
ஜூலை 8 , 9 தேதிகளில் இண்டஸ் கிரியேஷன்ஸ் , சியேட்டில் வழங்கிய சூர சம்ஹாரம் நாடகம் படு தூள். ! நல்ல அழுத்தமான நாடகம்.( POWERFUL PLAY)
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறப்போகும் அந்த ஆகஸ்ட் மாதம்!
இந்தியாவிலிருந்து மிக முக்கியமான பொக்கிஷத்தை இங்கிலாந்துக்கு ரகசியமாக எடுத்துச் செல்ல முயலும் ஜெனெரலிடமிருந்து அதைக் காப்பாற்ற தங்கள் உயிரையே பயணம் வைக்கும் நான்கு குறிஞ்சிக்குறவர் என்ற பழங்குடியினர். ஆங்கிலேயருக்கு சவால் விட்டு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தங்கள் ஊரில் சுடுகாட்டில் உள்ள முருகன் சிலைக்கு அடியில் பத்திரப்படுத்திவிட்டு உயிரை விடுகிறான் வெற்றிவேலன் என்ற நாயகனும் அவன் நண்பனும். பொக்கிஷம் பற்றிய விவரத்தைத்தன் வீர மனைவி வள்ளியிடம் மட்டும் சொல்லிவிட்டு தகுதியானவர் வந்தால் மட்டும் கொடுக்கும்படி ஆணையிட்டு மறைகிறான் வெற்றி வேலன். வேலனும் அவன் நண்பனும் பாம்பாக மாறி அந்தப் பொக்கிஷத்தைக் காத்து வருகிறார்கள்.
வள்ளி நாட்டுக்காகப் பாடுபட்டுப் பேரும் புகழும் அடைந்து பின் தனது 93 வது வயதில் தகுதியான ஒருவரைக் கண்டுபிடிக்கிறாள். அவர் அன்றைய தமிழகத்தின் முதலமைச்சர். நேர்மைக்கும் நீதிக்கும் நாட்டுப் பற்றுக்கும் பேர் போனவர்.
அவர்கள் அந்த பொக்கிஷத்தை எடுக்கப் போகும்போது , பிரிட்டிஷ் நாட்டு அரசு ரகசிய உத்தரவுப்படி ஒரு பெண் எஜண்ட் அதைக் கொள்ளை அடிக்க முயலுகிறாள். அதற்காக அந்த ஊரையே அழிக்கவும் திட்டமிடுகிறாள்.
அந்த சூர சம்ஹார நாளில் முதலமைச்சரிடம் அந்தப் பொக்கிஷத்தைக் வள்ளி கொடுக்க முயலும்போது அந்த பிரிட்டிஷ் உளவாளி முதலமைச்சர் கழுத்தில் துப்பாக்கியை வைத்து தன்னிடம் அதனை ஒப்படைக்குமாறு மிரட்டுகிறாள்.
அப்போது முதலமைச்சர் உடலில் புகுந்த வெற்றிவேலன் அந்த உளவாளியைத் தாக்கி பொக்கிஷத்தை எடுத்து இந்திய நாட்டிற்கு அதனை அர்ப்பணிக்கிறான்.
அந்தப் பொக்கிஷம் என்ன? அது எப்படி இந்தியாவை சூப்பர் பவராக மாற்ற உதவியது என்பது அழகான சின்ன சஸ்பென்ஸ்!
கதை – நடிப்பு – வசனம், -அரங்க அமைப்பு – நடனம்- சண்டை – ஒலி -ஒளி அனைத்தும் ஒன்றோரு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மிகச் சிறந்த தரத்தில் அமைந்திருப்பது இந்த நாடகத்தின் வெற்றிக்குக் காரணம்.
90 க்கும் மேற்பட்ட மக்கள் மேடையிலும் மேடைக்குப் பின்னாலும் உழைத்திருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் பெருமிதமடைகிறது.
மதுரையில் ஒரு சிலை செய்பவரிடம் இந்த நாடகத்திற்கு முக்கிய பாத்திரமான அந்த முருகன் சிலையைச் செய்து கொண்டு வந்தார்களாம். அதைப் போல அந்தப் பொக்கிஷமும் இதற்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப் பட்டதாம்.
18 ஆண்டுகளாக சியேட்டில் நாடக உலகில் கொடி கட்டிப் பறக்கும் இண்டஸ் கிரியேஷன்ஸ் ( விவேக் நடித்த வெள்ளைப் பூக்கள் திரைப்படமும் இவர்கள் தயாரிப்புதான்) நிறுவனத்திற்கு இந்த சூர சம்ஹாரம் ஒரு மாபெரும் வெற்றி நாடகம்!
அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துகள்.!
இந்த நாடகத்தின் சில காட்சிகளை எடுத்து விமர்சன வீடியோவாக மாற்றி யூ டியூபில் பதிவிட்டவருக்கு நன்றி! பாருங்கள் பிரம்மித்துப் போவீர்கள் !
