
கடவுளர்களின் தலைவர் ஜீயஸ் தன் சதுரங்கக் காய்களை வித்தியாசமான கோணத்தில் உருட்ட ஆரம்பித்தார். கிரேக்கர்களுக்கும் டிராஜன்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் அனைத்துக் கடவுளர்களையும் ஒதுங்கி இருக்கும்படி ஆணையிட்ட ஜீயஸ் தன் திட்டத்தை மாற்றி அமைத்தார். ” நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பிடித்த மனிதர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு உதவச் செல்லுங்கள். இல்லையென்றால் அக்கிலிஸ் ஒருவனாகவே ஒரே நாளில் இலியட் நகரை அழித்து விடுவான். அதனைத் தாமதப் படுத்துங்கள். பிறகு போர் நான் எதிர்பார்த்தபடி முடியும்” என்று அனைவரையும் விரட்டினார்.
அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல ஹீராவும் அதினியும் பொசைடனும் மற்றும் பலரும் கிரேக்கர்களுக்கு ஆதரவாகப் போரிட விரைந்தனர். அதேபோல் ஈரிஸ், அப்போலோ வீனஸ் போன்றார் டிரோஜன்களைக் காக்கப் புறப்பட்டனர். விளைவு போரின் உக்கிரம் அதிகமானது.
அக்கிலிஸின் வீரம் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த வெப்பத்தில் இலியட் நகரமே சுடுகாடாக மாறிவிடும் போல் இருந்த நிலையை மாற்ற நதிக் கடவுள் அக்கிலிசுக்கு எதிராக இறங்கினான். டிரோஜன்களை தன் வெள்ளப் புனலில் மறைத்து வைத்துக் கொண்டான். கோபம் கொண்ட அக்கிலிஸ் நதி வெள்ளத்திற்குள் பாய்ந்து டிரோஜன்களைக் கொன்று குவித்தான். நதிக் கடவுளின் மகனும் டிரோஜன்களுக்கு ஆதரவாகப் போரிட்டபோது கொஞ்சமும் தயக்கமின்றி அவனையும் தன் ஈட்டியால் குத்தி அவன் உடலைச் சின்னா பின்னாவென்று கிழித்தான். அதனால் மிகவும் கோபம் கொண்ட நதிக் கடவுள் தன் சுழலில் அக்கிலிசை அமுக்கி அழித்துவிடத் திட்டம் திட்டினான். ஆனால் ஹீரா தன் மகன்களில் ஒருவனான நெருப்புக் கடவுளை ஏவ நதி பின்வாங்கவேண்டி வந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏரிஸ் மிகவும் கோபமடைந்து டிராஜன்களைக் காப்பாற்ற முன்வந்தான். டிராஜன் நகரை அழித்துத் தீக்கிரையாக்க விரும்பும் அதினிக் கடவுளுடன் போரிட தானே முன்வந்தான். தன் ஈட்டியால் அதினியைக் கொல்லவும் முயன்றான். ஆனால் அதினியின் பராக்கிரமத்திற்கு முன் ஏரிஸ் ஒன்றுமில்லை என்பதை அந்தக் கணம் தீர்மானித்தது. அதினி எறிந்த மலைப் பாறை ஈரிசைத் தாக்க அவன் மயங்கி விழுந்தான். ஈரிசைக் காக்க வந்த வீனசையும் மார்பில் அடித்துக் காயப்படுத்தினாள் அதினி. அப்போலோ ஏரிசைப் போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தி அவன் உயிரைக் காப்பாற்றினான்.
அதே சமயம் நிலநடுக்க நாயகன் பொசைடன் டிராஜனுக்கு ஆதரவாக இருக்கும் அப்போலோவைப் பார்த்து , ” ஜீயஸ் ஆணையை மேற்கொண்டு டிராய் நாட்டைச் சுற்றி யாரும் புக முடியாத மதிலைக் கட்டியவர்கள் நாம் இருவரும்! அப்படியிருந்தும் அவர்கள் நம்மை அவமதித்து அனுப்பினார்கள். நீ கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவர்களுக்கு ஆதரவாக வந்திருக்கிறாயே? வா நாமிருவரும் போரிடலாம்” என்று அறைகூவல் விடுத்தான். தன் பெரியப்பாவுடன் போரிட விரும்பாத அப்போலோ ” வினாடியில் அழியும் மானிடப் பதர்களுக்காக நாம் ஏன் சண்டையிடவேண்டும்” என்று கூறி விலகிச் சென்றுவிட்டான். இருப்பினும் பொறாமையும் கோபமும் கொண்ட மற்ற கடவுளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி டிராஜன் யுத்தத்தை நீட்டிக் கொண்டிருந்தனர்.
அக்கிலிஸ் தன் யுத்த திறமையை அனைத்தையும் அந்தப் போரில் காட்டினான் . ஈவு இரக்கம் தயை தாட்சண்யம் கொஞ்சமுமில்லாமல் டிராஜன் வீரர்களையும் தளபதிகளையும் கொன்று குவித்தான். அரச குடும்பத்தினர் பலரைச் சிறைப்படுத்தி அடிமைகளாக விற்கக் கப்பலுக்கு அனுப்பினான். கொஞ்சம் தளர்ச்சியுறும்போது தன் நண்பனின் கொடூரக் கொலை நினைவுக்கு வரும். முன்னைவிடப் பன்மடங்கு கோப வெறியுடன் தாக்கி இலியட் கோட்டையைப் பிடிக்க முன்னேறி வந்தான்
அக்கிலிஸின் கொடூரத்தைக் கண்ணுற்ற டிராய் நாட்டு வேந்தனும் ஹெக்டர் பாரிஸ் ஆகியோரின் தந்தையுமான பிரியம் தன் பிள்ளைகளையும் டிராஜன் வீரர்களையும் எப்படியாவது கடவுளர்கள் நிர்மாணித்த மதிர்சுவருக்குள் வரவழைத்து கதவை மூடினால்தான் அவர்கள் தப்பமுடியும் என்று எண்ணிக் கொண்டான். அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தான். ஆனால் கொலைவெறியுடன் வரும் அக்கிலிஸ் கோட்டைக்குள் புகுந்துகொண்டான் என்றால் பிறகு டிராய் நாட்டு அழிவை எந்தக் கடவுளும் காக்கமுடியாது என்று தெரிந்துகொண்டான். அப்போது அவர்களுக்கு உதவுவதற்காக அப்போலோ முன் வந்தான்.
டிராய் நாட்டு வீரத் தளபதிகளில் ஒருவனை அக்கில்லிசுடன் நேரடிப் போருக்குச் செல்லும்படி உத்தரவிட்டு அவனுக்குத் துணையாகத் தான் இருப்பத்தாக வாக்களித்தான் அப்போலோ . அக்கிலிஸ் அந்தத் தளபதியைக் கொல்ல வரும் சமயத்தில் அப்போலோ அந்தத் தளபதி உரு எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். அக்கிலிஸ் அவனைத் துரத்திக்கொண்டு வர அப்போலோ அவனை சாமர்த்தியமாக போர்க்களத்திலிருந்து வெகு தூரம் அப்பால் கொண்டுவந்துவிட்டான். அந்த நேரத்தில் டிராய் நாட்டு வீரர்கள் அனைவரும் கோட்டைக்குள் புகுந்து அக்கிலிஸ் வர இயலாமல் கதவை இறுக்கப் பூட்டிக்கொண்டார்கள்.
ஆனால் கோழையைப் போல அக்கிலிஸுக்கு பயந்து கோட்டைக்குள் புகுந்து தப்பிக்க விரும்பாத ஹெக்டர் தன் மரணம் அல்லது அக்கிலிஸின் மரணம் இரண்டில் ஒன்று நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து சுத்த வீரனாக கோட்டைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.
கோட்டைக்குள்ளிலிருந்து அவனது தந்தை பிரியம் , தாய் மற்றும் மற்ற உயிருடன் இருக்கும் சகோதரர்கள் அனைவரும் ஹெக்டரை உள்ளே வரச்சொல்லிக் கெஞ்சினர். போர் வெறி பிடித்த அக்கிலிசுடன் சண்டை போட இது நல்ல தருணம் அல்ல என்று மன்றாடினார். ஆனால் தன் சேனையில் பெரும்பகுதி போரில் அழிவதற்குக் காரணமான தான் மட்டும் தப்பித்து உள்ளே சென்றால் தனக்கு எந்த மரியாதையும் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட ஹெக்டர் வெற்றி அல்லது வீர மரணம் இந்த இரண்டில் எது வந்தாலும் அது தனக்குப் புகழைத் தரும் என்று தன் முடிவில் உறுதியாக நின்றான்.
அக்கிலிசை ஏமாற்றி அலைக்கழித்த அப்போலோ, அனைத்து டிரோஜன் வீரர்களும் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டதும் ஓடாமல் நின்று ஏளனப் புன்னகை புரிந்தான். ” அக்கிலிஸ் நான் கடவுளரில் ஒருவன் சாதாரண தளபதி அல்ல என்பதை நீ உணர்ந்து கொண்டிருந்தால் இந்நேரம் டிராய் உன் வசம் ஆகியிருக்கும். இப்போது உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று விஷமமாகக் கூறினான்.
” நீ எல்லாம் ஒரு கடவுளா? எனக்கு மட்டும் சக்தியிருந்தால் கடவுள் என்றும் பார்க்காமல் உனக்குச் சரியான தண்டனையை அளித்திருப்பேன் ” என்று கூறி டிராய் கோட்டையை நோக்கி விரைந்தான் அக்கிலிஸ்.
அங்கே காத்துக்கொண்டிருக்கும் ஹெக்டரைப் பார்த்ததும் அக்கிலிஸின் மனதில் அவன் கிரேக்கப் படை வீரர்களுக்குச் செய்த கொடுமையையும் குறிப்பாகத் தான் நண்பன் பெட்ரோகுலஸை பின் பக்கமாகத் தாக்கிக் கொன்று அவனை நிர்வாணமாக்கி அவனுடைய கவசத்தையும் அறுத்து எடுத்துக் கொண்டவன் என்பதை எண்ணியதும் அவன் உள்ளத்தில் குரோதம் கொழுந்துவிட்டு எரிந்தது.
இருவரில் யார் எவர் கையால் மரணம் அடையப்போகிறார்கள்? கடவுளர்கள் விதித்த விதி என்ன?
இலியட் என்ற மகா காவியத்தின் முடிவு இதுதானா?
(அடுத்த இதழில் முடியும்)

அருமை சுந்தரராஜன் சார். மனதைக் கவர்ந்த ட்ராய் திரைப்படத்தின் இதிகாசப் பின்னணி, கடவுள்களின் பங்கேற்பு சுவாரசியம் கூட்டுகிறது.
LikeLike