சொர்ணம் டீச்சர்

 

அக்காவிற்கு தம்பியாக இருப்பதை விட, தங்கைக்கு அண்ணனாக இருப்பதில் எது  சிறந்தது? - Quora

           34679+

           15843

           ———

           50522

         ———          

இது என்ன எனக் கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை! ஒரு கூட்டல் கணக்கு. மாமா எதோ இரு ரசீதுகளைக் கூட்டிப் பார்த்துச் சொல்லச் சொன்னார். கூட்டினேன். எப்படித்தெரியுமா?

           நான் சொல்வதனை கொஞ்சம் நிதானமாகத்தான் கேளுங்களேன்.

           9 உடன் மூன்றைக்கூட்ட, மூன்று விரல்களை மடித்து, 10,11, 12 என எண்ணி, 2-ஐ அடியில் எழுதி 1-ஐஅடுத்த எண்ணான 7 உடன் கூட்டி எட்டாக்கினேன். பின் 4ஐ அதனுடன் கூட்ட, 9,10,11,12 என எண்ணினேன். பின்….

           மாமா அவர் கையிலிருந்த கால்குலேட்டரில் அதனைக் கூட்டிப் பார்த்ததும் அதே விடைதான் வந்தது. ‘அட!’ என ஆச்சரியப்பட்டவரிடம், “இது என் ஆறு வயசில் சொர்ணம் டீச்சர் சொல்லிக்குடுத்தது மாமா, தெரியுமா?” என்று பீற்றிக் கொண்டேன்.

           “ஆமாம். சொர்ணம் தானே! ரொம்ப நல்லவள், பாவம்! வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டவள்,” என்று எங்கோ கடந்த காலத்துக்குப் பயணப்பட்டவராக நினைவுகளைப் பின்னோக்கித் தள்ளலானார்.

           நானும் கூடச்சேர்ந்துகொண்டேன்.

           *****

           அப்பா, அம்மா, நான், எல்லாரும் தாத்தா பாட்டியின் ஊரான எர்ணாகுளத்திற்கு ரயிலில் வந்து இறங்கினோம். ராமு மாமாதான் வந்து எங்களை எதிர்கொண்டார். இது வழக்கமான பள்ளி விடுமுறையல்ல. ஆறுவயதான எனக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கைப்பாப்பாவோ பிறக்கப் போவதாக அம்மா சொல்லியிருந்தாள்.

           நான்குமாதங்கள் பள்ளிக்கூடம் கிடையாது. அதாவது போக முடியாது. ஆறுவயதுக் குட்டிப்பெண்ணை எப்படித் தயார்செய்து, உணவளித்து, தலைவாரிப் பின்னிவிட்டுப் பள்ளிக்கு அனுப்ப அப்பாவால் முடியும்? அப்பாக்கள், ஆண்கள், வீட்டுவேலைகளில் பங்கேற்காத, பங்கேற்கப் பயிற்சிபெறாத, விரும்பாத காலங்கள் அவை. பள்ளியில் சுட்டிப்பெண்ணான எனக்கு ஒருபக்கம் ஒன்றாம் வகுப்புப் பாடங்கள் பற்றி, அவற்றைக் கற்க முடியாதது பற்றி பயம். இன்னொரு புறம், வரப்போகும் தம்பியோ தங்கையோ ஆன பாப்பா பற்றிய அழகான கற்பனைகள்.

           “அகிலாக்குட்டி, வரணும் வரணும். எப்படி இருக்கே கண்ணா?” என்று கொஞ்சியபடியே பெரிய மாமா வாசுவும், இன்னும் திருமணமாகாத சோபனா சித்தியும் என்னைப் போட்டி போட்டுக்கொண்டு தூக்கிக்கொள்ள கரங்களை நீட்டினர். நானும் பெருமிதம்பொங்க அப்பாவின் கையை விட்டுவிட்டு அவர்களிடம் ஓடினேன்.

           தாத்தா வீட்டினுள் நுழைந்ததுதான் தாமதம்; வழக்கமாக ஒரு பெரிய கருங்காலி மரத்தொட்டில் கூடத்தில் தொங்கும். ஓடிப்போய் அதில் அமர்ந்து ஆட எத்தனித்த எனக்கு, அதனுள் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. விதம் விதமான பழங்கள். ஆரஞ்சு, காரட், கத்தரிக்காய், வெண்டை, எலுமிச்சை என்று- கிட்டநெருங்கிப் பார்த்ததும்தான் தெரிந்தது, அவை அத்தனையும் மெழுகினால் செய்யப்பட்ட தத்ரூபமான வடிவங்கள் என்று. திரும்பிப்பார்த்தால் மாமா புன்னகையுடன், “உனக்குத்தானம்மா அவை, விளையாடுவதற்கு,” என்கிறார்.

           அதற்குள் சித்தி கையில் ஒரு பெரிய சாக்லேட் டப்பாவுடன் வந்தாள்.

           “திறந்து பார் அகிலாக்குட்டி!”

           “ஹையா! கலர் கலரா ரிப்பன், கிச்சிலிப்பொட்டு, தலைக்கு க்ளிப், எல்லாமே செட்டியார் கடையில வாங்கினயா சித்தி?”

           கையில் டப்பாவுடன் சென்று சித்தியை இறுக அணைத்துக் கொண்டேன். கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டாள். “ஆமாமடா, நீ வரப்போகிறாய் என்றதும் ஓடிப்போய் வாங்கிவந்து விட்டேன்,” என்றாள்.

           குளித்துச் சாப்பிட்டதும், (சொல்ல மறந்து விட்டேனே, எனக்குப் பிடித்த பூசணிக்காய் பொரித்த குழம்பு, அப்பளம் தவிர திரட்டுப்பாலையும் சமையல்கார மாமி விசாலத்திடம் சொல்லிப் பண்ண வைத்திருந்தாள் காவேரிப் பாட்டி) சித்திக்கும் பாட்டிக்கும் நடுவில் பாயில் படுத்துக்கொண்டு காலைத்தூக்கி சித்திமேல் போட்டபடி ஒரு குட்டித்தூக்கம்.

           ***

           மதியம் தூங்கி எழுந்து போர்ன்விடா குடித்ததும், சித்தி முகம்கழுவித் தலைவாரி விட்டாள். குதியாட்டம் போட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்தால் அங்கே புதிதாக ஒரு மாமி அமர்ந்து கொண்டிருந்தாள். என்னைப்பார்த்ததும், “இந்தக் குழந்தைதானா?” என்று ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.

           “அகிலா, இதுதான் சொர்ணம் டீச்சர். நீ ரொம்பநாள் ஸ்கூலுக்குப் போகமுடியாதில்லையா? அதனால் தினம் சாயங்காலம் வந்து உனக்குப் பாடங்கள் எல்லாம் சொல்லித்தரப் போகிறாள்,” என்றார் மாமா.

           அன்று ஆரம்பித்தது; எனக்குத் தமிழ், கணக்கு, இன்னும் சில கதைகள் எல்லாம் தினசரி மாலை இரண்டு மணி நேரமாவது சொல்லித்தருவார் சொர்ணம் டீச்சர். அலுப்புத்தட்டாமல் இருக்க ஏதாவது குட்டி பஞ்சதந்திரக் கதைகளும் நடுநடுவே சொல்லுவார். எனக்கு சொர்ணம் டீச்சரைப் பிடித்திருந்தது. அவருக்கும் என் அம்மாவின் வயதுதான் இருக்கும். புன்னகையோடு இனிய குரலில் பாடம் சொல்லித்தருவார். அப்பப்போது மூக்கிலிருந்து இறங்கும் கண்ணாடியை மேலேதள்ளி விட்டுக் கொள்வார். அது எனக்குச் சிரிப்பை உண்டுபண்ணும்.

                      ***

           ஒருமாலை, தாத்தாவுடன் கடற்கரைக்குப் போவதாக ஏற்பாடு. சொர்ணம் டீச்சர் பாடம் சொல்லிக்கொடுத்து முடித்ததும் நாம் கிளம்பலாம் என்று சொல்லியிருந்தார் மாமா. அழகாகக் கூட்டல் கழித்தல் சொல்லிக் கொடுத்ததிலும், நானும் சமர்த்தாகக் கற்றுக்கொண்டு வந்ததிலும் நேரம் போனதே தெரியவில்லை. தாத்தா தனது அங்கவஸ்திரத்தையும் கைத்தடியையும் எடுக்க நாங்கள் இருந்த கூடத்துக்கு வந்தபோது, என்னை விட்டுவிட்டு அவர்மட்டும் போகப்போகிறார் என நான் எண்ணிவிட்டேன். அந்த வருத்தத்தில் கண்களில் ‘கரகர’வென வழிந்த நீருடன் கணக்கைப் போடமுடியாமல் தடுமாறினேன்.

           சொர்ணம் டீச்சர் பதறிவிட்டாள். என்னை அணைத்துக்கொண்டு, கண்களைத் துடைத்துவிட்டுத் தாத்தாவுடன் அனுப்பிவைத்தாள்.

தொட்டில் - தமிழ் விக்கிப்பீடியா

           தம்பிப் பாப்பாவிடம் எனக்கு உயிர். முடிந்தபோதெல்லாம் அவனருகிலேயே பழியாய்க் கிடந்தேன். செல்லம் கொடுத்துவைத்து சில சமயங்களில் வீண் பிடிவாதம் பிடிக்கும் என்னை வழிக்குக் கொண்டுவர, காவேரிப்பாட்டி தம்பிப்பாப்பாவை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

           “சமர்த்தாக எண்ணெய் தேய்த்துக் குளிக்க வரவில்லையோ அகிலா, தம்பிப்பாப்பாவை லட்சுமி மாமியிடம் தூக்கிக் கொடுத்து விடுவோம் பார்!” என்பாள். நான் பயந்து விடுவேன். அடிக்கடி பாப்பா தொட்டிலில் இருக்கிறானா என்று வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வேன்.

           தம்பிப்பாப்பா பிறந்த பதினொன்றாம் நாள்; தொட்டில் போட்டுப் பெயரிடும் நிகழ்ச்சி…

           அக்கம்பக்கத்துப் பெண்கள், மாமிகள், பாட்டிகள், குழந்தைகள் எல்லாம் தாத்தா வீட்டுக் கூடத்தில் குழுமியிருந்தார்கள். ஏதோ ஒரு சம்பிரதாயம் – திருமணமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காத பெண் ஒருத்தியை அழைத்து, அவள்கையால் குழந்தையைத் தொட்டிலில் இடச்செய்வார்கள். நானோ குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாரையுமே தம்பிப்பாப்பாவைத் தொட விடவில்லை.

           “சரி, நீயே சொல்லு! யார் இதைப் பண்ணட்டும் என்று,” என்றாள் பாட்டி.

           “சொர்ணம் டீச்சர்தான் பண்ணனும்.” கூட்டத்தில் சலசலப்பு. பாட்டி தயங்கினாள். சொர்ணம் டீச்சரே ஒரு புன்னகையுடன், “அகிலாக்குட்டி, உங்காத்துல யாராவது பண்ணட்டும். உன்னோட பெரியம்மா செய்யட்டும்,” என்று நிலைமையைச் சரி செய்தார். பின்பு பெரியம்மா தம்பிப்பாப்பாவைத் தொட்டிலில் கொண்டு விட்டார்.

           “யாராவது குழந்தைக்கு பாட்டுப் பாடுங்கோ!” பாட்டியின் உரிமைகலந்த உத்தரவு செவிடன்காதில் ஊதிய சங்காயிற்று. “ருருலுலுவாயீ” அல்லது “ஜோஜோக்குட்டி ஜோஜோ,” வைத்தவிர வேறு ஒன்றும் ஒருத்தருக்கும் தெரியாது போலும்! கடைசியில் பாட்டியே, “சொர்ணம், நீதான் நன்றாகப் பாடுவையேடீ, எங்காத்துப் பேரனுக்கு ஒரு பாட்டுப் பாடேன்,” என்றதும், காத்திருந்ததுபோல சொர்ணம் டீச்சர் பாட ஆரம்பித்தாள்.

           “அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு

           அரும்பு முடிச்சதாரு?”

           அத்தனை மாமிகளும், பாட்டிகளும் தேன்குடித்த நரிகளாய் அமர்ந்து பாட்டை ரசித்தனர். ஆறுவயதில் பாட்டின் பொருளை உணர்ந்து ரசிக்க இயலாவிடினும், அந்த இசையும் குரலும் என் உள்ளத்தில் பதிந்துவிட்டன.

           ***

           காலம் யாருக்காகக் காத்திருக்கிறது? அவரவர்களுக்கு அவரவர் கவலைகள், கடமைகள், வாழ்க்கை, இன்னபிற. கால ஓட்டத்தில் சொர்ணம் டீச்சரை மறந்தே போனோம்.

           நான் படிப்புடன், வேலையுடன், குடும்பத்துடன் ஒன்றினாலும், சங்கீதமும் என் வாழ்க்கையில் ஒரு இணைபிரியாத அம்சமாயிற்று. தேடித்தேடி அரிய பாடல்களைக் கொண்ட ஒலிநாடாக்களை (அந்தக்காலத்தில்) வாங்குவது என் வழக்கம். அப்படித்தான் ஒருநாள் பம்பாய் சகோதரிகள் பாடிய தாலாட்டுப்பாடல்கள் எனும் ஒரு ஒலிநாடாவை வாங்கிவந்திருந்தேன். அதிலிருந்து ஒலித்தது ஒரு அரிய பாடல்!

           “அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு

           அரும்பு முடிச்சதாரு?”

           மூளையில் பளீரென ஒரு மின்னல்!

           “அம்மா! சொர்ணம் டீச்சர் நந்துவைத் தொட்டிலில் போட்டபோது இந்தப் பாட்டைப் பாடினார் இல்லையா?”

           “உனக்கு இன்னும் அதெல்லாம் நினைவிருக்கா அகிலா?”

           பழைய கதையைக் கொஞ்சம் கிளறினேன். “எங்கே அம்மா இருக்கார் சொர்ணம் டீச்சர்? அவா குடும்பம் எங்கே? குழந்தைகள் எங்கே? அடுத்தமுறை ஊருக்குப் போகிறப்போ பார்க்கணும் அம்மா,” என்றேன்.

           “பாவம் அந்த சொர்ணம், அகிலா! அவளுக்கு ஆதரவாக இருந்தது அவ அம்மா மட்டும்தான். சொர்ணத்துக்கு ரொம்பச் சின்ன வயசிலேயே, பத்தோ பன்னண்டோ, கல்யாணம் பண்ணிட்டா. அவ பெரியவளாறத்துக்கு முந்தியே அவ அகமுடையான் வைசூரிகண்டு போயிட்டான். அப்புறம் அவள் டீச்சர் டிரயினிங் எடுத்துண்டு டீச்சரா வேலை பார்த்தா. அபார சங்கீத ஞானம். கேட்டதை அப்படியே திருப்பிப் பாடுவாள். தாத்தாவுக்கு அவா குடும்பத்தை நன்றாகத் தெரியும். அதுதான், ஒரு உதவியாக இருக்கட்டுமே என்று உனக்கு நாலு மாதம் பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்திருந்தார்.”

           “அப்புறம் எங்கே அம்மா போனார் சொர்ணம் டீச்சர்?”

           “தெரியலையே,” என அம்மா வருத்தத்துடன் சொன்னார்.

           நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். இப்போது எல்லாம் புரிந்தது. ஏன் பாட்டிக்கு சொர்ணம் டீச்சரைக் கொண்டு குழந்தையைத் தொட்டிலில் விட விருப்பமில்லை என்பது; அவர் விதவை; எனவே இவையனைத்தும் அவருக்கு மறுக்கப்பட்டவை (அக்காலத்தில்). பாவம் டீச்சர்!

           பாட்டைப் பாடினபோது டீச்சரின் உள்ளம் எப்படியெல்லாம் கொந்தளித்திருக்கும். அவரால் என்றுமே பெறமுடியாத, தாய்மை இன்பத்தைப் பிட்டுப்பிட்டு வைக்கும் அந்தப்பாடல்……

           ‘காணாமலே தேடி கமலமுகத்தை நாடி

           கோபியர் எல்லாம்வாடி கோபருடனே கூடி

           வாடா என் கண்மணியே தாடா எனக்கோர் முத்தம்

           வாடா என் குஞ்சலமே ஆரத்தி எடுக்கிறேன் (அற்புதமே)’

           இப்போது இந்தப்பாட்டு எனக்கு மனப்பாடம். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அந்த நாட்களின் சொர்ணம் டீச்சரின் நினைவுவந்து என்னை அலைக்கழிக்கும். அவருக்காக கண்ணில் இரண்டுசொட்டு நீராவது துளிர்க்கும்.

           அந்த இரண்டு சொட்டு நீரில் அவருடைய அன்புக்கும், என்னை உருவாக்கிய ஆரம்பநிலைக் கல்விக்கும், நன்றியுடன் அஞ்சலி செலுத்தினேன் என்றால், அதில் அவரைப்பற்றி நானறிந்துகொண்ட செய்திகளுக்காகவும் இன்னும் இரண்டு சொட்டுக் கண்ணீர் கலந்திருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா?

           எனது ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்ட சொர்ணம் டீச்சரின் நினைவுக்கு அஞ்சலி இந்தக் கதை! உங்களுக்குத் தெரியுமா? இன்றைக்கும் எனது கூட்டல் கழித்தல் கணக்குகள் சொர்ணம் டீச்சர் சொல்லிக் கொடுத்த வழியில்தான் செய்யப்படுகின்றன என்று? கால்குலேட்டர்கள் எல்லாம் எனக்கு வேண்டாமே!

           இது வாழ்க்கையின் இன்னொரு பாடம்………..!                              __________________&___________________