
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை “கற்றார் ஏத்தும்” என்னும் அடைமொழி கொடுத்துக் கற்றார் ஏத்தும் கலித்தொகை என்றழைக்கப்படுகிறது. கலித்தொகை அகப்பொருள் பற்றிய நூலாகும். இது ’கலி’ என்றும், ‘கலிப்பா’ என்றும், ’கலிப்பாட்டு’ என்றும், ’நூற்றைம்பது கலி’ என்றும், அக்காலத்திய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது.
கலிப்பா வகையில் அமைந்துள்ள பாக்கள் தொகுக்கப்பெற்று இந்நூல் அமைந்துள்ளது. எனவே இது கலித்தொகை என்று வழங்கப்படுகிறது. இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார் ஆவார். இந்நூலில் பாலைக் கலி 35 பாடல்களையும், குறிஞ்சிக் கலி 29 பாடல்களையும், மருதக் கலி 35 பாடல்களையும், முல்லைக் கலி 17 பாடல்களையும், நெய்தற் கலி 32 பாடல்களையும் ஆக 148 பாடல்களைக் கொண்டு திகழ்கின்றது.
பாலைக் கலியினைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியினைக் கபிலரும், மருதக் கலியினை மருதன் இளநாகனாரும், முல்லைக் கலியினைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தற் கலியினை இதைத் தொகுத்த நல்லந்துவனரும் பாடி உள்ளனர். இந்நூலின் பாடல்கள் இனிய ஓசையை உடையன. மேலும் நாடகப் பாங்குடைய நிகழ்ச்சிகள் அமையப் பெற்றுள்ளது கலித்தொகையின் தனிச்சிறப்பாகும்.
கலித்தொகைக்கு முதன் முதல் உரை எழுதியவர் நச்சினார்க்கினியரே ஆவார். இந்நூலின் ஏடுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தேடி முதலில் பதிப்பித்துத் தந்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். அப்பதிப்பை வைத்துக் கொண்டு மேலும் சில குறிப்புகளுடன் மீண்டும் அச்சேற்றியவர் இ.வை. அனந்தாராமையர் ஆவார்.
பாலைக்கலி:
தலைவன் பொருள்தேடச் செல்லும்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணுகிறான். அவளும் உடன் வருகிறேன் என்கிறாள். அவன் இசைவு தர மறுக்கிறான். அதற்கு அவள், “கொலை செய்யும் எண்ணத்துடன் வேட்டை நாய்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அவற்றிடையே தவித்த மானானது, தப்பி ஓடுகிறது. ஆனால் ஓடிச் சென்று வேடனின் வலையிலே வீழ்கிறது. அதே போல உன் செயலாலும் சொல்லாலும் துன்பம் அடைந்து தவித்த என் நெஞ்சம் இப்பொழுது உன்னிடமே சென்று நிலைத்து விட்டது. அதற்கு எந்தத் துன்பமும் வராமல் காத்துக் கொள்வது உன் பொறுப்பு” என்று கூறுகிறாள்.
பிரிகிறேன் என்னும் தலைவனின் சொல், பிரியும் அவன் செயல் இவை வேட்டை நாய்களாகவும், அவனையே வேடனாகவும் இங்கே காட்டப்பட்டுள்ளது. இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதை அவன் கையில் தலைவி விட்டு விடுகிறாள்.
”……………………………………………………………………………………………….
கொலை வெங் கொள்கையோடு நாய் அகப்படுப்ப,
வலைவர்க்கு அமர்ந்த மடமான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே” [பாலைக்கலி 22]
குறிஞ்சிக் கலி
எல்லாரும் நன்கு அறிந்த கதை இது. தலைவி தோழியிடம் கூறுகிறாள். “சிறுவனாக இருந்த பொழுது நாம் சிற்றில் கட்டி விளையாடியதை எல்லாம் சிதைத்தானே ஒருவன். அப்படி நம்மை அழவிட்டவன் ஒரு நாள் எம் இல்லத்தின் வாசலுக்கு வந்தான். உள்ளே நானும் அன்னையும் மட்டுமே இருந்தோம். வந்தவன் ”குடிக்க நீர் வேண்டும்” எனக் கேட்டான். என் அன்னை, “பொன்னால் செய்தக் கலயத்திலே கொண்டுபோய்க் கொடு” என்றாள். நான் அவ்வாறு தரும்போது அவன் என் முன்னங்கையைப் பற்றி மெதுவாக இழுத்தான். நான் நடுங்கி, “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று கத்தினேன்.
அன்னை ஓடி வந்தாள். அவன் அன்னையின் சினத்திற்கு ஆளாகாமல் இருக்க அவனைத் தப்பிக்க வைக்க, “இவன் நீர் குடிக்கும்போது விக்கினான்” என்றேன். உண்மை தெரியாத அன்னை அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள். அப்பொழுதும் அவன் சும்மா இருக்கவில்லை. கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்து மகிழ்ச்சியுடன் நகைத்தான் அக்கள்வன் மகன்” அவன் மீது அவளுக்கு அன்பும் உள்ளது. அதனால்தான் அவன் மீது பழிச்சொல் வராமல் காக்கிறாள். இறுதியில் வரும் பாடல் அடிகள் மட்டும் மிகவும் சுவை தருகின்றன.
………………………………………………………………………………………………………………………
”அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா
அன்னை அலறிப் படர்தா, தன்னை யான்
’உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்” [குறிஞ்சிக் கலி 15]
மருதக் கலி
மருதத் திணை ஊடலினைக் குறிக்கும். தலைவன் பரத்தையர்பால் சென்று மீண்டு வருகிறான். அவனிடம் தலைவி, “பெருமழையை நாடி இருக்கும் நெற்பயிர் போல நாம் இருக்கிறோம். இங்கு சிறுதூறல் பயன் தருமோ? அது வெப்பத்தைக் கிளப்பிவிட்டுத் துயரையே தரும். அதுபோல ஆண்டுக்கு ஒருமுறை நீ வந்து அருள் செய்தது போதும். நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரை நாம் காத்திருப்போம். அவர்கள் வருந்தப் போகிறார்கள். நீ அவர்களிடமே செல்” என்று கூறுகிறாள். தலைவனுடன் நீண்ட நாள் இன்பம் அனுபவிக்க விரும்பும் அவள் தன்னைப் பெருமழையை நோக்கி இருக்கும் நெற்பயிருக்கு உவமையாகக் கூறுகிறாள். அவன் இப்பொழுது தரும் சிறிது நேர இன்பம் மீண்டும் ஆசையைக் கிளப்பி விட்டு விடும் என்றும் கூறுவது நல்ல நயம்.
”……………………………………………………………………………………………………
தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்? நீ வருநாள்போல் அலைகுவம் யாம்;புக்கீமோ
மாரிக்கு அவாவுற்றுப் பின்வாடும் நெல்லிற்கு, ஆங்கு
ஆறாத் துவலை அளித்தது போலும், நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு. [மருதக்கலி 6]
முல்லைக் கலி
தலைவியும் தோழியும் உரையாடுவது போல ஒரு பாடல் அமைந்துள்ளது. தலைவி, “என் பெற்றோருக்கு என் களவு வாழ்க்கை தெரிந்துவிட்டதடி” என்கிறாள். அதற்குத் தோழி,”எப்படி?” என வினவுகிறாள். “அன்று அவன் வந்தபோது முல்லைச் சரம் அளித்தான். நான் அதனை என் கூந்தலில் சூடிக் கொண்டேண். என் செவிலி எனக்குத் தலைவாரி முடிக்கும்போது அம்மலர் என் கூந்தலிலிருந்து கீழே விழ செவிலித்தாய் கண்டுவிட்டாள். உடனே நான் அச்சம் கொண்டு இக்குறுங்காட்டிற்கு ஓடிவந்து ஒளிந்திருக்கிறேன்” என்று தலைவி கூறுகிறாள்.
அதற்குத் தோழி, “அதற்கு ஏன் அஞ்சுகிறாய்; நீ அவன் தந்த முல்லைச்சரம் சூடியதால் உன் பெற்றோர் உன்னை அவனுக்கே மணம் செய்விக்க முடிவு செய்து விட்டனர். அதோ நம் வீட்டு முற்றத்தில் புதுமணல் பரப்புகின்றனர். பந்தல் இட்டு அங்கேதான் மணம் நடத்துவர்; இத்தனை நாள் எண்ணியிருந்தது இப்பொழுது நடக்க உள்ளது. ஏன் இன்னமும் பதுங்கிக் கொண்டிருக்கிறாய்” என்று சொல்லி அவள் அச்சத்தைத் தவிர்க்கிறாள். இப்பாடல் மூலம் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்ததும் புது மணலைப் பரப்பி அதில் பந்தல் வைத்து மணம் நிகழும் என்பது தெளிவாகிறது.
“……………………………………………………………………….
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல்—அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும்
இடம் அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை; அகன்கண்
வரைப்பில் மணல் தாழப்பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,
அல்கலும் சூழ்ந்த வினை” [முல்லைக் கலி 15]
நெய்தற் கலி
”……………………………………………………………………………………………………
எறிதிரை தந்திட, இழிந்த மீன்இன் துறை
மறிதிரை வருந்தாமல் கொண்டாங்கு நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய்பரிக் கடுந்திண்தேர் களையினோ இடனே” [நெய்தற் கலி 4]
இவை பாடலின் இறுதி அடிகள். நீர்த்துறையின் அலை மீனைக் கொண்டுவந்து கரையிலே போடுகிறது. அந்த மீன் துயருற்று வருந்துகிறது. திரும்பி வரும் அலை அம்மீனை நீருக்கு எடுத்துச் செல்கிறது. இக்காட்சியினைக் காட்டித் தோழி தலைவனுக்குத் தலைவியின் நிலையைக் கூறுகிறாள். பிரிந்து சென்ற அவன் இன்னும் வரவில்லை. தோழி அவனைக் கண்டு தலைவியின் நிலையைப் பற்றி எடுத்துரைக்கிறாள். ”கொண்டுவந்து போட்ட மீனை மீண்டும் அலை எடுத்துச் செல்வதைப் போல கூந்தல் அவிழ்ந்து விழ, உடல் மெலிந்து வருந்துகின்றவளின் பிரிவுத் துயரைப் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டப்பட்ட உன் தேரில் சென்று நீ போக்கினால் அதுவே அவளுக்கு நல்ல காலமாகும்”
பாய்ந்து வரும் குதிரைகள் என்பதால் அத்தேர் விரைவாக செல்லும் என்பதும் தலைவியின் துன்பம் விரைவில் தீரும் என்பதும் புலனாகிறது.
இவற்றைப் போன்று பொருட் சிறப்பும் உவமைச் சிறப்பும், பண்டைத் தமிழர் வாழ்க்கையை அறிவிக்கும் பாடல்கள் உள்ள நூல்தான் “கற்றோர் ஏத்தும் கலித்தொகையாகும்.

ஆகா..! அருமை ஐயா. தங்கள் உரை சங்கத் தமிழ் நுங்கச் சுவை பொங்கும் அகம் எங்கும்!
LikeLike