
அதிராஜேந்திரன்

விஜயாலய சோழனின் ‘நேர் பரம்பரை’ சோழநாட்டைக் கோலோச்சி வந்தது. அது திடீரென்று முடிவுக்கு வருகிறது. அதை நாம் இன்று காண்போம்.
1067 ல் வீரராஜேந்திரன், தனது மகன் அதிராஜேந்திரனுக்கு முடிசூட்டி, பட்டத்து இளவரசனாக்கினான். உடன், மகனை அழைத்துச் சொன்னான்:
“அதிராஜேந்திரா, சற்றே சரித்திரம் கேள். பராந்தக சோழன் காலம் முதல் இந்நாள் வரை ராஷ்ட்ரகூடர், சாளுக்கியர்களை சோழர்கள் பல முறை வென்றுள்ளோம். நானே சாளுக்கியர்களை 5 முறை வெற்றி கொண்டு, அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறேன். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் துளிர்த்து வந்து, இன்னும் ஆவேசமாகப் போர் புரிகின்றனர். கடற்கரையை மீண்டும் மீண்டும் வந்து தீண்டும் அலைகள் போல. அந்நாளில், பராந்தக சக்கரவர்த்தி இதை உணர்ந்து, போர்களைத் தவிர்க்க எண்ணி, தன் மகளை ராஷ்ட்ரகூட மன்னனுக்கு மணம் செய்வித்தார். துரதிருஷ்ட வசமாக, பராந்தக மன்னனின் மருமகன், தன் பதவி இழந்து, புதிய சாளுக்கியன் கிருஷ்ணன் வந்து, நம் மீது படையெடுத்து வந்தான். திருமணபந்தம் பேரழிவைக் கொடுத்தது.
ராஜராஜ சக்கரவர்த்தி, தன் மகள் குந்தவையை வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களது மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு, என் தந்தை ராஜேந்திர சக்கரவர்த்தி தன் மகள் அம்மங்காதேவியை மணம் முடித்துக் கொடுத்தார். இவைகள், நமது அரசியலுக்கு சொற்பமாகவே உதவியிருக்கிறது. நான் மீண்டும், அதே யுக்தியையே உபயோகிக்கப்போகிறேன். என் மகள், அதாவது, உனது தங்கை ராஜசுந்தரியை, சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்ய முடிவு செய்துள்ளேன். இம்முறை, இம்மணம் தென்னிந்தியாவுக்கு அமைதியை அளிக்கட்டும். போர்கள் எனது உடலைத் தின்று வருகிறது. இன்னும் சில வருடங்களே எனக்கு உள்ளது. விரைவில் நீ ஆட்சிக்கு வருவாய். உனது காலம் அமைதியாக இருக்கட்டும். தில்லை நடராஜர் நம்மைக் காப்பார்” என்றான்.
“தந்தையே, போர்க்களத்திலேயே ஆயுளின் முழுப்பகுதியும் கழித்த தாங்களா இப்படி அமைதியைப்பற்றிப் பேசுவது” என்று வியந்தான்.
“மகனே! வெற்றிகள் என்றுமே நிலைப்பதில்லை. தோல்விகளே, வெற்றி அடையத் துடிக்கவைக்கிறது” என்றான்.
சரித்திரம் பல சமயங்களில் தான் செய்ததையே மறுபடியும் செய்யும். வீரராஜேந்திரனின் கணக்கும் பொய்யாகப்போனது.
ராஜராஜ நரேந்திரனின் மகன் அநபாயன். ராஜராஜ நரேந்திரன் 1061இல் இறக்க, 2ஆம் சக்திவர்மன் கிளர்ச்சி செய்து வேங்கியின் சிம்மாசனத்தை அபகரித்துக் கொண்டான். சோழர் தாக்குதலில், சக்திவர்மன் கொல்லப்பட்டான். உடனே, அவனுடைய தந்தை விஜயாதித்தன் மன்னனாகி, சோழர்களை எதிர்த்துப் போரிட்டான். முடிவில், விஜயாதித்தன் சோழர்களுக்குக் கட்டுப்பட்டு, கப்பம் கட்டும் அரசனாக வேங்கியில் இருக்க ஒப்புக் கொண்டான். அநபாயன் அனாதையானான். அநபாயன் (ராஜேந்திர சாளுக்கியன்) வேங்கிக்கு வடக்கே உள்ள இப்போதைய சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் எனும் மலைப்பகுதியில் ஒரு ராஜாங்கத்தை அமைத்துக் கொண்டான்.
இப்பொழுது, வருடம் 1070. சம்பவம் நடந்தது. அது, தமிழகத்தின் அரசியலைப் புரட்டிவிட்டது. வீரராஜேந்திரன் மறைந்தான். சோழநாடு கண்ணீரில் தவிக்க, எதிரிகள் களித்தனர். இளவரசன் அதிராஜேந்திரன் பரகேசரியாக சோழ மன்னனாக முடி சூட்டிக்கொண்டான். இவன் திருமணமானவனா இல்லையா ,மேலும் இவனுக்குச் சந்ததிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை. இவன் காலத்தில், நாட்டில் கிளர்ச்சியும் கலகமும் ஏற்பட்டது. ஒருசில மாத ஆட்சிக்குப் பிறகு இந்தப் பூசலில் இளம் மன்னனான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. அதிராஜேந்திரன் வரையிலும் கடைச் சோழர்கள் வம்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது, அவன் மறைவோடு அந்தப் பரம்பரை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
அவனது மரணம் ஒரு மர்மம். கல்கி மட்டும் அந்தக்காலத்தில் நடந்தவற்றைக் காவியமாகப் புனைந்திருந்தால், ஆதித்தகரிகாலனை விட மர்மமான மரணம் இன்று தமிழ்நாடெங்கும் பேசப்பட்டிருக்கும். நம்மால் முடிந்ததைக் கதைப்போம்.
முதல் கதை:
அதிராஜேந்திரனின் மரணத்துக்கு அநபாய குலோத்துங்கன் காரணமா? அநபாயன், சோழ அரசுக்கு ஆசைப்பட்டு, அதிராஜேந்திரனுக்கு எதிராக செயல்பட்டுக் கலகத்தைத் தூண்டி, அதில் அவனைக் கொன்றிருக்கக் கூடும். இதை மறுக்கும் சதாசிவ பண்டாரத்தார் கூறும் விளக்கம் சுவையானது. அவர் சொல்வது: ‘சாளுக்கிய எழுத்தாளர் பில்ஹணனுக்குக் குலோத்துங்கனையும் பிடிக்காது. ஆனால், அவரே, அதிராஜேந்திரன் மரணத்துக்குக் குலோத்துங்கன் ஒரு காரணம் என்று சொல்லாமல், கலவரம் தான் காரணம் என்று சொன்னது, குலோத்துங்கனை இந்தப் பழியிலிருந்து தப்புவிக்கிறது’ என்கிறார்! (எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்?)
இரண்டாம் கதை
சோழன், தில்லை மாநகரில், சித்திரக் கூடத்திலிருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்து, கடலில் எறிந்து, வைணவர்களைத் துன்புறுத்தினான். {தசாவதாரம் சினிமா பார்த்தீர்களா?). வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜர் சோழ மன்னரால் துரத்தப்பட, அவர் செய்த மரண மந்திரத்தால் மன்னன் மாண்டான். மன்னன் ‘கிருமி கொண்ட சோழன்’ என்று கூறப்படுகிறான். ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கூற்றுப்படி ‘ராமானுஜர் வாழ்ந்தது 2ஆம் குலோத்துங்கன் காலத்தில். அவன் தான் ராமானுஜரை சோழநாட்டிலிருந்து விரட்டியனுப்பினான்’ என்கிறார். சதாசிவ பண்டாரத்தார் சொல்வது இது: ‘ஆண்ட மூன்றே மாதங்களில், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில், கருங்கல் கோவிலாகக் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்ட மன்னன், வைணவமதத்துக்கு எதிராகக் கொடுமை செய்வது எண்ணத்தகாதது’.
மூன்றாம் கதை:
சாளுக்கியர் கால பில்ஹணன் எனும் வரலாற்றாசிரியர் இந்தக்கதையின் ஆசிரியர். வீரராஜேந்திரன், தன்னுடைய மகளை சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த சில காலத்திற்குள் இறந்து விடுகிறான். அதிராஜேந்திரனின் முடிசூட்டு விழா திட்டமிடப்படுகிறது. விக்கிரமாதித்தன், தன் மைத்துனன் அதிராஜேந்திரனின் பட்டாபிஷேகத்துக்கு வருமுன், அங்கு உள்நாட்டுப் போர் மூண்டுவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு, தன் படைகளுடன் கலகத்தை அடக்க, காஞ்சிபுரம் வருகிறான். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகிறான். அங்கு கலகக்காரர்களை அடக்குகிறான். அதிராஜேந்திரனுக்கு பட்டாபிஷேகத்தை செய்வித்து, அரியணையில் ஏற்றுகிறான். நாட்டில் அமைதி ஏற்பட்டு, அதிராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தபின், ஒரு மாதகாலம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துவிட்டு இனி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து தன் நாடு திரும்புகிறான். அவன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனனும் சோழ அரசனுமான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டான் என்கிற செய்தி கிடைக்கிறது. ராஜேந்திர சாளுக்கியன் (நமது அநபாயன் தான்) தன் படைகளுடன் வந்து சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டுவிட்டான் என்றும் அவனது இப்போதைய பெயர் முதலாம் குலோத்துங்கன் என்றும் கேள்விப்பட்டான். ஆத்திரமடைந்த விக்கிரமாதித்தன், குலோத்துங்கனை எதிர்க்கத் தன் படைகளுடன் புறப்பட்டான். அவனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கிய அரசன் 2ஆம் சோமேஸ்வரனும் சேர்ந்து கொண்டான். குலோத்துங்கன், சோழ மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு, விக்கிரமாதித்தன் தன் பெரும் படையோடு வந்து குலோத்துங்கனைத் தோற்கடித்து சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்டதாக பில்ஹணர் எழுதுகிறார். சரித்திர ஆராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார் இந்தக்கதையை மறுக்கிறார். ஒரு சாளுக்கியன் வந்து உதவும் நிலையில் அன்று சோழநாடு இருந்திருக்க இயலாது என்கிறார். நாம் கதையைத் தொடர்வோம்.
நான்காம் கதை (ஒரு வரிக்கதை.. சரி, இரண்டு வரிகள்). (ஆசிரியர்: சதாசிவபண்டாரத்தார்); அதிராஜேந்திரன் கொடிய நோய்வாய்ப்பட, அவன் நலம் பெற, கூகூரில், கோவிலில் தேவாரப்பதிகங்கள் இருமுறை ஓதப்பட்டது. மன்னன் மரணமடைகிறான்..
இந்த நான்காவது கதையை, நாம் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம். சோழ-சாளுக்கிய ரத்தத்தால், சோழநாடு இன்னும் ஒளிவீசும்.
அந்தக்கதைகளை, சரித்திரம், விரைவில், விவரமாகப் பேசும்.
