
இனிமே நான் தனியா வாக்கிங் போக மாட்டேன். நீங்க யாராவது ஒருத்தர் என் கூட வரணும், இல்லனா நான் போகல.
“இன்றைய முக்கிய செய்திகள்”, என்று டீ.வி ந்யூசில் சொல்வது போல அறிவித்தாள் கவிதா.
அனிருத் ஒரு நமுட்டுச் சிரிப்போடு அப்பாவைப் பார்த்தான். அதை கவிதாவும் கவனித்தாள். என் கஷ்டம் உங்களுக்கு கிண்டலா இருக்குல்ல, என்று மனதில் நினைத்துக் கொண்டாள். அவள் கோபமும், படபடப்பும் அதிகமானது.
“என்ன ஆச்சு கவி? இந்தா, முதல்ல கொஞ்சம் தண்ணி குடி. எந்த பக்கம் வாக்கிங் போன? இன்னிக்கும் அதே பிரச்சனையா?” ராகவன் அவளை சமாதானப்படுத்தப் பார்த்தான்.
ஒரு சொம்பு தண்ணீரை ‘மடக் மடக்’ என்று ஒரே மூச்சில் குடித்து விட்டு, “எந்த பக்கம் போனா என்ன, எல்லா தெருவுலயும்தான் நாய்ங்க இருக்கே”, என்றாள்.
அவள் உடல் இன்னும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
“இன்னிக்கு சன்டேதானே, மெயின் ரோடு கடைசில இருக்கிற பார்க்குக்கு போலாம்னு கெளம்பினேன். நல்லா அரை மணி நேரம் வாக் பண்ணிட்டு, திரும்பி வர போது, ரெண்டு நாய், என் பின்னாடியே வந்து குரைக்க ஆரம்பிச்சிடுத்து. நான் பயந்து கத்த, அங்க பக்கத்துல, டீ கடைல இருந்தவங்க வந்து , நாயைத் துரத்தி விட்டாங்க. கூடவே, எனக்கு ஃப்ரீ அட்வைஸ் வேற – நீங்க பயந்து ஓடினீங்கனாதான்மா, அது துரத்தும். இல்லாட்டி, ஒண்ணும் பண்ணாதுன்னு.”
பொத்தி வைத்திருந்த கோவம் பொங்கி, வார்த்தைகளாக வெடித்தது.
அவர்கள் சொல்வதெல்லாம் கவிதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால், இது போன்ற சமயங்களில் மனமும், புத்தியும், இரு வேறு திசைகளில் அல்லவா போகின்றன? இதை யாரிடம் சொல்ல முடியும் ? இல்லை சொன்னால்தான் எல்லோருக்கும் புரிந்து விடுமா?
அவளுக்குச் சில மாதங்களாக குதிகால் வலி. கை வைத்தியம், மருந்துகளுக்கு எல்லாம் சரிப்பட்டு வரவில்லை. கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருக்கும், திரும்பவும் ஆரம்பித்துவிடும். அப்புறம், ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் “இத ‘ப்ளான்டார் ஃபாஸீடிஸ்’ னு சொல்லுவோம். எக்ஸர்ஸைஸ், யோகா, வாக்கிங் எல்லாம் தினம் பண்ணி, கொஞ்சம் உடல் எடையையும் குறைச்சா, கொஞ்ச நாள்ல தானா சரி ஆகிடும்”, என்று அறிவுரை சொன்னார்.
அதனால், கடந்த சில வாரங்களாக கவிதா வாக்கிங் போக ஆரம்பித்திருக்கிறாள். ஆனால், தெரு நாய்கள் பிரச்சனை, பெரும் பிரச்சனையாக இருந்தது. இன்று நடந்தது போல, ஏற்கனவே இரண்டு முறை நடந்திருக்கிறது.
ஸ்ட்ரெஸ் குறைய வாக்கிங் போனது போய், இப்போதெல்லாம் வாக்கிங் போவதே அவளுக்கு ‘ஸ்ட்ரெஸ்ஃபுல்’ ஆன விஷயமாகி விட்டது. அதனால்தான் இந்த முடிவு. அப்பாவோ, பிள்ளையோ யாராவது ஒருத்தர் இனிமே என் கூட வரட்டும் .
அவள் இன்னும் கோபமாகத்தான் இருந்தாள். யார் மேல் கோபம் என்று தான் தெரியவில்லை – தன்னைத் துரத்திய நாய்கள் மீதா, அட்வைஸ் செய்த அன்னியர்கள் மீதா, இல்லை வீட்டில் இருப்பவர்கள் மீதா?
ராகவன் சட்டென சுதாரித்துக் கொண்டான். இதைக் காரணம் காட்டி, அநாவசியமாக, ஞாயிற்று கிழமையைப் பாழாக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில், “ஓ.கே கவிதா. இனிமே, நானோ, அவனோ உன் கூட வரோம்”, என்று அனிருத்துக்கும் சேர்த்து பதில் சொல்லி, அப்போதைக்கு அந்த ‘டாபிக்’குக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.
சொல்லி விட்டானே தவிர, அது ‘நடக்கிற’ கதையாக இல்லை.
ராகவன் அதிகாலையில் எழுந்து காபி குடித்தவுடன் வாக்கிங் கிளம்பி விடுவான்.
நான் உங்க கூட வாக்கிங் வந்துட்டா, அப்புறம், காத்தால ப்ரேக்ஃபாஸ்ட் , உங்க ரெண்டு பேருக்கும் லஞ்ச் எல்லாம் யாரு பண்ணுவா.
ஒரு விஷயத்தை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா, அதைப் பண்ண நூறு காரணம் கெடைக்கும். ஆனா, பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா, ரெண்டாயிரம் காரணம் கெடைக்கும்.
கவிதாவிற்கு பதில் சொல்ல, வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிவிட்டு, “சரி” என்று ஒற்றை வார்த்தையில் தலையாட்டினான்.
“டேய் அனிருத், நீயாவது அம்மா கூட சாயங்காலம் வாக்கிங் போலாம்ல, எனக்கு தான் ஆஃபீஸ் வொர்க் முடியவே லேட் ஆகுது”
“ஐ காண்ட் , ஐ ஆம் பிசி”, என்று அவனும் தவிர்த்து விட்டான்.
அதோடு, அந்த வாரம் முழுக்க கவிதாவின் ‘நடை’, ‘நின்றது’.
சனிக்கிழமை காலையில் ராகவனும், கவிதாவும் பார்க்குக்கு போனார்கள். நல்ல வேளையாக போகும் போது நாய் எதுவும் கண்ணில் படவில்லை.
ஆனால், திரும்பி வரும் போது, “இந்தத் தெரு வேணாம், அங்க பாருங்க, ஒரு கருப்பு நாய் படுத்திண்டு இருக்கு.
அது சும்மா தானே படுத்திண்டு இருக்கு, ஒண்ணும் பண்ணாது, வா.
வேண்டாம், அடுத்த தெருவுல போலாம்.
அங்கேயும் நாய். ஒன்றல்ல, இரண்டு நாய்கள். அவள் ரியாக்ஷன் தெரிந்து அவனே, அடுத்த தெருவுல போலாம் என்றான்.
இப்படியே, பார்க்கில் இருந்து ஐநூறு மீட்டர் தள்ளி இருக்கும் வீட்டிற்கு, ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றி வந்தார்கள்.
இதுவாவது பரவாயில்லை. சில சமயம், நாய் இல்லை என்று ‘நம்பி ‘ தெருவில் நடக்க ஆரம்பிப்பார்கள். எங்கிருந்தோ, ஒரு நாய் ஓடி வரும், அல்லது குரைக்க ஆரம்பிக்கும். அது என்னவோ, அதன் நண்பனையோ (அல்லது நண்பியையோ!) பார்த்துதான் குரைக்கும். ஆனால், கவிதா அது தன்னைப் பார்த்து தான் குரைக்கிறது, ஓடி வருகிறது, என்று நினைத்து பயந்து, அப்படியே உறைந்து போய் நின்று விடுவாள், இல்லை, கத்த ஆரம்பித்து விடுவாள்.
“என் கூட வராம, நீங்க பாட்டுக்கு முன்னாடி போறீங்க. நான்தான் பயப்படறேன்னு தெரியுதுல, கையப் பிடிச்சு கூட வந்தா என்ன குறைஞ்சா போய்டுவீங்க? என்று ராகவனுக்கு ‘ஸ்பெஷல் அர்ச்சனை’ நடக்கும். “
கையைப் பிடிச்சு கூட்டி வர நீ என்ன சின்ன குழந்தையா என்று எதிர் கேள்வி எல்லாம் கேட்டு விட முடியாது.
ஒரு விஷயம் ராகவனுக்கு தெளிவாக புரிந்தது. கவிதா நிஜமாகவே ரொம்பவும் பயப்படுகிறாள். அவளுக்கு நாய்கள் என்றால் எப்போதுமே பெரிதாக பிடித்தது இல்லை. ஆனால் இந்த பயம் புதிது. ஏன் இப்படி பயப்படுகிறாள் என்றுதான் தெரியவில்லை.
அவளை உசுப்பேத்துவது போல அன்றைய செய்தித்தாளில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு, அதிகரித்துள்ளது என்பது பற்றி, புள்ளி விவரங்களோடு விரிவாக செய்தி போட்டிருந்தார்கள். ரெண்டு நாள் கழித்து, கார்பொரேஷன், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னொரு செய்தி. டூ வீலரில் போன ஒரு பெண்ணை, நாய் துரத்தி அவள் கீழே விழுந்தது, கேரளாவில் தெரு நாய் கடித்து ஒரு சிறுவன் இறந்து போனது, என்று அவள் பயத்தை அதிகரிக்கும் செய்திகளாகவே வந்தன.
நான் சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே, இப்ப பேப்பர்லயே போட்டிருக்கான் பாத்தீங்களா, இப்ப தெரியுதா, இது எவ்ளோ பெரிய பிரச்னைனு.
நாம எதைப் பத்தி எப்பவும் நினைக்கிறோமோ, அது சம்பந்தப்பட்ட விஷயம்தான் நம்ம கண்ணுல படும். கம்ஸனுக்குத் தான் சாகப் போற பயத்துல, பாக்கறது எல்லாம் , கிருஷ்ணனா தெரிஞ்சிதாம் . அது மாதிரி. நீ நாய் பத்தியே நினச்சிண்டு இருக்க.
ஓஹோ, உங்களுக்கு, நான் கம்ஸன், நாய் கிருஷ்ண பகவானா? என்று அவன் சொல்ல வந்ததை, கரெக்டாக, தப்பாக புரிந்து கொண்டு கோபப்பட்டாள்.
இது என்னடா புது வம்பு, என்று ராகவன் வாயை மூடிக் கொண்டான்.
அடுத்த ரெண்டு வாரம் அவன் ஆஃபீஸ் டூர் போக வேண்டி இருந்தது.
அனிருத், அம்மா கூட கொஞ்சம் வாக்கிங் போடா, பாவம், கால்வலில கஷ்டப்படறால.
ஓகே, ஓகே, ஐ வில் ஸீ. என்னவோ பண்ணுங்க ரெண்டு பேரும் என்று ராகவன் கிளம்பி விட்டான்.
அனிருத் உஷாராக, பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அம்மாவை பைக்கில் அழைத்து சென்றான்.
வீ வில் ஜஸ்ட் வாக் இன்ஸைட் த பார்க், ஓகே? கவிதாவும் அனிருத் சொல்வதெற்கெல்லாம் இசைந்து கொடுத்தாள்.
ஒரு நாள் இரவு, அம்மாவும், பிள்ளையும், நல்ல மூடில், டீ.வி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அனிருத், “அம்மா, நீ ஏன் நாயைப் பார்த்து இவ்வளோ பயப்படறே , யூ வேர் நாட் லைக் திஸ் பிஃபோர். என் ஃப்ரண்ட் அருண் வீட்டு நாய் கூட எல்லாம் நீ வெளையாடிருக்கே, ஞாபகம் இருக்கா?”
“அது ஒரு குட்டி ‘பக்’டா , கடிக்காது. க்யூட்டா இருக்கும். ‘பீமா’தான அது பேரு, அத கொஞ்சிருக்கேன், ஞாபகம் இருக்கு. நாய் கட்டிப் போட்டிருந்தா, ‘லீஷ்’ல இருந்தால்லாம் எனக்கு அவ்வளவு பயம் இல்ல.
அதுவும் நம்மள மாதிரி ஒரு உயிர் தானே, அதுக்கும் பசிக்கும், சாப்பாடு வேணும், தூங்கணும், அன்பு காட்ட மனுஷங்க வேணும். இதெல்லாம் எனக்கும் தெரியும்.
ஆனா, நாயைக் கட்டிப் போடாம, ஃப்ரீயா விட்டா பயம். அதுவும், தெரு நாய்னா ரொம்ப பயம். அத பார்த்தாலே, என் பின்னாடி ஓடி வந்து என்ன துரத்தப் போறது, கடிக்கப் போறது அப்படினு தோணும். ஐ நோ தட் டாக்ஸ் கேன் ஸ்மெல் ஃபியர். நான் பயப்படறேன்னு அதுக்குத் தெரியும்னு, எனக்கும் தெரியும். அதனால இன்னும் ஜாஸ்தி பயம்”, என்று சொல்லி சிரித்தாள்.
“அம்மா அம்மா” என்று அனிருத் கொஞ்சலாக அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
அன்று அப்பாவும் பிள்ளையும் அதிசயமாக சாயங்காலம் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
அவர்கள் வந்த கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் அடித்தது.
யார் இந்த நேரத்தில் என்று யோசித்த படியே, கவிதா கதவை திறந்தாள்.
அருண் தன் செல்லப் பிராணி பீமாவை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஹாய் ஆன்ட்டி, நாங்க ரெண்டு நாள் ஊருக்குப் போறோம், பீமாவை இங்க விட்டுட்டு போலாம்னு வந்தேன், அனிருத் எங்க?
அருண் கையில் இருந்து தாவிக் குதித்த பீமாவைத் தடவிக் கொடுப்பதா , இல்லை, அனிருத்தை திட்டுவதா என்று முடிவு செய்ய முடியாமல் நின்றாள் கவிதா.
