கோஸ்டி

உண்மையில் பேய் படமே இல்லை..காட்டப்படுவதும் காமெடி பீஸ்கள்! ஆனாலும் சின்னச்சின்ன காமெடி காட்சிகளும் வசனங்களும் பொழுது போக பெரும் உதவி! காஜல் அகர்வால் ஃபிட் காவல் அதிகாரி ஆர்த்தியாக அழகு. பழம் பெரும் நடிகர்கள் கே எஸ் ரவிகுமார், சந்தானபாரதி போன்றோர் துணைக்கு வர, தவிர்க்க முடியாத யோகி பாபுவும் கிங்ஸ்லீயும் இதில் உண்டு! பெரிய நடிகர்கள் கூட காமெடிக்கு ஒத்துழைப்பது ஆரோக்கியமாக உள்ளது. ஊர்வசி பிச்சு உதறுகிறார். பார்த்து சிரிக்க வேண்டிய படம்! திரைக்கு வந்த சுவடே இல்லை. ஆனால் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!
காமெடிப் படங்களுக்கு காமெடியன்கள் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது தமிழ் திரையுலகில். ஹாரர் காமெடி படம் என்று எடுக்கப்பட்ட இப்படம் பயமுறுத்தவும் இல்லை. விலா கிள்ளவும் இல்லை. இயக்குனர் கல்யாண் மாத்தி யோசிக்க வேண்டிய நேரம் இது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ரசனையற்ற, இழுவையான காட்சிகள் கொண்ட படம் கடந்து போக வேண்டியது – நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்.
ஏன் இந்தப் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டார்? – டெக்கான் ஹெரால்ட்.
தீர்க்கதரிசி

சொல்ல வந்த கருவுக்கு உண்மையாகவும் நெருக்கமாகவும் இருப்பதால் இந்தப் படம் ஒரு முறை பார்க்கலாம் எனும் அந்தஸ்த்தைப் பெறுகிறது. குற்றம் நடக்கும் முன்பே தகவல் தெரிவிக்கும் அனாமதேய ஆசாமி யார்? அவனே தான் கொலைகாரனா எனும் ரீதியில் பல ஆங்கில கொரிய படங்கள் வந்தாலும் தமிழுக்கு இது புதுசு. அஜ்மலும் சத்யராஜும் நம்மை இருக்கையில் உட்கார வைக்கிறார்கள். புலனாய்வு திரில்லர்கள் சரியான திரைக்கதை இருந்தால் மட்டுமே கட்டிப் போடும். சில காட்சிகள் ரசிகனை ஒட்ட விடாமல் செய்வது இந்தப் படத்தின் குறை. ஆனாலும்..பார்க்கலாம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் கெத்து காட்டிய அஜ்மல், அப்புறம் சத்து குறைவான படங்களில் நடித்து மறக்கப்பட்டார். சில படங்களில் நடித்து நடித்து டேக் ஆஃப் ஆகாத ஜெய்வந்த், சிவாஜியின் பேரன் துஷ்யந்த்.. இந்த மூன்று நாயகர்களும் சேர்ந்து நடித்த படம். முட்டுக் கொடுக்க சத்யராஜ். படம் விடியலை காட்டுமா இந்த மூவர் கூட்டத்திற்கு? – தினமலர்.
குலசாமி

வழி தவறிய ஆடு போல பார்வையாளனை கூட்டிக் கொண்டு போகும் வித்தையை மறந்து இலக்கில்லாமல் எடுக்கப்பட்ட படம். சகோதரிக்கு நடந்த அநீதி மற்ற எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று போராடும் விமல், காக்கும் குலசாமியாக மாறும் அரதப் பழசு கதை, நளினமோ நகாசோ இல்லாமல் எடுக்கப்பட்டு சோதிக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
விஜய் சேதுபதி வசனம் என்று பெரிதும் பேசப்பட்ட படம், ஓடு தளத்தை விட்டு டேக் ஆஃப் ஆகவே இல்லை. – சினிமா எக்ஸ்பிரஸ்.
நல்ல கலைஞர் விமலுக்கு வரிசையாக சறுக்கு மரம்!
முஷ்டி

ஷார்ட் ஃப்ளிக்ஸ் தளத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய சமீபத்தில் வெளியான குறும்படம். எண்பது நிமிடம் ஓடும் இந்தப் படத்தை முக்கால் பெரும் படம் என்று கூடச் சொல்லலாம். பட்ஜெட் கம்மி. நிசத்தை சொன்னால் இவ்வளவு கம்மியா என்று ஆச்சர்யப்படுவீர்கள். இன்னும் பத்து நிமிடம் நறுக்கி இருந்தால்..அதுவும் முன் பாதியில்..இன்னமும் கூட செமையாக இருந்திருக்கும்! நவீன உலகில் டி.ராஜேந்தர் தான் இதன் இயக்குனர் கலேஷ். நடிப்பு, கதை வசனம், இயக்கம், கேமரா, எடிட்டிங் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார். ஆனாலும் லிங்கா எனும் கதை நாயகனாகவே அவரே நடிக்காமல் அறிந்த நடிகர் உதாரணத்திற்கு விஜய் சேதுபதி போன்றவரை நடிக்க விட்டிருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்.
பீமா எனும் டெரர் தாதாவிற்கு நாலு தம்பிகள். முதல் இரண்டு பின் இரண்டைப் போட்டுத் தள்ளி விட, விரக்தியில் வனவாசம் போகும் பீமா திரும்பி வந்து என்ன செய்கிறார் என்பது ஒன் லைன்.
இன்னும் கூட இழுத்துப் பிடித்திருந்தால் விருதுக்கு சிபாரிசு செய்ய வேண்டிய படமாக ஆகியிருக்கும். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
குட் நைட்

கணவன் குறட்டை விட்டால் தாம்பத்தியம் என்ன ஆகும் என்பது தான் இந்தப் படத்தின் ஒன்லைன். வித்தியாசமான கதைக்கருவுக்கு இயக்குனர் வினய் கே சந்திரசேகரனைப் பாராட்டலாம். இந்தக் கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக்க முடியுமோ அவ்வளவுக்கு ஆக்கி இருக்கிறார்கள். சகஜ வசனங்களே அரங்கில் கைக்த்தட்டலையும் சிரிப்பையும் அறுவடை செய்கின்றன. சின்ன கதை மாந்தர்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க திரைக்கதை வெகு அருமை. நடித்த கலைஞர்களும் மலர்ந்த முகத்தோடு இருப்பது ஃபீல் குட் குணாம்சம். நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டனின் யதார்த்த நடிப்பும் வசன உச்சரிப்பும் ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டுகிறது.நாயகி மீத்தா ரகுநாதன் நடிக்கிறாரா என்று ஐயம் வருமளவுக்கு பாத்திரத்தில் வெகு பொருத்தம். நல்ல நடிகர் என்று பல படங்களில் அறியப்பட்ட ரமேஷ் திலக் இதில் உச்சம் தொட்டிருக்கிறார். ஷான் ரோல்டனின் இசை படத்தை பல இடங்களில் சுவை கூட்டுகிறது. – யூட்யூப் வலைப்பேச்சு.
ஒரு கலகலப்பான பொழுதுபோக்குப் படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது குட் நைட். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
வாழ்க்கையின் சுவை வானத்தில் நடசத்திரமாக மணிகண்டன். – தி ஹிந்து.
இயக்குனர் வினாயக்கிற்கு பாராட்டுக்கள்..நல்ல கதையை எழுதியதற்கு மட்டுமல்ல! அதை வாசம் குறையாமல் திரையில் கொண்டு வந்ததற்கும் – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
சரியான நடிகர் தேர்வு. நல்ல திரைக்கதை. எப்பவாவது ஒரு கதையின் இதயம் சரியான இடத்தில் இருக்கும். இதில் இருக்கிறது. – இந்தியா டுடே.
ராவணக் கோட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் நீரின்றி கருவேலக்காடாக மாறியதை அழுத்தமாக சொல்ல வந்திருக்கிறார் இதன் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். முந்தைய படமான மதயானைக் கூட்டத்தில் யதார்த்த மனிதர்களைக் காட்டி இழுத்தவர் இதில் என்ன சொல்ல வருகிறார்?
சமூக அரசியலைப் பேச வந்த இயக்குனர் வழியில் திசையை தொலைத்து விட்டு அல்லாடி இருக்கிறார். சொல்ல வந்த விசயத்தின் உள்ளுக்குள் புகாமல், புதையாமல் மேலோட்டமாக மனித மனங்களின் தன்மையை அலசி விடுகிறது படம். அதனால் எங்கும் ஒரு முத்திரையை பதிக்க தவறிவிடுகிறது. சில சார்பு நிலைகளை எடுத்ததால், உச்சம் தொட வேண்டிய கதை வழுக்கி விழுகிறது. சாந்தனு பாக்யராஜ் தன் உழைப்பைக் கொட்டி இருக்கிறது. ஆனால் பலவீனமான திரைக்கதையும், காட்சிகளும் அவரை தோற்கடிக்கின்றன. பரியேறும் பெருமாளில் பார்த்த ஆனந்தியை மீண்டும் பார்க்கிறோம்..ஆனாலும் சோடையில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஃபர்ஹானா

கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களை ஊக்க தொகை கிடைக்கும் எனும் பஞ்சு மிட்டாயைக் காட்டி பாலியல் தொழிலுக்கு இழுக்கும் முடிச்சு. ஐஸ்வர்யா ராஜேஷைப் பொருத்தவரை எப்போதுமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன் உழைப்பை மிச்சமில்லாமல் கொடுப்பவர். இதிலும் அப்படியே! ஆனாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக திரைக்கதை எழுதி இருக்கலாம்; சில நுண் தகவல்களை காட்சிப்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. பொழுது போகவில்லை என்றால் பார்க்கலாம் எனும் வகைப் படம் இது! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
சில இடங்களில் வேகத்தடைகள் இருந்தாலும் எட்ட வேண்டிய உயரத்தை எட்டுகிறது படம். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தன் படங்களில் எலி பூனை விளையாட்டை வெகு நேர்த்தியாக காட்டுவார். இதிலும் அப்படியே. ஐஸ்வர்யாவின் தேர்ந்த நடிப்பில் மர்ம முடிச்சு மெல்ல அவிழும் கட்டங்கள் அசத்தல். ஜஸ்டின் பிரபாகரனின் இசை இன்னொரு மகுடக்கல்! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இறுக்கிக் கட்டப்பட்ட முடிச்சு. ஆனாலும் அது சொல்ல வந்த சேதியில் நிறைய குழப்பம். அற்புத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காப்பாற்றுகிறார் – இந்தியா டுடே.
ஒரு உரையாடல். அதைத் தொடர்ந்த சிறை. அதனால் ஏற்படும் அமைதியும் நெகிழ்வும்! இதுதான் ஃபர்ஹானா. – சினிமா எக்ஸ்பிரஸ்.
அருமையானா திரில்லர் – இந்தியா ஹெரால்ட்.
கஸ்டடி

வெங்கட்பிரபு இயக்கம். நாகசைத்யன்யா நடித்த தெலுங்கு படம் தமிழ் பேசுகிறது. மருத்துவ ஊர்தி ஓட்டுனராக இருக்கும் கதை நாயகனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. தன் ஊர்தியில் இருக்கும் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்பதே ஒரே லட்சியம். ஒரு கைதியை இட்டுச் செல்லும் இக்கட்டான பொறுப்பு அவருக்கு வர என்ன செய்தார் என்பது ஒன்லைன். லேசாக லோகேஷின் கைதி வாடை அடிக்கிறதா? இது அதன் உல்டா தான்! இயக்குனரே ஒரு பேட்டியில் சொன்னது: மலையாள நையாட்டு படத்தின் ஈர்க்கப்பட்டு வேறு கோணத்தில் சிந்திக்கப்பட்ட கதை இது! எஸ்.ஆர் பிரபுவின் ஒளிப்பதிவு செமையாக இருக்கிறது. நடித்த அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியா மணி போன்றோர் தன் அனுபவத்தை ஊன்றுகோலாக்கி முன்னேறுகிறார்கள். ஆனால் திரைக்கதை சரியாக எழுதப்படாததால் யாரும் ஈர்க்கவில்லை. இளையராஜா-யுவன் கூட்டணியில் பாடல்களும் இசையும் உயரம் எட்டாமல் இருப்பது வெங்கட்பிரபுவின் படமா என்று யோசிக்க வைக்கிறது. முதல் பாதியில் தோன்றும் பின் பாதி பரபரப்பை உணர முடியாமல் செய்து விடுகிறது. இது ஒரு சராசரி படம் – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
ஊகிக்க கூடிய திருப்பங்கள். ஆனால் படம் சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. சில சண்டை காட்சிகள் தெறிக்க விடுகின்றன. மொத்த படமும் நாக சைத்தன்யா, அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி தோள்களில். அவர்களும் முடிந்தவரை தாங்கி தூக்குகிறார்கள். ஸ்டண்ட் காட்சிகளோடு லேசான நெகிழும் தருணங்கள் இருக்கும் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் உங்களுக்கு இது சரியான லாக்கப்!- டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மோதலும் ஹூயூமரும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட நெல்லை பழரசன் கஸ்டடி. வெங்கட் பிரபுவின் சிறந்த படம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலரும் பார்க்க விரும்பக்கூடிய படம். சென்னை 28 போல அமரர் ஊர்தியை சுப விசேஷங்களுக்கு ஓட்டிச் செல்லும் ஒரு குடும்பம். தெலுங்குக்கு புதுசு. தமிழுக்கு அல்ல! – தி ஹிந்து.
ஹூயூமரா? இல்லை உச்ச நட்சத்திரத்திற்கான தீனியா என்று அல்லாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. கடைசி காட்சியில் எதிர்பாராமல் ஒரு நட்பு நட்சத்திரத்தை உள்ளே நுழைப்பது வெங்கட் பிரபுவின் ஃபார்முலா. இதிலும் உண்டு. ஆனால் அது வரவேற்பு செண்டா? – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
கதையில் உபகதைகள் அதிகம். ஆனால் அவை சுவையா உபாதையா? கதையின் உண்மை கருவை பாதியில் தொலைத்து விட்டு வழி தவறிவிடுகிறது படம். அதிக கொழுப்பை நீக்கி விட்டு சிக்ஸ் பேக் ஆக்கி இருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
பிச்சைக்காரன் 2

ஆபத்தை அறியாமல் மூளை மாற்று சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ளும் சாமானியன், தன்னுள் விதைக்கப்பட்ட பணக்காரனின் மூளையால் படும் அவஸ்தை தான் பிச்சைக்காரன் 2. நெகிழ வைக்கும் கையொலி பெற வைக்கும் தருணங்கள் முதல் பாகத்தைப் போலவே உண்டு என்றாலும், அவை குறைவான அளவில் இருப்பது குறை. எடுத்துக் கொண்ட கதை மூளை மாற்று என்பதால் நம்ப முடியாத சில காட்சிகள், ரசிகனை படத்தை விட்டு விலக வைக்கின்றன. விஜய் ஆன்டனி வழக்கம்போல நடிக்கவில்லை. ஆனாலும் எடிட்டிங்கில் நறுக்காக செயல்பட்டிருக்கிறார். படத்தின் உயர் ரசனை அழகியல் நம்மை இருக்கையில் உட்கார வைக்கிறது. காவ்யா தப்பார் தமிழ் திரைக்கு நல்ல வரவு. கொடுத்த பாத்திரம் நசுங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு சராசரி திரைப்படம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
வழக்கமான பார்முலாவின்படி எடுக்கப்பட்ட சராசரி படம். இது பிச்சைக்காரன் 1ன் தொடர்ச்சி அல்ல. தனியொருவன் – இந்தியா ஹெரால்ட்.
எடிட்டிங்கில் பட்டையைக் கிளப்பும் விஜய் ஆண்டனி, சண்டைக்காட்சிகளில் தெறிக்க விடுகிறார். படத்தின் குறை ஒன்று தான்! நல்ல பரபரப்பான காட்சிகளுக்கு நடுவில் காதலையோ உணர்வு பூர்வமான தருணங்களையோ நுழைத்தது தான். ஓடிடி தளத்தில் வந்திருந்தால் குடும்பங்களே கொண்டாடி இருக்கும். திரை அரங்குக்கு பேச்சுலர் வருகை தான்! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்

ஆஹா ஓடிடியில் வெளியான படம். தன்னுடைய நண்பனுடைய மரணத்திற்கு காரணமாக இருந்த நபர்களை திட்டம் போட்டு, கொல்ல எண்ணும் கதை நாயகி. இதன் இயக்குனர் தயாள் பத்மநாபனின் கொன்றால் பாவம் எனும் முந்தைய படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் தான் இதிலும் நாயகி. சின்னச் சின்ன முடிச்சுகளைப் போட்டு மர்மத்தை விதைத்து அதை புத்திசாலித்தனமாக அவிழ்த்த விதத்தில் இயக்குனரும் எடிட்டரும் கை கோர்க்கிறாகள். வரலட்சுமி, ஆரவ் கதாபாத்திரங்கள் மிக நுணுக்கமாக எழுதப்பட்ட விதத்தில் ஈர்க்கின்றன. நிச்சயமாக திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் – ஃபில்மி கிராஃப் அருண்.
எழுதியதை திரையில் காட்சியாகக் கொண்டு வரத் தவறி விட்டார் இயக்குனர் தயாள் பத்மநாபன். திருப்பங்கள் முடிச்சுகளும் எந்த ஒரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. – இந்தியா டுடே.
எடிட்டிங் எனும் பெயரில் கசாப்பு கத்தி போட்டதில், பொறுமையை சோதிக்கிறது படம். – தி ஹிந்து.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அடுத்த என்ன செய்யப் போகிறார் வரலட்சுமி என்று தெரிந்து விடுகிறது. பாத்திர வடிவமைப்பில் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி நமக்கு கிடைத்திருக்கும். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
நடுவாந்தர திரில்லர் நமக்கு வேலை வைக்காமல் எல்லா மர்மத்தையும் அவசரமாக அவிழ்த்து விட்டு நம்மை அலுப்பாக்கி விடுகிறது. – ஃபிலிம் கம்பானியன்.
நிறைய மர்ம முடிச்சுகள் இருக்குத்தான்..ஆனால் எதுவும் நம்மைக் கவர தவறிவிடுகிறதே – சினிமா எக்ஸ்பிரஸ்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மொகன் ராஜா நடித்த படம் பெட்டிப் பாம்பாகக் கிடந்தது. இப்போது படம் காட்ட வந்திருக்கிறது. சரியான செய்தியை சரியான தருணத்தில் சொல்ல வந்திருக்கும் படம், சொன்ன விதத்தில் குறைப் பிரசவமாக மாறி இருக்கிறது. நோக்கம் சரிதான். ஆனா தாக்கம் காணலியே! விஜய் சேதுபதியின் உழைப்பு சரியற்ற திட்டமிடலால் விழலுக்குப் போகிறது. கனிகா, மேகா ஆகாஷ், அமரர் விவேக் போன்றவர்கள் பாத்திரங்களை மின்ன வைத்திருக்கிறார்கள். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சரியான கேள்விகளை கேட்கிறது படம். தீர்வு சொன்ன விதத்தில் தான் குழப்பம். – சினிமா எக்ஸ்பிரஸ்.
கடமைக்கு நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஒப்பனை சிகை அவருக்கு சரியாக ஒட்டவில்லை. ஒரு குறிக்கோளுடன் வரும் புனிதன் அதை விட்டு மேகா ஆகாஷைக் காதலிப்பது படத்தை தடம் புரள வைக்கிறது. – தினமலர்.
காதல் ஒரு பலாப்பழ மர்மம்

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கும் தமிழ் பேசும் இந்திப் படம். கிரேசி மோகன் சீரியல் போல் இருக்கிறது. நடித்த யாரும் பிரபலமில்லை..விஜய் ராஸைத் தவிர. சான்யா மல்ஹோத்ரா மஹிமா இன்ஸ்பெக்டராக பலாவை தேடி பலப்பல துப்பறிதலை மேற்கொள்ள, காவலர் சௌரப் எனும் அனந்த் ஜோஷி உதவும் நடுவில் காதலும் புரிய என்னாச்சு பலாவுக்கு என்பது ஒன்லைன்! இடையில் கீழ் சாதி அதிகாரி, மேல் சாதி காவலர் எனும் சிக்கல் வேறு! வசனம் எழுதியவர் நகைச்சுவையை விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. எதுவும் இல்லையென்றால் ரெண்டு சுளையை கடிக்கலாம்!
தீராக்காதல்

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ஸ்விதா நடித்து ரோஹின் வெங்கடேசன் இயக்கிய படம் எப்படி இருக்கு? நம்ம ஃபிலிம் கிராஃப்ட் அருணைக் கேப்போம்! திருமணமாகி மனைவி குழந்தையுடன் வாழும் கதை நாயகன், மங்களூர் ரயில் நிலையத்தில் சந்திக்கும் கல்லூரிக் காதலி. பட்டுப் போன காதல் துளிர்த்ததா? இம்மாதிரிக் காதல் கதைகளில் காட்சிகளும் இசையும் கைக்கோர்க்க வேண்டும். இதில் கெட்டியாக கோர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் சித்துவின் இசையும் என்றால் மிகையில்லை. ஐஸ்வர்யாவுடனான கல்லூரிக் காதல் எங்கேயும் காட்சிகளின் மூலம் சொல்லப்படவில்லை என்பது தான் இதன் குறை. அதனால் நெருக்கத்தை இழக்கிறான் ரசிகன். அதனால் சில்லுனு ஒரு காதலாக அல்லாமல் லேசா சூடடிக்கிறது படம்!
இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிகம் கீறவில்லை என்றாலும் இன்னும் இதயத்தை தொட்டிருக்கலாம். ஆரண்யா, அஞ்சனா, கவுதம் பாத்திரங்கள் சரியாக எழுதப்படவில்லையோ? அல்லது எழுதியதை திரைக்கு கொண்டு வருவதில் சிக்கலோ?
தி ஹிந்து தமிழ் இப்படி போடுகிறது! நல்ல பங்களிப்பு மூவரிடமிருந்து. ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்படவில்லை! ஒரு அலுப்பான காதல் கதை!
தினமலர் சொல்வது இதுதான்! ஏற்கனவே பார்த்த படங்களின் காட்சிகள் மனக்கண்ணில் ஓட, ஐஸ்வர்யாவுக்கு அதிக ஆதிக்கம் கொடுத்ததால் கதை சறுக்கி விட்டது. தீராக்க்காதல் -ஆறாக்காதல்!
கழுவேத்தி மூர்க்கன்

அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பு. இயக்கம் சை. கௌதம்ராஜ். சமீபத்தில் வந்த சாந்தனு நடித்த ராவணக்கோட்டம் கதையும் இதுதான். மேல், கீழ் சமூகங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி. இதில் வசனங்கள் தெறிப்பு. சாம்பிளுக்கு ஒண்ணு!”இதப்பாரு! இங்க மீசை வச்சிக்கணும்னா கூட நீ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேந்தவனா இருக்கணும் தம்பி!” டி இமானின் பாடல்கள் மென் வருடல். குறிப்பாக செந்தாமரை..செந்தாமரை பாடல்! அருள்நிதி இடையிடையே ஹாரர் திரில்லரை விட்டு இம்மாதிரி கிராமியப் படங்களில் நடித்து தன் பங்கை சரியாக நிறைவேற்றி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவருவதற்காக எடுத்த படம்.. அவர்களுக்கு பிடிக்கும் என்பது ஃபிலிமி கிராஃப்ட் அருணின் சிபாரிசு.
த்ரில்லரும் அருள்நிதியும்’ என ஒரு புத்தகமே போடும் அளவுக்கு த்ரில்லருடன் ஒட்டியிருந்தவரை பிரித்து அவருக்கு ‘மீண்டும்’ கிராமத்து முகம் கொடுத்திருக்கிறது இப்படம். முறுக்கு மீசை, மடித்துக்கட்டிய வேட்டி, இழுத்து பேசும் வட்டாரமொழி, கன்னத்தை ஆட வைக்கும் ஆக்ரோஷம் என அசல் ராமநாதபுரத்துக்கார இளைஞராக மிரட்டுகிறார். குறிப்பாக சந்தோஷ் பிரதாப்பின் அம்மாவிடம் அழும் காட்சி ஒன்றில் களங்க வைக்கிறார். இது தமிழ் ஹிந்துவின் தீர்ப்பு!
நல்ல திரைக்கதை; அழுத்தமான நடிப்பு; பார்வையாளரை இருக்க வைக்கும் இயக்கம்! இது டைம்ஸ் ஆஃப் இந்தியா!
காசேதான் கடவுளடா
1972 வந்த காமெடி கார்னிவலை முறையாக மறுபதிப்பு வெளியிட்டிருக்கிறார் ரீமேக் கிங் ஆர்.கண்ணன், கடைசியில் மான்யம் மறுக்கப்பட்ட ராஜாவாக ஆகி விட்டார்! முக்கியமாக பல காட்சிகளில் சிரிப்பே வரவில்லை. தயாரிப்பாளர் சொந்த செலவில் விலா கிள்ள யாரையாவது நியமித்திருக்கலாம். நடித்த மிர்ச்சி சிவா, கருணாகரன், யோகிபாபு, பிரியா ஆனந்த் போன்றோருக்கே படத்தின் மீது நம்பிக்கையில்லை என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. பலருக்கும் உதடும் குரலும் ஒட்டாத லிப் சிங்க்! காப்பாற்றுவது பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு மட்டுமே! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
அயல்வாஷி ( மலையாளம் / தமிழ் )

மெல்லிய கதையும் நோக்கமில்லாத திரைக்கதையும் இதை ரசிக்க விடவில்லை! தலைப்பில் சுட்டப்படும் நகைச்சுவை, படத்தில் கோட்டை விடப்பட்டுள்ளது, சௌபின் ஷாஹிர் இருந்தும்! -தி ஹிந்து.
முதல் பாதி வெகு சுமார். இரண்டாம் பாதியில் தேவையான சுவாரஸ்யம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஒரு விசேஷத்தில் துபாய் ரிட்டர்ன் பென்னியின் வாகனத்தை எடுத்துப் போய் கீறல் விழ வைத்தது யார் எனும் சின்ன முடிச்சு. மெனக்கெட்டு சிரிப்பை வரவழைக்கு முயல்கிறார் இயக்குனர் இஷாத் பராரி.. நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை! இலக்கில்லாத காமெடி மூங்கில்களால் கட்டப்பட்ட சிதில கோட்டை – லென்ஸ்மென்.
விருப்பாக்ஷா ( தமிழ் / தெலுங்கு)

அமானுஷ்யம் கலந்த அக்மார்க் தெலுங்கு ஹாரர் படம். கதைகளால் ஈர்த்த சுகுமாரனின் கைவண்ணம். கதை நாயகி நந்தினியாக நடித்த சம்யுக்தா மேனன் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது இந்தப் படம்.
நவீன தொழில் நுட்பத்தில் சிறந்த கட்டிப்போடும் அமானுஷ்ய ஹாரர் படம் என்கிறது 123 தெலுகு.காம் இறுக்க முடிச்சுகள் கொண்ட திரில்லர் படம் என்பது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வாக்கு! வித்தை காட்டாமல் பீதியை விதைக்கிறது விருப்பாக்ஷா – தி ஹிந்து! முதலிலேயே ஒரு படிமத்தை உருவாக்கி அதன் மேல் அடுக்கடுக்காக பயத்தை கட்டியிருக்கிறது படம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
