
என்ன பார்வை – உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை , என்பான் கண்ணதாசன்.
இந்தப் பார்வையில் நுணுக்கமான நோக்கு ஒன்று இருக்கிறது.
இடை மெலிந்தாள் இந்தப் பாவை , என்பதை , இடை மெலிந்தால் இந்தப் பாவை என்றும் நோக்கலாம்.
ஆம். பார்வை என்ற வார்த்தையின் இடை “ர்” . இது மெலிந்தால், வருவது பாவை. கவியரசர், பார்வையை எப்படி நோக்கி இருக்கிறார் என்பது நம்மை வியக்க வைக்கிறது.
பார்வை என்பது இயல்பாக பார்த்து விட்டு கடந்து செல்வது. ஆனால், நோக்கு என்பது வித்தியாசமானது – அடுத்த நிலை தொட்டது. ஒரு உள்ளார்ந்த எண்ணத்துடன் பார்ப்பது.
கம்பனின் நோக்கு
ராமன் சீதை சந்திப்பைப் பற்றி பேசும்போது, காவியக் கம்பன் கூறுவான் –
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அது வெறுமனே பார்வை அல்ல. மனது உள் நோக்கிய ஒரு பார்வை.
அதனால் தான் பார்த்தாள் என்று கூறாமல், நோக்கினாள் என்கிறான்.வெறும் பார்வை என்பது அந்தக் கணமே கடந்து, மறந்தும் போவது. ஆனால், நோக்கு என்பது, இங்கே காதலாகி, கருத்தொருமித்த கணவன் மனைவியானது.
மகாகவியின் நோக்கு
இறைவனின் அருள் நோக்கு என்கிறான் மகாகவி பாரதி. நம்மாழ்வார் மட்டும் தான் நாலாயிரத் திவியப் பிரபந்தம் எழுதவேண்டுமா – நானும் 6000 பாடல்கள் எழுதுகிறேன் என்று தொடங்குகிறான். அந்த பாரதி 66ல் தான் இந்த நோக்கு வருகிறது. ஆனால், 66 பாடல்கள் எழுதியபோதே, அவன் மறைந்துவிட்டான்.
பாரதி என்ற மானிடன் தமிழகத்தை மட்டும் எண்ணிப் பார்க்கவில்லை. பாரத நாட்டையும் ஒருங்கிணைத்து நோக்குகிறான்.. அப்படிப் நோக்கும்போதே உலகப் பார்வையைப் பெற்றதுடன், இங்குள்ள மக்களின் பிரச்சனையைத் தேசியப் பிரச்சனையாக, உலக மக்களின் பிரச்சனையாக அவன் உள்ளம் நோக்கியது. அதனால் அவன் தமிழர்கள் பிரச்சனையைப் பேசினாலும் இந்தியர்களின் பிரச்சனையைப் பேசினாலும் அது உலகப் பிரச்சனையாகியது.
பாரதி என்ற படைப்பாளி, கவிஞன் ஒரு மானிடராக உயர்ந்து நிற்கிறான். இந்த மானிடர் சக மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்பவர்; சக மனிதர்களின் சிக்கல்களைக் கண்டு வருந்துபவர். வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் அவர் ஏக்கங்களும் தவிப்பும் செயல்பாடுகளாய் உருவாயின; சக மனிதர்களைத் தட்டியெழுப்பும் பள்ளியெழுச்சியாக அமைந்தது. போர்க்கோலம் கொள்ளச் செய்யும் முரசொலியாக முழங்கியது. எங்கெல்லாம் மக்கள் துயரமடைந்தார்களோ அங்குள்ள மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து, இங்குள்ள மக்களை எழுச்சியுறச் செய்தவர்; எந்த இன மக்கள் எங்குத் துயரத்தில் மூழ்கினாலும் அவர்களுக்காகப் பெரிது வருந்தும் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தார்
ஆதி சங்கரரின் நோக்கில் பாரதி (அஹம் ப்ரம்மாஸ்மி – தெய்வம் நீ என்று உணர்)
பாரதி இந்து சமயத்தைச் சார்ந்தவர்; ஆயினும் எந்தச் சமயத்தின் மீதும் அவருக்கு வெறுப்பில்லை, பகைமையில்லை; உயர்வு தாழ்வு என்ற எண்ணமில்லை. எல்லாச் சமயங்களும் சமம் என்றே எண்ணினார். மதித்தார். ஆயினும் தாம் சார்ந்த சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தம் சமயத்தை நேசித்ததாலேயே பிற சமயத்தையும் நேசித்தவர்; மதித்தவர். வேதாந்தக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்; ஆயினும் வெற்று (hollow) வேதாந்தியாக அவர் உருவாகவில்லை..பாரதி வேதாந்திதான்; ஆனால் வேதாந்தத்தின் உட்பொருளை உணர்ந்த பாரதி உண்மையான வேதாந்தி. வேதாந்தத்தின் உட்பொருளாவது, அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறான், அனைவரும் சமம் என்பதாகும். பக்தியாளன்தான் பாரதி; ஆயினும் ஆயிரம் தெய்வங்களைப் பாடினாலும் தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
ஏனென்றால் ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் சூட்டி மகிழ்ந்த மக்களின் உள்ளத்தை நன்கறிந்தவர். அத்வைதக் கொள்கை தந்த கொடையிது. ‘அத்வைதம்’ என்பது என்ன? இந்த தேசத்தின் முதல் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆதி சங்கரர் கூறுகிறார் – ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். அதாவது தெய்வம் ஒன்றுதான்; அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது; என்னிடத்திலும் இருக்கிறது. ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது. அனைத்து சீவன்களிலும் உள்ளது. அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது. அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே? எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது? பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு அடிப்படை வகுத்தது இந்த அத்வைதக் கோட்பாடுதான்.
அஹம் ப்ரம்மாஸ்மி என்றார் ஆதிசங்கரர். அதாவது, நானே இறைவனாக இருக்கிறேன். பாரதி, தெய்வம் நீ என்று உணர் என்கிறான். மனதற்களுக்குள்ள வள்ளுவன் கூறுவது போல, தீய எண்ணங்களை அகற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழும் ஒருவன், தெய்வத்திற்கு சமம் என்பதே இங்கு நான் காண்பது.
வள்ளுவனின் நோக்கு
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நான் நோக்கும்போது, குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும்,என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பு.
இங்கே பார்வை என்ற அர்த்தம் வரவில்லை. நோக்கு என்பதில், காதல் முழுமையாய் மனதுக்குள் உருவானதைக் கூறுகிறது. அதாவது, பார்வையின் அடுத்த கட்டம் நோக்கு எனலாம். சாதாரணப் பார்வையைத் தாண்டி, மனதை ஊடுருவும் நிலை தான் நோக்கு.
காதலை இப்படிக் கூறும் வள்ளுவன், கற்பைப் பொதுவாக வைக்க, இதே நோக்கு என்னும் வார்த்தையை வைத்தே விளையாடுகிறான்.
வள்ளுவன், பிறர் மனை நோக்காமை பேராண்மை என்கிறான்.
எதிரே வரும் பெண்களை, பார்ப்பது இயல்பான ஒன்று. அது, உலகின் நடைமுறை. ஆண், பெண் ஒருவரை ஒருவர் பார்ப்பது என்பது இயற்கை. ஆனால், இங்கு பிறர் மனை பார்ப்பது என்று வள்ளுவன் கூறவில்லை. நோக்காமை என்று கூறுகிறான், காரணம், பார்க்கும் போது வெறும் பார்வை மட்டும் இல்லாமல், ஒரு வித எண்ணத்துடன், உள்நோக்கத்துடன் பார்க்கும் பார்வை தான், நோக்கு என்கிறது.
நோக்கு என்ற ஒரு வார்த்தையை காதலுக்கும் சரி, கற்புக்கும் சரி, வள்ளுவன் கையாளும் முறை வியக்க வைக்கிறது.
அடியார்கள் பார்வையில் நோக்கு
நிறைவாக, கடவுளை வணங்கும் வரிகளில் கூட, நோக்கு எப்படி இடம் பெறுகிறது?
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க !
நொடியில் பக்தர்களை நோக்கி அருள் பாலிக்க வேண்டும் என்கிறார் முருகனிடம். பார்ப்பது என்பதை விட , இறைவன் அடியவர்கள் மனதில் ஊடுருவி அருள் செய்யவேண்டும் என்கிறார்.
மணிவாசகர் நோக்கு
“நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்று திருவாசககத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்.
இறைவனைப் பார்த்து, உன் பார்வை சாதாரண ஒன்று அல்ல. எப்போதும் இந்த உலகம் நன்றாக இருக்கவேண்டும் – உனை நம்பும் அடியார்கள் என்ன விரும்புகிறார்கள், என்ன வேண்டுகிறார்கள் என்பது உன் நோக்கால் அறிந்தவன் நீ. பக்தர்களின மனதில் உள்ளவற்றையும் நுணுக்கமாக அறிந்த நுண்ணுணர்வு நீ. எனவே உன் நோக்கு என்பது, அடியவர்களின அவலங்களைத் தீர்த்து, அவர்களின வாழ்வை வளம் பெறச் செய்வதே எனபதாக மணிவாசகர், சிவபுராணத்தில் பாடுகிறார்.
இன்னும் பல்வேறு இலக்கியங்களில் நோக்கு பலவிதமாக கூறப்பட்டுள்ளது.
தமிழுக்கு அமுது என்று பெயர் என்று சும்மாவா சொன்னார்கள்?
