
குவிகத்தில் குறும்படம் “விளைமண்”!
“குறும்படம் என்பது முழுநீளத் திரைப்படமாகக் கருதுவதற்குப் போதிய நீளம் இல்லாத திரைப்படங்களைக் குறிக்கும். நன்றி தெரிவுப்புப் பகுதி உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கி 40 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவாக ஓடக்கூடிய திரைப்படமே குறும்படம்” எனத் திரைப்படக் கலைகள் அறிவியல்கள் கழகம் (Academy of Motion Pictures Arts and Sciences) இலக்கணம் தருகின்றது! தொழில் அனுபவங்களைப் பெறவும், எதிர்காலத்தில் பெரும் படங்களைத் தயாரிக்கவும், தன் திறமையைக் காட்டி நிதி பெற்று மேலும் படங்களைத் தயாரிக்கவும் குறும்படங்கள் பயன்படுகின்றன! (நன்றி: விக்கிபீடியா).
ஒரு சிறு கருத்தை குறுகிய நேரத்தில் அழுத்தமாக சிறந்த தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்துவதே குறும்படத்தின் சுவாரஸ்யம். மிகக் குறைவான வசனங்கள், சொல்லும் கருத்துடன் இயைந்த இசை, வித்தியாசமான காட்சிப் படிமங்கள், நேரடியாக இல்லாமல், மறைபொருளாக விளங்க வைக்கும் உத்திகள் போன்றவை குறும்படங்களை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன!
30.7.2023 குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் திரு வாசுதேவன் பார்த்தசாரதி இயக்கிய “விளைமண்”(மண் வளம் பற்றிய குறும்பட விழாவில் முதற் பரிசு பெற்றது) குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து குறும்படக் குழுவினருடன் ஒரு உரையாடல்! இரசாயன உரங்களினால் ஏற்படும் தீமைகளையும், ஆர்கானிக் விவசாயத்தினால் விளையும் நன்மைகளையும் ஒரு சிறிய கதையுடன், கிராமத்துச் சூழலில், சிறப்பாகப் படமாக்கியிருந்தனர். சொந்தமாக ஆர்கானிக் ஃபார்மிங் செய்துவருபவர் இப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத் தக்கது.
‘இயற்கை மண்வளம்’ புத்தகம், இயற்கை மண்வளத்தில் வீடு, சீரக சம்பா அரிசி, மணத்தக்காளிக் கீரை கடைசல், முருங்கைக் கீரை பொறியல், கடகநாட்டுக் கோழி, ஏரியில் பிடித்த விரால் மீன் வறுவல் என ‘நேடிவ்’ சாப்பாடு, பயோகேஸ், சோலார் எனர்ஜி, மழைநீர் சேகரிப்பு ‘அக்ரி’ சுற்றுலா எனப் பல தகவல்கள்! கோழி, சேவல், ஆடு, நாய், முட்டை, டிரோன் ஷாட்டில் பசுமையான வயல்கள், காலை, மாலை சூரியன்கள், கார்த்திகை மாவளி சுற்றுவது, தாயக்கட்டம், ஐந்து கல் விளையாட்டு, இயற்கை உரமிடுவது, மோர்க்கரைசல், ஜீவாம்ருதம், சுங்கடி சேலையில் கிழவி, மப்பெட்டில் பாய்க்கட்டு, மோர்ப்பானையுடன் பெண் என முழு கிராமீய விஷுவல் டிரீட்!
சிவசரவணனின் மிகச் சிறப்பான எடிடிங், கலைக்குமாரின் வரிகளுக்கு சிறப்பான இசை அபிஷேக் – நகரிலிருந்து கிராமத்துக்கு இசையிலேயே வித்தியாசம், சித்தார்த்தின் உறுத்தாத சினேமாடோகிராஃபி, நந்தகுமாரின் வண்ணக்கலவை எல்லாமே மண்வளத்திற்கு மெருகூட்டுகின்றன. நம்மாழ்வாரின் உருவப்படம், குழந்தைகளின் மன மாற்றம், கிராமீய மணம் கமழும் காட்சிகளும், வசனங்களும் – வாசுதேவன் பார்த்தசாரதியின் இயக்கம் சிறப்பு!
ஒரு மெஸேஜ் கொடுக்கும்போது, குறும்படம் ஒரு பிரச்சாரப் படமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அதைக் கூடியவரையில் தவிர்த்து, ஒரு சிறிய கதை, குழந்தைகள் மனமாற்றம், வில்லன், கிராமத்துப் பகை, ஃபைட்டிங் என மசாலா தூவி, ஆர்கானிக் மண்வளத்தை சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
வசனமில்லாமல், சிறு காட்சிப் படிமங்கள் மூலம் ஐந்தாறு நிமிடங்களுக்குள் ஒரு கருத்தை, ஒரு நிகழ்வை ஆழமாகச் சொல்வது குறும்படம் என நினைத்திருந்தேன். நீளம் குறைவான (40 நிமிடங்களுக்குள்) திரைப்படங்களும் குறும்படங்களே என அறிந்துகொண்டேன்! அதற்கான உழைப்பு, செலவு, மெனக்கெடல் என எல்லாம் தேவையாக இருக்கின்றன – ‘விளைமண்’ குறும்படமே சாட்சி!
வாழ்த்துகள் விளைமண் குழுவினருக்கு!
.
