
ஹோமர் தனது இலியட் மகாகாவியத்தை டிராய் நாட்டு மாவீரன் ஹெக்டர் அக்கிலீஸ் கையில் மரணம் அடைவதோடு முடித்திடுவார் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதுமட்டுமல்லாமல் அக்கிலிசும் டிராயை வெல்வதற்கு முன் மடிவான் என்பதையும் கூறிவிட்டு இலியட்டை முடித்துவிடுவார். ஹோமர்.
மகாபாரதப் போரை பீஷ்மர் இறந்தவுடன் முடித்திருந்தால் எப்படியிருக்கும்? ஆனால் இலியட்டை ஹோமர் அப்படித்தான் முடித்திருப்பார். .
ஆனால் அக்கிலீஸ் எப்படி யார் கையால் இறந்தான் என்பதையும் ஓடிசியஸ் ,அஜாக்ஸ் ,அகம்னன் மெனிலியஸ் போன்ற மாபெரும் வீரர்கள் இருந்தும் டிராய் கோட்டையைப் பிடிப்பதில் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதையும் ஹோமர் விளக்கமாகக் கூறவில்லை குறிப்பாக அனைவரும் நன்கறிந்த ‘டிராஜன் குதிரை’ பற்றி அவர் விளக்கமாகக் கூறாதது நமக்கெல்லாம் சற்று ஏமாற்றமாக இருக்கும்.
அதைப் போக்குவதற்காக ஹோமருக்குப் பிறகு நிறையக் காவிய விற்பன்னர்கள் எண்ணற்ற நூல்களைப் படைத்துள்ளனர்.
கி மு 70 களில் அகஸ்டஸ் சீசரின் காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய ரோமானிய எழுத்தாளர் வர்ஜில் என்பவர் எழுதிய இதிகாசமான ‘ஏனிட்’ என்ற காவியம். இதில் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி இரண்டையும் தன்பார்வையில் 12 புத்தகங்களில் விவரமாக ஓவியம் போலத் தீட்டியிருப்பார். ஹோமர் காவியத்தில் உள்ள வெற்றிடங்களை அழகாக நிரப்பி அந்த இதிகாசங்களுக்கு மேலும் புகழ் சேர்த்தார். வால்மீகியின் ராமாயணத்தை துளசிதாசரும் கம்பனும் எழுதியதைப் போல! இந்த ஏனிட் நூலில் டிராய் யுத்தத்தைப் பற்றியும் அது எவ்வாறு நடைபெற்று கிரேக்கர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதையும் அதற்குப் பின் கிரேக்கர் சந்தித்த பேராபத்துக்களையும் பற்றி விவரமாக எழுதியுள்ளார்.
கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் மிகப்பெரிய நாடக ஆசிரியர்கள் ஈப்ரடீஸ் மற்றும் சோபாகிளிஸ் ஆகியவர்கள் டிராய் நாட்டுப் போரில் சாகசங்கள் செய்த மாவீரர்களைப் பற்றி பல நாடகங்களை எழுதி மேடையேற்றி மக்கள் ரசிக்கும்படி செய்துள்ளனர். இவர்களும் டிராய் போரைப் பற்றி ஹோமர் கூறாத பல செய்திகளைக் கூறியுள்ளார்கள்
ஹோமரின் ஓடிஸிக்குள் நாம் நுழைவதற்குமுன் நமக்குக் கிடைத்த பிற தகவல்கள் படி டிராய் யுத்தத்தின் முடிவைப் பற்றி இங்கே சுருக்கமாகத் தருகிறோம்.
மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்த இலியட் என்கிற டிராய் நகரம் கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மிகச்சிறந்த நகரமாக விளங்கியது. அனைத்து வளங்களும் கொழித்த நாடு அது. அதன் முக்கியமான கோட்டை டிராய். மிகவும் பாதுகாப்பான கோட்டையைக் கொண்டது அந்நகரம். பிரியம் என்ற மன்னர் தன் வீர மகன் ஹெக்டர் மற்றும் அழகு மகன் பாரிஸ் ஆகியோர் துணையுடன் மற்றும் கடவுளர்கள் ஆசிகளாலும் சிறப்பாக ஆண்டுவந்தான். அந்தப் பாரிஸால்தான் டிராய் நகரம் அழியும் என்பது கடவுளர்கள் வகுத்த விதி.
இந்த யுத்தத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
முதல் காரணம்!
கிரேக்கப் பெண் தெய்வங்கள் மூவர் வீனஸ், ஹீரா, அதீனா! தங்களுள் யார் சிறந்த அழகி என்ற போட்டி பொறாமை அவர்கள் மனதில் உதித்தது. கடவுளர் தலைவர் ஜீயசால் இதற்குத் தீர்ப்பு சொல்ல முடியவில்லை. காரணம் ஹீரா அவரது மனைவி! அதீனா அவரது நெற்றியிலிருந்து உதித்த மகள். அப்போர்டிட் என்கிற வீனஸும் ஜீயஸ் கடவுளின் இன்னொரு மகள்.
இவர்களுள் சிறந்த அழகியைத் தேர்ந்தெடுக்க டிராய் நாட்டு அழகு இளவரசன் பாரிசை வரவழைத்தார்கள்.
மூன்று பெண்களும் பாரிஸிடம் தனித்தனியே சென்று தங்களைத் தேர்ந்தெடுத்தால் அவனுக்கு மிகச் சிறந்த பரிசுகளை வழங்க முன்வந்தார்கள் ஹீரா அசினா இருவரும் ஹீரா பாரிஸுக்கு அரச பதவியைத் தர வாக்களித்தாள். அதினா அவனுக்குக் கிரேக்கர்களை வெல்லும் வீரத்தைத் தர முன்வந்தாள். ஆனால் வீனஸ் பாரிஸுக்கு ஹெலன் என்ற உலக அழகியின் படத்தைக் காட்டி அவளைத் திருமணம் செய்ய உதவுவதாக வாக்களித்தாள் . ஹெலனின் அழகில் மயங்கிய பாரிஸ் வீனசை மிகச்சிறந்த அழகியாக அறிவிக்கிறான். அதனால் கோபம் கொண்ட ஹீராவும் அதீனாவும் ட்ராய்ப் போரை உருவாக்கினார்கள்
இரண்டாவது முக்கிய காரணம்
பாரிஸின் எண்ணத்தைக் கவர்ந்த ஹெலன் என்ற உலகப் பேரழகி கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் ஸ்பார்டா நாட்டின் மன்னன் மெனிலிசியஸின் மனைவி. அந்த நாட்டுக்கு விருந்தினராக வந்து தங்கினான் டிராய் இளவரசன் பாரிஸ். மெனிலிசியஸ் அவசரக் காரியமாகத் தூர நாட்டிற்குச் சென்றபோது ஹெலனைத் தன் அழகால் மயக்கி அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய டிராய் நாடு வந்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.
தன்மானத்தைக் காக்கவும் கிரேக்கர் பெருமையை நிலை நிறுத்தவும் மன்னன் மெனிலிசியஸ் சிறந்த கிரேக்க வீரர்கள் அக்கிலிஸ் ஓடிசியஸ் அஜாக்ஸ் பெட்ரோகுலஸ் போன்ற பல கிரேக்க வீரர்களை அழைத்துக்கொண்டு டிராய் நாட்டுடன் போருக்காகப் புறப்பட்டான்
ஆயிரக்கணக்கான கப்பல்கள் டிராய் நாட்டை அழிப்பதற்காகப் புறப்படுகின்றன
பத்து ஆண்டுகள் தொடர்ந்து யுத்தம் நடந்தது. உறுதியான டிராய் நகரத்தைக் கிரேக்கர்களால் கைப்பற்ற முடியவில்லை. கடவுளர்களில் சிலர் கிரேக்கரை ஆதரித்தனர் சிலர் டிராயை ஆதரித்தனர். ஜீயஸ் கடவுளும் இரு அணிகளையும் மாறி மாறி வெற்றிகளைக் கொடுத்து போரை நீட்டித்துக் கொண்டிருந்தார். கிரேக்கர் ஆதரவாக அக்கிலிஸ். டிராய் நாட்டுக்கு ஹெக்டர். சம பலத்தில் இருந்தது இரு நாட்டின் வீரம். பத்தாவது ஆண்டில் அகிலியஸ் விரும்பிய பெண்ணை கிரேக்கத் தளபதி அகெம்னன் எடுத்துச் செல்ல இருவருக்கும் இடையே பகை மூண்டது. கோபம் கொண்ட அக்கிலிஸ் கிரேக்கர்களுக்கு உதவ மாட்டேன் என்று கூறித் தனித்து நின்றான். அக்கிலீஸ் இல்லாத கிரேக்கப்படை ஹெக்டரினால் சின்னா பின்னமானது. பின்னர் அவர்களுக்குள் சமாதானமாகி அக்கிலிஸ் களத்தில் இறங்கி மாவீரன் ஹெக்டரைக் கொன்று பகை முடிக்கிறான்.
அக்கிலீஸ் ஹெக்டர் இருவருக்கும் தெரியும் போர் முடிவதற்குள் தங்கள் உயிர் முடிந்துவிடும் என்று! இருப்பினும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தார்கள்
ஹெக்டர் இறந்தபின்னரும் மிகவும் பலமுள்ள டிராய் கோட்டைக்குள் செல்லக் கிரேக்கப் படையினால் முடியவில்லை. டிராய் வீரர்கள் அனைவரும் கோட்டைக்குள் இருந்துகொண்டு அருகில் வரும் கிரேக்கர்களை அம்பெய்தி கொன்று கொண்டிருந்தனர்.
ஹெக்டரின் மரணத்திற்குப் பழிவாங்க அவனுடைய நண்பன் எத்தியோப்பியா நாட்டு மன்னன் மெம்மன் தனது பெரும் படையுடன் வந்தான். ஆனால் அக்கிலீஸ் அவனையும் கொல்கிறான். அந்தப் போரில் கோட்டைக்கு அருகில் சென்ற அக்கிலின் மீது டிராய் கோட்டையின் உச்சியிலிருந்து இளவரசன் பாரிஸ் விஷ அம்பு எய்தான். அக்கிலிஸின் கணுக் காலுக்குக் குறி வைக்கச் சொன்னது அப்போலோ கடவுள். அதுதான் அவனுடைய பலவீனமான பாகம்.

அக்கிலிசின் அன்னை தன் மகன் சாகாமலிருக்க அந்தக் காலைப் பிடித்துத்தான் அவனுக்கு அமிர்த நதியில் குளிப்பாட்டினாள் அமிர்தம் படாத அந்தக் கணுக்காலில் அம்பு பட்டு அக்கிலிஸ் இறந்து படுகிறான். இன்றும் மனிதர்களின் வீழ்ச்சிக் காரணமான ஒன்று அக்கிலீஸ் பாதம் ( Achilles heel” ) அதாவது பலவீனம் என்று அழைக்கப்படுகிறது. தன் சாவை முன்பே நன்கு அறிந்த அக்கிலீஸ் டிராய் மண்ணில் உயிர் துறக்கிறான். கிரேக்கர்கள் தங்கள் தளபதிக்கு மாபெரும் சமாதி கட்டினார்கள்.
கிரேக்கரின் முற்றுகை தொடர்ந்தது. ஆனால் டிராய் கோட்டையை அவர்களால் அசைக்க முடியவில்லை.
அத்துடன் அக்கிலிஸின் கவச ஆயுதத்திற்காக . கிரேக்கத் தளபதிகள் போட்டி போட்டனர் கிரேக்க வீரர்கள் மறைமுக ஓட்டுப் போட்டு ஒடிசியசைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் அதனால் கோபம் கொண்ட அஜாக்ஸ் ஓடிஸியாசையும் அவன் வீரர்களையும் அவர்கள் உறங்கும்போது கொல்லத் தீர்மானித்து ராகசியாமக்க சென்றான். ஆனால் அதீனா அவன் மதியை மயக்கி அருகில் இருந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஓடிஸியாஸ் வீரர்கள் என்று நினைக்க வைத்தாள். ஆட்டு மந்தையைக் கொன்று குவித்தான் அஜாக்ஸ் . பெரிய ஆடு ஒன்றை ஓடிஸியஸ் சென்று நினைத்து அதனையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் தன்னிலை உணர்ந்து தான் செய்த மதிகெட்ட செயலை நினைத்து தன்னைத்தானே கொன்று கொண்டு படிக்கிறான் மாவீரன் அஜாக்ஸ்
கிரேக்கர்களால் டிராயைக் கைப்பற்ற இயலவில்லை ஹெலனையும் திரும்பப் பெற முடியவில்லை இந்த தவிப்பிலேயே அவர்கள் மிகவும் நொந்து தவித்தனர் எலினியஸ் என்ற டிராய்நாட்டு ஜோசியன் போரில் எப்படி வெற்றி கொள்வது என்பதைச் சொல்லக்கூடும் என்பதை தெரிந்த கிரேக்கர்கள் அவனைத் தந்திரமாக பிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஓடிசியஸ்தான் தந்திரமாக அவன் கோட்டைக்கு வெளியில் ரகசியமாக வரும்போது பிடித்து இழுத்துவந்தான்.
மாவீரனின் ஹெர்குலிஸின் வில்லும் அம்புடன் போரிட்டால்தான் டிராய் நாட்டை வீழ்த்த முடியும் என்றான் அந்த ஜோசியன். ஆனால் அந்தவில்லும் அம்பும் கிரேக்கப் படையைச் சேர்ந்த ஒரு தளபதியிடம் இருந்தது அவனும் இவர்களுடன் போரிடுவதற்காகக் கிரேக்க நாட்டிலிருந்து வந்தவன்தான் வரும் வழியில் கிரேக்கப் பெரும்படை ஒரு தீவில் தங்க அந்த தீவில் இருந்த ஒரு பாம்பு அவனைக் கடித்தது. அவன் சாகாவிட்டாலும் போரிடும் தகுதியை முற்றிலும் இழந்து விட்டான். அதனால் கிரேக்கப்படை அவனை அந்தத் தீவிலேயே இருக்கும் படி விட்டுவிட்டு வந்துவிட்டது இப்பொழுது அந்த வில் அம்பு அவனிடம் தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு ஒரு சில வீரரையும் மருத்துவரையும் அந்தத் தீவிற்கு அனுப்பி வைத்தனர். அந்த வில் அம்பையும் எடுத்து வந்து அவனைக் குணப்படுத்தி போரிடும்படி வேண்டிக் கொண்டார்கள் அவரும் டிராய் கோட்டையைச் சுத்திச் சுத்தி வந்த பொழுது பாரிஸ் கோட்டை உச்சியிலிருந்து இவர்களைத் தாக்க இருப்பதைப் பார்த்தான். பாரிஸ் அம்பு விடும்முன் தன்னிடமுள்ள ஹெர்குலிஸ் அம்பால் தாக்கினான். அந்த அம்பு நேரடியாக பாரிஸின் மார்பில் தைத்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாரிஸ் தனது முன்னாள் தேவதை மனைவியிடம் சென்று கெஞ்சினான். அவள் நினைத்தால் பாரிஸைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அவன் ஹெலனைத் திருமணம் செய்துகொண்டதால் அவனைக் காப்பாற்ற மறுத்துவிடுகிறாள். பாரிஸ் உயிர் துறக்கின்றான் பாரிஸ் இறந்ததைப் பார்த்து அவனது முன்னாள் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறாள்
அதற்கும் பிறகும் டிராய்க்கோட்டை விழவில்லை டிராய்க் கோட்டைச் சுவரை ஒட்டி உட்பக்கத்தில் பல்லாடியம் கோவிலில் சக்தி வாய்ந்த பல்லாஸ் அதீனாவின் சிலை இருப்பதாக அறிகிறார்கள் அந்தத் தேவதையின் சக்தி இருக்கும் வரை நகரை வெற்றி கொள்ள முடியாது என்பதை அறிகிறார்கள் சாவுக்குப் பயப்பட்டாத இரு கிரேக்க வீரர்கள் கோட்டை மதில் மீது ஏறி அந்தத் தேவதையின் சிலையை உடைத்து விட ஆணையிடுகிறான் ஓடிசியஸ்.. அந்த வீரர்கள் டிராய் வீரர்களால் அம்பெய்திக் கொள்ளப் படுகிறார்கள். ஆனால் அதற்குமுன் பல்லாஸ் ஆதினாவின் சிலையை உடைத்துவிடுகிறார்கள்.
அதேசமயம் கிரேக்கப்படை டிராய் கோட்டைக்குள் செல்ல மிகத் தந்திரமான திட்டத்தைத் தீட்டினான் ஓடிசியஸ். அதன்படி ஒரு பெரிய மரத்திலான குதிரையைத் தயார் செய்தான் அதற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர்கள் இருக்க வேண்டும் என்றும் அந்த மரக்குதிரையைத் தந்திரமாகக் கோட்டைக்குள் அவர்களே எடுத்துச் செல்லும்படி செய்யவேண்டும் என்று தீர்மானித்தான். அந்த நூறு பேரில் தானும் இருப்பதாக ஓடிசியஸ் நிச்சயித்தான்.
அத்துடன் கிரேக்கர்கள் தங்கள் முற்றுகையைக் கலைத்து விட்டு தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சென்றுவிட்டார்கள் என்று அவர்களை நம்பச்செய்யவேண்டும். ஆனால் அவர்கள் பக்கத்துத் தீவில் தங்கி இருக்க வேண்டும். கோட்டைக்குள் அந்த மரக்குதிரை எடுத்துச் சென்ற பிறகு இரவில் அதில் இருக்கும் 100 வீரர்களும் வெளியே வந்து கோட்டைக் கதவைத் திறந்து விட்டு ஊரையும் எரியூட்ட வேண்டும் எரியும் நெருப்பைப் பார்த்து மறைந்திருக்கும் கிரேக்கப்படை உள்ளே புகுந்து டிராய் நகர் முழுவதையும் அழிக்க வேண்டும் இதுதான் ஓடிசியசின் திட்டம்.
அவர்கள் எந்த நம்பிக்கையில் மரக் குதிரையை அழிக்காமல் கோட்டைக்குள் எடுத்துச் செல்வார்கள் என்ற கேள்விக்கும் ஓடிசியசிடம் திட்டம் இருந்தது.
அவன் திட்டப்படி காரியங்கள் நகர ஆரம்பித்தன.

கோட்டைக்கு வெளியே இருக்கும் பெரிய மரக்குதிரையை டிராய் நாட்டு வீரர்கள் பார்த்தார்கள் கிரேக்கப்படை அங்கே ஒன்றுமே இல்லை கிடைக்கப்பட இருந்த இடத்தில் தளபதி சைனன் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். அவனை விசாரித்தனர்.
அவன் தட்டுத் தடுமாறிக் கூறினான்.
“போரில் வெற்றிபெற என்ன வழி என்று கிரேக்கத் தளபதிகள் ஆரக்கிளிடம் குறிகேட்டார்கள். ‘பல்லாஸ் ஆதினாவின் சிலையை உடைத்ததால் அவள் மிகவும் கோபமாக இருக்கின்றாள். அதனால் கிரேக்கப் படைக்கு வெற்றி கிட்டாது, அவர்கள் நாட்டுக்கு விரைவில் திரும்பாவிடில் அனைவரும் அழிக்கப்படுவர்’ என்று சொன்னாள் ஆரக்கிள்.
‘ஆதினாவின் கோபத்தை டிராய் நோக்கித் திருப்ப என்ன வழி’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள் ‘ ‘ஒரு பெரிய மரக்குதிரையை ஆதினாவிற்காக நேர்ந்து விட்டுச் செல்லுங்கள். அதை டிராய் மக்கள் ஆதினாவிற்குத் தராமல் அழிப்பது நிச்சயம். அதனால் ஆதினாவின் கோபம் அவர்கள் மீது பாய்ந்து அவர்களை அடுத்த நாளே அழித்துவிடும்’ என்று ஆரக்கிள் சொன்னாள். அது மட்டுமல்ல இது திட்டப்படி நடக்க ஒரு வயது முதிர்ந்த தளபதியைப் பலி கொடுக்கவேண்டும் என்றும் ஆரக்கிள் கூறினாள். எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு என்னைக் களப்பலி கொடுக்கத் தீர்மானித்தார்கள் கிரேக்கத் தளபதிகள். என்னை ஈட்டியால் அவர்கள் குத்தியதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாக எண்ணி அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” என்று கண்ணீருடன் கூறினான் அந்தக் கிழத் தளபதி!
அவனது உருக்கமான பேச்சும் உடலில் உள்ள ஈட்டிக் காயங்களும் அவன் சொல்வது உண்மை என்று டிராய் வீரர்களை நம்பவைத்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை இதுவும் ஓடிசியஸின் திட்டம் என்று.
டிராய் வீரர்களும் மக்களும் கிரேக்கப் படை அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அந்த மரக்குதிரையை கோட்டைக்குள் இழுத்துச் சென்றனர். அதற்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் அதீனா கோவிலுக்குள் நிறுத்தி வைத்தார்கள். பத்து ஆண்டுகள் பட்ட துன்பம் முடிந்தது என்று ஆதினாவிற்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லம் சென்றார்கள். அன்றைய இரவில் டிராய் நாட்டு மனதில் மகிழ்ச்சி நிலவியது. பல்லாஸ் அதினா தேவதையின் கோபத்திற்கு உள்ளாகாமல் தப்பித்து விட்டோம்; கிரேக்க வீரர்களும் தங்கள் நாட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் நிம்மதியாக உறங்கச் சென்றார்கள் வீரர்களும் போர் முடிந்து விட்டது என்று தங்கள் இல்லம் நோக்கிச் சென்றார்கள்
அவர்களுக்குத் தெரியவில்லை அதுதான் அவர்களின் கடைசி இரவு என்று.
அன்று இரவு அந்த மரக்குதிரையிலிருந்து ஒடிசியசும் மற்ற வீரர்களும் வெளிவந்தார்கள் பக்கத்தில் இருக்கும் தீபங்களை எடுத்துக்கொண்டு வீடுகளையும் வீரர்கள் தங்கி இருக்கும் கூடாரங்களையும் ஆயுதக் கிடங்குகளுக்கும் தீ வைத்தனர். அத்துடன் அந்த கோட்டை கதவையும் திறந்து விட்டார்கள் மக்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள் வீரர்கள் தயார் நிலையில் இல்லை. போரிடவும் முடியவில்லை. போரிட ஆயுத சாலையும் எரிந்துகொண்டிருந்தது. இது போர் நெறி அல்ல கொடூரக் கொலை! கொடூரக் கொலை
டிராய் கோட்டைக்குள் பற்றி நெருப்பைப் பார்த்து கிரேக்கப் படை முழுவதும் திரும்பியது கோட்டை கதவு திறந்து இருப்பதனால் அவர்களால் உள்ளே மிக சுலபமாகச் செல்ல முடிந்தது
அதற்குப் பிறகு நடந்தது அனைத்தும் அநியாயம் அக்கிரமம் கொலை கொள்ளை! கிரேக்கப்படை எல்லாவற்றையும் கொளுத்தியது.. பிரியம் மன்னரின் அரண்மனை அடித்து நொறுக்கப்பட்டது அங்கு இருந்த மாடமாளிகைகள் உடைந்து விழுந்தன அக்கிலிசால் காப்பாற்றப்பட்ட வயதான பிரியம் மன்னனை அவன் மனைவி மகள் பார்க்க வெட்டி வீழ்த்தினார்கள். டிராஜன் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் டிராய் நாட்டுத் தளபதிகளின் தலைகளை வெட்டி எறிந்தனர்.
விடிவதற்குள் அனைத்து முக்கிய வீரர்களும் இறந்து கிடந்தனர். வீனஸ் தேவதையின் கரங்களை ஜீயஸ் கடவுள் கட்டிப் போட்டிருந்ததால் அவளால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. ஹெலனை மாட்டும் எரியும் அரண்மனையிலிருந்து தூக்கி வந்த அவளுடைய கிரேக்கக் கணவன் மெனிலியஸ் முன் நிறுத்தினாள். ஹெலனைக் கொள்ளவேண்டும் என்று இருந்த அவனது வெறி அவள் அழகு முகத்தைப் பார்த்ததும் மாறி அவளைக் கட்டித் தழுவிக்கொண்டான். தனது மனைவியை ஏற்றுக்கொண்டு வீரர்களையும் தளபதிகளையும் தம் நாட்டிற்குத் திரும்பச் செல்லும் உத்தரவைப் பிறப்பித்தான்.
காலையில் அன்றைய உலகத்தின் மிகப் பிரபலமான டிராய் கோட்டை முழுவதும் அழிக்கப்பட்டது பெண்களும் குழந்தைகளும் சிறைப் பிடிக்கப்பட்டனர் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் மன்னர் பிரியமின் மனைவி மகாராணி, ஹெக்டரின் மனைவி மற்றும் அந்தப்புர மகளிர் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். டிராய் நகர ராணிகள் அனைவரும் ஒரே கணத்தில் கிரேக்க நாட்டு அடிமைகளாக மாறினர்.
பிரியம் மன்னனின் மருமகளில் ஒருத்தி – ஓர் இளவரசி கைக் குழந்தையுடன் இருந்ததால் தன்னை அடிமையாக்க மாட்டார்கள் என்று நம்பி இருந்தாள் கிரேக்க வீரன் ஒருவன் வந்து அவள் குழந்தையை அவள் கண்ணெதிரேயே கொன்று அவளையும் அடிமையாக்கினான்.
கிரேக்கர் போர் வெறி அத்துடன் முடியவில்லை. அக்கிலிசின் கல்லறையில் பிரியமின் மகளைப் பலி கொடுத்தனர் அழிந்தது டிராய் நகரம் மண்ணோடு மண்ணாயிற்று .
காதலிலும் போரிலும் எல்லாம் நியாயம் என்ற கோட்பாட்டுப்படி கிரேக்கம் வெற்றி பெற்றது. பத்து ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவு பெற்றது கிரேக்கர்கள் வெற்றியாளர்களானார்கள் எல்லா வளங்களும் பாதுகாப்பும் நிறைந்த இலியட் நகரம் ஒரு டிரோஜன் குதிரையால் அழிபட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்திய ஓடிசியஸ் மாபெரும் வீரனாகத் திகழ்ந்தான்.
கிரேக்கப் படை தங்கள் சொந்த நாட்டை நோக்கி கப்பலில் புறப்பட்டது.
அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் ஓடிஸியஸின் திக்விஜயங்கள்தான் ஹோமரின் இரண்டாவது இதிகாசமான ஓடிசி என்ற காவியத்தின் கதைக்களங்கள்.
அதன் கதாநாயகன் ஓடிசியஸ். பிற்காலத்தில் அவனை யுலிசஸ் என்றும் அழைத்தார்கள்.
ஹோமர் எழுதிய ஒடிசி என்ற மகாகாவியத்தை அடுத்த மாதத்திலிருந்து பார்ப்போம்
