


புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்ககாலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று.
இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.இதனை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன் மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர்.
புலவர் அரசர்களைப் பாடியதை அவனை அவர் பாடியது என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அதனை அடுத்துப் போர் பற்றிய பாடல்களும் கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புறஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
பாடல்:
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் – உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.
இப்புறஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றனர். இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன. அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம்.
புறநானூற்றில் ஒரு காட்சியைக் காணலாம்.
”நல்ல பனிக்காலம். சேவல் கூவியது. காலை விழித்தது. புலவர் எழுந்தார். காலைக்கடன்களை முடித்தபின்னர் தன் கிணைப்பறையுடன் இல்லத்தை விட்டு வெளியே வந்தார். அந்நாட்டு அரசனின் அரண்மனை நோக்கிச் சென்றார். அங்கு அரண்மனை வாயிலில் நின்றார். சிறிய கோலால் தட்டித் தன் பறையை முழக்கினார். அரசனின் புகழைப் பாடினார். புலவர்தம் பறை ஒலி கேட்டவுடன் வந்துவிடுவான் அந்த அரசன். அன்றும் அவன் உடனே வெளியில் வந்தான். அவன் மனைவியும் அவனைப் பின்புறமாய்த் தழுவிக் கொண்டு அவனுடன் வந்தாள்.
அவள் மிகுந்த அழகுடையவள். சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன்களப் பூண்டிருந்தாள். தளர்ந்த இடையும். அழகான சுழியுள்ள உந்தியையும் கொண்டிருந்தாள்.
அரசன் என்னை அவனுடைய அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றான். அது மிகவும் கட்டுக்காவல் கொண்டதாகும். அங்கு அப்பொழுதுதான் பூத்த ஆம்பல் மலரின் வாசம் வீசிக்கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் என்னை வரவேற்றனர். எனக்குப் புத்தாடை அணிவித்தனர். அந்த ஆடை மிகவும் மெல்லியது. அது பாம்பு உரித்த தோல்போலவும் மூங்கில் உரித்த தோல் போலவும் காணப்பட்டது.
அவர்கள் என்னை மிகவும் பேணி உபசரித்தனர். அதனால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். புதுப்பிறவியே எடுத்தவன் போலானேன். இனி நான் யாரைப் பாடவேண்டும்? யாரையுமே புகழ்ந்து பாடத் தெரியாதவளாகி விட்டேன். அவன் நாடு மிகுந்த காட்டுவளம் கொண்டதாகும். அக்காட்டில் குரங்கின் ஓர் இனமான ஊகத்தின் குட்டி தாய்ப் பாலை அருந்தியபின் யானையின் கன்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும். பின்னர் அக்கன்றுகளுடனே சென்றுமங்கும் இங்கும் மேயும்.
அந்த அரசன் தேரில் உலா வரும் வழக்கம் உடையவன். அவன் என்பால் மிகவும் அன்பு கொண்டவன். அவன் அன்பு எனக்குக் கிடைத்துவிட்ட்து. அவன் உதவி எனக்கு இருக்கையில் இனிமேல் சூரியன் எந்தப்பக்கம் உதித்தால் எனக்கென்ன? எனக்கு அவன் துணை இருக்கிறதே” என்று பாடுகிறார் ஒரு புலவர். அந்த அரசனின் பெயர் அவியன். பாடிய புலவர் மாறோக்கத்து நப்பசலையார்.
புறநானூற்றின் 383-ஆம் பாடல் இது.
புலவர் சேவல் கூவும் விடியலில் எழுந்து பரிசில் நாடிச் செல்வது அவரின் வறுமையைக் காட்டுகிறது. அவரே அவியனின் துணையைப் பெற்ற பின்னர் “எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது. இனி சூரியன் எங்கு முளைத்தால் எனக்கென்ன? “ என்று கவலையில்லாத குரலில் பேசுவது குறிப்பிடத்தக்கது. பெண்பாற் புலவராயிருப்பதால் அரசன் மனைவியை அழகாக வருணிக்கிறார். மெல்லிய ஆடைக்குப் பாம்பின் தோலையும் மூங்கிலின் தோலையும் உவமையாக்குவது புதியதாக உள்ளது.
யானையின் கன்றும், குரங்கின் குட்டியும் ஒன்றாக மேயும் என்பதனால் விலங்குகள் கூடப் பேதமின்றிப் பழகி இருந்தது புலனாகிறது. எனக்கு வேண்டியதெல்லாம் அவியனிடமே கிடைத்து விடுவதால் நான் பிறரைப் புகழ்ந்து பாடுவதையே மறந்து அதுபற்றித் தெரியாதவளாகி விட்டேன் என்று கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது. அவியனின் வள்ளல் தன்மையை அழகாக இப்பாடலில் நப்பசலையார் காட்டியுள்ளார்.
இதோ பாடல்:
ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து,
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,
நெடுங்கடை நின்று, பகடுபல வாழ்த்தித்,
தன்புகழ் ஏத்தினெ னாக, ஊன்புலந்து, 5
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்,
கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்,
தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழை அணி வாரா. 10
ஒண்பூங் கலிங்கம் உடீஇ, நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின், அவ்வாங்கு உந்திக்,
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி . . . . .
. . . . கற்கொண்டு, 15
அழித்துப் பிறந்ததென னாகி, அவ்வழிப்,
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே;
குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி,
நரைமுக வூகமொடு, உகளும், சென. . .
. . . . . . கன்றுபல கெழீ இய 20
கான்கெழு நாடன், நெடுந்தேர் அவியன், என
ஒருவனை உடையேன் மன்னே, யானே;
அறான், எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?
கைம்மை நோன்பு பற்றி ஒரு பாடல் காட்டுகிறது. விதவை என்பது வடசொல். அதற்குப் பொட்டில்லை, கைம்பெண் என்பது தமிழ்ச்சொல் அதற்கு இரண்டு பொட்டுகள் உள்ளன என்று தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திக் கூறுவர். ஆனால் இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பார்த்தால் பண்டைய தமிழகத்தில் கைம்மை நோற்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருந்தது போல் தெரியவில்லை.
பூதப்பாண்டியன் போரில் இறந்து விடுகிறான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீக்குளிக்க எண்ணுகிறாள். அவளை உறவினரும் சான்றோரும் வேண்டாம் என்று விலக்குகின்றனர். அப்போது அவர்களை மறுத்து அவள் கூறுவதாக இப்பாடல் வருகிறது.
பாடலின் பொருள்: கணவனுடன் நீயும் ‘செல்’ என்று சொல்லாமல், ’போகாதே (ஒழிக) என்று சொல்லும் பொல்லாத சூழ்ச்சி செய்யும் சான்றோர்களே! கணவனை இழந்த பெண்கள் அணிலின் மேலே இருக்கும் கோடுகளைப் போன்ற கோடுகளைத் தன் தோல் மேல் கொண்ட வெள்ளரிக்காய் விதைபோல விறைத்த, நெய்யில்லாத நீர்ச் சோற்றையும், எள்ளின் துவையலையும், புளி (மட்டும்) சேர்த்து சமைத்த வேளக்கீரையையும் மட்டுமே உண்ண வேண்டும், பாய்கூட இல்லாமல் பரளைக் கற்கள் உறுத்தும் தரையில் படுக்க வேண்டும். அது போல கைம்மை நோன்பு நோற்பவள் நானல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப்படுக்கை கடினமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. என் கணவன் இறந்ததால் தாமரை பூத்தக் குளமும், சிதையும் எனக்கு இப்போது ஒன்றுதான்’.
அக்காலத்தில் கைம்மை நோன்பிருப்பவரின் இன்னல்களை இப்புறநானூற்றுப் பாடல் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வரசியின் பெயர் இந்நிகழ்ச்சியின் பின்னர் பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் என ஆகிறது
பல் சான்றீரே! பல் சான்றீரே!
’செல்க’எனச் செல்லாது ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறுநெய் தீண்டாது
அடை இடைக் கிடைந்த கைபிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள்இதழ் அவிழ்த்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.
பெருங்காவியங்கள் போலில்லாமல் சங்க இலக்கியங்கள் உவமைகளை வாழ்வியலில் இருந்தே எடுத்துக் கொண்டன. இங்கு மன்னனின் வாள் சுழற்றும் வேகத்தைப் பாட வந்த புலவர் அவ்வேகத்தைக் காட்ட ஓர் அழகான காட்சியைக் விவரிக்கிறார்.
ஊரில் திருவிழா நடக்கிறது. அங்கு ஒருவனுடைய மனைவி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவன் மனைவி எந்நேரமும் மகவு ஈன்றிடலாம். அப்போது நில்லாது மழை பொழிகிறது. திருவிழாவிற்கு வந்திருப்பவர்களால் ஏற்கனவே ஊர் நிறைந்து இருப்பதால் குழந்தை பிறந்தால் வேறு எங்கும் அவளை அழைத்துச் செல்ல முடியாது. குழந்தையை ஈரத் தரையிலும் இட முடியாது. எனவே அவன் கட்டில் பின்னுகிறான். அந்த மனநிலையில் இருக்கும் ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக ஊசியைக் கையாளுமோ அவ்வளவு விரைவாக மன்னனின் கை வாளைச் சுழற்றியது என்கிறார்.
பாடல் முழுதும் உவமையை வருணித்து விட்டு இறுதி இரு அடிகளில் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியை சாத்தந்தையார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடல் இது.
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு,
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன். ஒல்லையூர் என்பது புதுக்கோட்டை அரசின் கீழ் இருந்த ஊர்களில் ஒன்று என்றும் இப்பொழுது அவ்வூர் ஒலியமங்கலம் என்று அழைக்கப்படுவதாகவும், அவ்வூரைச் சுற்றியுள்ள பகுதி ஒல்லையூர் நாடென்று அழைக்கப்பட்டதாகவும் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
குடவாயில் கீர்த்தனார் சோழ நாட்டில் உள்ள குடவாயில் ஊரைச் சேர்ந்தவர். இவர் பெருஞ்சாத்தனின் நண்பர். பெருஞ்சாத்தன் போரில் களம்பட்ட செய்தியைக் கேட்ட இவர் முல்லைக் கொடியைப் பார்த்து இப்பாடலைப் பாடுகிறார். இது புறநானூற்றில் வருகிறது. இப்பாடலைப் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் ஊமை ராணி மந்தாகினி மாண்டபோது பின்னணியில் ஒலிப்பதாகப் பயன்படுத்தி இருப்பார்கள்.
அவர் பூத்துக் குலுங்கும் முல்லையைப் பார்த்து “முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள். ஏன் வீணாகப் பூத்திருக்கிறய்” என்று அவலச் சுவையுடன் வினவுகிறார்.
இளையோர் சூடார் ;வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?
இவ்வாறு புறநானூறு பண்டைய தமிழர்தம் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் அரிய சங்க இலக்கியமாகத் திகழ்கிறது எனலாம்.
