வாய்ப்பிற்கு கோடானுகோடி நன்றி, குவிகத்திற்கு

இந்த முயற்சியில் நான்கற்றவை ஏராளம்

சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வுக்காக ஆகஸ்டு 2023 மாதத்தில் வெளியான சிறுகதைகளிலிருந்து என்னுடைய தேர்வு :

கொலைக்கு சாட்சி!….. நோயல் நடேசன்….. அம்ருதா

 விரைவு ரயிலில் துவங்கும் பயணம். அதே வேகத்தில் விறுவிறுப்பாக நகர்கிறது. வர்ணனைகள் அத்தனையும் ரசிக்கும் படி உள்ளது. கதை நாயகன் தன் சகபயணியுடனான  உரையாடல் மூலமாகவே தன்னைப் பற்றி தன் ஊர், தொழில் பற்றி நமக்கு அறிமுகப் படுத்தி விடுகிறார்.

கதையின் இறுதி கட்டத்தில் தான் சத்தமேயில்லாமல் ஒரு கருணைக் கொலை அரங்கேறியதை படிக்கும் வாசகர்கள் உணர முடிகிறது. தொய்வில்லாத நடை.

“பிரயாணங்களில் வித்தியாசமான மனிதர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் அவதானிக்க முடிவது எழுத்தாளனான எனக்கு பலவிதத்தில் உதவுகிறது”  என்று கதை நாயகன் சொல்வது போல அமைத்து நோயல் நடேசன் தான் ஒரு தேர்ந்த சிறந்த எழுத்தாளர் என்று நிரூபித்து இருக்கிறார்.

**********************************************************************************

ஒரு சில கதைகளைத் தவிர, நான் படித்த 57 கதைகளில் 15க்கும் மேற்பட்ட கதைகள் முதல் இடத்துக்கு தகுதியானவையாகவே உள்ளது.

என் உள்ளம் கொள்ளை கொண்ட  ஒரு பன்னிரண்டு கதைகளை பற்றி குறிப்பிட  விரும்புகிறேன்.  இவை அனைத்துமே முதல் இடத்துக்கு தகுதியான கதைகள். அதனால் வரிசை படுத்தாமல் தந்துள்ளேன்.

கடைசி அழைப்பு….. மஞ்சுளா சுவாமிநாதன்….. குவிகம்

   

சேது, லதா பாத்திரப் படைப்பு வாசகனை கலங்க வைத்து விடுகிறது. விவாகரத்து என்பது ஒரு சட்ட கோட்பாடு  அதன் விளைவாக  சேது என்றுமே லதாவை வெறுத்தது இல்லை. ஆனால் லதாவின் சுபாவத்திற்கு அவர்கள் பிரிந்து இருந்ததே நன்று. முதுமை என்பது உடலளவில் மட்டும் அல்லாது மன அளவிலும் ஒரு முதிர்ச்சியை, பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களை எண்ணி…சேதுவுடன் சேர்ந்து நமக்கும் கண் கலங்குகிறது.

 

இரக்கம்….. S. L. நாணு….. பூபாளம்

     க்ளெப்டோ மேனியா  என்னும் நோயை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பான ஒரு மர்ம கதை. முழு நாவலுக்கு வேண்டிய அவ்வளவு விஷயங்களை சுருக்கி, அதே சுவாரஸ்யத்துடன் சிறு கதை எழுதிய ஆசிரியரின் திறமை வியக்க வைக்கிறது.

நூறாண்டு காலம் வாழ்க…. ஹெச். என். ஹரிஹரன்….. பூபாளம்

85 வயதில் மறதி இயற்கையான ஒன்று. தன்னை இத்தனை ஆண்டுகளாக கவனித்து வரும் மலரின் வாழ்க்கைக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் என்று அயல்நாட்டில் உள்ள தன் பிள்ளைகளிடம் ஃபோனில் பேசும் போது கூற மறந்து விடும் தேவகியம்மாள், அதனால் மலரின் தவிப்பும் வாசிக்கும் நம்மையும் தவிக்க வைத்து விடுகிறது.

காக்(ல்)கிலோ காதல்….. லதா சரவணன்…. குங்குமம்

   தெளிந்த நீரோடை போல பயனிக்கும் கதை. ஆரம்பம் முதல் மெல்லிய புன்னகை நம் இதழ்களில் தவழ்கிறது. 2K கிட்சின் கல்யாண கனவு நம் கண் முன்னே நகைச்சுவையோடு படைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவான நகைச்சுவை கதை படித்த திருப்தி.

தத்துப்பா….. மீரான் மைதீன்….. அந்திமழை

     திரைப்படம் போல அடுத்த பகுதி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிய கதை. இறை நம்பிக்கை என்பதை விட மூட நம்பிக்கை நம்மை எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கிறது.

கைப்பேசி யுத்தம்….. ஆயிஷா இரா. நடராசன்…. குமுதம்

 இணையத்தில் நடைபெறும் குற்றங்களை ஆசிரியர் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஒரு வரி செய்தி நம் கைப்பேசியை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. நம் காவல்துறை செயல் படும் விதம் பாராட்டுக்குரியது. விஞ்ஞான வளர்ச்சி வியக்க வைக்கிறதா? வேதனை அளிக்கிறதா? பட்டிமன்றத்தில் விவாதித்து புதிய தலைப்பு.

நோயுடைமை….. ரிஷி கண்ணா…. குங்குமம்

     ஏழ்மை கூடவே நோயும் சேர்ந்து விட்டால்? நினைக்கவே மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது. அவஸ்தையோடு வீடு திரும்புபவன் ஊர் போய் சேர நினைக்கும் போது வரும் ஃபோன்கால் படித்துக் கொண்டிருக்கும் நம்மைத் தான் அதிகம் பாதிக்கிறது.

பிருந்தாவின் ரிமோட்…… எம். பி. மூர்த்தி….. பூபாளம்

படித்த கதைகளில் ஒரே ஒரு முழுநீள நகைச்சுவை கதை. வயிறு வலிக்க வலிக்க சிரிப்பு தானாகவே வருகிறது. அப்புசாமி தாத்தா நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை

அம்புலி சலூன்…… ஜி. ஆர். சுரேந்திரநாத்….. ஆனந்தவிகடன்

 சினிமா மோகம் பாடாய் படுத்துகிறது. சலூன் தான் கதையின் நாயகன். பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கிறது.

தங்கம்மா…… இந்துமதி….. குமுதம்

 சிறு கதை எழுதுவது எப்படி என்று கற்றுக் கொள்ள இந்த கதை அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். படித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். சிறு கதை இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு.

அணி….. ஜெயமோகன்….. உயிர்மை

        பொறாமை படுத்தும் பாடு. கலங்காத கனகசபாபதி. ஈசன் மேல் கொண்ட அசையாத நம்பிக்கை.

தாலாட்டு பாடாத தாய்….. விமலா ரமணி….. குங்குமம்

     Man propose God dispose. திருமணத்திற்கு முன் உருவான கருவை கலைக்க குறித்த நேரத்தில் வேறொரு பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் இரண்டு மாத காப்பாற்றப்படுவது தெய்வச் செயலன்றி வேறு என்ன?

V- தயாளன்