
மலர் ஊனி ஊனி அம்மாவின் தோள்மீது சாய்ந்து கொண்டு வருவதை எங்களுடைய ஒ. பீ. டீ யின் திறந்த அமைப்பால் பார்க்க முடிந்தது. என்னுடைய அறையை அடைய சுமார் முப்பது அடிகள். எதற்கு இந்த விஷயத்தைச் சொல்கிறேன் என்றால், மலர் வருவதற்குள், அங்குக் காத்திருந்த அனைவருமே ச்சுசு என்று பாவப்பட்ட சத்தம் கேட்டது. மலரின் நடை மேலும் வளைந்தது.
பள்ளிக்கூடத்திலிருந்து வரும் வழியில் மலர் இருசக்கர வண்டியுடன் மோதி கீழே விழுந்தாள். அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தபின் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகளில் ஏதும் அபாயமோ உறுப்புகளுக்குப் பெரிய சேதமோ இல்லை என்று அவளை வீட்டிற்குக் கொண்டுவிட்டார்கள். மலர் பயந்திருந்ததால் என்னைப் பார்க்க மருத்துவர் கூறியதாகத் தெரிவித்தார்கள்.
எங்கள் டிபார்ட்மெண்ட் கொள்கையே உடல், மனம், சமூக நலன் என மூன்றின் மீதும் கவனம் செலுத்துவது. பங்கேற்கும் நிபுணர்கள் எல்லோரின் அணுகுமுறையும் ஒருங்கிணைந்திருக்கும். மலருக்கு நலனுக்கு உடல் அளவில் மருத்துவர், நடக்கும் பாணி சரி செய்வதற்கு இயன் மருத்துவர் (physiotherapist), மன மற்றும் சமூக நலனுக்கு நான் என்று மூவரின் கூட்டணி!
விபத்து நடந்ததிலிருந்து மலர் தலை சுற்றுவது போலும் பதபதப்பு உணர்ந்ததாகவும் கூறினாள். அம்மா வேணி அவளுக்குப் பூர்ணமாகச் சரியாகவில்லை என்றாள்.
என்னுடைய ஸெஷன்களும் இயன் மருத்துவர் உடற் பயிற்சியும் துவங்கியது. குறிப்பாக மலர் போல் மனக்களைப்பை உடல் உபாதை எனக் கருதுவோருக்கு இது உதவும். பயப்படுகிறோம் என்று புரிய, நம் உடலின் அசைவுகளை அறிந்தால் ஓரளவிற்கு நமக்கு அழுத்தம் தரும் உணர்வுகளை அடையாளம் காண உதவும்.
வேணி மகளால் சரியாக நடக்க முடியுமா என்று தவித்தார். தன்னால் கூடியவரை ஒத்துழைப்பைத் தந்தாள். இவர்களையும் பல ஸெஷனில் பார்த்தேன்.
கூட்டுக் குடும்பத்தில் உள்ளதால் எப்போதும் அவர்களிடம் ஒரு பரபரப்பு இருக்கும். அவசரமாக முடிக்கப் பார்ப்பாள் வேணி. மலர் இதுபோல் இருப்பது வேதனை தருவதாகக் கூறினாள். வீட்டில் வேணியையே சிகிச்சைக்குப் பொறுப்பேற்க வைத்தார்கள். அவளோ தவித்தாள். மலருக்கு நேர்ந்ததை வேணி முழுமையாக அறியவில்லை எனப் புரிந்து கொண்டேன். தவறான புரிதலால் முடிவுகளும் தவறாக இருக்கக் கூடும். ஸெஷன்களில் இதை மையமாக வைத்தோம்.
மலரிடம் நடந்த விபத்தை விலாவாரியாக வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். விழுந்த வரையில் எந்த பாதிப்பும் இல்லாமல் கோர்வையாகப் பேசினாள். அடுத்த நிமிடம் காலைப் பிடித்துக்கொண்டு வலி என விம்மினாள்.
மேற்கொண்டு விபத்தை விட்டுவிட்டு இப்போது நேர்கிற உணர்விற்கு அவளுடைய கவனத்தை இழுத்தேன். சில மணித்துளிகள் கண்ணீர் கொட்டியது. சமாதானம் ஆக ஆக, அதை மையமாக வைத்து மேலும் பகிர ஊக்குவித்தேன்.
கொஞ்சம் மாறாக, மலர் இதுவரை உடலில் கண்ட உபாதைகளை விவரிக்கச் சொன்னேன். ஒவ்வொரு சூழலையும் கதைபோலச் சொன்னாள். வெவ்வேறு சூழலில் நடந்ததை விவரித்தாள். வீட்டில் ஆரம்பித்தது, அதிலிருந்து பள்ளிக்கூடம் தோழிகள் என விஸ்தாரமாக்கச் செய்தேன். பயம், பீதி, வெறுப்பு, ஆசை, பச்சாதாபம் எனக் குவிந்தது.
இவற்றை மலர் அடையாளம் காண்பதற்காகவே, அந்த சூழல்களில் தோன்றிய பல்வேறு உணர்வுகளைக் குறித்துப் பேசச் சொன்னேன். பல வர்ணனைகளுக்குப் பின்பே, தன் உடலும் இந்த உணர்வுகளும் எப்படி ஒன்றுபட்டுச் செயல்பட்டதெனக் கவனிக்க ஆரம்பித்தாள்.
விளைவு? மறுபடியும் கால்வலி இருப்பதைக் கூறவில்லை. அன்றைய தினம் ஸெஷன் முடிந்து செல்லும் போது மலர் நன்றாக நடப்பதைப் பார்த்த வேணி ஆச்சரியச் செய்கையைக் காட்டியதும் மலரின் நடை மாறியது.
மாற்றத்தை எங்கள் மருத்துவக் குழுவுடன் பகிர்ந்து மேற்கொண்டு அணுகுவதின் வழியை அமைத்தோம்.
அடுத்து இயன் மருத்துவருடன் பயிற்சி முடிந்த பின்னர் மலர் வந்தாள். அவரும் அவளுடன் வந்தார். தன் கணிப்பை வேணியின் முன்னால் வைத்ததாகவும் அதையே என்னிடமும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.
வந்தபோது நடப்பதே கடினம் என இருந்தவளால் இப்போது தானாக நடக்க முடிகிறது. மேலும் நடக்கும் போது வளையாததும் குணமாகும் நிலைமையைக் காட்டுகின்றது என விளக்கம் அளித்தார். இந்த அளவிற்கு முன்னேறியதால், அதிகபட்சம் தன்னுடன் மூன்று செஷன் தேவை என்றார். மலரைப் பாராட்டிச் சென்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த மலரின் முகத்தில் மகிழ்ச்சி காணவில்லை. வேணி விழித்தாள். ஏதோ புதையல் இருப்பதாகத் தெரிந்தது. தாய் மகளை தனித்தனியாகப் பார்த்தேன்.
வேணியிடம் வீட்டுக் கலாச்சாரம் பற்றிக் கேட்க, அவர்கள் வீட்டின் கோட்பாடுகளை, கட்டுப்பாடு பலவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இவர்களின் பாட்டனார், கிராமத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டினார். இதனால் ஊரில் பலர் வீட்டிற்கு வருவது போவதும் உண்டு. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக யாரையும் தொட்டுப் பேசக் கூடாது என்பது கடைப்பிடிக்கப் பட்டது. ஒருவேளை யாருக்காவது உதவி தேவையெனில் தாயி இருந்தாள். அவளுக்குத் தோட்டக்கார முருகன் கைகொடுப்பார்.
சொல்லப்படாத பல விதிமுறைகள் அமைந்திருந்தன. குறிப்பாக, ஆண் பெண் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என. எக்காரணத்திலும் கடைப்பிடிக்க வலியுறுத்த, வேணி பிள்ளைகளிடம் அப்படித் தொட்டு விட்டால், கை கால் உடைந்து போகும் என்று சொல்வாள்.
மலர் ஸெஷனில் பகிர்ந்தாள், வண்டி இடித்து விழுந்ததில் எழுந்து கொள்ள அங்கிருந்த ஏதோவொரு ஆண் கைதாங்கலாகப் பிடித்தார். அவசரச் சிகிச்சைக்கு அழைத்துப் போகும் போதும். மருத்துவமனையில் கட்டுப் போட்டதும் ஆண் செவிலியர்களே.
வர்ணிக்கும் போது மலரின் கைகள் நடுக்கம் கண்டன. வாய் உலர்ந்து போக, பலமுறை தண்ணீர் பருகினாள். உணர்வு பற்றிய உரையாடலை நினைவு கூறினேன். எந்த நினைவு, எண்ணம் வருகிறதோ அதைப் பற்றிப் பேச ஊக்குவித்தேன். அவளிடமிருந்து சந்தித்ததோ தயக்கம்.
மாணவியாக இருந்ததால் இதற்கான யுக்தியைக் கடைப்பிடித்தோம். எங்களுடைய ஸெஷன்களின் போது, நானும் இயன் மருத்துவரும்
மலரின் உடலில் நேரும் நிலைகளும், அதனால் உடலில் சுரக்கும் ரசாயனப் பொருட்களைப் பற்றியும் விளக்கி வந்தோம். மலருக்கு நேர்ந்ததைப் பற்றிக் குறிப்பாக இல்லாமல் சற்றுப் பொதுவாகவே சொன்னோம். இதை வேணியுடனும் செய்தோம்.
பல ஸெஷன்களுக்குப் பிறகு தயங்கித் தயங்கி ஆரம்பித்தாள் மலர். விபத்து நேர்ந்ததிலிருந்து இருவிதமான பயங்கள் பற்றிக் கொண்டதாகச் சொன்னாள். ஒன்று, விபத்தன்று அந்த நபர் தன்னைக் கைதாங்கலாகப் பிடித்ததனால்தான் நடக்க முடியாமல் போனதோ என. மற்றொன்று, அம்மாவிடம் இதைப் பகிர்வதற்கு.
இரண்டையும் எடுத்துக் கொண்டோம். இதுவரை பயிற்சி பெற்ற அனைத்தையும் வரிசைப்படுத்திச் சொல்லச் சொன்னேன். அவைகளால் எந்த எந்த மாற்றங்களைக் கவனித்தாள் என்பதையும் அதில் சேர்க்கச் சொன்னேன். அவற்றுடன் நாங்கள் கொடுத்துள்ள விளக்கத்தையும் விவரிக்க வைத்தேன். செய்து வந்தாள் மலர்.
இப்போது, ரோல் ப்ளே உபயோகித்து விபத்தின்போது யாவையும் எவ்வாறு செய்தாள் என்று செய்து காட்டச் சொன்னேன். உட்கார்ந்தபடி அசைவுகளைக் காட்ட முயன்றாள். நடந்தபடி காட்டி விளக்கம் அளிப்பதை உற்சாகமாக ஆரம்பித்துச் செய்தாள்.
மிகக் கூர்மையாகக் கவனித்து, அவள் செய்து காட்டி, முன்பைவிட நடந்ததையும், கூடிய உணர்வுகளையும் புரிந்து கொள்வதில் தன் முன்னேற்றத்தை விளக்கினாள். மலர் சொன்ன ஒவ்வொரு முன்னேற்றத்தையும் மீண்டும் சொல்லி, புரிந்தது சரிதானா எனக் கேட்டுக் கொண்டேன், அவள் அதை உள்வாங்கிக் கொள்வதற்கு (processing) உதவ. அன்றைக்கு அத்துடன் முடித்துக் கொண்டு அனுப்பி வைத்தேன்.
அன்று டீம் சந்திக்க, மலர் நலமாவதைப் பற்றிப் பகிர்ந்து கொண்டோம்.
மறுநாள் மலர் நடக்கும் போது நன்றாகச் சமாளிப்பதாகச் சொன்னார் இயன் மருத்துவர். அடுத்தபடியாக மலருடன் என் ஸெஷன் துவங்கியது.
மலர் வியந்து கேட்டாள், ஆண் தொட்டால் உறுப்புகள் உடையும் என்றார்கள். ஆனால் எனக்கு ஏன் அப்படி ஆகவில்லையே என்று. இதன் விளக்கத்தை அவளாகவே அறிய, அவளது வாழ்க்கைப் பகுதிகள் பலவற்றைப் பற்றிப் பேசச் செய்தேன். பல தகவல்களைப் படிக்கக் கொடுத்தேன்
அதே நேரத்தில். வேணியிடம் ஸெஷன்களில் இதை எடுத்துக் கொண்டோம். பிள்ளைப் பருவத்தில் மலர் கோட்பாடுகளைப் பின்பற்றாமல் பல தண்டனை பெற்றாள். வளரும் விடலைப் பருவத்தில் அந்த நிலை கடினம் என்பதால் பயத்தை ஊட்டி விட்டார் அம்மா. பயத்தை உள்வாங்கிக் கொண்டதால் மலர் பின்பற்றினாள்.
இந்த சூழலில், விபத்தில் தான் தவறு செய்ததே பிரதானமாக மலரின் மனதில் நின்றது. இதை மலர் வரைபடமாக தனக்கு நேர்ந்ததை சித்தரிக்கையில் பயம் கலந்திருக்கும் தன்னைப் பார்த்ததும் கண்டுகொண்டாள். தெளிவு பெற்றதை வேணியிடம் பகிர்ந்து கொள்ள ஸெஷனை அமைத்தேன்.
வேணி புரிந்து கொண்டாள், தவறான கருத்தின் விளைவு மலருக்குள் பயமாகி, குற்ற உணர்வாகியது. உடலில் எந்த பாகத்தில் விபத்தினால் ஆண் தொட நேர்ந்ததோ, தாய் சொன்னதை ஏற்றுக் கொண்டதால் ஊனம் என மனதில் தோன்ற, அது நடக்கும்போது காலின் ஒத்துழைப்பைப் பாதித்தது.
இது வீட்டினரும் அறிந்து விளைவைப் புரிந்து கொள்ள வேணியிடம் பொறுப்பைக் கொடுத்தேன். இனி, தடைகளுக்குத் தக்க விளக்கம் அளிப்பதென்று முடிவானது. வீட்டின் சூழல் சரிசெய்யப்பட்டது.
உணர்வின் தாக்கம் பற்றியும் தன்நிலையைப் பற்றியும் மேலும் மலர் அறிந்து கொண்டாள். நடை தளராமல் நடந்ததின் கூடவே தன்நம்பிக்கையும் வளர்ந்ததைப் பார்த்தாள்.
