

மியூசிக் அகாடெமியில் மாலை கச்சேரி கேட்டு ரசித்து விட்டு சேது வீட்டிற்கு வந்தபோது மணி பத்து. இரவு படுக்கும் முன்பு அலைபேசியில் லதா எட்டு மணி அளவில் அழைத்திருப்பதை கண்டார். சிவப்பு நிறத்தில் லதாவின் பெயரருகில் இருந்த டெலிபோன் ரிசீவரின் பிம்பத்தை சில வினாடிகள் பார்த்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார் அவர்.
லதா எதுக்கு எனக்கு கால் செஞ்சா? இரவு 10 மணி ஆயிடுச்சு, இப்ப அழைச்சா அவ தப்பா நினைச்சுப்பாளா? இத்தனை வருஷம் கழிச்சு என்ன திடீர்னு என்ன கூப்பிட்டு இருக்கா? ஒருவேளை வேற சேதுவையோ, இல்ல செந்திலையோ அழைப்பதற்கு பதில், கைதவறி என்னை கூப்பிட்டாளோ? என்று 30 வருடங்கள் முன்பு தன்னை விவாகரத்து செய்த பிரிந்த முதல் மனைவி லதாவின் நினைவுகள் அவரை வாட்டியது.
மறுநாள் காலை நடைபயிற்சி முடித்து, குளித்து, காலை கடன்கள் எல்லாம் முடித்து , அவர் செய்தித்தாளுடன் அமர்ந்த போது அவரால் அதை படிக்க முடியவில்லை. லதாவிடம் பேசலாமா வேண்டாமா? ஏன் ஒரு முறைக்கு மேல் அவள் அழைக்கவில்லை? நானாக அழைத்தால் என்னை ஏளனமாக நினைப்பாளா? என்ற மனப்போராட்டத்தை தாண்டி லதாவை அலைபேசியில் அழைத்தார்.
“ சொல்லுங்க சேது!” என்று மறுமுனையில் ரவியின் குரல் கேட்டது. ரவி லதாவின் தம்பி.
“லதா இருக்காளா? நேத்து ராத்திரி அவ என்ன கூப்பிட்டு இருந்தா… அதான் கால ரிட்டர்ன் பண்றேன்,” என்றார் தயங்கியபடி சேது.
சில வினாடி மௌனத்திற்கு பிறகு, “சேது ! அக்கா பாஸ்டு அவே… தூக்கத்துலேயே… கார்த்தால என் பொண்ணு ஜானு தான் கண்டுபிடிச்சா. இன்னும் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவோம்,” என்றார் ரவி.
சேது அந்த செய்தியை கேட்டு உறைந்து போனார். அலை அலையாய் லதாவின் நினைவுகள் அவரை மீள முடியாமல் அழுத்தியது. முதலில் அவர்கள் ஒரே அலுவலகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டது, ஒரே ஜாதி மற்றும் மதமாக இருந்தும் லதாவிற்கும் அவரது அம்மாவிற்கும் நடந்த சண்டைகள், லதாவுக்கும் அவருக்கும் நடந்த சண்டைகள், அவர்களது குழந்தையின்மை, அனைவரும் லதாவை மலடி என்று திட்டிய போது, ‘நீங்களும் டெஸ்ட் எடுங்க! யாருகிட்ட பிரச்சனைன்னு கண்டுபிடிக்கலாம்,” என்று கூறிய லதாவின் தைரியம்(இப்போது தைரியம் என்று தோன்றும் அவள் செயல், அப்போது ஆணவம் ,திமிரின் வெளிப்பாடாக அவருக்கு பட்டது), அவளை பிரிய முடியாமல் பிரிந்தது, என்று பல்வேறு நினைவுகளால் நிலைகுலைந்து போனார் சேது.
“எங்க கிளம்பிட்டீங்க? மதியம் சாப்பிட வருவீங்களா?” என்று கேட்டாள் லக்ஷ்மி.
“லதா நேத்தி ராத்திரி இறந்துட்டாளாம். இன்னிக்கி எடுக்குறாங்க, நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேன்,” என்று கவனமாக, தன் உணர்ச்சிகளை மறைத்து, தனது இரண்டாவது மனைவியிடம் பேசினார் சேது.
“சரி பார்த்து போயிட்டு வாங்க! ஆட்டோ பிடிச்சுக்குங்க, நீங்க வண்டி ஓட்டாதீங்க… நான் வந்தா சரிபடாது, அவங்களுக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேளுங்க.”
இந்த லக்ஷ்மிக்கு தான் எவ்வளவு பக்குவம்? அவளோட பேச்சுல தான் எவ்வளவு முதிர்ச்சி? என் மனசு கோனாம எவ்வளவு அழகா பேசுறா. லதா, இவள விட பாதி அனுசரணையா, கணிவா இருந்திருந்தா? நாங்க பிரிஞ்சிருக்கவே வேண்டியதில்லை… என்று ஆழ் மனசுல இருந்து ஒரு குரல் கேட்டது சேதுவுக்கு.
அடையார் சாஸ்திரி நகரில் உள்ள லதாவின் வீட்டிற்கு வந்தார் சேது. பச்சை பசேலென வரவேற்ற தோட்டத்திற்கு மத்தியில் அந்த பழமையான வீடு இருந்தது. சென்னையில் எஞ்சி இருக்கும் சில நடுத்தர தனி வீடுகளில் அதுவும் ஒன்று .லதாவை கூடத்து தரையில் படுக்கப் போட்டு இருந்தார்கள். அவள் தலைமாட்டில் ஒரு விளக்கு எறிந்தது. லதாவின் முகத்தை தயக்கத்துடன் பார்த்தார் சேது. ஆழ்ந்த உறக்கத்தில் நிம்மதியாக அவள் தூங்குவது போல உணர்ந்தார். வாய் தான் சற்று திறந்திருந்தது, வாய் வழியாக அவளது கடைசி மூச்சு பிரிந்திருக்கும் போல, என்று எண்ணினார். மற்றபடி அவளது மெலிந்த, சுருங்கிய உடலில், அவள் உடுத்தி இருந்த சாம்பல் நிற பருத்தி புடவை, கையில் இரண்டு பிளாஸ்டிக் வளையல்கள், காதில் ஐந்து கல் தோடு, மற்றும் கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியை தவிர ஆடம்பரத்தின், அகங்காரத்தின், எந்த ஒரு சுவடும் இன்றி நிம்மதியாக கிடந்த லதாவைக் கண்டு மீண்டும் நினைவுகளில் ஆழ்ந்தார் சேது .
“இந்த வயசுக்கு எப்படி தனியா இருக்கா பாரு! ஆம்பள துணை இல்லாம என்னால வாழ முடியும்னு அவளுக்கு கர்வம், ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆகாது டா,” என்று அவரது அம்மாவின் குரல் மனதில் ஒலித்தது.
“பாருங்க மாப்ள, என் பொண்ணு எப்படி கிடக்கான்னு… அவ ஆசைப்பட்ட மாதிரி நீங்க தனி குடித்தனம் போயிருந்தா, இன்னைக்கு அவ இப்படி தனியா கிடந்து செத்திருக்க மாட்டால்ல?,” என்று லதாவின் அம்மாவின் குரலும் மனதில் கேட்டது.
லதாவை பார்த்தபடி சில நிமிடங்கள் உட்கார வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. அன்று சனிக்கிழமை என்பதால் லதா டியூஷன் எடுத்த சில குழந்தைகள் வரிசையாக வந்து லதாவிற்கு மரியாதை செலுத்தினர்.
“நீங்க லதா மிஸ்சோட ஹஸ்பண்ட் தானே?” என்ற ஒரு சிறுமி துருதுரு விழிகளோடு சேதுவை பார்த்து கேட்டாள். “லதா மிஸ் ரூம்ல உங்க போட்டோவை பார்த்து இருக்கேன். நீங்க வெளியூர்ல இருப்பதா மிஸ் சொன்னாங்க. இப்பதான் வரீங்களா? பாவம் மிஸ் அதுக்குள்ள செத்து போயிட்டாங்க!”
“ ஆழந்த அனுதாபங்கள் சார்! குழந்தை ஏதாவது தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிடுங்க,” என்று அச்சிறுமியின் தாயார் அவளை அழைத்துச் சென்றார்.
“இந்தாங்க காபி சேது மாமா, லதா அக்கா ரூம் அதுதான், நீங்க போய் பார்க்கலாம்,” என்று கனிவாக காபி கோப்பையை நீட்டியபடி சொன்னாள் ரவியின் மனைவி ரேகா.
“நேத்து ராத்திரி லதா என்ன கூப்பிட்டு இருந்தா… ஆனா, என்னால பேச முடியல, என்ன விஷயமா இருக்கும், உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
“ஓ அப்படியா! எனக்கு தெரியாது மாமா… லதா ரொம்ப ரிசர்வ்டா இருப்பாங்க. யார் கிட்டயும் அதிகம் பேச மாட்டாங்க. அவங்க என்ன நெனைக்குறாங்கன்னு பகிர்ந்துக்க மாட்டாங்க. என் பொண்ணு ஜானுவும், அக்காவும் தான் ரொம்ப க்ளோஸ், அவளுக்கு தெரிஞ்சிருக்கலாம், நான் அவ கிட்ட கேட்கறேன்.”
வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்த லதாவின் அறைக்கு, தேடலின் மிகுதியில் சேது பிரவேசித்தார். சிமெண்ட் தரை, பழங்கால மின் விசிரி, அழுக்கு படிந்த ஸ்விட்ச் போர்டு, என வீட்டில் மற்ற அறைகளை ஒப்பிடும் போது மேலும் பழமையாக காட்சியளித்தது அந்த அறை. சுவற்றை ஒட்டியவாறு ஓரமாக ஒரு மரக்கட்டில், சற்று அப்பால் ஒரு எழுதும் மேஜை மற்றும் நாற்காலி, எதிரில் கதவுகள் இல்லாத கிரனைட் அலமாரி, அதில் நிறைய புத்தகங்கள், என்று அந்த அறை ஒரு பீரியட் திரைப்படம் போல இருந்தது.
மேஜையை ஒட்டியுள்ள சுவரில் அவர்களது திருமண போட்டோ மாட்டி இருந்தது. பைத்தியக்காரி, இத்தனை வருஷம் கழிச்சு, எதுக்கு இந்த போட்டோவை வச்சிருக்க? என்று நினைத்தார் சேது. லதாவின் கட்டிலின் மீது இருந்த வெல்வெட் துணியால் போர்த்திய அவர்கள் திருமண ஆல்பத்தை கண்டார் அவர். அதனை எடுக்க அவரது கைகள் நடுங்கியது. இரண்டு பக்கங்களுக்கு மேல் அவரால் அதை பார்க்க இயலவில்லை. லதாவின் ஆசை ததும்பும் அழகிய முகம், அந்த புகைப்படங்களில் உயிருடன் ஒளிர்ந்த லதாவின் கண்கள் அவரை ஊடுருவியது. அதன் தாக்கம் தாங்காமல் அவருக்கு மூச்சு முட்டியது. சற்று காற்றாட இருக்கலாம் என்று வீட்டின் முகப்பிற்கு நகர்ந்தார்.
“இங்க எங்கடா வந்த? எங்க அக்காவ கைவிட்டது இல்லாம, இன்னொரு கல்யாணம் வேற பண்ணிக்கிட்ட! உனக்கு அப்பவாவது குழந்தை பொறந்துச்சா?” என்று கோபத்தின் மிகுதியில் சேதுவின் சட்டையை பிடித்து கேட்டாள் அப்போது வீட்டிற்கு வந்திருந்த லதாவின் சகோதரி சுமதி.
“ சுமதி ! என்னது இது? லதா தான் அவரை விவாகரத்து பண்ணினா, அதை மறந்துடாத! அவரே வருத்தத்துல இருக்காரு, அவரை மேலும் புண்படுத்தாத. விவாகரத்து என்பது அவங்க ரெண்டு பேரோட தனிப்பட்ட விருப்பம், அதுல தலையிட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. ஐ அம் சாரி சேது, சுமதி ஏதோ வருத்தத்துல அப்படி சொல்லிட்டா,” என்று பதறிப் போய் ரவி சேதுவிடம் மன்னிப்பு கேட்டார். சுமதியின் அந்த செயல் அவரை பெரிதாக பாதிக்கவில்லை. எழுபது வயது சேதுவுக்கு அப்போது கோபம், பொறாமை, அவமானம், சுயபச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் மங்கிப் போயிருந்தது. அவரது மனதில் இருந்த ஒரே ஒரு நெருடல் அவர் லதாவின் கடைசி அழைப்பை எடுக்காதது தான்.
சில வருடங்கள் முன்பு அவருக்கும் லதாவிற்கும் இடையே நடந்த சந்திப்பை நினைவு கூர்ந்தார் சேது. அலுவலக நண்பர் ஒருவரின் மகனின் திருமண விழாவில் அவர்கள் சந்தித்தனர். முதலில் சாதாரணமாக தொடங்கிய அவர்களது உரையாடல் விரைவில் சுவாரசியமாக மாறியது. இருவரும் அலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டனர். இனியாவது நட்பு ரீதியாக தொடர்பில் இருக்க முடிவு செய்தனர். சற்று நேரத்திற்கு எல்லாம் லதாவின் பொறாமையும், இயலாமையும், அவசர புத்தியும் அவளை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. “ எப்படி உங்களால பழச எல்லாம் மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது?” என்று ஆரம்பித்தாள்.. பிறகு சரமாரியாக அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி கோபத்துடன் பிரிந்து சென்றாள். அந்த சம்பவத்திற்கு பிறகு இருவரிடயே எந்த தொடர்பும் இருக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு எதற்காக தன்னை லதா அழைத்தாள் என்று குழம்பிப்போய் இருந்தார் சேது.
சேதுவிற்கு லதாவை மிகவும் பிடிக்கும். விவாகரத்து என்பது ஒரு சட்ட கோட்பாடு என்றே அவர் நினைத்திருந்தார். அதன் விளைவாக அவர் என்றுமே லதாவை வெறுத்தது இல்லை. ஆனால் லதாவின் சுபாவத்திற்கு அவர்கள் பிரிந்து இருந்ததே நன்று என்றும் உணர்ந்து இருந்தார். முதுமை என்பது உடலளவில் மட்டும் அல்லாது மன அளவிலும் ஒரு முதிர்ச்சியை, பக்குவத்தை ஏற்படுத்த வேண்டுமே? அந்த பக்குவம் இல்லாமல் லதா அவதிப்படுகிறாளே என்று அவர் வருந்தினார். சுமதியின் ஆவேசத்தை, லதா இறக்கும் தருவாயிலும் தன்னை நிந்தித்துக் கொண்டே இறந்ததின் வெளிபாடாக அவர் கருதினார். மனதளவில் சோர்வடைந்தார்.
“சேது மாமா, அம்மா லதா அத்தை நேத்திக்கு உங்களை கூப்பிட்டு இருந்ததா சொன்னாங்க… எனக்கு புரியுது உங்களுக்கு அவங்களோட பேசாதது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு. மாமா, அத்தைக்கு உங்க மேல கோவமோ, வருத்தமோ எதுவும் இல்ல. உங்களோட மறுமணம் அவங்கள பாதிச்சது உண்மை தான்… ஆனா, காலப்போக்கில் அவங்க அதுல இருந்து மீண்டுட்டாங்க. உங்கள ரொம்ப மிஸ் பண்ணினாங்க. அவங்களுக்கு சேது என்கிற நண்பரை இழந்தது ரொம்ப வருத்தம். பலமுறை உங்கள அவசரப்பட்டு விவாகரத்து செஞ்சதை நெனைச்சு என்கிட்ட அழுதிருக்காங்க. இந்த வீடு இன்னும் பழமையா இருப்பது கூட அவங்க உங்களோட சேர்ந்து வாழ்ந்த நாட்களோட நினைவுகள் தான் என்று எனக்கு தோணுது. ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை அவங்கள உங்க கிட்ட பேச விடாத இத்தனை காலம் தடுத்துச்சுன்னு நினைக்கறேன். சேது கிட்ட மன்னிப்பு கேக்கணும்.. இந்த சினிமாவ சேதுவோட சேர்ந்து பார்த்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.. பால் கோவான்னா சேதுவுக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்டீன்னு சதா சர்வ காலமும் உங்கள பத்தின நினைப்பு தான் அவங்களுக்கு. ஏதோ துரதிர்ஷ்டம் அவங்களால உங்களோட சேர்ந்து வாழ முடியாம போச்சு. ஆனா, அவங்க அதை நினைச்சு வருந்தாத நாளே இல்ல மாமா…. நீங்க அவங்க இறுதி ஊர்வலத்திற்கு வந்திருக்கிறத பார்த்தா… அவங்க ஆன்மா நிச்சயம் சாந்தி அடைஞ்சுடும் மாமா…” என்று கூறி ஜானு உடைந்து போய் அழுதாள் . ஜானுவை அணைத்தவாறே சேதுவும் அழுதார்… அவர்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களை எண்ணி…
