம்பிராயத்தில் திருமணம் செய்யாமல், சம்பாதித்த பணத்தை ஊதாரித் தனமாக செலவு செய்த துரைப்பாட்டா, இரவானால், தண்ணியடிக்காமல் இருந்ததில்லை, மாதம் நான்கைந்து முறை ”பெண்” கூடுதலும் உண்டு. அப்படியொரு பெண்ணை வெத்தலப்பட்டியில் சந்தித்த துரைப்பாட்டா, அவளை வருடங்கள் கழித்து, அவள் பெண்ணோடு தன் பெட்டிக்கடையில் நேர் கொள்கிற வித்யாசமான கதை. ஒரு வித்யாசமான பின்னணியில், கிண்டல் தொனியோடு நகைச்சுவை ஊடாடச் சொல்லப்பட்ட சிறந்த கதை.

6. பனிக்கரடியின் கனவு- எஸ் ராமகிருஷ்ணன்- உயிர்மை-மே 2023.

வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றி வரும் தயாபரன், பணி அழுத்தத்தில், ஒரு இரவு தூங்கி விழிக்கும் போது ஒரு பனிக்கரடியாக மாறிவிடுகிறார். பனிக்கரடியாக மாறிய தயாபாரனின் அனுபவங்களை மிகை யதார்த்த (surrealistic) பாணியில் சொல்லப்பட்ட வெகு வித்யாசமான சிறந்த கதை. இப்படியெல்லாம் எப்படி நடக்க இயலும் என கேள்வி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தாலும், பனிக்கரடி வட்டாட்சியராக வேலை செய்தால், மற்றவர்கள் எப்படி அதற்கு எதிர்வினையாற்றுவார்கள் என யதார்த்தமாகச் செல்கிற கதை அந்தப் பனிக் கரடி ஒரு நாள் காணாமல் போவதாக முடிகிறது.

7. ஒரு துளி நெருப்புக்குக் காத்திருக்கும் யாக குண்டங்கள்- மா காமுதுரை – ஆனந்த விகடன்- 24-05-23.

சிறுகதையின் தலைப்பே ஒரு கவிதை போல யோசிக்க வைக்கிற தலைப்பு. “வெள்ளம் வந்தமிழ்ந்த வயல்காடாய் மூச்சடங்கிக் கிடந்தது கல்யாண மண்டபம்.” என்கிற ஓவியம் போல வர்ணிக்கிற வரிகளோடு தொடங்குகிறது கதை. அதிகாலையில் மணப்பெண் காணாமல் போன சேதி வந்து கல்யாண மண்டபத்தின் இயக்கங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து போன நேரத்தில், கல்யாணச் சமையல் வேலை பார்க்க வந்த தனத்தின் பார்வையில் சொல்லப்பட்ட கதை. காணாமல் போன கல்யாணப் பெண்ணைத் தேடிப் போனவர்கள் திரும்பிவந்து கல்யாணச்சாப்பாடு கேட்காவிட்டாலும், சமைத்து வைத்தால் அனாதை ஆசிரமப் பிள்ளைகளாவது சாப்பிடட்டும் என தனம் சமைக்கிறாள். மாப்பிளை பிடிக்காமல் ஒடிப்போன கல்யாணப் பெண்ணின் தைரியத்தை உள்ளூர மெச்சுகிற தனம், தன் 18 வயதில் வேலையில்லாத பூபதியை கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்ததை நினைத்துப் பார்க்கிறாள். தன் உடன் பிறந்த அக்காளின் கணவரின் குடும்பத்தில் வாக்கப்பட்ட அவள் குடும்பத்தைக் காப்பாற்ற எல்லாவிதமான வேலைகளும் செய்ய வேண்டிதாயிருக்கிறது. அவள் விருப்பம் கேட்கப்படாமல் நடந்த கல்யாண வாழ்வின் கஷ்டங்கள் அவளை தனக்கு ஏன் தைரியம் வாராமல் போச்சு என எண்ண வைக்கிறது. பொண்ணு இருக்க இடம் தெரிஞ்சிடுச்சாம் என கூட வேலை பார்க்கும் கௌசி சொல்வதைக் கேட்டு தனத்தின் கைகள் நடுங்குகின்றன. “ கடவுளே, பொண்ணுப்பிள்ள ஆர் கண்ணுக்கும் சிக்கக்குடாது, பாவம்!!” என மனசுக்குள் பிரார்த்திக்கிறாள். சிறிது கூட குரலை உயர்த்தாமல், பெண்ணின் சம்மதம் கேளாமல் கல்யாணம் செய்வதின் பிரச்னைகளை கேள்வி கேட்க வைக்கிற, சிறப்பாகச் சொல்லபட்ட சிறுகதை.

  இந்தச் சிறுகதையை மே 2023 இன் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்கிறேன்.

 – மதுவந்தி.