சுய சிகிச்சை
“இன்றைக்கு என்ன அதிசயம், அல்லி?” என்று நமுட்டுச்சிரிப்புடன் கேட்டாள் அங்கயற்கண்ணி மாமி. அல்லிராணி சிரித்தாள். “நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டு நீங்களே சொல்லுங்கள், இது அதிசயமா இல்லையா என்று”. “சரி சப்ஜெக்ட்டுக்கு வா” என்றாள் மாமி. “மாமி, பல நாட்கள் முன்பு, ஒரு தாவரம் அப்படி தனது உபாதைக்குத் தானே ஆஸ்பிரின் மருந்து தயாரித்துக்கொள்ளும் என்று சொன்னேனல்லவா? இன்னைக்கு நான் சொல்லும் விஷயம் அதுக்கும் மேல!” என்றாள் .
“நினைச்சேன்.. போகப்போக முத்திடும் என்று அன்றைக்கே நினைச்சேன்” – மெல்லச்சொன்ன மாமியின் முகத்தில் குறும்பு குமிழ்த்தது. “மாமி!” என்று பொய்க்கோபத்தைக்காட்டிவிட்டுத் தொடர்ந்தாள் அல்லி. “மாமி! இது தான் செய்தி! உலோகங்கள், தங்களுக்கு ஏற்பட்ட விரிசல்களை, தாங்களே சரிசெய்து, சுயசிகிச்சை செய்து ஒட்டிக்கொள்ளுமாம்!! அதாவது, தொடர்ச்சியாக ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு சிறு வெடிப்பு அல்லது விரிசல் ஏற்பட்டிருந்தால், குளிர் பற்றவைப்பு (cold welding) மூலமாகத் தானே அவற்றைச் சரிசெய்து கொள்ளுமாம். மின்சாரமோ, சூடோ இதற்குத் தேவையில்லை. ஆக, உலோகங்கள், சோர்வின் (fatigue) காரணமாக வரும் விரிசலைப் பெறாமல் தடுக்கவும் இது உதவுமாம். உலோகங்கள் தவிர, கான்கிரீட்டிலும் இந்த சுயசிகிச்சை உதவுமாம். எதிர்காலத்தில், ஒருநாள், இயந்திரங்களும், வாகனங்களும், பாலங்களும், தங்களைத்தானே சுயசிகிச்சை செய்து ரிப்பேர் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்றாள் அல்லி.
சற்றே வாயை பிளந்த மாமியிடம், “இப்ப உங்க டர்ன்! இதுக்கு என்ன சினிமா ரெஃபரென்ஸ் சொல்லப்போறீங்க” என்று சாலெஞ்ச் செய்தாள் அல்லி. மாமி விடவில்லை. “அதுதான் டெர்மினேட்டர் 2 ல வந்துச்சே! அதில் வில்லன். T-1000 (Robert Patrick) ஒரு இயந்திர மனிதன். அவன் உடம்பு உலோகத்தால் ஆனது. அது நெருப்பில் உருக, தானே சுயசிகிச்சையில் முழுவதுமாக ஒன்று சேர்ந்து, மீண்டும் ஹீரோவுடன் சண்டையிடுமே. அந்தக்காட்சி தான் நினைவுக்கு வருகிறது. அப்ப நினைச்சேன்.. எப்படிக் காதில் பூ வைக்கிறாய்ங்க என்று. இப்ப புரியுது, மனிதன், என்ன கற்பனை பண்ணினாலும், ஒரு நாள் அதை கண்டு பிடிக்காமல் விடமாட்டான்” என்றாள்.
“மாமி! நீங்களே ஒரு அதிசய உலகம்” என்று வியந்தாள் அல்லி.
இது ஒரு அதிசய உலகம்!
https://www.dezeen.com/2023/08/07/self-healing-metal-sandia-texas-a-and-m/
