(பிருந்தாவனத்தில், பல்வேறு உருவங்களில் வந்த அரக்கர்களைக் கொன்றான் கண்ணன்.
சிறுவர்களிடம் பெரும் அரக்கர்கள் வீழ்ந்தனர் என்பதைக் கேட்ட கம்சன் வியப்பும் கவலையும் அடைந்தான்.)
கம்சன் கவலை
கொடிய கம்சன் ஆணையினால்
கொல்ல வந்த அரக்கர்கள்
மடிய, அவனும் நிலைகுலைந்தான்.
மாடு மேய்க்கும் சிறுவர்,பால்
வடியும் முகத்தார் தமையழிக்க
வந்த அரக்கர் அனைவருமே
முடிவைப் பெற்றார் எனக்கேட்டு
முனிந்தான், வியந்தான், கவலுற்றான்
(முனிதல்- சினமுறுதல்)
(கவல்- வருத்தம்)
நாரதனின் விளக்கம்
சிந்தை நொந்த கம்சன்முன்
தேவ முனிவன் நாரதனும்
வந்து நின்று முகம்நோக்கி,
“வாட்டும் கவலை ஏனுனக்கு?
முந்தி அதனை நீயுரைத்தால்
முற்றும் சொல்வேன்”, எனத்தேற்ற
விந்தைச் சிறுவர் அரக்கரினை
வென்ற கதைகள் வியந்துரைத்தான்.
“ஏழாம் கருவே, கலையாமல்
இனிது வளரும் பலராமன்;
ஊழாய் உயர்ந்த பெண்குழந்தை,
உணர்வாய், யசோதை தன்குழந்தை;
வாழா(து) உன்னைக் கொன்றழிக்க
வந்த எட்டாம் ஒருகுழந்தை,
கேழாய் மிளிரும் மணிவண்ணன்
கிளத்தும் பெயரோ திருக்கண்ணன்.
(கேழ்- நிறம்/ ஒளி/lustre)
( கிளத்தும்- கூறும்)
முதலை கொன்று, வேழம் காத்த
முதலை, முடியா அமுதக் கடலை,
மதலை என்று மயங்கும் மன்னா,
மாறாப் பொருளும் அவனே ஆவான்;
எதிலும், எங்கும், என்றும் மேவி
இருப்பான், உனக்கு முடிவை ஈவான்”,
சிதலைக் கவலை அரிக்கும் சொற்கள்
செப்பித் தூய முனிவன் மறைந்தான்.
(மதலை – குழந்தை)
(சிதலைக் கவலை- கறையான் போன்ற கவலை)
கம்சனின் கழிவிரக்கம்!
பதைத்துத் தரையை உதைத்தான்,
“பாழும் தங்கை வயிற்றில்
விதைத்த முள்ளும் வளர்ந்து
மரமாய் ஆகும் முன்பே,
சிதைத்து வெட்டி அவளைச்
சிறிதும் இரக்கம் இன்றிப்
புதைத்தி ருந்தால் இன்று
புலம்பல் இலையே!” என்றான்.
சிறையில் தள்ளச் சொல்லுதல்
“கொழுந்தைப் பெற்ற இருவரையும்
கொடுஞ்சி றையில் தள்ளுங்கள்
அழுந்த இரும்புச் சங்கிலியால்
அவர்தம் உடல்கள் பிணையுங்கள்.
இழந்த வெல்லாம் போகட்டும்
இனிமேல் விழிப்பாய் இருப்பீர்நீர்!”
குழந்தை வடிவில் இருப்பவனைக்
கொல்வேன் உடனே!” என்றான்
கேசி என்ற அரக்கனை அனுப்புதல்
“கேசி அழைத்தேன் என்முன்வா
கிளர்ந்து சென்று சிறுவனைநீ
வீசி எறிந்து கொல்வாயே
மிதித்து நசுக்கிக் கொல்வாயே
பேசி இனியோர் பயனில்லை
பிள்ளை அழிப்பாய்” எனச்சொல்லத்
தூசி கிளப்பும் நெடுங்குதிரைத்
தோற்றம் கொண்டு சென்றானே
கண்ணன் கேசியைக் கொல்லுதல்
பரியுருக் கொண்ட கேசி
பாய்ந்தனன் விண்ணை முட்டி
எரிதழல் கண்கள் சிந்தும்
இருநிலம் நடுங்கி அஞ்சும்
புரிகனை இடியே ஆகும்
பொழில்மரம் எரிந்தே போகும்
விரிவனம் அழிக்கும் வாலும்
மேருவைப் பொடிக்கும் காலும்.
( புரிகனை- செய்கின்ற கனைப்பின் ஓசை)
துளங்கொளிக் கண்ணன் முன்னே
தோன்றிய கேசி “உன்னைக்
குளம்பினால் மிதித்துக் கொல்வேன்
குழந்தையே” என்று சொன்னான்
களங்கமில் மாயன் ஓங்கும்
கால்களைப் பற்றித் தூக்கி
விளங்கிய தரையின் மீது
வீசியே சுழற்றிப் போட்டான்.
தரையினில் விழுந்த கேசி
தாவியே எழுந்து வாயை
விரைவுடன் பிளந்து பல்லால்
வீரனைக் கடித்துத் தின்னும்
இரையென ஆக்க எண்ண,
இறையவன் கையால் குத்த
நுரையுடன், குருதி கொட்ட
நொடியினில் வீழ்ந்தான் செத்து.
கண்ணன் துதி!
(கவிக் கூற்று)
வடிவம் முகிலோ? மையின் திரளோ?
வண்ணம் கடலோ? பச்சை மணியோ?
துடியின் இடையார் ஆயர் கொழுந்தோ?
சொல்லும் அடியார் சுவைக்கும் விருந்தோ?
இடியும் மின்னும், இணையும் மழையோ?
எங்கோ பிறந்தும், எங்கோ வளர்ந்தும்,
கொடிய தீமை கொல்லும் விரைவோ?
கோகு லத்தில் அறத்தின் வரவோ?
(துடியின் இடை- உடுக்கை போன்ற இடை)
. கண்ணனை வேண்டுதல்!
(கவிக் கூற்று)
மாடுகள் மேய்க்க வேண்டா,
மயக்குமுன் குழலும் வேண்டா,
கோடுநீ தூக்க வேண்டா,
கோகுல மனைகள் வெண்ணெய்
தேடவும் வேண்டா,எங்கள்
சீரிய அறத்தைத் தாக்கிச்
சாடுமச் சழக்கர் வீழ்த்தச்
சக்கரம் ஏந்த வேண்டும்!
(கோடு- மலை)
(சழக்கர்- தீயவர்)
(தொடரும்)

அருமை மிக அருமை
LikeLike