![]()
![]()
![]()
ஏதோவொரு காரணத்தினால் இக்கட்டான சூழ்நிலைகளில் சிலர் உறைந்து விடுவதும் உண்டு. அதுபோன்ற தருணத்தில் தான் தாவரவியல் (botany) இளங்கலைப் படிக்கும் பதினெட்டு வயதான மாயா என்னை ஆலோசிக்க வந்திருந்தாள். அந்த காலகட்டத்தில் அவள் படித்திருந்த கல்லூரியில் வாரத்திற்கு மூன்று முறை நான் மனநல ஆலோசகராகப் போவதுண்டு.
இரு மாதங்களாகப் படிக்க ஆரம்பித்துமே மனம் அலை மோதியது என்றாள் மாயா. படிக்கும்போது ‘உதிர்ந்தது’ ‘மறைந்தது’ போன்ற சில வார்த்தைகள் வந்து விட்டால் அழுகையும் வந்துவிடுகிறதாம். பலரை உற்சாகப் படுத்துபவளுக்கு, துவண்டு போவது போலத் தோன்றியது என்றாள்.
வகுப்பிற்குச் சரியாகச் செல்லாமலிருப்பது, வார இறுதியில் வீட்டிற்குப் போவதைத் தவிர்த்தல் எனத் தன்னிடம் புது நடத்தைகள் கண்டுகொண்டாள். ஏன் எனத் தெரியவில்லை என்றாள். முடிவு செய்யும் திறன்கள் முரண்டு போவதை விவரித்தாள். இவ்வாறே இருந்து விட்டால்? என ஆரம்பித்த எண்ணம், போகப் போக இப்படியே இருந்துவிடுமோ எனத் தோன்றி விட்டது.
இவையெல்லாம் தனக்கு மட்டுமே, தன் வாழ்க்கைப் பாதையில் மட்டுமே நேர்கிறதாக எண்ணினாள் மாயா. எங்களது மனநலத் துறையில், “இது நிரந்தரமானது, இது என் வாழ்வில் பரவலானது, என்றும் எனக்கு மட்டுமே நேர்கிறது” போன்ற எண்ணங்களை “தனிப்பயனாக்கம்” (personalization) என்போம். இவற்றைத் தவிர்க்க வேண்டிய மூன்று என்போம். இவ்வகைக் கலவை, மன உளைச்சலுக்குத் தீனி.
மாயாவின் பாட்டி (அம்மாவின் அம்மா) பெரிய ஆராய்ச்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆராய்ச்சிக்கூடம் இவர்கள் இருப்பிடத்தின் பக்கத்திலிருந்ததால் இவர்களுடன் தங்கினார். அவரை அம்மா-பாட்டி என அழைப்பாள் மாயா. அவர் மாயாவுடைய அறையில் தங்கி இருந்ததால் ஒரு நெருக்கம்! மேலும் அவளுக்குப் பிடித்த மாமா, அம்மா-பாட்டியைப் பார்க்க அடிக்கடி வருவதுண்டு.
எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டு இருந்தது. திடீரென்று பாட்டி மரணம் அடைந்தார். வேலைப் பளுவினால் உடல் உபாதை மருந்துகளைத் தவறுதலாக எடுத்துக் கொண்டதால் இப்படி நேர்ந்தது. மருத்துவரிடமிருந்து மரணச் சான்றிதழ் வந்ததிலிருந்து மாயா மனம் தவித்தது. தன் பங்கிற்கு உதவவில்லையோ என்ற சிந்தனை வாட்டியது.
மாயாவின் பெற்றோர் பிரபலமான மருத்துவர்கள். அரசு மருத்துவமனை ஊழியர்கள். அம்மா-பாட்டியின் மரணத்தைத் தர்க்க ரீதியாக எடுத்துக் கொண்டு, பரபரப்பான வேலைகளில் துயரத்தைச் சமாளித்துக் கொண்டார்கள். மாயாவின் தம்பிக்குப் படிப்பு, விளையாட்டுப் பயிற்சி எனக் கவனத்தைச் செலுத்தியது உதவியது. ஆனால் மாயாவிற்கோ என்ன முயன்றாலும் துயரத்தைத் தாள இயலவில்லை. அவளுடைய கல்லூரியில் படிப்புடன் உடல் மனநலத்தைப் பிணைப்பு செய்ததால் அங்கிருந்த என்னை நாடினாள்.
மாயாவைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் அவளுடைய இப்போதைய நிலையை மனதில் வைத்துக் கொண்டு ஸெஷன்களைத் துவங்கினேன். மாயாவின் சிந்தனை பற்றிய குறிப்புகள் அறிதல் போய்க்கொண்டு இருந்தது. அவளுடைய சிந்தனையை வரைபடமாகச் சித்தரித்ததை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டாள். அதிலிருந்து நினைவாற்றல் தெளிவுபடுவதாகக் கூறினாள். இந்த இரு மாதங்களாக மாயாவின் பார்வையில் மற்றவர்களின் சொல்லும் செயலும் தனக்குப் பேரழிவு தரும் எனத் தோன்றியது. எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்ததால் இவ்வாறு நிகழ்ந்தது. தனக்குப் பேரழிவு என்ற கண்ணோட்டம் கொண்டாள். இதைப்பற்றி மேற்கொண்டு உரையாட, மாயாவின் மனப்பான்மை இவ்வாறே இருந்தால் ஏன் உதவாது என்பதை மையமாக எடுத்துக் கொண்டோம்.
மாயாவின் வயதை மற்றும் புரிதலின் அளவை மனதில் வைத்து மனதில் வைத்துக் கொண்டு, இது அரைக் கோப்பை காலியாக இருப்பதைப் போன்ற கண்ணோட்டம் என்று உதாரணம் எடுத்துக் கூறினேன். அரைக் கோப்பையைப் பார்த்து சிலர் இதுவேனும் இருக்கிறதே என சந்தோஷப் படுவார்கள், மற்றவர் பாதி காலியாக இருக்கிறதே என வருத்தப் படுவார்கள். இதை எடுத்துச் சொன்னதுடன் மாயாவிற்குவிற்கு புரிதல் ஏற்பட்டது. மாயா தன்னுடைய அணுகுமுறையில் கோப்பையின் காலியான பகுதியில் கவனம் செலுத்தினாள். விளைவாக தன்னுடைய நிலை நிரந்தரமானது என்று நம்பி, மற்றவர்கள் தனக்கு நல்லது யோசிக்கவில்லை என நினைத்துக்கொண்டாள்.
நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள், கோப்பையின் நிரம்பிய பகுதிக்குக் கவனம் செலுத்துவார்கள். தனக்கு இருக்கும் வளங்களைக் கவனத்தில் வைத்திருப்பதால் சூழ்நிலைகளைச் சந்திப்பது, கையாளுவது சுலபமாக இருக்கும். வாழ்வின் நடப்புகளைத் தற்காலிகம் என உணர்ந்து இருப்பார்கள்.
இந்த கோப்பை உதாரணமே மாயாவிற்குத் தனது அம்மா-பாட்டி மறைவைப் பற்றியும் விளக்கியது. மாயா அவருடன் செய்திருந்த பல செயல்பாட்டை நினைவு கூறினாள். ஆழ்ந்த உணர்ச்சிகளை மனம் விட்டுப் பகிர நேர்ந்ததில் இருவரின் நெருக்கம் பொங்கி வெளிப்பட்டது. அவர் இல்லாதது மாயாவை வாட்டியதை விவரிக்க, அந்த வயதில் தன்னை புரிந்து கொண்டவர் பிரிந்ததினால் தவிப்பு ஏற்படுகிறது என உணர்ந்தாள். இந்த வயதினருக்கு தன் மனப்போக்கு ஒருவருக்குப் புரிகிறது என்றாலேயே பந்தம் மேம்பட்டுவிடும்.
மாயா பல நிகழ்வுகள், கடந்த கலந்துரையாடல்களைப் பற்றிப் பேசினாள். அம்மாவை விட பாட்டி நன்றாகப் புரிந்து கொண்டு, தன்னுடைய பல புரிதலையும் சிக்கல்களையும் சரி செய்ததை விவரித்தாள். மாயா மனதைத் தொட்டது பல.
எல்லாவற்றிற்கும் மேலாக, பாட்டி சந்தீப்பைப் பற்றிப் புரிந்து கொள்ள விவரித்த விதம். சந்தீப் இவளுடன் கூடப் படிப்பவன். அவன் மிக நெருக்கமாக உட்காருவதை, மாயாவை உரசிக் கொண்டு போவதை அம்மா கவனித்து அவனை எச்சரிக்கை செய்தாள். சந்தீப்பிற்குப் புரியவில்லை, எப்போதும் போல இருந்தான். அம்மா மாயாவைக் கோபித்துக் கொள்ள, மாயா பாட்டியிடம் பேசினாள். அவர் சந்தீப்பைச் சந்தித்து மாயாவின் தாய் செய்த எச்சரிக்கையைப் பற்றிய விளக்கம் தர முயன்றாள். அவர் சொன்ன விளக்கத்தால் சந்தீப் தான் இதுவரை இதைக் கவனிக்காததை உணர்ந்தான், வியந்து போனான். அன்றிலிருந்து, பெண்கள் உருவம் நிழல் விழுகிற இடத்திற்கு வெளியே உட்காருவதும் நிற்பதும் எனப் பழகிக் கொண்டான். பல வாரங்களுக்குப் பின் அம்மா கவனித்து சமாதானம் ஆனாள்.
இவையெல்லாம் கோப்பையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்பதை வரிசைப் படுத்தினாள். இதன் உட்பொருளை மாயா அறிய, தன்னுடைய நிலைமையைப் பற்றிப் பார்க்கத் துவங்கினாள். பாட்டி நினைவலைகள் கோப்பையின் மேல் பகுதியில் அதாவது அவர் இல்லாததின் மீது கண்ணோட்டம் என்று உணர்ந்தாள். கீழ்ப் பகுதியில் பார்த்தால் நினைவாற்றல், கடந்து போன ஞாபகங்கள். என்றென்றும் நிரந்தரமானது! நினைவுகளுக்கு மரணம் கிடையாது என மாயா உணர்ந்தாள்!
புரிந்தவுடன் மாயா சொன்னாள், தான் உணர்ந்திருந்த துயரம் தற்காலிகமே என்று. நினைவு, ஞாபகங்கள் சமாதானம் செய்யும் கருவிகள். இந்தப் புரிதல் மாயா அடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்ததைக் காட்டியது. கோப்பையைப் பார்க்கும் விதம் நம் கையில்!
மாயா மேலும் புரிந்து கொண்டாள், மரணம் நேரும்போது இந்த விதமான எதிர்மறை எண்ணங்கள் உருவாகக் கூடும். நெருக்கமான சொந்தத்தின் மறைவுக்குப் பின் இவ்வகை பிரிவுகள் நேருமோ என்ற அச்சம் உருவாகலாம். தனக்கு நிச்சயமாக நேரக்கூடும் என நினைத்து விட்டதால், மாயா தன் குடும்பத்தினர், நண்பர்கள், எல்லோரிடமிருந்து விலகி இருக்க முடிவெடுத்திருந்தாள்.
இதை மையமாக வைத்து, ஸெஷன்கள் தொடங்கியது. தெரிந்த இரு உறவினர்கள், மிக நெருக்கமான நண்பர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, இவர்களின் வாழ்க்கையில் உறவுகள், பிரிவுகள், மறைந்து போனவர்கள், அதன் தாக்கம் இவற்றையெல்லாம் விவரிக்கச் சொல்லி, தீர ஆராய்ந்தோம்.
அதைச் செய்ததில், மாயாவால் ஒவ்வொருரின் வாழ்க்கையை ஆழ்ந்து காண முடிந்தது. அவர்கள் எல்லோரையும் நன்றாகத் தெரிந்திருந்தாலும், இப்படி உற்றுப் பார்க்கையில் எவ்வளவோ புரிய வந்தது. ஒவ்வொருவரும் எத்தனை வகை துயரம், பிரிவுகள் எதிர்கொள்கிறார்கள், தாங்குகிறார்கள் எனத் திகைத்துப் போனாள். ஒன்றை உணர்ந்தாள், தவிப்பும் பிரிவுகளும் நிதர்சனம். எல்லோருக்கும் பொதுவானது.
இந்த புரிதலினால் “எனக்கு மட்டுமே” என்றது சுக்கு நூறாக உடைந்து மறைந்தது. இதற்கு வேறு வழி வகுக்க, மாயாவை நேர்மறை எண்ணங்களை உபயோகிக்க ஊக்குவித்தேன்.
ஆங்கில வகுப்பில் சூசன் கூலிட்ஜ் கவிதையான “இலைகள் எவ்வாறு கீழே உதிர்ந்தது” (How the leaves came down, Susan Coolidge) மாற்றம் நிச்சயம் என்றதைப் புகட்ட, வாழ்க்கை என்றால் மாற்றம் என்றதை ஏற்றுக்கொள்கிறேன் என்றாள். இதற்கு அஞ்ச வேண்டியதில்லை. மாறாக நமக்கு ஏற்படும் அச்சம், தவிப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே உதவும்.
இதை மேலும் புரிய வைத்தது பாட்டி மரணத்தையொட்டிய சடங்குகள். கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளின் நோக்கம், மறைந்தவருடன் நம் உறவைப் புரிந்து கொண்டு, நடந்ததை ஒப்புக் கொள்வதற்கே. பலமடங்கு புரிதலில் மாயாவின் பக்குவம் கூடியது. கலாச்சாரத்தின் அருமையான தொகுப்பு புரிய, அதை மாயா புகழ்ந்தாள். அத்துடன் ஆசிரியையின் அனுமதியுடன் வகுப்பில் பகிர்ந்ததில் பலருக்கு உபயோகமாக இருந்தது!
அடுத்த இரண்டு வருடங்களில் மாயா பல மாற்றங்களைக் காட்டினாள். மீண்டும் தோழமையுடன், படிப்பிலும் மேம்பட நன்றாக மாறினாள்.
***********************************************************************
