பூகம்ப விதைகள் » அறிவுடைமை புத்தகம்முன்னாள் அரசவைக்கவிஞர்

தமிழகத்தின் மேலவை உறுப்பினர்

இவரின் முதல் கவிதைப் புத்தகப்புத்தகத்திற்கு

அணிந்துரை எழுதி பாராட்டியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மரபுக் கவிஞர்

இத்தனை பெருமைகளுக்கெல்லாம் மீறிய மற்றொரு பெருமை அவருக்குண்டு. அதுதான் அவரின் எளிமையும் மற்றும் பழகும் குணமும்.  திரையுலகில் அர்த்தமற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல், நல்ல மொழியைக் கையாண்ட கவிஞர்களில் ஒருவர் திரு முத்துலிங்கம்.

கண்ணதாசன், 60களில் தென்றல் என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக?” என்ற அந்தக் கேள்விக்கு, பதில் குறள் வெண்பாவில் எழுத வேண்டும்.

“பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது

அதில் கலந்து கொண்ட அன்றைய இளைஞர் முத்துலிங்கம் ,

“திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே

பறக்கின்ற நாவற்பழம்”

என்று எழுத, முதற்பரிசு கிடைத்தது அவருக்கு.

    

கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், காமராசன், அப்புறம் வந்த வைரமுத்து, நா முத்துக்குமார் மற்றும் பல கவிஞர்களுக்கு மத்தியில், தனது மொழி ஆற்றலால் தனித்துவத்துடன் நின்றவர் திரு முத்துலிங்கம்.

நடிகர் திலகம் படங்களை இயக்கிப் புகழ் பெற்ற  இயக்குனர் பி மாதவன்அவர்களின் தயாரிப்பான பொண்ணுக்குத்தங்க மனசு படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

இவரின் பல  பாடல்கள்  பட்டி தொட்டியெல்லாம் பரவி தமிழ்நாட்டையே பேசவைத்தது என்றால் மிகை ஆகாது.

உன்னால் முடியும் தம்பி படத்தில், இதழில் கதை எழுதும் நேரம் இது

காக்கிச் சட்டை படத்தில, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள

மீனவ நண்பனில் தங்கத்தில் முகம் எடுத்து  – சந்தனத்தில் நிறம் எடுத்து

வயசுப்பொண்ணுவில் காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து

கிழக்கே போகும் இரயில் படத்தில் – மாஞ்சோலைக் கிளி தானோ மான் தானோ

எங்க ஊர் ராசாத்தி படத்தில் – பொன் மானைத் தேடி நானும்

புதிய வார்ப்புகள் – இதயம் போகுதே எனையே பிரிந்தே

உதய கீதம் படத்தில – சங்கீத மேகம்  தேன் சிந்தும் நேரம்

பயணங்கள் முடிவதில்லை – ராக தீபம் ஏற்றும் நேரம்

நான் பாடும் பாடல் படத்தில, தேவன் கோயில் தீபம் ஒன்று

இதயக்கோயில் படம் – கூட்டத்திலே கோயில் புறா

முந்தானை முடிச்சு படத்தில், சின்னஞ சிறு கிளியே

இன்று போல என்றும் வாழ்க படத்தில் – அன்புக்கு நான் அடிமை

வா வா பக்கம் வா – தங்க மகன் படம்

ஆறும் அது ஆழமில்லை – முதல் வசந்தம் படம்

ஊருக்கு ஒரு பிள்ளை படத்தில் – முத்துமணி சிரிப்பிருக்க

செம்பவள மோகவண்ண இதழிருக்க – தங்க நகை எனக்கெதற்கு

எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு

அதேபோல் இவரின்  பாடல்கள் இசையின் மெட்டுக்கு மிகப் பொருத்தமாக இருந்ததால் , எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆனது.

ராகவனே ரமணா என்ற இளமைகாலங்கள் படத்தின் பாடலும்  சரி,

தூறல் நின்னு போச்சு படத்தில் வந்த பூபாளம் இசைக்கும்

பாடலும் உதாரணங்கள்.

இந்தப் பாடலில் அனுபல்லவியில், சரணத்தில் நாலாவது வரியை அப்படியே கேட்போரின் கற்பனைக்கு விட்டுவிடுவார் – தித்திக்கும் இதழ்  முத்தங்கள் – தன தன என்று விட்டுவிடுவார். 

ராகவனே ரமணா பாடலைப் பலர் வாலி எழுதியது என்றே எண்ணுவார்கள். ஆனால், அது  முத்துலிங்கத்தின் கை வண்ணம். 

காக்கிச் சட்டையில் வெளிவந்த பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள,

உன்னை நான் சந்தித்தேன் படத்தின் தேவன் கோயில் தீபம் ஒன்று

சிவாஜி நடித்த சிரஞ்சீவி படப் பாடல் – 

அன்பெனும் ஒளியாக, ஆலய மணியாக

ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி

தென்பாங்கு காற்றாக.,திருச்சபை பாட்டாக

எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

போன்ற பாடல்கள் வரிகளுக்காகவே விரும்பிக் கேட்கப்பட்டன.

உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில்,

இதழில் கதை எழுதும் வேளை இது என்ற பாடல் முழு இலக்கியம்.

நாளும் நிலவது தேயுது மறையுது –

நங்கை முகமென்று யாரதைச் சொன்னது

என்று,  உவமையை எதிர்மறையாக கேட்பதுபோலவும் அதற்குப் பதில் தருவது போலவும் எழுதி இருப்பது, கவிஞர் சுரதாவை நினைவு படுத்தும். 

அதேபோல, சங்கர் கணேஷ் இசையில் அமைந்த ஒரு பாடல் –

கடலோடு நதிக்கென்ன கோபம்

காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்

இளங்காற்று தீண்டாத சோலை – என்ற  பாடல் வரிகள் மிகுந்த ரசனை மிக்கது.

சிவகங்கையில் பிறந்த இந்த தமிழ்க் கங்கை,  ஆரம்பத்தில் முரசொலி, அலை ஓசை, போன்ற நாளிதழல்களில் பணிபுரிந்து பத்திரிகை அனுபவத்தை வளர்த்துக் கொண்டது பெருமை. பல்வேறு கவி அரங்கங்களில் கலந்துகொண்டு கவிதைகள் தந்தவர். பல நூல்களை வெளியிட்டவர்.

“அலையோசை” பத்திரிகையில் பணியாற்றும் போது,கதை வசனகர்த்தா திரு பாலமுருகன் மற்றும் இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைக்க அவர் இயக்கிய “பொண்ணுக்கு தங்க மனசு” படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கிறது,கவிஞருக்கு.

“தஞ்சாவூரு சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா” பாடல் தான் முத்துலிங்கத்தின் முதல் பாடல்.. பின்னணிப் பாடகி சசிரேகாவிற்கும் இதுதான் முதல் பாடல். ஜி கே வெங்கடேஷ் இசை. அப்போது அவருக்கு உதவி இளையராஜா.

அதன் பின் “கந்தனுக்கு மாலையிட்டாள்,கானகத்து வள்ளிமயில்”(உழைக்கும் கரங்கள்) பாடலை எம் ஜி ஆர்  படத்துக்கு எழுதுகிறார். பிள்ளைத்தமிழ் பாடுகிறேன், தங்கத்தில் முகம் எடுத்து என பல பாடல்கள் எம் ஜி ஆருக்காக எழுதியவர்,  கடைசி திரைப்படமான “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை எழுதினார்.

வாலி, புலமைப்பித்தன், அவினாசி மணி, நா காமராசன் போலவே, இவரும் எம்ஜிஆரை, பல பாடல்களில்  புகழ்ந்து எழுதினார். எம்ஜிஆர் பிள்ளைத்தமிழ், எம்ஜிஆர் உலா என்று சிற்றிலக்கியங்களாக படைப்புகளைத் தந்தார்.

Untitledமேலவை உறுப்பினர் (MLC), அரசவைக் கவிஞர், கலைமாமணி, பாரதிதாசன் விருது என பல பதவிகள், விருதுகளும் இவருக்கு கிடைத்தன.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்திற்காக இவர் எழுதிய பாடல், அன்றைய ஆளும் கட்சி திமுகவை எதிர்த்து எழுதிய வரிகள்.

ஆனால், இந்தப் பாடல் 1983 முதல், இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டது.

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்

வீரம் உண்டு வெற்றி உண்டு

விளையாடும் காலம் உண்டு

பூனைகள் இனம் போல பதுங்குதல் இழிவாகும்

புலியெனப் பாய்ந்து வருதல் முறையாகும்

முதன்முதலில், 24   வருடங்களுக்கு முன்னர்,  கம்பன் விழாவில் கவிஞர் வாலி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் , அவரை நான், என் மகனுடன்  சந்தித்த நினைவு சுகமானது. எல்லோரும் புறப்பட்டுப் போனபின், நிதானமாக உடன் இருந்து பேசியது அவரின் எளிமையைக் காட்டியது. 

அவரின் மற்றொரு பண்பு – மூத்த, சமகால மற்றும் அவருக்குப் பின் வந்த எல்லாக் கவிஞர்களையும் பாராட்டுவதுடன் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடும் அழகு. கவிஞர்கள் இந்தக் கவிஞரிடமிருந்து திறமை மற்றும் புலமையுடன், அவரின் எளிமையையும் கற்றுக்கொள்வது நல்லது. 

 வெற்றுச் சொல் இல்லாத முத்துச் சொல் கொண்ட கவிஞர்  முத்துலிங்கம் .