கல்கி எனும் சகாப்தம் | Life History Of Kalki | Story Of Ponniyin Selvan |  Writer Kalki | SuryanFM - YouTube

1.          கல்கி ( முதல் பாகம்) 

 

(கல்கி தன் கதைகளை பல பாகங்களாக எழுதினால் நாம் கல்கியை பற்றி இரண்டு பாகங்களாவது எழுத வேண்டாவா?)

 ‘சொர்க்க லோகம்’ பூவுலகில் கேள்விப்பட்டதைவிட மிகவும் நன்றாகவே இருந்தது. நிஜமாக சொர்க்கம் இப்படி இருக்கும் என்று தெரிந்து இருந்தால் பூலோகத்தில் இன்னும் சில நல்ல காரியங்கள் செய்து விட்டு ‘permanent residency status’ல் வந்து இருக்கலாம் என மனது சற்று அடித்துக் கொண்டது.

சொர்க்கத்தின் நுழைவு வாயிலே அவ்வளவு பிரமாண்டமாக, அவ்வளவு அழகாக இருந்தது. நான் சென்ற சமயம் அவ்வளவு கூட்டம் இல்லை.  வரிசையில் நானும் சேர்ந்து கொண்டேன். குளிர்ந்த சூழலில் இளையராஜாவின் இசை காதுகளுக்கு ரம்யமாக இருந்தது. கண்ணாடி தடுப்பின் வழியே சொர்க்கத்தின் நடவடிக்கைகளை வரிசையில் நிற்கும் பொழுதே நன்கு பார்க்கும் வசதி செய்து இருந்தார்கள்.

ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன. குன்னக்குடி, கத்ரி கோபால் நாத் ஒரு பக்கம் இசைத்துக் கொண்டு இருந்தார்கள். மற்றொரு பக்கம் MSV இசையில் TMS தனித்து பாடிக் கொண்டு இருந்தார். அவர் எதிரே சிவாஜி, MGR, கண்ணதாசன் ஆகியோர் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தனர்.

கருணாநிதியின் முன் சிறு கூட்டம். செயற் குழுவில் பேசுவது போல கையை உயர்த்தி ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். ஜெயல்லிதா,அருகில் யாரும் இன்றி தனித்து அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தார்.

கிரேசி மோகன் முன் அமர்ந்து ஒரு கூட்டம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தது. என் கண்கள் MS அம்மாவை தேடியது. காரணம் அங்கு கண்டிப்பாக என் மனைவியை காண முடியும். ஆனால் அதற்குள் என் முறை வந்து விட்டது.

அங்கும் அதே கதைதான்.  நான் முன்பு அமெரிக்கா சென்ற பொழுது நிகழ்ந்த மாதிரி கை விரல்களோடு, கால் விரல்களையும் ஸ்கேனரில் பதிந்த உடன் என்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தும்ஒரு பெரிய திரையில் ஓடியது.

என்னாலும் பார்க்க முடிந்தது. ஆச்சரியம் பிறந்த சில ஆண்டுகள்வரை என் பாவக் கணக்கில் ஒரு புள்ளிகூட ஏறவில்லை. பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்துவங்கியது.

பாவங்கள் அனைத்தும் நான் சம்பாதித்ததுதான். படைக்கும் பொழுது கடவுள் கொடுத்து அனுப்பியது  இல்லை.

நல்ல வேளை என்  புண்ணிய கணக்கிலும் சமமாகவோ, சற்று அதிகமாகவோ காட்டிக் கொண்டே வந்தது. ஏறக்குறைய ஓட்டு எண்ணும் பொழுது இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாக ஓட்டு எண்ணிக்கை வந்து கொண்டு இருந்தால் வேட்பாளரின் மனது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது என் மனது.

முடிவில் தலையில் கிரீடமும், மார்பு முழுதும் சட்டைக்கு பதிலாக  ஆபரணங்களை மாலைகளாக போட்டு இருந்த சொர்க்கலோக அதிகாரி என்னையும் அவர் முன் இருந்த திரையையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்.

நான் அவர் வாயில் இருந்து நல்ல வார்த்தை வர வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை.

அவர் தன் கர கரத்த குரலில் மெதுவாக “நன்று, சொர்க்கத்தில் நுழைய நீவிர் அனுமதிக்கப் படுகிறீர்கள். ஆனால் அடுத்த பிறவி எடுக்கும் வரை, தாற்காலிகமாகத்தான் தங்க இயலும்” என்றார்.

நானும் அவரை விட சற்று மெளிதான குரலில் சற்று பயத்துடன்,முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “நிரந்தரமாக இங்கு இருப்பதற்கு ஏதாவது வழி உள்ளதா” எனக் கேட்டேன்.

பதில் கூற சற்று நேரம் எடுத்து “இருக்கிறது. அடுத்த ரவுண்டில் சிறு அறிஞர் கூட்டம் இருக்கும். அவர்கள் சில கேள்விகள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் திருப்திப்படும் பதிலைக் கூறி விட்டால் வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

ப்பூ! இவ்வளவுதானா? பேங்கிலும், கம்பேனியிலும் எவ்வளவு பேரை நம்புகிற மாதிரி பதில் சொல்லி சமாளிச்சு இருக்கோம்.   என் மனது ‘permanent residency’ கிடைத்து விட்ட மாதிரியே சந்தோசத்துடன் அடுத்த மண்டபத்திற்குள் நுழைந்தேன்.

அப்பா! எவ்வளவு அறிஞர்கள். அவர்களில் பலரை பூவுலகில் இருக்கும்பொழுது போட்டோவில் பார்த்து இருக்கிறேன். அவர்களது படைப்புகளை படித்தும் இருக்கிறேன்.

அனைவர்க்கும் வணக்கம் கூறி அவர்கள் காட்டிய இடத்தில் அமர்ந்தேன். என்னை பற்றிய தவகல் அனைத்தும் அவர்கள் எதிரே இருந்த ஒரு பெரிய திரையில் ஓடியது.

ஆரம்ப காலத்தில் அறிவு பூர்வமாய் கேட்கும் அளவிற்கு நாம்தான் ஒன்றும் செய்ய வில்லையே? எனவே கேள்விகள் ஒன்றும் இல்லை. அப்பாடி.

பின் கடைசிபாகம் ஓடியது.

“நீவிர் கடைசி நாட்களில் நிறைய படித்தீரோ” கேட்டவர் ஜெயகாந்தன்

“ஆம் ஐயா, ஒரு துயர சம்பவத்தை மறக்க மாலை, இரவு பொழுதுகளில் சற்று படித்தேன்.”

“அதில் தவறு இல்லை. What’s up ல் சிறிது எழுதவும் செய்தீரோ” கேட்டது நம் சுஜாதா.

“பொழுது போவதற்கு சற்று பிதற்றினேன்” என்றேன்

“ஞானசூன்யம், ஞானசூன்யம்” என்றது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தேன், நம் K. பாலச்சந்தர் சாரின் குரல் அது. பரவாயில்லை மோதிர கையால்தான் குட்டு.

அருகில் கல்கி குனிந்த தலை நிமிரவில்லை. பக்கம் பக்கமாக சொர்க்கலோக வார பத்திரிகை ஒன்றுக்கு எழுதிக் கொண்டு இருந்தார்.

அவர் அருகே அமர்ந்து இருந்த  சாண்டில்யன் கேட்ட கேள்வி “கல்கியின்  கதைகள் அனைத்தும் படித்து இருக்கிறீர்களா?” என் உடம்பு சற்று குலுங்கி தூக்கிப் போட்டது.

 

2.          கல்கி. (பாகம் 2)

 

உடம்பு குலுங்கியது சாண்டில்யனின் கேள்வியால் அல்ல, என் மகன் ஸ்ரீராம் தொட்டு எழுப்பியதால்தான் என உணர்ந்தேன்.

“டாடி இன்று சீக்கிரம் walk போக வேண்டும் என்றீர்களே?” என ஸ்ரீராமின் குரலை கேட்ட உடன்தான் நான் கண்டது அனைத்தும் கனவு என தெரிந்தது.

கண்களை திறக்காமலேயே “நான், இன்று walk போகலப்பா” என்று கூறி விட்டு கனவை தொடர விரும்பினேன்.

கண்களை மூடி இருந்தும் அழகிய கனவு களைந்து விட்டது. முந்தைய இரவு ஒரு மணி வரை விழித்து ‘சிவகாமியின் சபதம்’ நான்காம் பாகத்தை முடித்ததின் தாக்கம்தான் அந்த கனவு.

‘பொன்னியின் செல்வனை’ இரண்டாவது தடவையாகத்தான் படித்தேன். இருப்பினும் முதல் தடவை படிப்பது போன்ற விறு விறுப்பு. இரவும் பகலுமாக படித்து முடித்தேன். ‘அலை ஓசையை’ கையில் எடுத்தேன், கீழே வைக்க மனமில்லை.

அவருடைய சிறு கதைகள் நூறுக்கும் சற்று குறைவாகவே படித்திருப்பேன். அனைத்திலும் பதுமை இருக்கும், எளிமை இருக்கும் கூடவே நகைச்சுவையும் இருக்கும். கல்கி ஒரு சகாப்தம். சாதனையாளர். அவரைப் பற்றி சில வரிகளில் சுருக்கமாக எழுத முயல்வது, கடல் நீரை கடுகுக்குள் அடைக்க முயல்வது போன்றதே. (கல்கியின் தாக்கம். அவர் உதாரணமே வருகிறது)

கல்கியின் புதினங்கள்தான் பல நூறு பக்கங்கள் என்றால் அவரின் நண்பர் சுந்தா எழுதிய கல்கியின்  வாழ்க்கை வரலாறு 912 பக்கங்கள் கொண்ட புத்தகம். 1954ல்  தனது 55 வயதில் மரணித்த கல்கி படைத்த படைப்புகள் சாகா வரம் பெற்றவை. இன்றும் புதிதாக படைக்கப் பட்டஙை போன்று காலத்தால் அழியாதவை.

 தியாக பூமியின் கதா நாயகியான ‘சரோஜா’ என்ற பெயரை தம் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர் அன்றைய பெற்றோர். ‘பொன்னியின் செல்வன்’ கல்கி பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருந்த சமயம் ஒரு பாட்டி, தொடர் முடியும் வரை உயிர் பிச்சை கேட்டு இறைவனிடம் வேண்டிணாராம்.

அத் தொடரை எழுதும் பொழுது கல்கி அவர்கள் மூன்று தடவை இலங்கை சென்று வந்தாராம்.  நாம் கதையில் கூடவே பயணிப்பது போல இருக்கும். சுமார் 5 ஆண்டுகள் தொடராக வந்தது. பல நூற்றுக் கணக்கான வீடுகளில் அக்கதையை தனியே எடுத்து புத்தகமாக பத்திரப் படுத்தி வைத்தனர்.

நான் பிறந்த சமயம் வந்து கொண்டு இருந்த தொடர். எனக்கு படிக்கவும் பேசவும் தெரிந்து இருந்தால் என் பெயரைக்கூட அருள்மொழிவர்மன் என்றோ, வந்தியத்தேவன் என்றோ  வைக்க சொல்லி  கேட்டு இருப்பேனோ என்னவோ.

சரித்திர பாடம் புடிக்காதவர்களையும் விழுந்து விழுந்து சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்களின் சரித்திரங்களை படிக்க வைத்தன அவருடைய படைப்புகள்.

நான்கூட சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை பாடமாக அல்லாது கதையாய் படித்து தெரிந்து கொண்டது கல்கியின் மூலம்தான். சுதந்நிர போராட்டத்தின் தாக்கத்தை கதையாய் சொல்லி உணர வைத்தார்.

கலையில் அவர் கை படாத துறை இல்லை. சுதந்திர போராட்டங்கள், சமூக சிந்தனை இவற்றின் ஊடே அவரால் இவ்வளவு படைப்புகள், எவ்வாறு முடிந்தது.

இது வரை கல்கியின் எழுத்துக்களை படிக்காத இளைஞர்கள் ஆர்வம் இருந்தால்  நேரம் கிடைக்கும் பொழுது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் சில பக்கங்கள் மட்டும் படியுங்கள். பின்னர் ஆறு பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிப்பீர்கள் என்பதற்கு நான் கியாரண்டி. சுமார் 2700 பக்கங்கள் மட்டுமே.

 எப்படியோ அடுத்த தடவை சொர்க்கத்திற்கு செல்லும் முன் இயன்ற வரை அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்து விட வேண்டும்.

அறிஞர் அவையின் முன் அன்று விழித்தது போல் திரு திருவென விழிக்கக் கூடாது.

சொர்க்கம் செல்லும் வாய்ப்பு (கனவில்தான்) கிடைக்கும் பச்சத்தில் காணும் காட்சிகளை கல்கியிடமே வார்த்தைகளை கடன் வாங்கி வந்து விரிவாக எழுதுகிறேன்.