மாயக்கண்ணாடி

“மாமி! ‘மாயக்கண்ணாடி’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள் அல்லிராணி.
“கேள்வியாவது ஒண்ணாவது? பார்த்தே இருக்கிறேன். சேரன் எடுத்து நடித்த படம் தானே!” என்றாள் அங்கயற்கண்ணி மாமி.
“மாமி! நீங்கள் சரியான சினிமாப்பைத்தியம்! நான் சொல்வது JWST பற்றி”
“நானாவது சினிமாப்பைத்தியம். நீ ஒரிஜினல் பைத்தியம்! அதென்னடி ஏபிசிடி?” -என்றாள் அங்கயற்கண்ணி மாமி.
“மாமி! JWST! இது ஒரு ராக்ஷச டெலெஸ்கோப். இது தான் இன்றைய வானவியலைப் புரட்டி எடுக்கும் சமாச்சாரம்.”
“மேலே சொல்” என்றாள் மாமி.
“பிரபஞ்சத்தை அறிவதற்கு, கலிலியோ 16 ம் நூற்றாண்டில் டெலெஸ்கோப் கண்டுபிடித்தார். அந்நாளிலிருந்தது டெலெஸ்கோப் பல வடிவமும் பொலிவும் பெற்று சக்தி கொண்டு விளங்குகின்றன. நமது வளிமண்டலம் இடையூறாக இருப்பதால், டெலெஸ்கோப்பை முதலில் பெரும் மலை உச்சியில் வைத்தனர். அதைவிட சிறப்பாகச் செய்வதற்காக, அதை ஒரு செயற்கைக் கோளில் பொருத்தி பூமியின் ஆர்பிட்டில் சுற்றி வரச் செய்து வானத்து நட்சத்திரங்களை ஆராய்ந்தனர்.” என்றாள்.
மாமி உடனே “அது ஹப்பல் (Hubble) டெலெஸ்கோப் தானே?” என்றாள்.
“ஆஹா.. சூப்பர் மாமி. நான் இன்று சொல்லப்போவது அதுக்கும் மேலே” என்றாள் அல்லி.
மாமி உற்சாகமடைந்தாள். அல்லி தொடர்ந்தாள்.
“’JWST என்பது ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலெஸ்கோப்’(James Webb Space Telescope). இது வானத்தை ‘இன்ப்ரா ரெட்’ ஒலி அலைகளை வைத்து படமெடுத்து அளக்கிறது. ஹப்பல் டெலெஸ்கோப் பூமியைச்சுற்றி வருகிறதென்றால்,இந்த JWST சூரியனைச்சுற்றி வரும்.” என்றவளை மாமி குறுக்கிட்டாள்.”அப்ப அது ‘பூமியின் தங்கை’ என்று சொல்லு.” என்றாள்.
அல்லி தொடர்ந்து சொன்னாள். “மாமி, JWST 400000 கிலோமீட்டர் தள்ளி, நம்மைப்போலவே சூரியனைச்சுற்றி வருகிறது. அதற்குக்காரணம் JWST, ரொம்பக் குளிர் வெப்ப நிலையில் இருக்கவேண்டும். அதாவது 50 K (−223 °C; −370 °F). அதன் கண்கள் (கண்ணாடி) வானத்தை நோக்கியிருக்கவேண்டும், பின்புறம் சூரியனை நோக்கியிருக்கவேண்டும். சூரியனையோ அல்லது வெகு வெப்பமுள்ள எதையாவது பார்க்கநேர்ந்தால் அதன் கண் சிவந்து எரிந்து விடும்.” என்றாள் அல்லி.
“சரிடி. இது என்ன கண்டு பிடித்தது?” கொஞ்சம் பொறுமை இழந்தாள் மாமி.
“மாமி. ஜனவரி 2022 ல் இது செயல்படத்துவங்கியது. பல நட்சத்திரங்களை, கறுப்பு ஓட்டை (black hole ) என்று பல வானக் கோளங்களை படமெடுத்தது, ஆராய்ச்சியாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பிரபஞ்சம் துவங்கியதாகக் கூறப்படும் 13.7 பில்லியன் வருட சமயம் பெரும் வெடிப்பு (Big Bank) நிகழ்ந்து சில மில்லியன் வருடம் வரையுள்ள வானத்தை அளந்து சொல்கிறது. கூடியவிரைவில், பிரபஞ்சத்தின் பல ரகசியங்கள் வெளிப்படுமென்று நம்பப்படுகிறது.” என்றாள் அல்லி.
“வானம் நமக்கொரு போதி மரம்.. நாளும் நமக்கொரு சேதி தரும்” என்று பாடி முடித்தாள் மாமி.
இது ஒரு அதிசய உலகம்!
https://en.wikipedia.org/wiki/James_Webb_Space_Telescope
5.
