நண்பர் சித்ரூபன் எழுதிய ‘கடவுளைக் கொன்றவன்’ புத்தக வெளியீடு இம்மாதம் நடைபெற்றது. விழாவில் மதிப்பிற்குரிய பத்திரிக்கை ஆசிரியர்கள் திருப்பூர் கிருஷ்ணன்,  கீழாம்பூர், வி எஸ் வி ரமணன் ,   கண்ணன் விக்ரமன் ஆகியோர் கலந்துகொண்டது விழாவின் சிறப்பு. 

இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு மாலன் அவர்கள் அணிந்துரை எழுதியது மிகச் சிறப்பு ! 

 

மாலன் அவர்களின் அணிந்துரை : 

 

கதைக்குக் கால் உண்டு. ஆனால் அது நாலுகால் பிராணி.

கதைக்களன் ஒரு கால். அந்தக் களனில் நடக்கும் சம்பவங்கள் இன்னொருகால்.சம்பவங்களை விவரிக்கும் பாங்கு மற்றொன்று. இவை ஏற்படுத்தும் தாக்கம் நான்காவது.

இந்த நான்கும் ஒன்றுக்கொன்று அனுசரணையாக ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு சமச்சீராக அமைய வேண்டும். அப்படி அமையத் தவறினால் கதை நொண்டும். அதை உணராமல் அந்த நாலுகால் பிராணியின் முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும்.

இந்த “உணர்தல்” குளிக்க வெந்நீர் விளாவுதல் போல, காபிக்கு ஊற்றும் டிகாஷன் அளவு போல, குக்கர் விசிலின் எண்ணிக்கை போல பழக்கத்தில் வசமாகும். அதாவது எழுதிப் பழகுவதில், வாசித்துப் பழகுவதில்.

சித்ரூபனின் கை எழுதிப் பழகிய கை. மனம் வாசித்துப் பக்குவப்பட்ட மனம். அதற்கு இந்தக் கதைகளே சாட்சி.

அவருடைய கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல.

அந்தச் சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்பதைப் போல. உதாரணமாக ஒர் அஞ்சலகத்தை விவரிக்கிறார். ‘ஒரே தாள லயத்தில் உறைகள் மீது முத்திரை குத்தும் சப்தமும்’ என்று ஒரு வரி வருகிறது.

சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். கனவும் காசோலையும், தங்க வினை ஆகிய கதைகளில் வரும் வங்கி மேலாளர்கள், மனிதம் கதையில் வரும் கான்ஸ்டபிள் எனச் சில உதாரணங்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர் கொள்ளும் துயரங்களைச் சொல்லவே -அதாவது படம் பிடிக்கவே- அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார்

அந்தக் கதைமாந்தர்கள் தமிழன்றிப் பிற மொழிக்காரர்களாகவும் சித்தரிக்கப்படுவது இது மனிதர்களைப் பற்றிய கதைகள், மொழி என்ற சட்டைக்குள் இருக்கும் இதயங்களைப் பற்றிய கதைகள் என்பதைக் கோடிகாட்டுகின்றன.அதுவே கதைகளுக்குப் புதிய கனத்தைச் சேர்க்கின்றன.

பல புதிய வகைகளில் கதை சொல்லிப் பார்க்க முயல்கிறார், பன்னிருவர்,கடவுளைக் கொன்றவன் கதைகளில் அந்த முயற்சி மிகச் சிறப்பாக வெற்றி கண்டிருக்கிறது,

கதையின் தாக்கம் என்றொரு சொற்றொடரை இரண்டாவது பத்தியில் பயன்படுத்தியிருந்தேன், அதை நான் அதிர்ச்சி அளிப்பது என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கவில்லை. நான் சொல்வது வாசகனிடம் ஏற்படும் impact அல்ல. அவனிடம் கதைகள் கிளர்த்தும் response. அது அதிர்ச்சியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு முறுவலாகக் கூட இருக்கலாம். சித்ரூபனின் சில கதைகள் அத்தகைய முறுவல்களை விளைவிக்கின்றன

தமிழ்ச் சிறுகதைகளுக்கான இடம் அச்சுப் பரப்பில் வெகுவாகக் குறைந்து வருகின்றன என்ற என் கவலையை இந்தக் கதைகள் பிரசுரமாகியிருக்கும் இதழ்களின் பெயர்கள் உறுதி செய்கின்றன. அதே நேரம் யதார்த்தவாதக் கதைகள், புதிய முயற்சிகள், புதிய கதைக்களன்கள்/ கருக்கள் கொண்ட கதைகள் அருகி வருகின்றனவோ என்ற என் சந்தேகத்திற்கு இடமில்லை என்பதையும் இந்தக் கதைகள் மெய்ப்பிக்கின்றன

சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன

சித்ரூபனுக்கு வாழ்த்துகள்

                                                                                                                                                                                    மாலன்