இரண்டாம் ராஜேந்திரன்-2

 

சோழ இளவல் வீரராஜேந்திரன் - 1 - YouTube

வீரராஜேந்திரன்

 

முன்கதை: இரண்டாம் ராஜேந்திரன் சோழ நாட்டை ஆண்டான்.. அவனுக்குப் பிறகு? தொடர்ந்து பேசுவோம்.

போர்களில் நேரடியாக ஈடுபடும் மன்னர்கள், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. வாழ்நாள் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் இருவரும் பத்து வருடங்கள் தலா ஆண்டு காலமானார்கள். இரண்டாம் ராஜேந்திரன், தனது ஆட்சியில், தனது தம்பியும் மாவீரனுமுமான வீரசோழனை பட்டத்து இளவரசனாக்கினான். அவனுக்கு வீரராஜேந்திரன் என்ற பட்டமளித்துச் சிறப்பித்தான்.

கி பி 1002 ல் ராஜேந்திர சோழனுக்கும், மகாராணி முக்கோகிலம் அடிகள் இருவருக்கும் மகனாகப் பிறந்தான். ராஜராஜசோழன், இந்தப்  பேரனுக்கு வீரசோழன் என்ற பெயர் வைத்தான். தந்தை ராஜேந்திர சோழனின் பல வெற்றிகளுக்கும், மற்றும் அண்ணன்கள் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன் இருவருக்கும் இவன் உதவியாக இருந்தான். ராஜாதி ராஜன் ஆட்சிக்காலத்தில், இலங்கைக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டான். போர்கள் பல கண்டான். வென்றான். பின்னர் இரண்டாம் ராஜேந்திரன் ஆட்சியில், உறையூருக்கு அரசனாக நியமிக்கப்பட்டான். அண்ணன் இரண்டாம் ராஜேந்திரனின் மறைவுக்குப் பின், வீரராஜேந்திரன் சோழ மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

இவ்வாறு அடிக்கடி. முப்பது வருடங்களில், மூன்று சோழ மன்னர்கள் ஆண்டது, சுற்றி நின்ற பகைக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. துள்ளியெழுந்து தங்கள் ஆட்சியைத் திரும்பப் பெறத்துடித்தனர். முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அந்த மூன்று சோழ மன்னர்களும் போரில் சிங்கங்கள். பகைவர்கள் அனைவரும் சண்டையிட்டுத் தோற்றனர்.

வீரராஜேந்திரன் மன்னரான உடன், சேரநாட்டு மன்னன் பொட்டாபி அவனைச் சவாலுக்கு அழைத்தான். வீரராஜேந்திரன் நேரடியாக போர் புரிந்து பொட்டாபியைக் கொன்றான். அதேநேரம் பாண்டிய இளவரசர்கள் கலகம் துவக்கினர். அதை அடக்கப் போர் புரிந்தான். இந்த போர்கள் நடந்துகொண்டிருக்கும் போது, மேலைச்சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சோழநாட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டான்.

சோமேஸ்வரன், சாளுக்கிய மன்னர்களில் ஒரு தலைசிறந்த மன்னன். போர்களில், தோல்விகளால், அவன் துவளவில்லை. வெற்றிகளும் அவனுக்கு ஓய்வைத்தரவில்லை. தினமும் போரின் சுமைகளைத் தன் தோளில் இன்பமாகச் சுமந்து வந்தான். சோழன் ராஜாதிராஜனிடம் இருமுறை தோற்றாலும், அவனைப் போர்க்களத்தில் வில்லாளர்களை வைத்து கொன்றான். ஆயினும் இரண்டாம் ராஜேந்திரனின் சாகசத்தால், தோல்வியைத் தழுவினான். துவளாமல், மீண்டும் ராஜேந்திரனை வலுவுக்கு அழைத்துப் போரிட்டுத் தோற்றான். எத்தனைத் தோல்விகளைத் தழுவினாலும், தனது ஆட்சிப்பகுதிகளை சோழர்களுக்கு விட்டுக்கொடுக்காமல், தக்கவைத்துக் கொண்டான். மானியகெடத்திலிருந்து கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான். சோழர்களிடம் பெற்ற தோல்வி, அவமானங்களுக்கு பதிலடி கொடுத்தே தீருவேன் என்று சபதம் செய்தான். வீரராஜேந்திரனின் வீரமும் அவன் அறிந்ததே. ஆயினும், அவனும் மனிதன் தானே. ராஜாதிராஜனை போல வேறொரு சந்தர்ப்பம் பிறக்காதா? அந்த சந்தர்ப்பத்தைத் தான் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தான். வீரராஜேந்திரன் ஆட்சியேற்ற முதல் வருஷம், சேரன் பொட்டாபி, பாண்டிய இளவரசர்களைத் தூண்டிவிட்டான். அவர்களுடன் வீரராஜேந்திரன் போரிடும்போது, தனது இளவரசர்கள் விக்கிரமாதித்தன் (VI), ஜயசிம்மன் இருவரையம் சோழநாட்டுக்குப் படையெடுக்க அனுப்பினான். கங்கைகொண்டசோழபுரத்தில் சாளுக்கியப் படைகள் ஊடுருவின. வீரராஜேந்திரன், செய்தி அறிந்ததும், பாண்டிய நாட்டுப் போரை விரைவில் முடித்து, தலைநகர் திரும்பினான். வீரராஜேந்திரன் சாளுக்கியப்படைகளையும் , சாளுக்கிய இளவரசர்களையும் தோற்கடித்துத் துரத்தினான். சோழன், சாளுக்கியத்தலைநகர் வரை அவர்களைத் துரத்தினான். அங்கு சோமேஸ்வரனை போர்க்களத்தில் சந்தித்தான். கடும்போரின் முடிவில், சோமேஸ்வரன் தோல்வியுற்றுத் தப்பியோடினான். சோமேஸ்வரன், வெங்கி மீது படையெடுக்கத் தன் மகன் விக்கிரமாதித்தனை அனுப்பி வைத்தான். வீரராஜேந்திரன், வெங்கி மீது படையெடுத்து, சாளுக்கியர்களைத் தோற்கடித்து, கல்யாணியை முற்றுகையிட்டு, எரித்துத் தீக்கிரையாக்கினான், சோமேஸ்வரனின் தளபதிகளை அழித்து, செல்வங்களைக் கொள்ளையடித்து, அவனது தலைமை ராணியை சிறையெடுத்து, குதிரைகளையும், யானைகளையும் கவர்ந்தான். இவ்வளவு நடந்த பிறகும், சோமேஸ்வரன் தளர்ந்தானில்லை. ஒருமுறையாயினும், இந்த சோழனை முழுதாக வென்று, நான் அடைந்த அத்தனைத் தோல்விகளையும் அழிப்பேன் என்று உறுதி கொண்டான்.

வீரராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதினான்:
“வீரராஜேந்திரா! வெற்றி ஒருவருக்கு மட்டுமே என்றும் சொந்தமல்ல! இம்முறை நான் உனக்குக் குறி வைத்துள்ளேன். எந்த இடம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறேன். அங்கு வந்து போர் புரிவாயாக! இதில் உயிர் உனக்குத் தங்குமா, அல்லது எனக்குத் தங்குமா என்பதை இந்தப் போர்க்களம் முடிவுசெய்யட்டும். இந்த போர்க்களம் ‘கூடல் சங்கமம்’ முன்பு நான் உன்னிடம் தோற்ற போர்க்களத்துக்கு வெகு அருகாமையில் உள்ளது. வெற்றி அல்லது வீரமரணம்! இது உனக்கா, எனக்கா? பார்த்து விடுவோம்” என்று எழுதினான். வீரராஜேந்திரன், சோமேஸ்வரனின் துணிவையும், விடாமுயற்சியையும் பாராட்டினான். சவாலை எதிர்கொள்ள, படையுடன் புறப்பட்டு, கூடல் சங்கமம் அடைந்தான்.

கல்யாணியில், சோமேஸ்வரனின் இரு மகன்களுக்கிடையே ஆட்சிப்பூசல் தொடங்கியிருந்தது. விக்கிரமாதித்தன், சோமேஸ்வரன்-2 இருவருக்கும். விக்கிரமாதித்தன், வீரராஜேந்திரன் உதவியை நாடியிருந்தான். வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுக்குத் தன் மகளை திருமணம் செய்துவைத்து, அவள் வழி மகனை சாளுக்கிய மன்னனாக ஆக்க வழி வகுத்தான். இதன் காரணங்களால், சோமேஸ்வரன் கூடல் சங்கமத்தில் வீரராஜேந்திரனை எதிர்க்க, விக்கிரமாதிதனை அனுப்ப முடியவில்லை. சோமேஸ்வரன்-2 ம் போர் செல்ல மறுத்துவிட்டான். சோமேஸ்வரன் ‘யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க’ என்று சொல்லி போர்க்களத்துக்குத் தானே செல்ல முடிவெடுத்தான். போராடைகளை அணிந்து கவசங்களைப் பூட்டி, தன் ராஜக்குதிரையில் மேல் ஏறுமுன், மயங்கி விழுந்தான். பல வருடம் போரில் ஈடுபட்ட உடலில், ஏதோ அறியாத நோய் அவனை அரிக்கத் தொடங்கியது. உடனே அவன் அரண்மனைக்குத் திரும்ப நேரிட்டது. நாட்கள் நகர்ந்தன. அவனது நிலை மோசமாகியது. கூடல் சங்கமத்தில் வீரராஜேந்திரன் காத்திருந்தான். சோமேஸ்வரன் கோழையல்ல என்பது வீரராஜேந்திரனுக்கு நன்றாகத் தெரியும். நாட்கள் நகர்ந்து மாதமாயிற்று. வீரராஜேந்திரன் படைகள் அருகிலிருந்த கிராமங்களை அழித்தது. வீரராஜேந்திரன், துங்கபத்திரா நதிக்கரையில் வெற்றித் தூண் நாட்டித் திரும்பினான். சோமேஸ்வரன், அரபிக்கடற்கரையில் முகாமிட்டான். ‘சாவதென்றால், ராஜாதிராஜன் போல போரில் யானையில் அல்லவா சாகவேண்டும், இப்படி வியாதியிலா சாகவேண்டும்?’ என்று நொந்து கொண்டான். முழு நிலவு பொழிந்தது. அலைகள் தாவி, வா வா என்று அழைத்தது. சோமேஸ்வரன் கரையிலிருந்து நீரை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஸ்ரீராமன் போல நானும் ஜலசமாதி கொள்கிறேன். என்று எண்ணினான். சரித்திரத்திலிருந்து மறைந்து போனான்..

வீரராஜேந்திரன் காலத்தில் இன்னொரு காவியம் பிறந்தது, அந்த காவியப்புறா பற்றி விரைவில் பேசுவோம்.