சில ஆண்டுகளின் முன்பு, எனது பணிக்காலம்….. எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஒரு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்புடையவராகையால் அவர் பெயரில் ஒரு விரிவுரை ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும். அறிவியலின் ஒரு துறையில் சாதனைபடைத்த ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியை அழைத்து, விரிவுரை நிகழ்த்தச் சொல்லி, அவரை கௌரவிப்பது வழக்கம். பின்பு ஒரு தேநீர் விருந்தும் உண்டு. நகரில் உள்ள எவரும் இந்நிகழ்ச்சிக்கு வரலாம். ஆகவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் ஒரு நிறுவனத்திடம் இதன் முழுப்பொறுப்பும் ஒப்படைக்கப்படும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி அன்று……
நானும் எனது நண்பருமான சக பெண் விஞ்ஞானி ஒருவரும் உரையாடிக்கொண்டே விரிவுரை நடக்கும் ஹாலில் நிழைகிறோம். கோட்டும் சூட்டும் அணிந்து நின்ற ஒரு வரவேற்பாளர் ( Usherer – வெளி நிறுவனத்தைச் சார்ந்தவர்) மிகப் பணிவான எங்களை வரவேற்றார். “டாக்டர், நீங்கள் இவ்வழியே சென்று அந்த மூன்றாம் வரிசையில் அமரலாமே,” என்று ஆங்கிலத்தில் என் தோழியிடம் கூறியவர் என்னை நோக்கி, ‘அம்மா, நீங்களும் அருகிலேயே அமரலாம்,” எனப் பணிவாக, ஆனால் கன்னடத்தில் கூறினார். இங்கு ஒரு சிறு விளக்கம் தேவை. எனது பெண் நண்பர் அன்று கால்சராயும் மேலைநாட்டு முறைப்படியான ஷர்ட்டும் அணிந்திருக்க, நானோ என் வழக்கமான கஞ்சிபோட்ட காட்டன் புடைவையில் இருந்தேன். வரவேற்பாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. படித்துப் பெரிய பட்டங்கள் பெற்றிருந்தால் ஒருவர், அதுவும் பெண்கள், மேனாட்டு முறைப்படி உடை அணிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதிமுறை. புடைவை எல்லாம் ஆங்கில அறிவற்ற, வீட்டுப் பெண்மணிகளுக்கே என்ற கருத்து சமுதாயத்தில் நிலவுகின்றது. இது வருந்தத்தக்கதாகும்.
புடைவை என்பது நமது பாரம்பரிய உடை. நான் அதனை அணிவதில் எப்போதுமே பெருமிதம் அடைகிறேன். “சின்னச் சின்ன இழை பின்னிப்பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி,” என்ற பாடலுக்கேற்ப பல ரகமான கைத்தறிப் புடைவைகளை வாங்கி உடுத்திக் கொள்வதே எனக்கு மகிழ்ச்சி. அதற்காக மற்ற உடைகளை நான் மட்டம் தட்டவில்லை. எனக்குப் பிடித்ததை நான் அணிந்தேன். அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் இருந்த நாட்களில் பாலியெஸ்டர் புடைவைகளை – அவற்றைப் பராமரிப்பது சுலபம் எனும் காரணத்தால் – அணிவது வழக்கம். அங்கும் சக பணியாளர்களின் வியப்பும் பாராட்டும் மனநிறைவைத் தரும். இந்தியா திரும்பியதும் இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மாதிரி காட்டன் புடைவைகளுக்குக் கட்சி மாறினேன்.
இப்படி இருக்க, இங்கோ படித்த பெண்மணிகளுக்கு, அதுவும் வெளிநாட்டில் படித்து, பணிபுரிந்து திரும்பிய மகளிர் அந்நாட்டு உடைகளைத் தொடர்ந்து அணிவதே லட்சணம் எனும் கருத்து இங்கு நிலவியதை நான் அறிந்து கொள்ளச் சில ஆண்டுகளாயின.
ஏன், நமது வீட்டு உறவினர்களுக்கே இதில் அபிப்பிராயங்கள் வேறுபடுகின்றன. உறவினப்பெண் ஒருத்தி அவளும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள். எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் என் கணவரிடம் மட்டுமே தன் ஆராய்ச்சி பற்றிய விவாதத்தில் ஈடுபடுவாள். நாம் சமையலறையிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டிருந்ததால்தான் என்னிடம் விவாதிப்பதில்லை என நானாக எண்ணிக்கொண்டிருந்தேன். மேலும் நான் புடைவை கட்டும் ஆன்ட்டி தானே! ஒருநாள் என்னுடன் நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்தாள். என் கணவர் காலை ஏழரை மணிக்கெல்லாம் சென்று விடுவார்.
நான் அந்தப் பெண்ணை என் காரில் ஏற்றிக்கொண்டு நானே ஓட்டிக்கொண்டு சென்றேன். “ஓ ஆன்ட்டி, உங்களுக்குக் கார் ஓட்டவும் தெரியுமா?” என வியந்தாள்! “நீ என்னுடைய ஆராய்ச்சி செமினாருக்கு வருகிறாயா? பத்தரை மணிக்குத் தொடங்கும்,” என்றபோது அகல விரிந்த கண்களால், “ஆன்ட்டி, நீங்கள் ஒரு பி.எச்.டி.யா? நான் நினைக்கவேயில்லை! எனக்கு இத்தனைநாள் தெரியாதே!” என்றாளே பார்க்க வேண்டும். எனக்கு அழுவதா, சிரிப்பதா, கோபப்படுவதா எனப் புரியவில்லை. இதைத் தெரிந்து கொள்ளாதது யார் தவறு? “உன்னுடைய அங்க்கிள் பெரிய தலைமை விஞ்ஞானி, எனப் பரிச்சயப்படுத்தினவர்கள் ஆன்ட்டியைப்பற்றி ஏன் கூறவில்லை? ஆன்ட்டி பண்ணும் சாம்பார் உலகப்பிரசித்தம் என்றார்களே! ஆப்பிள் பை இவளுக்காக எத்தனைமுறை செய்திருக்கிறேன்!! என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன். இதுவும் ஒரு புதிய பாடம்.
இதன்பின்பு நான் பலமுறை இத்தகைய கருத்தாளர்களை சந்தித்திருக்கிறேன். வருத்தப்பட்டிருக்கிறேன்.
ஒன்றை மட்டும் கூறியே ஆக வேண்டும். இக்கருத்து உலகம் முழுவதுமே இருக்கிறது என்று உணர்ந்துகொண்ட போது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன். ஒருமுறை (உலகின் தேவலோகமாக இளைய தலைமுறையால் கருதப்படும்) செல்வ அமெரிக்காவில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு விமானத்தில் செல்ல முடிவெடுத்தோம். வழக்கம்போல நான் புடைவையில்! விமானத்தில் ஏறும்போது பயணச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் பெண்மணி என்னிடம் கடகடவென என்னவோ சொன்னாள். அவள் சொன்னதென்னவோ நான் உட்காரும் வரிசை எமர்ஜென்சி வெளியேறும் வழி என்றும் அதற்கான விதிமுறைகளையும் கூறினாள். படபடவெனக் கூறியதால், அவளுடைய பேச்சு பாதி புரிந்தும் புரியாமலுமிருந்தது. நான் அவளை ஏறெடுத்து கேள்விக்குறியோடு நோக்கினேன். அவளுக்கு அவள் அவசரம், இருப்பினும் குத்தலுக்குக் குறைச்சலில்லை. என் முன்னால் நின்றிருந்த என் மகனிடம், “இவளுக்கு ஆங்கிலம் புரியவில்லை போலுள்ளது, நீங்கள் விளக்குகிறீர்களா?” எனக் கேட்டாள். நான் உடனே ஆங்கிலத்தில், வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட அமெரிக்கன் உச்சரிப்பில், “ஆங்கிலம் புரியும் அம்மா, நீங்கள் விரைவாகப் பேசியதுதான் புரியவில்லை,” என்றேன். ஒரு மன்னிப்பாவது கேட்டாளா, இல்லையே! இதுதான் உலகம் மானிடர்களே!
சுஜாதா அவர்கள் எழுதிய ஒரு சிறுகதைதான் நினைவுக்கு வந்தது. குடுமி வைத்துக்கொண்டிருந்ததனால் விசா மறுக்கப்பட்ட ஒரு ஜீனியஸான இந்திய விஞ்ஞானி சில ஆண்டுகளின் பின்பு உலகையே பிரமிக்கச் செய்யும் அறிவியல் விளக்கங்களைக் கொடுத்து அனைத்துலக விஞ்ஞானிகளையும் (இப்போது அவர்களுள் சிலரும் ஃபாஷனுக்காகக் குடுமி வைத்திருக்கிறார்கள்! தலைமயிரை போனிடெய்ல் போட்டிருக்கிறார்கள்) மூக்கில் விரலை வைக்க வைக்கிறார்!. அவருக்கே உரித்தான நையாண்டியும் யதார்த்தமும் கலந்த நடையில் கதையை எழுதியிருப்பார் சுஜாதா.
இவையெல்லாம் ஏன்? இன்ஃபோஸிஸ் ஃபவுண்டேஷனின் முதன்மையாளரான திருமதி சுதா மூர்த்தி அவர்களே இதைப்போன்ற தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். எளிமையாக உடை அணிந்து விமானத்தின் உயர்வகுப்பில் பயணிக்கும் வரிசையில் நின்றிருந்தபோது ஒரு இந்திய இளம்பெண் அவரிடம், இது உயர்வகுப்புக்கான வரிசை: அடுத்த வகுப்பு வரிசை வேறு.” எனக்கூறியதாகவும் பின் விமானத்தில் ஏறியபின் அவர் யாரென்று அறிந்துகொண்டதும் மன்னிப்பு வேண்டியதாகவும் பதிவிட்டிருந்தார்.
ஆக மொத்தம் கற்றுக்கொண்டது இன்னுமொரு புதுப்பாடம்!! இந்நிலை மாறப்போவதில்லை என என்மனம் அடித்துக் கூறுகிறது.
நித்தநித்தம் மாறுகின்றதெத்தனையோ!
(பாடங்கள் தொடரும்)
