பம்பர்

அறிமுக இயக்குனர் செல்வகுமார், தமிழகத்தையும் கேரளாவையும் இணைத்து, பணத்தை விட மனித நேயமே முக்கியம் எனும் கருத்தை வலியுறுத்தி நெகிழ்ச்சியுடன் ஒரு படத்தை தந்திருக்கிறார். தூத்துக்குடி தமிழை வெகு இயல்பாக பேசி நடித்திருக்கிறார் வெற்றி. மாஸ்டர் படத்தில் தலை காட்டிய ஷிவானி தனி கதாநாயகியாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.ஏழை முஸ்லீம் பெரியவராக வரும் ஹரீஷ் பெராடி இந்தப் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பில் ஆச்சர்யப்படுத்துகிறார். – தினமலர்.

சில இடங்களில் திரைக்கதை தொய்வோடு இருந்தாலும் மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கருவும் அதில் உன்னதமான நேர்மை எனும் அரிய குணாதசியமும் காட்டப்பட்ட விதம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் ஈர்க்கும். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இன்ஃபினிட்டி

இருக்கை நுனியில் இருக்க வைக்க படாது பாடு பட்டு தோற்றுப் போகிறது இந்தப் படம். பாதி படத்திற்கு மேல் காட்சிகளின் கனம் போதாமல் நட்டி நட்ராஜ் இங்குமங்கும் நடந்து, தவித்துப் போகிறார். கட்டக்கடைசியில் இரண்டாவது பாகம் உண்டு என்பது போலக் காட்டி இன்னமும் நம்மை பயமுறுத்துகிறார்கள்.

படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார் நட்ராஜ். ஆரம்பத்தில் சாஃப்ட் ஆக வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் இன்னும் மிரட்டி இருக்கலாம். கொலைக்கான காரணமும், அதன் பின்னால் இருக்கும் காட்சிகளும் கதைக்கு கொஞ்சம் கூட வலுசேர்க்கவில்லை. – ஏவிபி லைவ் டாட் காம்!

பாபா ப்ளாக் ஷீப்

மிலேனியம் புள்ளைங்க ரசிக்கக் கூடிய, ஒரு முறை பார்க்க மட்டும் நிறைகள் நிறைந்த படம் இது. பள்ளிக்காலத் தருணங்களை மீட்டெடுக்க  நினைப்பவர்களுக்கு இது சரியான லாகிரி. கீரியும் பூனையுமாக இருக்கும் இரண்டு மாணவ அணிகள் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தால் என்ன ஆகும் Baba Black Sheep (2023) - IMDbஎன்பது ஒன்லைன். ராஜ்மோகனின் ஒற்றை வரி நக்கல் வசனங்கள் ஆங்காங்கு பளிச். விமர்சனம் செய்பவர்களையும் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். அதற்கும் நாம் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

படமே ஒரு கோர்வையாக இல்லாமல் தொடர்பற்ற காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே நீள்கிறது. இந்தக் காட்சிக் குவியலை ஒரு சினிமாவாக மாற்ற ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் போராடியிருக்கின்றன. – விகடன்

மாவீரன்

விருது பெற்ற மண்டேலா இயக்குனர் மடோனா அஸ்வின், சொல்ல வந்ததில் தெளிவாக இருக்கிறார். பார்த்து புளித்த கதையை சுவாரஸ்யமாக்க அவருக்குத் தெரிகிறது. அதனால் படம் போரடிக்காமல் போகிறது. அதோடு சின்னதாக அசரீரி குரலில் விஜய் சேதுபதியை பேச வைத்தது, ஜாக்பாட் அடித்தாற்போல் படத்தை சுவையாக ஆக்குகிறது.

கோழையான கேலி சித்திரக்காரன் சிவகார்த்திகேயன் வீரனாக மாறும் வழக்கமான கதை. வழக்கமான ஹீரோயிச மசாலா கதையோ என்று நாம் எண்ணும்போது அதை மறுதலித்து இதில் வேறு சத்தான விசயம் இருக்கிறது என்று கொஞ்ச நேரத்திலேயே புரிய வைத்து விடுகிறார் மடோனா அஸ்வின். முந்தைய படம் போலவே யோகி பாபுவை வெறும் காமெடியனாக இல்லாமல் ஒரு குணச்சித்திரமாக மாற்றியதில் கனம் கூடுகிறது. வட இந்திய பணியாளர்கள் மராமத்து வேலை பார்க்கும் யோகியின் வருவாயில் ஆட்டையைப் போடுவதை வெகு இயல்பாக சமூக அக்கறையோடு சொல்லி இருக்கிறது படம்.

முதல் பாதி விறு விறுவென்று போகிறது. பின் பாதி அராஜக அரசியல்வாதியோடு மோதல் எனும் வழக்கமான பாதையில் வேகம் குறைய ஆரம்பிக்கிறது என்றாலும் மொத்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

முதல் பாதியை சற்று நீளமாக கதை மாந்தர்கள் மற்றும் களத்தைச் சொல்ல எடுத்துக் கொண்டாரோ அஸ்வின்? ஆனாலும் பின் பாதியில் சில புதுமையான கோணங்களில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சிகள் வாவ் என்று சொல்ல வைக்கின்றன. முதல் படமான மண்டேலாவின் பாத்திரத்தில் சிவாவை பொருத்துங்கள். வெற்றியை நிர்ணயிக்கும் ஒற்றை ஓட்டு என்பதை மனசாட்சியின் குரல் என்று மாற்றுங்கள். இது மண்டேலா பாகம் இரண்டு தான். படத்தின் நாயகன் சிவா தயங்குவது போலவே, படமும் வேகம் எடுக்கத் தயங்குகிறது. சாதிக்க முடியாமல் தற்கொலை முயற்சிக்குப் போய் அதையும் சரியாகச் செய்யத் தெரியாமல் தலையில் அடிபட்டு விழும் சிவாவுக்கு ஐயர் தி க்ரேட் போல மண்டையில் ஒலிக்கும் குரலான விஜய் சேதுபதி வழி நடத்துவது தான் இதன் மாயா ஜால கண்ணி. ஒரே காட்சியை எப்படி இருக்க வேண்டும் என்று மனக்குரலும் எப்படி இருக்கிறது என்று சிவாவும் காட்சிப்படுத்துவது உண்மையிலேயே சுவையைக் கூட்டுகிறது. எதிர்பார்த்த க்ளைமேக்ஸை அடைய அதிக நேரம் எடுத்துக் கொண்டாரோ அஸ்வின் என்று நினைக்கும்போது சற்று கசப்பு நாக்கில் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுதான்.. இதுவே சிறப்பு என்பது இந்தியா டுடேயின் வாக்கு. சிறிய இடைவெளிகளில் சுவாரஸ்யம் சேர்க்கும் காட்சிகளை தொடுத்து இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது அஸ்வினின் இயக்கம் மற்றும் திரைக்கதை,

முதல் பாதி மடோனா அஸ்வின் படமாகவும் பின்பாதி சிவகார்த்திகேயன் படமாகவும் மாறி இருக்கிறது. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் நாயகி அதிதி சங்கருக்கு கால் மணி நேர பங்களிப்புதான். முதல் பாதி தத்துவார்த்தமான யதார்த்தம். அஸ்வினின் ஸ்டைலிலேயே இருக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கரின் பங்களிப்பு களமும் கதையும் கைக்கோர்க்கும் தருணத்திற்கு பூச்செண்டு கொடுத்தாற்போல் இருக்கிறது. வழக்கமான கிளிஷேவுடன் படத்தை முடித்தது மட்டும் தான் இதன் குறை. – குமுதம்.

2006ல் வெளிவந்த ஆங்கிலப்படமான ஸ்ட்ரேஞ்சர் தேன் ஃபிக்ஷன் எனும் ஆங்கிலப் படத்தின் மையக் கருவான அசரீரி குரல் எனும் உத்தியை மீட்டெடுத்து மாவீரன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆங்கிலப்படம் காமெடி; பட்.. இது? கொஞ்ச நேரமே வரும் யோகிபாபு, மித நடிப்பில் கட்டிப் போடும் சரிதா; இனி இவர்தான்யா வில்லன் என்று நிறுவும் மிஷ்கின் என்று பல பளஸ்கள். படம் முடிந்து விட்டது என்று நினைக்கும்போது பாஞ்சாலி வஸ்த்ராபரணம் போல இன்னும் ஒரு காட்சி என்று நீட்டித்து பொறுமையை சோதிக்கிறது படம். ஒரு பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் அதிதி ஷங்கரின் அறையின் பின்புலத்தில் கட்டுக்கட்டாக பழைய செய்தித்தாள்கள் என்பது கண்ணை உறுத்துகிறது. சூப்பரான முதல் பாதி; சுமாரான பின்பாதி. இதுதான் ஃபில்மி கிராஃப் அருணின் தீர்ப்பு!

கொலை

பூட்டிய வீட்டிற்குள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இதை யார் செய்திருப்பார்கள்? எனும் வழக்கமான புலனாய்வு படம் தான் இது! ஆனாலும் இதில் கதை நாயகனான விஜய் ஆண்டணியின் குடும்பக் கதையை நுழைத்து ஜவ்வாக இழுத்து விட்டார்கள். என்றாலும் இம்மாதிரி படங்களுக்குத் தேவையான இருள் படிமத்தை படம் நெடுக விதைத்தது பாராட்டும்படி இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு அளவாக வெட்டி தைக்கப்பட்ட சட்டையைப் போன்ற பாத்திரம். போலவே ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா போன்ற கலைஞர்கள் கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனாலும் படம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல செக்கு மாடு சுற்றாக மாறி போரடிக்கிறது. -ஃபிலிமி கிராஃப்ட் அருண்.

பாலாஜி குமார் இயக்கத்தில் வந்திருக்கும் கொலை சற்று சுவாரஸ்யமான கதையுடன் ஆமை வேகத்தில் பயணிக்கும் படம். நடந்த கொலையை விசாரிக்கும் சந்தியா மோகன்ராஜ் ஐபிஎஸ் ( ரித்திகா சிங் ), ஓய்வு பெற்ற புலனாய்வு அதிகாரி வினாயக்கின் ( விஜய் ஆண்டனி) உதவியை நாடி எப்படி கொலையாளியை கண்டு பிடிக்கிறார் என்பது ஒன்லைன். மர்ம முடிச்சுகள் கொண்ட படங்களை விரும்புவர்களுக்கு இது பிடிக்கலாம். களத்திற்கு ஏற்ற ஓளிப்பதிவு உலகத் தரத்தை ஒத்து இருக்கிறது. வினாயக்கின் கற்பனையில் மலை உச்சியில் இருந்து தொங்குவது போல வரும் ஒரு காட்சி போல, படமும் பாதையை விட்டு விலகி ரசிகனை தொங்கலில் விட்டு விடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஈர்ப்பில்லாத திரைக்கதையுடன் நவீன காட்சி படிமங்களோடு ஒப்பேறி இருக்கிறது கொலை. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம். இயக்குனர் பாலாஜி குமார் ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக காட்சி தருகிறார். இனி வரும் படங்களில் எதை தவிர்க்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார் என்று நம்புவோம். – தமிழ் இந்து.

உருவாக்கம் இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தாலும் உணர்வு பூர்வமாக நம்மை கட்டி இழுக்க மறுக்கிறது இந்தப் படம். – தினமலர்.

சத்திய சோதனை

இறந்து கிடக்கும் ஒரு பெரியவரின் உடலில் காணப்பட்டும் தங்க நகைகளை பொறுப்போடு காவல் துறையிடம் ஒப்படைக்க நினைக்கும் இளைஞ்னின் அவஸ்தை தான் இதன் மைய இழை. சில இடங்களில் நம்மை ஈர்த்தாலும் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம் எனும் எண்ணமே வருகிறது படம் முடியும்போது. பிரேம்ஜியை விட குபேரன் எனும் காவலராக வரும் சித்தன் மோகனின் நகைச்சுவை சரவெடிகள் நம்மை கவர்கின்றன. அவருடைய வித்தியாசமான குரல் வடிவம் இன்னொரு ப்ளஸ். பிரேம்ஜி, சித்தனைத் தவிர எந்தப் பாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை. அதனால்.. படம் பாதி கிணறு.- டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஒரு கிடாயின் கருணை மனு எனும் அற்புதப் படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையாவின் படமா இது என்று யோசிக்க வைக்கும் இயக்கம். உணர்வு பூர்வமான தலைப்புக்கு எந்த விதத்திலும் மரியாதை சேர்க்கவில்லை இந்தப் படம்.

அநீதி

மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். ஒரு புதுமையான கதைக்களம்; அதில் மெல்லிய காதல்; கதை நாயகனுக்கு இருக்கும் மருத்துவ உளவியல் பிரச்சினை. அதனால் ஏற்படும் சிக்கல்.. உணர்வுபூர்வமான கதைகளை தன் அடையாளமாகக் கொண்ட இயக்குனர், இம்முறை நம்மை கன்னத்தில் அறையும் விதமான ஒரு உணர்ச்சி பிரவாகக் கதையை கையில் எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார். சில காட்சிகள் தொய்வு என்றாலும் தமிழ் திரை மறக்க முடியாத, மறக்கக் கூடாத திரைப்படத்தை தந்ததில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஜிவி பிரகாஷின் இசையும் பாடல்களும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கின்றன. அர்ஜுன் தாஸும் ( திரு) துஷாரா விஜயனும் ( சுப்பு ) உழைப்பைக் கொட்டி இருக்கின்றனர். கதைக்களமும் நெருடல் இல்லாமல் நடக்கும் சின்னச் சம்பவங்களும் திரைக்குப் புதுசு. கதை திரைக்கதை எழுதிய விதத்தில் பெரும் புத்திசாலித்தனம் தெரிகிறது. மென் திருப்பங்கள் சரியான இடத்தில் இடம் பெற்று கிளிஷேக்களை புறம் தள்ளுகின்றன. நடித்த ஒவ்வொருவரும் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது பெரிய ப்ளஸ். உண்மைக்கு நெருக்கமான பாத்திரங்களில் மட்டும் நடிக்க விரும்பும் துஷாரா விஜயன் இதில் வைரமாக பளிச்சிடுகிறார். காளி வெங்கட்டையும்  வனிதா விஜயகுமாரையும் இந்த மகுடத்தில் பளிச்சிடும் கற்களாக சேர்ப்பது அவசியம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

நாடகத்தனம் அதிகமுள்ள கதையை எடுத்திருக்கிறார் வசந்தபாலன். உணவு கொண்டு போய் கொடுக்கும் இளைஞன் கதை என்பது சமகால யதார்த்தம். அதை மட்டும் சொல்ல வந்து உணர்வு சுழலில் மாட்டிக் கொள்கிறார் இயக்குனர். ஏற்கனவே அந்தகாரம் படத்தில் பார்த்த அதே அர்ஜுன் தாஸ் தான் இதிலும். துஷாரா விஜயன் எப்படியோ இந்த விலங்கிலிருந்து விடுபட்டு செமையான ஒரு பங்களிப்பைத் தந்திருக்கிறார் – தமிழ் இந்து.

அதிகம் ரணமாகாமல் ஒரு முறை பார்க்கலாம் – மூவி க்ரோ!

எக்கோ

அழகான ஹீரோ ஸ்ரீகாந்த். நடிப்பும், நடனத் திறமையும் கொண்டவர்தான். ஆனால் அடிக்கடி திரையில் பார்க்க முடியாமல் போவதற்கு காரணம் புரிவதில்லை. இந்தப் படத்தில் முழு நீளத்திலும் வருகிறார். நிறைவாகவே செய்திருக்கிறார்.

ஹாரர் கதைகளுக்கு உண்டான எல்லா வஸ்துகளும் திரைக்கதையில் சரியான அளவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கோபிநாத்தின் அனுபவமிக்க கேமிரா இயக்குனர் நவீன் கணேஷுக்கு மிகப் பெரிய துணை.

புரட்டிப் போடும் ஒரு பெரிய திருப்பத்தை யூகிக்க முடியவில்லைதான்.

ரோலர் கோஸ்ட்டரில் ஒரு திடீர் பாய்ச்சலுக்கு முன்பு மிக மெதுவாக ஒரு முன் தயாரிப்பாக மெதுவாக உச்சிக்குப் போவோமில்லையா.. அந்த வயிற்றைப் பிடித்து கத்தவைக்கும் உற்சாகப் பாய்ச்சலுக்காக திரைக்கதை மெதுவாக அந்த உச்சிக்கு அழைத்துச் செல்லும்போது மட்டும், அநியாயப் பொறுமை அவசியம்.

குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தாலும்.. இந்தப் படத்தின் திகிலை அனுபவிக்க திரையரங்கில் பார்ப்பதே உத்தமம்.

-பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல்.

நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜவேரி, மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்த எக்கோ எனும் படம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீகாந்தின் நடிப்பு அருமை. பூஜா ஜவேரியும் வித்யா பிரதீப்பும் சோடை இல்லை! இப்படம் ஒரு வித்தியாசமான திரில்லர். பார்வையாளனை கட்டிப் போடும் மர்ம முடிச்சுகள் கொண்ட திரைக்கதை; அருமையான நடிப்பும் கொண்ட இப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் -சென்னை விஷன்

ப்ளைண்ட்

ஜியோ சினிமாவில் பிரிமியராக வெளியாகி இருக்கும் இந்தப்படம் மறந்து போன சோனம் கபூரை நினைவூட்டுகிறது. டாம் அன்ட் ஜெர்ரி விளையாட்டு தான் கதைக்களம். விபத்தில் பார்வை இழந்த காவல் அதிகாரி ஜியா சிங். தன் மனதுக்குப் பிடித்த பெண் ஒருத்தி இறந்து போக அவளைப் போல தோற்றம் உள்ளவர்களை சிறை பிடித்து கட்டிப் போட்டு தொட்டு அனுபவிக்கும் சீரியல் கொலைகாரன் (புரப் கோஹ்லி). இருவருக்குமான மோதலே படம்.

சோனம் கபூரின் ப்ளைண்ட்,உங்கள் கண்களை இருட்டடிப்பு செய்து அலுப்பை விதைத்து விடும். 2011ல் வெளிவந்த கொரியன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம், சோனத்தின் மறுபிரவேசத்தை ஒட்டியது. இதை விட தப்பான படத்தை அவர் தேர்வு செய்திருக்க முடியாது. – இந்தியா டுடே.

தட்டையான கதை திரைக்கதையுடன் சோனம் மீண்டும் வந்திருக்கிறார். அவரது ஒரு குத்து கூட வலிக்கவில்லை. – தி ஹிந்து.

மரண சலிப்புடன் படம் பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் சோனம் கபூரின் பங்களிப்பு, விழலுக்கு தெளித்த நீர் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

யாரையாவது பாராட்ட வேண்டும் என்றால் சோனம் கபூருக்கு ஒப்பனை செய்தவரைத் தான் பாராட்ட வேண்டும். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டாத சோனம் கபூரின் தோசை தவ்வா முகம் எதையும் எட்டவில்லை. பார்வையாளனுக்கு பயம் காட்டக்கூட தவறிவிட்டது இந்தப் படம். – டைம்ஸ் ஆஃ இந்தியா.

டைனாஸர்ஸ்

டை நோ சார்ஸ் என்று படிக்க வேண்டுமாம். பல கதைகள் வடசென்னையை மையமாக வைத்து தாதாக்களைப் பற்றி வந்து விட்டாலும் இது சற்று புதுசாக இருக்கிறது.  சரியாக எழுதப்பட்ட ரவுடிகளின் கதை சில சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஈர்க்கிறது. திருந்தி வாழ நினைக்கும் தாதா துரையை பின் தொடருகிறது பழைய குற்றம். அவருக்கு பதிலாக தனா சிறை செல்ல, இடையில் மாட்டிக் கொள்ளும் மன்னு எனும் தனாவின் கோழை சகோதரன் சந்திக்கும் சிக்கல்கள் தான் கதை. வித்தியாச கதை இல்லைதான் என்றாலும் நம்மை ரசிக்க வைக்கும் உச்சங்களும் போரடிக்கும் பள்ளங்களும் இதில் உண்டு. சமீப காலத்தில் ஒரு முறை பார்க்கலாம் ரகத்தில் வந்த படம் இது! – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இந்தியா ஹெரால்ட் சொல்கிறது: இது இன்னொரு தாதாயிச நம்பிக்கை தரும் படமா? வழக்கமான வன்முறைக்கு நடுவில் இது வித்தியாசப்படுகிறது. இதற்கு முன் வந்த வடசென்னை, மெட்ராஸ் போல கதைக்களம் இருந்தாலும் இதன் உண்மைக்கு நெருக்கமான புதிய முகங்கள் பதியும் நல்ல படமாக இது இருக்கிறது. வசனங்கள் அருமை! ஒவ்வொரு ரவுடியின் வாழ்வும் ஒரு ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது.. ஒரு சிகரெட் விலைக்கு அரைக் கிலோ அரிசி வாங்கலாம். பத்து நிமிடங்கள் வரும் கொலைக்கான ஸ்கெட்ச் இதன் ஹைலைட். முக்கியமாக இதில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப் படவில்லை என்பது சிறப்பு .

லவ்

லவ் அழகான காதல் கதையாக ஆரம்பிக்கிறது. நிச்சயம் நம்மைக் கட்டிப் போடும் எனும் எதிர்பார்ப்பை விதைக்கிறது. நடுவில் ஒரு கொலை விழுந்து ரூட் மாறி எங்கோ போய் விடுகிறது. நல்ல எண்ணத்தில் ஆரம்பித்தது எங்கேயோ தடம் மாறி போதாமையில் முடிகிறது. – இந்தியா ஹெரால்ட்.

இன்னும் கூட லப்டப்பை எகிற வைத்திருக்கலாம் இயக்குனர் ஆர் பி பாலா. சமீப காலமாக தனக்கு ஒத்து வரும் கதைகளை தேர்வு செய்ய முடியாமல் இருக்கிறார் நடிகர் பரத். இதுவும் அதைப் போல ஒன்று. இதே பெயரில் பேசப்பட்ட மலையாளப் படத்தை மறு உருவாக்கம் செய்தாலும் தேவையற்ற திருப்பங்களை சேர்த்து வழி தவறி விட்டது படம். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் காப்பாற்றுகிறது. அதே போல விவேக் பிரசன்னாவும் காமெடியும். ஒரு நல்ல திரில்லர் முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறி  அடங்கிப் போகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

எல் ஜி எம்

லெட்ஸ் கெட் மேரிட் என்பதன் சுருக்கமே தலைப்பு. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடித்த ஃபீல் குட் சித்திரம்.

காமெடியும் இசையும் கொஞ்சம் காப்பாற்றுகின்றன. மிர்ச்சி விஜய்யும் யோகி பாபுவும் சில சிரிப்புகளுக்கு உத்தரவாதம் தருகிறார்கள். எந்த வித சுவையும் இல்லாமல் படம் தொடர்வது இதன் பெரிய குறை. அம்மாவும் வரப்போகும் மருமகளும் நாயகனுடன் மேற்கொள்ளும் பயணம் திருப்பங்கள் இல்லாமல் நினைவில் நிற்கக்கூடிய காட்சிகளோ வசனங்களோ இல்லாமல் ரசிகனை  அலுப்படையச் செய்கிறது. – தமிழ் இந்து.

எம் எஸ் தோனியின் முதல் தயாரிப்பு நிச்சயமாக ஒரு சிக்ஸர் இல்லை. அதோடு வீட்டிற்கு கொண்டு போகக்கூடிய எந்தத் தருணமும் படத்தில் இல்லை. பாத்திரங்களின் நிறம் மாறினால் கதை சூடு பிடிக்கும். அவ்வப்போது படத்தின் நிறம் மாறினால்? ஒளிப்பதிவாளர் கோட்டை விட்ட கேட்ச் இது! ஹரிஷ், இவானா,நதியா – மூவரையும் குறை சொல்ல முடியாது. தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையையும் சுமக்கிறார். அது எந்த விதத்திலும் படத்திற்கு உதவவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

ஓரளவுக்கு சகித்துக் கொள்ளக்கூடிய கதைதான்.. ஆனால் எடுத்த விதத்தில் எல்லாம் விழலாகி விட்டது. சராசரிக்கும் கீழே படமாக்கப்பட்டதால் எதுவும் ஈர்க்கவில்லை. – இந்தியன் எக்ஸ்பிரஸ்.

தமிழர்கள் கொண்டாடும் தோனியும் சாக்ஷி தோனியும் தெரியாத களத்தில் ஆட வந்து விட்டார்களோ? இம்முறை முதல் முயற்சியே புதரை அடிக்கும் படமாக இருப்பது சோகம். கிரிக்கெட்டைத் தாண்டி தோனியை இந்த முயற்சியில் கொண்டாட முடியுமா தமிழர்களால்? – இந்தியா டுடே.

டி டி ரிட்டர்ன்ஸ்

குறைகள் இருந்தாலும், முதல் பாதியின் சொதப்பலை படத்தின் பின் பாதி சரி செய்து விடுகிறது. இதுவரை கைக்கெட்டாக் கனியாக இருந்த சுவாரஸ்யம் சந்தானத்திற்கு இதில் நெல்லிக்கனியாகி இருக்கிறது. ஒரு அமானுஷ்ய காமெடி படம் உரக்க சிரிக்க வைத்ததால் இதில் ஒன்றும் தப்பில்லை. சந்தானம் அதிக அலப்பறை இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது கூட நன்றாகத்தான் இருக்கிறது. – தமிழ் இந்து.

நல்ல நகைச்சுவை படங்களை ரசிப்பவர்களுக்கு இது மாப்பிள்ளை விருந்து. இயக்குனர் பிரேம் ஆனந்தை பாராட்டலாம். முதல் சில நிமிடங்களின் அலப்பறை இது எந்த மாதிரியான படம் என்று சொல்லி விடுகிறது. வெகு நாட்கள் கழித்து சந்தானத்தின் ஒற்றை வரி காமெடிகள் சரியான இடத்தில் பொருந்தி வெடிச் சிரிப்பாகின்றன. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.

டைமிங்கில் மிஸ் ஆகாத காமெடி கூட்டணி அமைந்து விட்டால் படம் விலா நோக வைக்கும். கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் என அனைவருக்கும் சரி சமமாக இடம் கொடுத்து செமை காமெடியை அரங்கற்றி இருக்கிறார் சந்தானம். கடைசி பகுதி கிச்சு கிச்சு தாம்பாளம். – சினிமா எக்ஸ்பிரஸ்.

#