நீண்ட ஆயுள்

Glowing Green DNA Longevity

“இன்றைக்கு என் பிறந்த நாள்” என்று சொன்ன அல்லிராணியிடம், “நூறாண்டு காலம் வாழ்க” என்று பாடி வாழ்த்தினாள் அங்கயற்கண்ணி மாமி. அல்லிராணி, ”என்ன மாமி, அவ்வளவு தானா?” என்றாள் பொய்க்கோபத்துடன். மாமி சொன்னாள். “நூறு வயசு போராதாடி? நோய் நொடியில்லாம நூறு வயசு வாழக் கொடுத்து வச்சிருக்கணுமே” என்றாள். அல்லி, “மாமி, காலம் மாறிக்கொண்டு வருகிறது. விரைவில், நூறு வயதைத் தாண்டி மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ இயலும். அதற்கான ஆராய்ச்சி நடந்து, அது வெற்றியுமடைந்துள்ளது” என்றாள். மாமி, உடனே ”சொல்.. சொல் ..” என்றாள்.

“மாமி, ஹயால் யூரானிக் அமிலம் (hyaluronic acid (HMW-HA)) என்பது ஒரு ரசாயனம். அது அடங்கிய சில மரபணுக்கள் (gene), வாழ்நாளை நீட்டிக்கிறாதம். நோய்நொடிகள் வருவதைத் தவிர்க்கிறதாம். எலிகளில் அது வெற்றிகரமாக நிருபணமாகிவிட்டதாம். இது மனிதர்களுக்கும் ஒரு நாள் வெற்றிகரமாக நடக்க வாய்ப்புகள் உள்ளதாம். துன்னெலி, அதாவது naked mole rat. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் எலி வகை. இதற்கு, ஆண்டவன் அபூர்வ சக்திகளைக் கொடுத்திருக்கிறான்: வலிகளைத் தாங்கும் சக்தி; புற்று நோய் வராது காக்கும் சக்தி; குறைந்த அளவு பிராணவாயு இருந்தாலும், துவளாது வாழும் சக்தி; பிராண வாயுவே இல்லாத நிலையிலும், பதினெட்டு நிமிடம் வரை ஒரு பாதிப்பும் ஏற்படாத சக்தி. மேலும் 37 வருடம் உயிர்வாழும்!”. என்ற அல்லியை இடைமறித்த மாமி,”போதும் இந்த எலி புராணம். அது என்னவோ, பிரம்மா கிட்ட வரம் வாங்கி வந்த எலி வகை போல” என்றாள்.

அல்லி சிரித்துக்கொண்டே, “மாமி.. இந்த துன்னெலியின் மரபணுவை, சாதாரண எலிக்குள் சேர்த்து அதையும் ‘சிரஞ்சீவி’யாக்குவது தான் இந்த ஆராய்ச்சி” என்றாள் அல்லி. மாமி, ”நீ சொல்றது நல்லாத்தான் இருக்கு. நீண்ட ஆரோக்கியமான ஆயுள்! ஆனா, விபத்தினால் உயிர் விட நேர்ந்தால், அப்ப என்ன செய்ய?” என்று கேட்டாள் மாமி. “பிறப்பே ஒரு விபத்து தானே மாமி” என்றாள் அல்லி தத்துவமாக!

https://scitechdaily.com/new-breakthrough-paves-the-way-for-extending-human-lifespan-scientists-successfully-transfer-longevity-gene/?expand_article=1#google_vignette