எண்ணும் எழுத்தும்

“ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்.”
சுப்ரமணியன், தன் மனைவியையும், சஞ்சய், பவானியையும், அப்போதுதான் உள்ளே நுழைந்த சரவணனையும் ‘உஷ்’ என்று சைகையால் அடக்கினார். யதேச்சையாகத் திரும்பிய சரூவின் அம்மா, அப்பாவிற்கு சற்று வெட்கமாகப் போய்விட்டது.
“என்னப்பா இளமை ஊஞ்சலாடுகிறது?” என்றார் சுப்ரமணியன் சிரித்துக் கொண்டே.
‘நீ தான் சிவ பூஜைல கரடி போல வந்திருக்க. ஆனா, எனக்கு இளமை ஊஞ்சலாடற வயசு தான்; நீதான் கெழவன்.’
“ஆமாண்டா, உனக்கு ஆறு நா மூத்த நான் கெழவன், நீ என்னிக்குமே கமலஹாசன்.” என்றவர், “சரூ, உனக்குத் தெரியுமோ, கணக்ல உங்கப்பன் படு வீக். நான் ஹோம் ஒர்க்கெல்லாம் செஞ்சு தருவேன்; அதுக்கு லஞ்சம் கடலமிட்டாய்.”
‘டேய், மானத்த வாங்காதடா, அதுவும் மூணு பொண்கள் எதிர்க்க.’
“சரூ, இதக் கேளு. டிரிக்னாமிட்ரி க்ளாஸ். டீச்சர், செங்கோண முக்கோணத்த வச்சு கர்ணம் பத்திச் சொல்லிட்டு, உங்கப்பனை கேள்வி கேக்கறார். சார், அவன், துரியோதனனோட ஃப்ரென்ட் என்றதும் வகுப்பே கொல்லுன்னு சிரிச்சது. டீச்சரும் சிரிச்சார்- உனக்கு மகாபாரதமும் தெரியல, திரிகோணமிதியும் புரியல. அவன் பேரு கர்ணன், இது கர்ணம்.”
“சார் ஒரு செங்கோண முக்கோணம் வரஞ்சு காம்பிச்சு, கிடைமட்டம், செங்குத்து, கர்ணம் என்று விளக்கினார்.”
‘இன்னிக்கி உன்ன விட்றதில்லடா, உனக்கு மட்டும் தான் மேத்ஸ் தெரியுமோ? இப்ப நான் கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லு, இல்ல கொழந்தேள் முன்னாடி…’
“என்னதிது? சும்மா கேக்குணும்னா கேளுங்கோ, வில்லன் மாறி இது என்ன பேச்சு?” என்றாள் சரூவின் அம்மா.
‘சரிப்பா, ஹோம் மினிஸ்டர் உத்தரவு. மொதக் கேள்வி, உன் ஃபோன்ல இருக்கற நம்பரை, அதாவது. டிஜிடல் பலகைல இருக்கற நம்பர பெருக்கினா என்ன விட வரும்?”
சுப்ரமணியன் வேகமாக மனதிற்குள் பெருக்கத் தொடங்கி 1*2*3*4*5*6* அதிலேயே தடங்கி விட்டார்.
‘டைம் அவுட்’ என்றவர் பவானியைப் பார்த்து ‘நீ சொல்லும்மா’ என்றார்.
“பூஜ்யம், அங்கிள்” என்று உடனே விடை வந்தது.
‘இப்ப ரெண்டாவது கேள்வி. ‘எத்தனை முறை எண் நூறிலிருந்து ஐந்தைக் கழிக்க முடியும்?’
சுப்ரமணியனுக்கு கை, கால் விரல்கள் போறவில்லை. “நான் சொல்றேன், அங்கிள், ஒரு தரம் தான்; ஏன்னா, நூறிலேந்து ஐஞ்ச ஒரு தரம் கழிச்சப்பறம் அது 95ன்னு ஆயிடுமே” என்றான் சஞ்சய்.
‘ரெண்டு வாத்து முட்ட’ என்றவர் மூன்றாம் கேள்வியைக் கேட்டார். ஒரு மனிதன் ஒரு அறைக்குள்ள நுழையறான், அங்க இருக்கற கட்டில்ல, அவனோட செல்லப் பூனை நாலு, நாய் மூணு நின்னுண்டு இருக்கு, அப்ப எவ்ளோ கால் தரல இருக்கு?’
“ரொம்ப சிம்பிள்டா,16+12+2=30 கால்கள் என்றார் பெருமையுடன் சுப்ரமணியன்.
“இல்ல அங்கிள், மனுஷனோட ரெண்டு கால், கட்டிலோட நாலு கால், ஆக மொத்தம் ஆறு கால் ஃப்ளோர்ல இருக்கு. அந்தப் பிராணியெல்லாம் கட்டில்ல தானே இருக்கு” என்றான் சரூ.
‘இதாண்டா கடசி கேள்வி. எனக்குப் பத்து வயசு, என் தம்பியோட வயசு என்ல சரி பாதி. இப்ப என்னோட வயசு முப்பதுன்னா, அவன் வயசு என்னடா?’
பாக்யராஜ் பாணியில் இதெல்லாம் எனக்கா தெரியாது என்று ஒரு பார்வை அனைவரையும் பார்த்த அவர் 15டா என்றார்.
‘தோத்தாங்குளி அப்பா, வயது வித்யாசம் 5 வருஷம் தானே, இவருக்கு முப்பதுன்னா, இவர் தம்பிக்கு 25 தானே இருக்கணும்’ என்றாள் பவானி.
‘அப்படிச் சொல்லு என் செல்லக்குட்டி. உங்கப்பன் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தானாம்’ என்று சிரித்தார் சரூவின் அப்பா,
“அதெல்லாம் ஓ கே. ஆனால், சைன், காஸ், டேன் தீட்டா இதெல்லாத்தையும் சிம்பிளா எப்படிப் புரிஞ்சுக்க?” என்றான் சஞ்சய்.
‘இப்போதைக்கு ஒரு செங்கோண முக்கோணத்த மனசுல நெனச்சுக்கோ. அதோட வர்டிகல் லைன் தான் சைன், கிடைமட்டம் தான் காஸ், ஹைபாடெனுஸ் தான் டேன். ஒரு வட்டத்தோட ஆரம் ஒன்று என வைத்துக் கொள்வோம். ஹரிசான்டல், அதாவது கிடை மட்டத்ல காஸ் தீட்டா ஒன்று என இருக்கும்; அதுவே செங்குத்து, அதாவது, வட்ரிகல் லைன்ல, பூஜ்யம் ஆகிவிடும். இதுக்கு நேர் எதிர் குணம் சைன் தீட்டாவிற்கு.’
“இதுனால என்னடா பயன்?”
‘இப்ப ஒரு கோபுரத்தோட உயரம் தெரியணும்னு வச்சுக்கோ. நாம அதுலேந்து 10 அடி தூரத்ல இருக்கோம். இந்த வடிவத்த ஒரு க்ராப்ல வரஞ்சு பாரு; சைன் 300 அதோட மதிப்பு 0.5. அதோட காஸ் 300ல 0.866. சைன் மதிப்பை, காஸ் மதிப்பால (அதாவது, 0.5/0.866) வகுத்தேன்னா வரது 0.577. இந்த 0.577ன நாம் இருக்கற தொலைவால பெருக்கினா (அதாவது. 0.577* 10 அடி) வர 5.77 அடி அதோட உயரம். சைன் மதிப்பு, காஸ் மதிப்பெல்லாம் நாம போட்ட க்ராப் மூலமா தெரிய வரும்” என்றான் சரூ.
‘இந்த சைன் அலைகள் மூலமாத்தான் வெவ்வேற அதிர்வெண்கள, ஏற்படுத்தி பதிவுகள் செய்யறோம்.. அது மட்டுமல்ல, தானே குறியமைக்கிற ஆடோஃபோகஸ்ல சைன் அலைகள் தான் மிகப் பெரிய உதவி’ என்ற பவானியை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள் சரூவின் அம்மா.
“கணிதத்திற்கு நோபல் கொடுப்பதில்லை தெரியுமா?” என்றார் சுப்ரமணியன்.
‘ஆனால், ஃபீல்ட்ஸ் மெடல் உண்டு. எனக்குத் தெரிஞ்சு நம்ம இந்தியர்கள் மஞ்சுள் பார்க்கவா, அக்ஷய் வெங்கடேஷ் ரெண்டு பேருக்குக் கெடச்சிருக்கு.’ என்றாள் சரூவின் அம்மா.
“ஆன்டி, என்ன விசேஷம் இன்னிக்கி, நீங்க பட்டுப் புடவை, பவானி பட்டுப் பாவாடை போட்டுண்டு, மருக்கொழுந்தும், ஜாதியுமா தலைல வச்சுண்டு, கைல வேற எவர்சில்வர் டப்பா…” என்றான் சரூ
‘பாத்தியா, உங்க கலாட்டால இத மறந்துட்டேன். இதுல அம்மன் சன்னதியில ஏத்தின துள்ளு மாவிளக்கு இருக்கு. பிரசாதம்’ என்று பவானியின் அம்மா எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.
“துள்ளு மாவிளக்குன்னா?” ருசித்துக் கொண்டே கேட்டான் சரவணன்.
‘அரிசியை ஊற வச்சு, ஈரப்பதம் இருக்கறச்சே, உரல்ல இடிச்சு, அது கரகரன்னு வரும் போது வெல்லத்தைப் போட்டு கலந்து இடிச்சு, தாம்பாளத்தல நிரவி, நெய்யை ஊத்தி, அந்த மாவுல மையத்ல ரெண்டு குழி செஞ்சு, நெய் தீபம் ஏத்தி அம்மனுக்கு ஆடி வெள்ளியில, கோயில்ல பூஜை செய்யணும்.’
“ஆடியே அம்மனோட மாசம் தான். அம்பாள் நமக்காகத் தவம் செய்யறா. எதுக்கு எல்லா உயிரும் நன்னா இருக்கறத்துக்கு. ஆடிப் பூரம், ஆடிப் பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி க்ருத்திகை, ஆடிப் பட்டம் தேடி விதைக்கறதுன்னு ஆடியே தெய்வீக மாசம் தான்.”
‘அது மட்டுமா? சூரியனின் தேர் தென் திசையை நோக்கி ஆடியில் தான் திரும்பும், தக்ஷிண புண்ய காலம்’ என்றார் சுப்ரமணியன். அவர் மனைவியின் கையிலிருந்த டப்பா எப்போது சரூவின் கைகளுக்குப் போனது என்பது பவானியைத் தவிர யாருக்கும் தெரியாது.
