புத்தகம் : Adventures Of A Countryside Doctor

  எழுதியவர் :  Dr.Thomas T Thomas

   தமிழில் : ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்

 தமிழாக்கம் : துரை தனபாலன்

     இந்நூல் ஒரு சிறிய நாவல். 150 பக்கங்கள் மட்டுமே கொண்டது. ஆங்கில மூலம் டாக்டர் தாமஸ் டி தாமஸ் அவர்களால் எழுதி 2021 இல் வெளியிடப்பட்டு, இதன் தமிழாக்கம் துரை தனபாலன் அவர்களால் திறம்பட செய்யப்பட்டு இந்த ஆண்டில் அமேசான் கிண்டிலில் படிக்கக் கிடைக்கிறது.

   எத்தனையோ தாமஸையும் டாக்டர் தாமஸையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டாக்டர் தாமஸ் டி தாமஸ் என்று வரிசையாக இரண்டு தாமஸ் வரும் இந்த நாவலாசிரியரின் பெயர் நிச்சயம் புதுமையானதுதான். தாமஸ் டி தாமஸ் ஒரு தலைசிறந்த, மனிதநேயம் மிகுந்த, கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் என்பது இந்த நூலைப் படிப்பவர் அனைவருக்கும் கண்கூடு. தாமஸ் படு சுவாரசியமான எழுத்தாளர் என்பதுதான் வாசகர்களாகிய நமக்கெல்லாம் அதைவிட முக்கியமான விஷயம்.

     என்னுடன் பிட்ஸ் பிலானியில் பல ஆண்டுகள் முன்னால் படித்த, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சென்னைவாசியான நண்பர் முரளிதரன்தான் முதலில் எனக்கு டாக்டர் தாமஸை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தில் அருமையாக அவர் எழுதியிருக்கும் அவருடைய இந்த நூலைப் படிக்க பரிந்துரைத்தார். அவர் கொடுத்தாரே என்பதற்காகத்தான் நான் இதை படிக்கத் தொடங்கினேன். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னால் இந்த நூலை கீழேயே வைக்க முடியவில்லை. பல அலுவல்களுக்கிடையே இந்த புத்தகம் என்னை “படி! படி!” என்று கட்டி இழுத்தது. நானும் வேறு வழியில்லாமல் அந்த இழுப்புக்கு என்னைப் பறிகொடுத்தேன். விளைவு  ?  இந்த விறுவிறுப்பான சிறு நூலை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.

     ஆஹா ! என்ன ஒரு சுவாரசியமான வாசிப்பு அனுபவம் ! 

    வாசகர்களாகிய நீங்கள் படிக்கும்போதும் இந்த அதிசயம் நிகழும் என்பது உறுதி. அதற்கு ஒரு விமர்சகனாக இது என்னுடைய உத்திரவாதம்.

     நீங்கள் கேரளத்தில் பிறந்திருக்கவோ வாழ்ந்திருக்கவோ வேண்டியதில்லை. உங்களுக்கு மருத்துவமனையிலும் மருத்துவத்திலும் குறிப்பிடத்தக்க விருப்பம் இருந்திடத் தேவையில்லை. எந்த வார்த்தையையும் நீங்கள் புரிந்து கொள்ள ஆங்கில அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை. எளிய மனத்தினரான டாக்டர் தாமஸ் டி தாமஸ், மிக எளிய நடையில், ஒரு சிறிய கேரள கிராமத்தின் எளிய மனிதர்களைப் பாத்திரங்களாகப் படைத்து நம் கண் முன்னே நடமாட விடுகிறார். முதல் அத்தியாயத்திலேயே நாம் அவர்களுடைய கிராமிய சூழலில் நுழைந்து விடுகிறோம். பிறகு நூலை முடித்து முடிச்சுகள் அவிழும் வரை, முழுதாக கட்டுண்டு அவருடைய இந்தக் கதையிலே மூழ்கி விடுகிறோம்.

    இதுதான் இந்த டாக்டர் எழுத்தாளரின் பெரிய வெற்றி. வாசகர்களாகிய நமக்கு களைப்பே ஏற்படுவதில்லை. மாறாக, களிப்புதான் ஏற்படுகிறது.

    இந்நூலை ஆங்கில மூலத்திலிருந்து அற்புதமாக தமிழாக்கம் செய்திருக்கும் மதுரை மைந்தன் துரை தனபாலன் ஒரு அபூர்வமான எழுத்தாளர். என் இனிய நண்பர்.. ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் தமிழிலே திருக்குறளைப் பற்றி விரிவான நூல் எழுதும் அளவுக்கு படிப்பும் பாண்டித்தியமும் பெற்ற பெரிய எழுத்தாளர். ஆனால், அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, நம்மைப் போன்ற வாசகர்களுக்காக, மிக எளிய நடையைக் கையாண்டிருக்கிறார். மூல நூலுக்கு முழுதும் உண்மையாகவும், ஆங்கிலத்திலுள்ள விறுவிறுப்புக்கு தமிழில் ஒரு மாற்று கூட குறையாமலும் தமிழாக்கம் செய்துள்ளார், இந்த நூலை தமிழில் படிக்கும்போது இதுதான் மூலமோ, தமிழிலேதான் முதலில் எழுதப்பட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு நேர்த்தியாக மறுபடைப்பு செய்துள்ளார் .

   ஆங்கில மூல நூலை எழுதிய டாக்டர் தாமஸ் டி தாமஸ் அவர்களுக்கும், திறம்பட தமிழாக்கம் செய்து நமக்கு அளித்திருக்கும் துரை தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துக்களும்.

    வாசகர்களே ! உங்களுக்கு ஒரு சுவையான விருந்து காத்திருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ வாசித்து மகிழுங்கள்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :

 1.  The Wisdom Bridge (By Daaji Kamlesh D.Patel)                June 2023

 2.  Adventures Of A Countryside Doctor

    ( By Dr.Thomas T. Thomas )                                                     July 2023

    தமிழில்: ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்

    ( தமிழாக்கம் : துரை தனபாலன் )