‘ஏ ரனியா.. ரே ரனியா. எழுந்திருக்கப்போகிறாயா இல்லை முதுகில் எட்டி உதைக்கட்டுமா? கொஞ்சம் தள்ளிப் போனால் போதும் கால் அகட்டிப் படுக்க வேண்டியது. வேலைக்காரர்களுக்கே இது ஒரு கெட்டபழக்கம். எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எழுந்திரு. என்ன  என்னை இப்படியே உருண்டைக் கண்களால் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறாயா?’

அம்மா ரொம்ப அன்பாக ‘ராணி குமாரி’ என்று பெயர் இட்டார்கள். அந்த ராணியைத்தான் எஜமானி ‘ரனியா’வாக்கி விட்டாள். இப்போது எல்லோரும், ஏன் வீட்டில் உள்ளவர்களும் நிஜப் பெயரை மறந்து விட்டனர். ஏழு வயதிலேயே ராணி ரனியாகி விட்டாள். எஜமானியின் பங்களாதான் அவளது உலகமும்.

தினந்தோரும் அடி உதை இல்லாமல் அவளுக்கு விழிப்பு வருவதில்லை, அன்று மட்டும் எப்படி வரும்! கோடை வெயில் நல்லவர்களுக்கேக் கண்ணை அழுத்தும்போது, கும்பகர்ணனோடு பழைய பந்தம் உள்ள ரனியா எம்மாத்திரம்! அன்றும் எஜமானி ரனியாவை ஒரு மாங்காயைத் தோல் சீவச் சொல்லி விட்டு தான் கட்டிலுக்குச் சென்று விட்டாள். ஆனால் தூக்கம் அவளிடம் செல்லாமல் ரனியாவிடம் போவதும் வருவதுமாக இருந்தது.

எஜமானியின் ஓர் அடி ரனியாவை நிமிர்த்தியது. அவளுக்கு எங்கே வேண்டுமானாலும் தூங்கும் பழக்கம். அதில் என்ன என்ன கனவுகள் – இனிப்பு பக்ஷணங்கள், புதிய துணிமணிகள், பக்கத்து வீட்டுப் பையன், எதிர் வீட்டு முனியா – என்று எல்லாம் வரும். இப்போதெல்லாம் எஜமானியின் மருமகளும் வருகிறாள். இப்போதுதான் அவளைப் பார்த்து ‘ஏன் அவள் ஆரஞ்சு வண்ண[ப் புடவையில் சோகமாக இருக்கிறாள்’ என்று யோசிக்கும்போதே ‘ஏ மகாராணி, நின்று கொண்டே எங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பாயா அல்லது ஏதாவது வேலை செய்வாயா?’ என்று எஜமானி மீண்டும் அவளது கனவில் மண்ணைப் போட்டாள். ‘கண்களைத் திறந்து கொண்டே கனவு கண்டால் எஜமானி நம்மைச் சும்மா விட மாட்டாள்’ என்று எஜமானியின் கூக்குரலிடையே வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

ரனியா தூங்குவதைப் பார்த்து கத்திய எஜமானியின் குரலைக் கேட்டு மற்ற வேலையாட்களும் குழுமி விட்டனர். எல்லோரும் இப்போது இவளைத் திட்டப் போகின்றனர். சின்னவளாக இருப்பதில் இது ஒரு நஷ்டம். இந்தச் சமயத்தில் மருமகளின் அறைதான் சரண் அடையும் இடம். குளிர்ந்த நீரை பானையிலிருந்து அவசரமாக பித்தளைப் பாத்திரத்தில் நிறப்பிக்கொண்டு அந்த அறை நோக்கிச் சென்றாள்.

இப்போதெல்லாம் அவளுக்கு மருமகளைக் கவனித்துக் கொள்வதுதான் வேலை. அம்மா மிகவும் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இந்த வீட்டு டிரைவர் இவளை இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டார். அப்போது அவளுக்கு ஏழு வயது, இப்போது பதினான்கு. அப்போது எஜமானியின் கால்களுக்கு எண்ணைத் தேய்த்து விடும் ஒரே வேலைதான். இப்போது பதவி உயர்ந்து எஜமானியின் நிழலாகவே ஆகி விட்டாள். ஆனால் இப்போது எஜமானி அவளை மருமகளிடம் ஒப்படைத்து விட்டாள். கொத்து சாவியைக் கொடுக்கும் முன் நம்பகமான வேலையாளை ஒப்படைப்பதுதான் இந்த பங்களா வழக்கம் போலும்.

ரனியா சாயந்திரம்தான் வீட்டிற்குத் திரும்புவாள். ரனியாவின் அம்மா 5 வீடுகளில் பெருக்கித் துடைக்கும் வேலை செய்கிறாள். அப்பா சந்தையில் காய்க் கடை வைத்துள்ளார். மூன்று மூத்த சகோதரர்கள், பின் இரண்டு சகோதரிகளில் ரனியா நடுவில் உள்ளாள். எல்லோரும் வேலை செய்வார்கள். இப்போது அம்மாவின் காலைநேரத்து மசக்கையைப் பார்க்கும்போது வீட்டு மனிதர்களின் எண்ணிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை என்று தெரிகிறது.

அம்மா மாதிரி இங்கே மருமகள். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவள் அம்மா ஆகப் போவதுதான் ஒரே வித்யாசம். முழு வீடும் அவளை தலையாலும் கண்களாலும் தாங்குகின்றன. இந்தப் பங்களாவில் வசிப்பவர்கள் எத்தனை பேர்? நாள் பூரா வீட்டைத் தலையில் சுமந்து திரியும் எஜமானி, மிகவும் கோபக்கார எஜமானர், வேலை என்று சுற்றித்திரியும் ஒரு பையன், அவனுடைய மனைவி என்று இந்த நான்கு பேர்களுக்காக 5 வேலைக்காரர்கள், 2 வேலைக்காரிகள்.

ரனியா மருமளின் அறையில் தண்ணீரை வைத்தாள். அவள்  தூங்கிக் கொண்டிருக்கிறாள். கதவைத் திறக்கும் சப்தம் கேட்டும் எழுந்திருக்கவில்லை. நாள் பூரா படுக்கைதான். சாயந்திரம் சிறிது நேரம் மாடியில் இருப்பாள். இருட்டும் வரை அல்லது ரனியா வீட்டிற்குப் போகும் வரை. ரனியா அவளுக்கு நிழல் போல இருப்பாள். ஆனால் யார் நிழலுடன் பேசுவார்கள்! இரண்டு பேரும் ஒருவர் மற்றவருடன் பேசுவதில்லை. ஒருத்தி பேசாமல் கண்களால் ஆணை இடுவாள், மற்றொருத்தி பேசாமல் வேகமாக அதனைச் செய்து முடிப்பாள். இருவரும் அவரவர் உலகத்திலே.

அதனால் ஒரு நாள் மருமகள் மௌனத்தை உடைத்த போது ரனியா திடுக்கிட்டாள். சென்ற வாரம் புதன் கிழமை. ‘மருமகளால் குனிய முடியவில்லை, நீ அவளுக்கு காலை அலம்பி, நகம் வெட்டி, சிவப்பு சாந்து வைத்து விடு’ என்று எஜமானி உத்தரவிட்டாள். ரனியா அவ்வாறே வாளியில் சுடு தண்ணீர் எடுத்து வந்தாள். மருமகளும் காலை அதில் நனைத்தாள். ரனியா அவளது அழகான பாதங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். எஜமானியும் அழகுதான். ‘வெள்ளை நிறமாயிருந்தால் கழுதையும் அழகுதான்’ என்று அம்மா சொல்வார்கள். ‘கால்கள் நன்றாக இருந்தென்ன, கைரேகைகள் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு நடப்பதற்கு சின்ன பூந்தோட்டம்தான் கிடைத்துள்ளது, உன்னை மாதிரி பறக்க பரந்த வெளியா உள்ளது?’ என்று மருமகள் அங்கலாயித்தாள். எல்லோருக்கும் அடுத்தவர் வாழ்க்கைதான் நல்லதாகத் தெரிகிறது. சில துக்கங்கள் சொல்ல முடிவதில்லை. ‘கைரேகைகள் எப்படி இருந்தாலென்ன, என்னை மாதிரி காலில் ரேகை இல்லாமல் எஜமானியின் கால் அழகாக இருக்கின்றன’ என்று ரனியா நினைத்தாள்.

இங்கே அம்மா வயிறு பெரிதாகிறது, அங்கே மருமகளின். மருமகளை  ஒரு வேலை செய்ய விடுவதில்லை. சாப்பாடு கூட படுக்கையில்தான். எஜமானி ரனியாவை அவள் கூடவே இருக்கச் சொல்லி விட்டாள், பாத்ரூம் போவதானால் கூட. வேலை என்னவோ எளிதாகத் தெரிந்தாலும், பேசாமல் நாள் கழிவதைப் பார்த்துக் கொண்டே இருத்தல் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் அம்மா இன்னமும் அந்த 5 வீடுகளிலும் பெருக்கித் துடைக்கும் வேலை செய்து வருகிறாள். ஆகவே ரனியாவும் அவளது சகோதரிகளும் வீட்டு வேலைப் பார்த்துக் கொண்டு அம்மாவை சிறிது ஓய்வு எடுக்க வைக்கிறார்கள். ஆனால் அம்மாவோ ‘பயப்படாதீர்கள், இது நமக்குப் பழக்கமான ஒன்று’ என்று இவர்களை ஆசுவாசப்படுத்துகிறாள். எப்போதாவது மருமகளைப் பற்றி பேசும்போது ‘நாம் ஓய்வு எடுக்கும் அளவுக்கு நமது கைரேகைகள் இல்லை. எத்தனை தடவை இந்த மாதிரி ஆகி விட்டது. மருமகள் மாதிரி தவம் செய்து ஒன்றுதானா?’ என்று தன் உப்பிய வயிறைத் தொட்டுக் கொண்டே ரொட்டி செய்யலானாள். ஒரு வேளை கைரேகைகள் வயிற்றோடு சம்பந்தப்பட்டதுவோ!

எட்டாவது மாதமே மருமகளை ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரனியாவையும் அங்கேயே இருக்கச் சொல்கிறார்கள். என்ன பயம் என்று தெரியவில்லை! எஜமானி எப்போதும் பூஜை செய்வதும், வேண்டுதல்கள் வைப்பதுமாக இருக்கிறாள். சாயந்திரம் பிரசாதம் எடுத்துக் கொண்டு மருமகளைப் பார்க்க வருவாள். இப்போது யாரையும் திட்டுவதில்லை, கோபிப்பதில்லை. பூஜையின் புண்யத்தால் ஒரு பேரன் பிறக்க வேண்டி ஆஞ்சநேயருக்காக 11 செவ்வாய்க்கிழமைகள் நீர் கூட பருகாத விரதம் இருக்க எண்ணினாள்.

‘குழந்தை பிறப்பது என்ன அவ்வளவு கஷ்டமா, அம்மா ஒவ்வொரு வருடமும் ஒன்றைப் பெற்றுக் கொள்கிறாளே!’ என்று ரனியா எண்ணினாள். மருமகளின் கணவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவள் அருகிலேயே இருந்தார். அம்மா அப்பா மாதிரி அவர்கள் சண்டைப் போட்டுக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதும் இல்லை. அருகருகே இருந்தும் விலகியே இருந்தனர். சண்டைபோட்டாலும் அம்மா அப்பா எல்லா வருடமும் குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனரே!.

ஒரு நாள் ரனியா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் அம்மா அரற்றிக் கொண்டிருந்தாள். ரனியாவின் பெரிய தமக்கை பக்கத்து வீட்டுப் பாட்டியைக் கூப்பிடச் சென்றாள். அம்மாவின் முகம் கருப்பதைப் பார்த்து யாரையாவது கூப்பிட வேண்டுமா, இல்லை அம்மாவின் அருகிலேயே இருக்க வேண்டுமா என்று ரனியாவிற்குப் புரியவில்லை. அவள் இது வரை இப்படிப் பார்த்ததில்லை. தமக்கைமார்கள் சொல்ல சிறிது கேட்டிருக்கிறாள். ஒன்றும் செய்வதறியாது அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள். ‘அந்தத் துணியை எடு, சிறிய பாத்திரத்தில் சுடு தண்ணீர் கொண்டு வா, உன் அப்பா இன்னும் வரவில்லையா, சரிதா எங்கே போய் விட்டாள்’ என்று அம்மா முனகிக் கொண்டே இருந்தாள்.. இதற்குள் சரிதா இரண்டு பெரியவர்களை அழைத்து வந்தாள். அவர்கள் இவர்கள் இருவரையும் வெளியே போகச் சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்கலாயினர். கதவருகில் உட்கார்ந்தவாரே தூங்கி தன் கையில் தங்கக் கோல் இருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருந்த ரனியாவைப் பலவந்தமாக உலுக்கி ‘கும்பகர்ணனின் சகோதரியா நீ, ஒரு மணி நேரமாகக் கூப்பிடுகிறேன். உள்ளே போ, உனக்குத் தம்பி பிறந்திருக்கிறான். ரொம்ப அழகாக, நெற்றியில் கரு முடிகள், சிவந்த நிறம், போய் அம்மாவைப் பார்த்துக் கொள்’ என்று பாட்டி சொன்னார்கள்.

உள்ளே அம்மா களைத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. பக்கத்தில் அழகான குழந்தை. ரனியா அவன் பக்கத்தில் படுத்துக் கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து எழுந்த ரனியா அம்மா முற்றத்தில் அடுப்பு மூட்டுவதையும், அப்பா காய்களை எடுத்து வைத்துக் கொள்வதும், சரிதா சின்னப் பையனைக் கையில் வைத்துக் கொண்டே பெருக்குவதையும் பார்க்கிறாள்.

அவசரமாக முகம் அலம்பிக் கொண்டு ரனியா ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். 1 ½ மாதங்களாக மருமகள் ஆஸ்பத்திரியில். அம்மா பிள்ளைப் பெற்றதைப் பார்த்து ரனியா டாக்டர்கள் பைத்தியமோ என்று எண்ணுகிறாள். மருமகள் என்ன நோய்வாய்ப்பட்டா இருக்கிறாள், பிள்ளைதானே பெற்று எடுக்க வேண்டும்!

ஒரு நாள் ஆஸ்பத்திரியில் டிரைவர் ரனியாவைத் தடுத்து ‘இனி நீ இங்கு வேண்டாம், வீட்டிற்குப் போய் விடு’ என்கிறார். அறையில் மௌனம். மருமகளின் உப்பிய வயிறு இல்லை. பையன் டாக்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். எஜமானி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாள். ஏன் தாமதம் என்று யாரும் இவளைக் கேட்கவில்லை. டிரைவர் அவளை இழுத்துக் கொண்டு கீழே வருகிறார். ‘என்ன ஆச்சு மருமகள் தூங்கிக் கொண்டிறாள். பின் ஏன் பதட்டம். மருமகளின் வயிறு..’ அவளை முடிக்க விடாமல் ‘இறந்த குழந்தை வெளி வந்துள்ளது. இதைத்தான் இத்தனை நாட்களும்  நீ சேவகம் பண்ணினாயோ! என்ன பாக்கியம் பண்ணியிருக்காள் மருமகள்’ என்று டிரைவர் கூறினார்.

ரனியாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘இறந்த குழந்தை எப்படி வயிற்றிலிருந்து வரும்? அம்மாவிற்கு என்ன அழகான குழந்தை பிறந்துள்ளது. நாம் பிறகு மருமகளிடம் கேட்போம் இப்போது இந்தக் கிழம் நம்மை உள்ளே விடாது’ என்று ரனியா மனதிற்குள் எண்ணினாள். அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் இவள் ஓடிப் போய்ப் பார்த்தபோது ‘போ ரனியா இனி நீ தேவையில்லை, ஏன் நானே தேவையில்லை’ என்று மருமகள் ஈன ஸ்வரத்தில் கூறினாள்.

வீட்டிற்கு வந்து தன் தம்பியை மடியில் இருத்தி சிவப்பு நிற புடவையில் மருமகளைக் கனவில் காண்கிறாள். அப்படியே அவளுடைய சிவந்த பாதங்களையும், இங்கும் அங்கும் ஓடும் அவளது கைரேகைகளையும்!