
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
அன்பு மேகமே இங்கு ஓடி வா
மோகனப் புன்னகை ஊர்வலமே
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
வா பொன்மயிலே
பொன் எழில் பூத்தது புது வானில்
மணமகளே மணமகளே வா வா
ஒரு நாள் உன்னோடு ஒருநாள்
பூப்போல பூப்போல சிரிக்கும்
என்னை மறந்ததேன் தென்றலே
காதலின் தீபம் ஒன்று
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
யாவும் நீயப்பா உன் சரணம் அய்யப்பா
அன்னக்கிளி உன்னைத் தேடுதே
டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ
கேளு பாப்பா ஆசையின் கதையை
குயிலே கவிக்குயிலே
ஏ பாடல் ஒன்று
கண்டேன் எங்கும் பூமகள்
காலைப் பனியில் ஆடும்
பொதுவாக என் மனசு தங்கம்
விழியிலே மலர்ந்தது கொடியிலே படர்ந்தது
இதோ இதோ என் நெஞ்சிலே
இப்படிப் பல அற்புதப் பாடல்கள் தந்தவர் தான் கவிஞர் பஞ்சு அருணாச்சலம். கவியரசு கண்ணதாசன் அவர்களின் பெரியப்பாவின் மகன். கவிஞர், கதை வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பல முகங்கள் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம்.
ஆரம்பத்தில், கவிஞருக்கு உதவியாளராக இருந்தவர். 1960ல் வெளிவந்த நானும் மனிதன் தான், இவரின் முதல் படம். பின்னாட்களில், எஸ் பி முத்துராமன் இயக்கம், விஜயபாஸ்கர் இசை என நிறைய படங்களில் வசனம், பாடல்கள் எழுதினார். ஜெய்சங்கர் உடன் இணைந்து நிறைய கலகலப்பான படங்கள் தந்தார். அப்புறம், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், கமல், ரஜினி இருவரையும் வைத்து அதிகப் படங்கள் தந்தார்.
திரை உலகிற்கு, அன்னக்கிளி படம் மூலம், இளையராஜாவை அறிமுகப் படுத்தியவரும் இவர் தான்.
அதனால் தான் ஒருமுறை, வாலி அவர்கள் கூறினார் –
இந்தப் பஞ்சு தான்
இளையராஜா என்னும்
இசைத் தீயைப் பற்ற வைத்தது , என்று.
பின்னாட்களில, பூவெல்லாம் கேட்டுப்பார், என்ற படத்தின் மூலம், யுவன் சங்கர் ராஜாவையும் இவர் தான் அறிமுகம் செய்தார்.
குங்குமம் படத்தில் எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் தான். ஒரு முறை அவர் வர இயலாத போது, இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பாடல் அப்படி ஒரு ஹிட். நடிகர் திலகம் நடிப்பு, பாடும் தோரணை, டி எம் எஸ் – ஜானகி குரல்கள், திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இந்த்க் கூட்டணிக்கு , பஞ்சு அருணாச்சலம் பாடல். பட்டி தொட்டி எல்லாம் பரவியது. அற்புதமான பாடல் வரிகள் –
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை
எண்ணத்தை சொல்லுதம்மா – அது
இன்னிசையொடு தன்னை மறந்து
சொன்னதை சொல்லுதம்மா
மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி – அந்த
மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி
வாசல் ஒன்றிருக்கும்
ஆசைக் கொண்ட நெஞ்சம்தனில்
வழி இரண்டிருக்கும்
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி
அப்புறம் வந்த கலங்கரை விளக்கம் படத்தில் , பொன் எழில் பூத்தது புதுவானில் என்ற பாடல் அவர்க்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
தென்னை வனத்தினில்
உன்னை முகம் தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக்கை படப் பாடுகிறேன், என்பார். மேலும்,
*தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு* *வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு*
இதில் தென்னவன் என்பது தென் நாடு (பாண்டிய) மன்னனைக் குறிக்கிறது. சங்கத்தமிழ் தோன்றிய தென் தமிழக வரலாற்றை *செந்தமிழ் பண் கொண்டு… வந்தது பொன் வண்டு* என்று உருவகப் படுத்தி கூறுகிறார்.
இதே படத்தில் இன்னொரு பாடலும் எழுதினார் – என்னை மறந்ததேன் என்ற சுசிலா பாடும் அற்புதப் பாடல்.
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ –
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ – இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
என்ற வரிகள், கவிஞரின் எதிரொலியாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.
நானும் ஒரு பெண் படத்தில் வரும்,
பூப்போல பூப்போல
பிறக்கும்
பால் போல பால் போல
சிரிக்கும்
மான் போல மான் போல
துள்ளும்
தேன் போல
இதயத்தை அள்ளும், என்ற வரிகளும் இவருடையது தான்.
சாரதா படத்தில் இடம்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்
என்ற இந்தப் பாடல் தமிழ்நாட்டின் வீடுகளில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என்று எல்லா நிகழ்வுகளிலும் , இன்னும் ஒலிககிறது. 60 களில், வெளிவந்த இசைத்தட்டின் ஒரு புறம் இந்தப் பாடல் – மறுபுறம் பாசமலர் படத்தின் வாராயந்தோழி வாராயோ பாடல். அப்படி ஒரு மங்கலமான பெருமை இந்தப் பாடலுக்கு.
இந்தப் பாடல் கூட, எதிர்பாராமல், பஞ்சு அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு. சாரதா படம் முடிந்தபின், திடீர் என்று, ஒரு பாடல் இடையில் ஒரு காட்சியில் போடவேண்டும் என்று தீர்மானிக்க, அப்போது கவி அரசர் ஊரில் இல்லை. உடனே, இசை அமைப்பாளர் கே வி மகாதேவன் அவர்கள், பஞ்சு அவர்களைப் பார்த்து, நீயே எழுதி விடு என்று கூற, இவர் தயங்க, கண்ணதாசன் வந்தால் நான் சொல்லிக்கொள்கிறேன் என்றாராம. அப்போது வந்த பாடல் தான் இது. பலரும் இது, கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்து இருந்தார்கள்.
கவியரசரை விட்டு வந்த பிறகு, பின்னாட்களிலும், அவரின் பங்களிப்பு நன்றாகவே இருந்தது.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ – கண் வரைந்த ஒவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவை சொல்லுதம்மா
பூவிதழ் தேன் குலுங்க – சிந்து புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் – வாழ்ந்திருப்பேன் என்ற வரிகள், இனிய தாம்பத்தியத்தின் அழகைக் கூறுகிறது.
என்றும் பதினாறு – வயதும் பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு என்ற கன்னித்தாய் படப் பாடல், இளமைத் துள்ளல்.
இப்படிப் பல பாடல்கள், கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் அவர்க்கு கை கொடுத்தது. விரசம் இல்லாமல், இயற்கை அழகோடு, எளிமையான வார்த்தைகளோடு பல பாடல்கள் எழுதியவர் திரு பஞ்சு அருணாச்சலம் அவர்கள்,
ரஜினியின், ப்ரியா, தம்பிக்கு எந்த ஊரு, எங்கேயோ கேட்ட குரல், ஆறில் இருந்து அறுபதுவரை,வீரா, மற்றும், கமலுக்கு, கல்யாணராமன், உல்லாசப் பறவைகள், சிவாஜியை வைத்து, கவரிமான், அவன்தான் மனிதன் என்றெல்லாம் படங்கள் எடுத்து, பாக்ஸ் ஆபீஸ் பஞ்சு என்ற பெயர் பெற்றார்.
அவரைப் பற்றி, இப்படி ஒரு செய்தியும் திரை உலகில் உண்டு.
1973 களில், நடிகர் திலகம் நடித்த கௌரவம் படத்தின் பாட்டெழுத வந்து விடுவதாக கூறி சிங்கப்பூர் சென்ற கவிஞருக்கு சற்று உடல் நலம் குன்றியது. அவர் உடல் நிலையை சுட்டிக்காட்டி , இனிமேல் தாம்தான் எல்லாம் என்றாராம் பஞ்சுஅருணாச்சலம், திரை உலகினரிடம்.
மீண்டு வந்த கவிஞர், இதைக் கேள்விப்பட்டபோது, கவிஞருக்கு எழுந்த தாளாத வருத்தத்தில் *பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்துப் பார்த்த கிளி, நான் வளர்த்த பச்சைக் கிளி, .நாளை வரும் கச்சேரிக்கு* என்று எழுதினார்.
அதன் பின், பஞ்சு, பறந்து சென்று , கன்னடத்தில் வெற்றிக் கொடி நாட்டி இருந்த விஜயபாஸ்கர் என்ற இசை அமைப்பாளருடன் இணைந்து தித்திக்கும் பாடல்கள் தந்தார். அப்புறம், தானே புதிதாக அமைத்த , வேறு தோட்டத்திற்கு சென்று, கதை,பாடல், வசனம், திரைக்கதை, தயாரிப்பு என *அன்னக்கிளியாய்* உருமாறி தனித் தோப்பு அமைத்துக் கொண்டார். அத்தோடு அல்லாமல் MSV க்கு சென்ற நீரை மடை மாற்றி,இளையராஜா என்னும் தோப்புக்கு மொத்த வழியையும் திருப்பிக் கொடுத்தார், என்றும் கூறுவார்கள்.
எது எப்படியோ, கவிஞர் பஞ்சு அருணாச்சலம் அவர்களின பாடல்கள், காதில் கேட்டால், பஞ்சு போல் பறந்துவிடாமல், நெஞ்சில் நிறைந்த ஒன்றாய் இருக்கும் அழகு, அவரின் கவிநயப் பெருமையைக் கூறும்.
