புது வேலைக்காரி'

           எப்பொழுதும் போல சரிதா புயல் போல் வேகமாக உள்ளே வந்தாள்.      

           “அக்கா! மொதல்ல பாத்திரம் கழுவவா, இல்ல வீடு கூட்டி மெழுகவா?”

           தமயந்தி அலுவலகத்திற்குக் கிளம்பும் அவசரத்தில் இருப்பதால், சரிதா அவளைக் கேட்டுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிப்பாள்.

           “மொதல்ல வீடு பெருக்கிடு சரிதா!  அதுக்குள்ள மீதி பாத்திரம் நான் ஒழிச்சுப் போட்டுடறேன்!” என்றாள் தமயந்தி.  அவள் பாத்திரம் தேய்த்து முடிப்பதற்குள் தமயந்தியும் அவள் கணவனும் அலுவலகத்திற்கு ரெடியாகி விடுவார்கள்.  சரிதாவை அனுப்பி விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு இறங்க வேண்டியது தான்.  நேரம் சரியாக இருக்கும்.

           ஹாலில் உட்கார்ந்து டீவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ், “அடச்சே! டீவி போட்டதிலிருந்து ஒரே  தற்கொலை ந்யூஸ் தான் வர்றது.”  என்றான்.

           “நீங்க தானே சொல்லுவீங்க! இந்த தற்கொலை செய்திகளுக்கே ஒரு தனி சேனல் ஆரம்பிக்கலாம்னு!” என்றாள் தமயந்தி டைனிங் டேபிளில் இருவருக்கும் தட்டில் இட்லி எடுத்து வைத்துக் கொண்டே.

           வீட்டைப் பெருக்கிக் கொண்டே டீவியைப் பார்த்த சரிதா திகைத்துப் போனாள்.

           “என்னக்கா இது? புருஷன் திட்டிட்டான்னு ரெண்டு குழந்தைங்களையும் கெணத்தில வீசிட்டு இந்தப் பெண்ணும் குதிச்சு தற்கொலை பண்ணிக்கிச்சுன்னு சொல்றாங்க!” என்றாள்.

           “அந்த கூத்தை ஏன் கேக்குற?  சரியா பரீட்சை எழுதலைன்னா தற்கொலை, டீச்சர் சரியா படிக்கலேன்னு திட்டினா தற்கொலை,  புருஷன் திட்டினா தற்கொலை, புருஷன் குடிச்சிட்டு வந்து சண்டை போட்டா தற்கொலை.  இவ்வளவு ஏன்?  மொதல் கல்யாண நாளுக்கு புருஷன் லீவு போட்டுட்டு தன்னை சினிமாவுக்கு அழைச்சிக்கிட்டுப் போகலேன்னு தற்கொலை. அந்தப் பொண்ணு ஏழு மாசம் கர்ப்பமா வேற இருந்ததாம்.  இதையெல்லாம் பார்த்தா யாருக்கும் வாழறதுக்கே விருப்பம் இல்லைன்னு தோணுது.” என்றவாறே சாப்பிட அமர்ந்தாள் தமயந்தி.

           சரிதாவுக்கு மனசே ஆறவிலை.

           “ஏங்க்கா! கடவுள் நம்பளை இந்த பூமியில வாழறதுக்கு தானே படைச்சு விட்டிருக்காரு.  குழந்தைங்களை கொன்னு போட்டாளே?  அந்த பொம்பளை வௌங்குவாளா? “

           “அதான் அவளும் அதே கிணத்தில குதிச்சு செத்துட்டாளே?”

           “இதென்னக்கா கோராமையா இருக்கு?  எல்லாரும் தற்கொலை பண்ணிக்கிட்டு வூடே காலியானா அந்த புருஷங்காரன் தான் என்ன செய்வான்?  அவனும் மனுஷந்தானே?” ஏதேதோ பொலம்பிக்கொண்டே சரிதா வேலையை முடித்து விட்டு கிளம்பியவள், திடீரென்று நினைவு வர,

           “அக்கா! நாளைக்குக் காலையில நா வரமாட்டேன்!  சாயந்திரம் நீங்க ஆபீசிலிருந்து வந்ததும் வந்து வேலை செஞ்சிட்டுப் போறேன்!” என்றாள்

           “நாளைக்கு என்ன விசேஷம்?”

           “நாளைக்கு எங்க கல்யாண நாளுக்கா.  திருநீர்மலை கோயில்ல எங்களுக்குக் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னேன் இல்ல? அந்தக் கோயிலுக்குப் போகணுங்க்கா”  என்றாள் சரிதா.

           “சந்தோஷமா போயிட்டு வா!  இந்தா! இதை செலவுக்கு வச்சிக்கோ!” சட்டென்று ஹேண்ட்பாகிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்டினாள் தமயந்தி.

           மகிழ்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு சரிதா கிளம்பினாள்.

           சரிதா தமயந்தி வீட்டில் நாலு வருஷங்களுக்கு முன் வேலைக்கு வந்தபோது அவள் பெயரே தமயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. 

           “சூப்பரா சினிமா நடிகை பெயர் வச்சிருக்காங்க ஒனக்கு?” என்றாள் வியப்புடன்.

           சரிதா வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே, “எங்கம்மாவுக்கு நடிகை சரிதான்னா ரொம்ப இஷ்டம்.  என்னை மாசமா இருக்க சொல சரிதா நடிச்ச படம் பார்க்கப் போனாங்களாம்.  அங்கேயே வலி எடுத்துக்கிச்சாம்.  நேரே கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரி போயி நா பொறந்தேனாம்.  அதான் எனக்கு சரிதான்னே பேர் வச்சிட்டாங்க!” என்றாள்.

           அடுத்த நாள் மாலை தமயந்தி அலுவலகத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு வந்தபோது  சரிதா வாசற்படியிலேயே உட்கார்ந்திருந்தாள்.  தமயந்தியைக் கண்டதும் பரபரப்பாக எழுந்து அவள் கையிலிருந்து சாவியை வாங்கி வீட்டைத் திறந்தாள்.

           “இரு! நீ மூஞ்சி கழுவி வௌக்கேத்தறதுக்கு முன்னால மொதல்ல வூட்டைக் கூட்டிடறேன்.” என்றாள்.

           தமயந்தி உடை மாற்றி முகம் கழுவி சுவாமி விளக்கேற்றி நமஸ்கரித்து விட்டு தனக்கும் சரிதாவுக்கும் டீ தயாரித்து எடுத்து வந்தாள்.

           “என்னடீ? காலையில் உன் புருஷனும் வந்தாரா கோவிலுக்கு?” என்று பேச்சு கொடுத்தாள் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த சரிதாவிடம்.

           “ஆமாங்க்கா! ஏதோ இன்னிக்குக் காலையில கொஞ்சம் தெளிவா இருந்துச்சு. அதான் ஒண்ணும் சொல்லாம கூட வந்திச்சு!” என்றவள், “குடிக்காம இருந்திச்சின்னா அது நல்ல மனுஷன் தாங்க்கா!” என்றாள்.

           சரிதா புருஷன் வேலு ஒரு குடிகாரன்.  தினமும் வேலையிலிருந்து வந்ததும் குடித்தே ஆக வேண்டும். அவள் மாமனாரும் பெரிய குடிகாரராம். குடித்துக் குடித்து உடல்  நலம் குன்றி அல்பாயுசில போய் விட்டாராம்.  வேலு ஒண்ணும் அல்லோ அசலோ இல்லை.  சொந்த அத்தை பையன்தான். இருவரும் இஷ்டப்பட்டு தான் கல்யாணம் நடந்தது.  ஆனால் அப்போது வேலுவுக்குக் குடிப்பழக்கம் இருக்கவில்லை.  சரிதாவின் புருஷன் வேலுவிற்கு ஒரே ஒரு அக்கா.  அவள் நன்றாகப் படித்து  தன் கூடப் படித்த ஒரு பையனை விரும்பிக் கள்யாணம் செய்து கொண்டாள். மாமாவுக்கு ரயில்வேயில் நல்ல உத்யோகம்.  சொந்த வீடு.  நல்ல வாழ்க்கை.  அதனால் வேலுவையும் சரிதாவையும் பார்த்தாலே ஏளனமாம் அவர்களுக்கு.  சரிதா வேலுவை திருத்தவில்லை என்று அவ்வப்போது குற்றம் சொல்வார்களாம்.

           “தோ பாரு!  இவன் தான் உனக்குத் துணைன்னு ஆயிப் போச்சு. ஏதோ வீட்டு செலவுக்குக் காசு குடுத்துட்டுக் குடிக்கிறானா, அத்தோடு இத்தை விட்டுடணும். கட்டின புருஷன் சரியா இருந்தான்னா அவன் நம்மைப் பார்த்துக்குவான்.  புருஷன் சரியா இல்லேனா நாம தான் அவனையும் சேர்த்து கடைசி முச்சூடும் பார்த்துக்கணும்.” என்று அத்தை அடிக்கடி சொல்வாளாம்.

           அவள் தான் சரிதாவைத் தூண்டி வீட்டு வேலைக்குப் போகச் சொன்னாள்.

           “ஓன் கையில ரெண்டு காசு கிடச்சா நல்லது தானே?  நான் சும்மா தானே இருக்கேன்? நா வூட்டைப் பார்த்துக்கிறேன்.  நீ நாலு வூடு போய் வேலை சேஞ்சு பழகிக்கோ!” என்று அனுப்பி வைத்தாள். இப்போது அவளும் போய்ச் சேர்ந்து விட்டாள்.

           கணவனுடைய குடிப்பழக்கத்தையும் அவன் அன்றாடம் செய்யும் அமர்க்களங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு சரிதாவுக்கு வேலுவின் மேல் காதலும் அன்பும் இருந்தது. கல்யாணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. வேலு அதை பெரிதாக நினைக்கவில்லை.  சரிதா தான் கொஞ்ச நாள் ஏக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள்.  இப்போ அவளும் சமாதானமாகி விட்டது போலத் தோன்றியது.

           “சாமி கிட்ட என்னடீ வேண்டிக்கிட்ட?  வழக்கம் போல  என் புருஷன் குடியை விடணும்,  திருந்தணும்னா?” என்றாள் தமயந்தி சிரித்துக் கொண்டே.

           “இல்லேக்கா.  இதுவரைக்கும் நா யாரு கிட்டவும் சொன்னதில்ல. ஒன் கிட்ட தான்  சொல்றேன்!” என்று பீடிகை போட்டாள் சரிதா.

           என்ன என்பது போல அவளை ஏறிட்டாள் தமயந்தி.

           “இந்த மனுஷனை கடைசி மூச்சு உள்ளவரை நானே காப்பாத்தி கரை சேக்கணும்னு வேண்டிக்கிட்டேங்க்கா.”

           தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கும் கணவனுக்காக யாராவது இப்படி வேண்டிப்பாங்களா என்று தமயந்தி அதிசயித்து போய் நிற்க, சரிதாவே தொடர்ந்தாள்.

           “ஆமாங்க்கா!  நான் முன்னால் போயிட்டேன்னு வைய்யி, இத்தை யாரு காப்பாத்துவாங்க?  அத்தோட இது அக்கா வீட்டில போய் நின்னு மாமாகிட்ட அசிங்கப்படும்னு நெனச்சாலே எனக்குக் கஷ்டமாயிடுதுக்கா.  அதான் நானே இதை கரை சேர்த்துடணும்னு வேண்டிக்கிட்டேன்.”  சரிதா சீரியஸான முகபாவத்தோடு தீர்மானமாக பேசினாள்.            ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் சரிதா போல அக்கறையோடும் விவேகத்தோடும் சிந்திக்கும் வெளிச்சத்துக்கு வராத பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?’   மனதில் சிந்தனை ஓட,    தமயந்தி வாயடைத்துப்  போய் அப்படியே நின்று விட்டாள்.