
ஆத்தி சூடிய கூத்தப் பெருமான்
கீர்த்தி பாடக் கிட்டும் இன்பமே.
அன்பே சிவம்
ஆலயம் பேணு
இன்தமிழ் பாடு
ஈனர்சொல் கேளேல்
உண்மையை நாடு
ஊனுணல் தவிர்
எழும்போது ஏத்து
ஏழைமை ஒழி
ஐந்தெழுத்து ஓது
ஒண்பொடி பூசு
ஓயாது உதவு
ஔடதம் அரன்பேர்
அஃதே உய்வழி
ஆத்திமலரை அணிந்த நடராஜப் பெருமானது புகழைப் பாடினால் நமக்கு இன்பம் கிடைக்கும் / நம்மை இன்பம் வந்தடையும்;
- அன்பே சிவம்
அன்பும் சிவமும் ஒன்றே.
(திருமந்திரம் – “அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்”);
2. ஆலயம் பேணு
கோயில்களைப் போற்று; கோயிலுக்குச் சென்று வழிபடு; (பேணுதல் – போற்றுதல்; பாதுகாத்தல்; மதித்தல்; வழிபடுதல்);
3. இன்தமிழ் பாடு
(தேவாரம், திருவாசகம், முதலிய) இனிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடு;
4. ஈனர்-சொல் கேளேல்
கீழோர்களது பேச்சைக் கேட்பது கூடாது. (ஈனர் – இழிந்தோர் – கீழோர்); (கேட்டல் – ஏற்றுக்கொள்ளுதல்; கேளேல் – கேளாதே);
5. உண்மையை நாடு
சத்தியத்தை விரும்பு; ( நாடுதல் – விரும்புதல்);
6. ஊன் உணல் தவிர்
புலால் உண்பதைத் தவிர்க்கவேண்டும்; (உணல் – உண்ணல் என்பதன் இடைக்குறை);
7. எழும்போது ஏத்து
காலையில் துயிலெழும்பொழுது இறைவனைத் துதி; (ஏத்துதல் – துதித்தல்);
8. ஏழைமை ஒழி
அறியாமையை / வறுமையைத் தீர்; (ஏழைமை – அறியாமை; வறுமை);
9. ஐந்தெழுத்து ஓது
“நமச்சிவாய” என்ற திருவைந்தெழுத்தை ஓது; (ஓதுதல் – சொல்லுதல்; ஜபம் செய்தல்);
10. ஒண்-பொடி பூசு
திருநீற்றைப் பூசு; (ஒண்-பொடி – ஒளியுடைய திருநீறு);
11. ஓயாது உதவு
எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்;
12. ஔடதம் அரன்-பேர்
சிவபெருமானது திருநாமம் மருந்து ஆகும்; அது நம் பிறவிப்பிணியையும் தீர்க்கும்; (ஔடதம் – ஔஷதம் – மருந்து);
13. அஃதே உய்-வழி
அதுவே (சிவபெருமான் திருநாமமே) நாம் உய்யும் நெறி ஆகும்; (உய்தல் – ஈடேறுதல்);
அரன் ஆத்திசூடி – (மெய்யெழுத்துகள்)
முக்கணன்-புகழ் மொழி
இங்கிதம் அறி
இச்சகம் காக்க
அஞ்சுவது அஞ்சு
துட்டரை நீங்கு
வெண்ணீறு அணி
உத்தமரோடு இணங்கு
செந்தமிழ் ஓது
அப்பனுக்கு ஆட்செய்
இம்மையின் பயன் அறி
வெய்யசொல் சொல்லேல்
நேர்மை தவறேல்
வல்லவாறு உதவு
ஒவ்வாதது உண்ணேல்
வீழ்புனல் சேமி
உள்ளுக நல்லதே
பெற்றோரைப் பேணு
பொன்னடி போற்றி வாழ்
- முக்கணன்-புகழ் மொழி
மூன்று கண்களையுடைய பெருமானது புகழைச் சொல்;
2. இங்கிதம் அறி
சமயோசிதமாக நடந்துகொள்; இங்கே எது நன்மை தரும் என்று அறிந்து செயல்படு;
3. இச்சகம் காக்க
இந்த உலகைப் பாதுகாக்க;
4. அஞ்சுவது அஞ்சு
பழி, பாவம், கேடு, முதலிய அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிவுடைமை;
5. துட்டரை நீங்கு
தீயோர்களிடமிருந்து விலகி இரு; (துட்டர் – துஷ்டர் – தீயவர்கள்);
6. வெண்ணீறு அணி
திருநீற்றைப் பூசு;
7. உத்தமரோடு இணங்கு
மேன்மக்களோடு (நற்குணம் உள்ளவர்களோடு) நட்புக்கொள்; (இணங்குதல் – நட்புக்கொள்ளுதல்);
8. செந்தமிழ் ஓது
தேவாரம், திருவாசகம் முதலிய சிறந்த நன்மை தருகின்ற தமிழ்ப்பாமாலைகளைக் கற்றுப் பாடு;
9. அப்பனுக்கு ஆட்செய்
எல்லாருக்கும் தந்தையான ஈசனுக்குத் தொண்டுசெய்;
10. இம்மையின் பயன் அறி
இந்த மனிதப்பிறவி பெற்றதன் பயனை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்;
11. வெய்யசொல் சொல்லேல்
கடுஞ்சொற்களைச் சொல்லாதே; (வெய்ய – கொடிய);
12. நேர்மை தவறேல்
எப்பொழுதும் நேர்மையைக் கடைப்பிடி; (நேர்மை – உண்மை; நீதி; அறம்);
13. வல்லவாறு உதவு
இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்; (வல்லவாறு – இயன்ற அளவில்);
14. ஒவ்வாதது உண்ணேல்
உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியதை உண்ணாதே;
15. வீழ்புனல் சேமி
மழைநீரை வீணாக்காமல் குளங்களிலும் ஏரிகளிலும் சேமிக்கவேண்டும்; (Rainwater harvesting); (வீழ்தல் – விழுதல்); (புனல் – நீர்);
16. உள்ளுக நல்லதே
நல்லதையே நினை; (உள்ளுதல் – நினைதல்);
17. பெற்றோரைப் பேணு
(ஔவையார் – ஆத்திசூடி – “தந்தைதாய்ப் பேண்”)
18. பொன்னடி போற்றி வாழ்
ஈசனது பொன் போன்ற திருவடியை வணங்கி இன்புற்று வாழ்;
