Yoga Benefits In Tamil,கவலையாக இருக்கும்போது செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்  என்ன? - 5 yoga poses to try out when you are worry and anxiety in tamil -  Samayam Tamil

மைதிலி முப்பத்து நான்கு வயதானவள், தனியார் வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள். அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது தேவையான பொருட்களைப் பல்பொருள் அங்காடியில் வாங்கி, பணம் கட்டும் வரிசையில் காத்திருந்த போது ஏதோ செய்தது. வேர்வை ஊற்றியது, இருதயம் வேகமாக அடித்துக்கொண்டது.  மயக்கம் வந்து விடுமோ எனப் பயந்ததால் வாங்கிய பொருளை அங்கேயே விட்டு வெளியே ஓடினாள். உடனே சுதாரித்துக் கொண்டாள். ஆனால் வெட்கம் கலந்த குழப்பம் மனதைத் துளைத்தது.

இவ்வாறு ஆனது மைதிலியை மிகவும் உலுக்கியது.  தான் வெளியே வந்த விதமும் வியத்தது. மீண்டும் இவ்வாறே ஆகிவிடுமோ எனப் பயம்.  அங்காடிக்கு மறுமுறை செல்லும்போதும் நடந்திடுமோ என்ற சிந்தனை ஓட, பதட்டம் வருவதுபோல் தோன்றியது. மைதிலி இனிமேல் பல்பொருள் அங்காடிக்குப் பதிலாக அருகில் உள்ள சிறு கடைகளில் வாங்க முடிவெடுத்தாள்.

நாட்கள் ஓடின. மைதிலி வழக்கம் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தாள். நடுவழியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. வாகனத்தை யார் மீதாவது மோதிவிடுவோமோ என அஞ்சி வாகனத்தைச் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டாள். உடனே மனதில் நிம்மதி நிலவியது.‌ இனிமேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என முடிவு செய்தாள்.

இதேபோல் கூட்டமான இடங்களில் பதட்டம் ஏற்படுகிறது எனக் கண்டுகொண்டாள். மைதிலி ஓர் முடிவிற்கு வந்தாள். பலபேர் இருக்கும் இடங்களான கடைத்தெரு, லிப்ட், சினிமா அரங்கம் இவற்றிற்குப் போகாமலிருக்க முடிவு செய்தாள்.

முதலில் குடும்பத்தினர் இதைச் சகித்துக் கொண்டார்கள். ஒவ்வொன்றாகக் கூட, சலித்துக் கொண்டார்கள்.‌ இதைக் கவனித்த மைதிலி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தாள். பலவற்றைத் தவிர்ப்பது வேலையிலும் கடினமானது. தொலைக்காட்சியில் மனநலம் பற்றிய உரையாடல் கேட்க, மனநல ஆலோசகரைச் சந்திக்க முடிவெடுத்தாள்.‌

என்னை ஆலோசிக்க வந்தபோது, மைதிலியை தன் நலனில் கண்ட  மாற்றங்களை விவரிக்கச் சொன்னேன். ஸெஷன்கள் பற்றி வர்ணித்து, பதட்டத்தைப் புரிந்து விடைகள் காண முயல்வதற்குக் குறைந்த பட்சம் பத்து ஸெஷன்களுக்கு வரவேண்டியதாக இருக்கும் எனக் கூறினேன்.

காரணிகளை அறியவே மைதிலி அனுபவித்த பதட்டத்தை விலாவாரியாக வர்ணிக்க வைத்தேன். இன்னல்களின் விவரிப்பு, எப்போது, ஏன் நேர்கிறது என்று அறிவதற்கான ஸெஷன்கள் தொடங்கின.

ஒவ்வொரு முறையும் ஆனதை விவரித்ததிலிருந்து தெளிவானது, பதட்டம் ஏற்பட்டது உடலில் ஏதோ விபரீதத்தினால்தான் என மைதிலி நினைத்து விட்டாள். அசல் காரணம் மனதில் ஏற்படும் பெரும் பயத்தினால். சில சமயம் பல்வேறு சின்னச்சின்ன கவலைகள் கூடிக்கொள்ளும்போது, “இவற்றை எப்படிச் சமாளிப்பது?” என்ற திண்டாட்டம் தலைக்குமேல் வரும் வெள்ளம் போலத் தோன்றி, திகில், பதட்டத்தில் கொண்டு விட்டுவிடும். இதை எங்கள் துறையில் பேரழிவுச் சிந்தனை (catastrophic thinking) என்போம்.

அதாவது முதன்முதலாகப் பதட்டம் நேரும் போது மைதிலி பரபரப்பான  இடத்திலிருந்தாள். அந்நேரத்தில் பல சிந்தனைகள் ஓடோடிக் கொண்டிருந்தன. உதாரணமாக, நீளமான வரிசையில் காத்திருப்பதினால்  வீட்டிற்குப் போய்ச் சேர்வது தாமதமாகும். இரவுச் சமையல் காத்திருக்கும். பிள்ளைகளுக்குத் தாமதமாக உணவு தருவதால் கணவனின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். நேரம் ஆக ஆக, இவை யாவையும் சிந்தனையில் ஓட, இருதயம் துடித்து, வியர்வை ஊற்ற, தலை சுற்றுவது ஆரம்பமானது.

பதட்ட உணர்வுகளால் உடலில் மயக்கம் வந்ததில் வெட்கமும் சேர்ந்துகொண்டது, உடல்நிலை ஒவ்வொன்றும் அதிகரித்தது. வெளியே ஓடினாள். எல்லோர் முன்னாலும் விழப் போவதில்லை என்ற கவலை நீக்கம் உடலைச் சுதாரித்து விட்டது. மீண்டும் அங்காடிக்குள் போனால் மறுபடி பதட்டம் வந்து விடுமோ என்று போவதைத் தவிர்த்தாள் மைதிலி. பேரழிவுச் சிந்தனையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இவ்வாறு தவிர்த்தல் (avoidance) எனும் யுக்தியைக்  கைப்பிடித்தாள்.

வெளிப்பட்ட இந்த இரண்டை எடுத்துக் கொண்டோம். முதலாவதாகப் பேரழிவுச் சிந்தனையை. அந்தச் சம்பவத்தை மேலும் உன்னிப்பாகப் பார்க்க, தனக்கு வீடுதிரும்ப நேரம் ஆகிறது, பிள்ளைகள் பசியுடன் காத்திருப்பார்கள், கணவன் கோபம் கொள்வான் என்றெல்லாம் கவலை அழுத்தியது. அதிலிருந்து பீதி நிலைக்கு நகர்ந்தபோது பல சந்தேகச் சிந்தனைகளான “மயக்கமா?”, “கட்டுப்பாட்டை இழந்தால்?”, “ஏதோ நடக்கப் போகிறது” என்ற கவலை எல்லாமும் சூழ்ந்து கொண்டது.

இந்தச் சிந்தனைகளைத் துல்லியமாக எடுத்துப் பார்த்தோம். உதாரணத்திற்கு, மைதிலிக்கு மயக்கம் போட்டு விடுவோமோ எனத் தோன்றியது. அவளது இருதயம் வேகமாக அடித்ததால் இந்த மாதிரி நினைத்தாள். இதை மேலும் பரிசோதனை செய்து பார்த்தோம். பெரும்பாலும், இருதயத் துடிப்பு குறைந்தால்தான் மயக்கம் வரும். மைதிலி புரிந்து கொண்டாள், மயக்கம் வரும் என்று எண்ணியது தவறு, இருதயம் வேகமாக அடித்தது பயத்தினால், பீதி அடைந்ததால்தான். . இந்த நிலையிலிருந்து மீண்டு வர சில வழிமுறைகளை வகுத்தோம்.

மைதிலி தினசரி வாழ்வில் அவசரம், பரபரப்பு ஏற்படும்போது அவற்றைத் தவிர்த்து விடாமல், அந்த நேரங்களில் உடல் மன அளவில் நடைபெறுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.‌ தயக்கம், முடியாது என்கிற சந்தேகம் தோன்றினால், அது முதலில் உடலில்தான் காட்டுகிறது என்பதை நாளடைவில் உணர்ந்தாள். மனத்தின் பிரதிபலிப்பே உடலில் வெளிப்படுகிறது எனப் புரிய வந்தது.

இந்தப் புரிதல் வந்ததும், கவலை, பீதி நேர்ந்தாலும் அவற்றைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வர ஆரம்பித்தது.‌ அஞ்சாமல் இருப்பதால், மனதிற்கு இதமாக இருப்பதைக் கூறினாள். சிந்தனை ஆற்றலின் தாக்கம் உணர்வின் மேலானதைப் புரிந்ததும், உணர்வுகள் நாம் தானாகச் சிதைப்பதுதான் எனக் கண்டுகொண்டாள். 

தவிர்த்தல் யுக்தி தேவையா? இதை ஏன் செய்கின்றோம்? எனப் புரிய ஸெஷன்கள் தொடங்கியது.‌

மைதிலியை எவையெல்லாம் தவிர்த்தல் செய்கிறாள், அவற்றில் எது, எத்தனை சதவீதம் பதட்டம் தந்தது என்று குறித்துக் கொள்ளப் பரிந்துரைத்தேன். இந்த சேகரிப்பு சில வாரங்கள் எடுத்துக் கொண்டது.

அடுத்த கட்டமாக அவற்றை வரிசைப்படுத்தினோம். செய்வதில் அலுப்போ பயமோ உணராமல் இருக்க, குறைவான சதவீதம் பெற்றவையை முதலில் எடுத்துக் கொண்டோம்.

தேர்வு செய்யப்பட்டவற்றை ஸெஷன்களில் தவிர்த்தால் என்ன, செய்தால் என்ன என்று அலசி ஆராய்ந்தோம். இதுவரைக்கும் சந்தித்தது, தவிர்த்தலிருந்து அதனுடைய செயல்பாடுகள் எப்படி, விளைவுகள் என்னென்ன, எப்படி மாற்றிச் செயல்பட முடியும் எனப் பார்த்து வந்தோம். இவற்றை ரோல் ப்ளே செய்தோம், அதாவது மாறுபட்ட செயல்பாட்டு முறைகளை  ஸெஷனில் பயின்று பார்ப்பது. இவையெல்லாம் மைதிலியைத் தயாராக்கி தைரியம் கூட்டியது. மனதில் வரைபடம் போலச் சித்தரித்துச் செய்யத் தொடங்கினாள்.

செய்யச் செய்ய தன்னால் முடிகிறது என்றது நிரூபணமாக, அதிக சதவீதம் பெற்றதைச் செய்யவும் முழு மனதுடன் முயன்றாள். உதாரணத்திற்கு, மீண்டும் மைதிலி பல்பொருள் அங்காடியில் சென்றாள், அவ்வளவு கூட்டம் இல்லாத நேரத்தில். பொருட்கள் வாங்கி, பணம் கொடுத்து, ஓரளவுக்கு நிதானத்தைக் காக்க முடிந்தது.

இதை மேலும் சுதாரித்துக் கொள்ள, தனக்கு நேர்ந்த உணர்வு, உடல் மாற்றம் பிரித்து, ஒன்றின்மீது ஒன்று செய்யும் தாக்கத்தைக் குறித்துக் கொண்டாள். . இதனால் தெளிவு பெற்று, மைதிலி அதிகக் கூட்டத்தில் போய்ப்பார்க்க ஆரம்பித்தாள். இந்தத் தூண்டுதல் நன்றாக ஆவதைக் காட்டுகிறது. படிப்படியாக அதிகமான கூட்டம் இருக்கும் நேரத்தையும் தேர்வு செய்து அதற்கும் முன் போல் சதவீதம் தந்து, பயின்று செயல்படுத்தினாள்..

அவ்வப்போது சஞ்சலம், பயம் ஊசலாடியது. இவை நேரும் போதெல்லாம் அவற்றை எவ்வாறு கையாளுவது எனத் தெரிந்தது தெம்பு கொடுத்தது. அது மட்டுமின்றி இவ்வாறு நேர்வதால் ஆபத்து ஏதும் ஏற்படாதது மேலும் தைரியம் கூட்டியது. வந்தபோது எவையெல்லாம் செய்ய வேண்டும் என்றாளோ, அதன்படி நடந்து கொண்டாள்.

இந்த முதல் கட்டத்தில் வென்றவுடன் மேற்கொண்டு செய்ய முடியும் என்ற நிர்ணயித்து, மற்ற கடினமான சூழ்நிலைகளையும் சந்திக்கத் தானே முயன்று கொண்டிருக்கிறாள். இலக்கை அடைவேன் என்ற மனத்திடத்துடன்  மைதிலியின் பயணம் தொடர்கிறது.

*********************************