ஒற்றை யானை
குழந்தை முதல் வயதானவர் வரை பார்க்கப் பார்க்கச் சலிக்காத விஷயங்கள் மூன்றைக் கூறுங்கள் என்று கேட்டால் சற்று முழிப்பார்கள்.
பின்னர் நான் ‘கால்கள் நனைய மணலில் நிற்கும் பொழுது சிறிதும் பெரிதுமாக நம்மை நோக்கி வரும் கடல் அலைகள்,வயல் வெளியில் நிற்கும் பொழுது சத்தமிட்டு ஓடும் இரயில், கம்பீரமாக நடந்து வரும் யானை இவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுதானே’ என்றால் ஆம் ஆம் என்று தலையாட்டுவார்கள்.
இப்ப நாலாவதா electronic devices ஐ சேர்த்துக்கலாம்.
சின்ன சங்கிலியால் கால் பிணைக்கப் பட்டு தலையையும் காதுகளையும் ஆட்டிக் கொண்டு ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப் பட்டு நிற்கும் கோவில் யானை. அதன் வாயைப் பார்த்து சிரிக்கிறதா இல்லை கோபமாக இருக்கிறதா எனத்தெரிந்து கொள்ள முடியாது. அப்படியும் யானையிடம் துளிக் கூட பயமில்லாது குழந்தைகளையும் அழைத்து அருகில் சென்று ஆசி வாங்குவோம்.
அதே யானை நடுக்காட்டினில் நீங்கள் செல்லும் வழியை மறித்து தலையையும் காதுகளையும் ஆட்டிக் கொண்டு நின்றால் எப்படி இருக்கும். அது போன்ற யானையை காணும் பாக்யம் வெகு சிலருக்கே கிடைக்கும். அதில் நானும் ஒருவன்.
அக்காட்சியை பார்க்க உங்களை நீலகிரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் குன்னூர் யூனியன் வங்கி கிளையில் பணி புரிந்தேன்.
வங்கியின் மும்பை மத்திய அலுவளகத் தொடர்பால் சில பெரிய டீ எஸ்டேட்களின் கணக்குகளை குன்னூர் கிளை பராமரித்தது. அவற்றில் ஒன்று Nonsuch Tea Estates Ltd.

கிளையில் ஒரு மேனேஜர், ஒரு அக்கவுண்டன்ட், ஆல் இன் ஆல் அழகு வேலாக ஒரு ஆபிஸர். அந்த ஆபிஸர்தான் நான். வங்கியை கூட்டி பெருக்கும் வேலை தவிர மற்ற வேலையனைத்தும் செய்ய வேண்டியிருந்தது எனவேதான் அந்த அடைமொழி நானே வைத்துக் கொண்டேன்.
குளிரை, மழையை, இயற்கையை விரும்புவர்க்கு குன்னூர் ஒரு சொர்க்க பூமி. அங்கிருந்து சென்னைக்கு மாறுதல் கேட்ட நண்பருக்கு Regional Manager கூறிய மொழி “ சென்னையில் ஒரு ரூமை A C செய்வதற்கே கஷ்டப் படுறோம் (அன்று AC பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தம்) இங்கே ஊரையே AC பண்ணியிருக்கு. கொஞ்ச நாள் அனுபவிச்சிட்டு வாப்பா” என்பதாகும். நான் முழுதும் அனுபவித்தேன். நிறைய பாடங்கள் கற்றேன். Field Marshal Manekshaw போன்ற பெரியவர்களை சமாளிக்கும் கலையைக் கற்றேன்.


எதையோ சொல்ல வந்து எங்கோ செல்கிறேன். அப்பொழுது கிளையை ஆடிட் செய்ய மும்பை ஆடிட் செல்லிலிருந்தும் ஆடிட்டர்கள் வருவார்கள் அப்படி ஒரு ஆடிட் டீமில் இருவர் வந்தனர். அவர்களுக்கு ஊ்ரை சுற்றிக் காண்பிப்பது, sorry, inspection அழைத்துச்செல்வது என் வேலை. ஊட்டி, கூடலூருக்கு எப்படி அழைத்துச் செல்வது? அதற்கும் வழி இருந்தது.
Non Such க்கிற்கு சொந்தமான டீ எஸ்டேட் கூடலூரிலிருந்து ஒத்தையடி பாதை அல்லது ஒற்றை கார் செல்லும் பாதையில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இருக்கும். பெயர் தேவர்ஷோலா எஸ்டேட் என எண்ணுகிறேன். எஸ்டேட் மேனேஜரின் பங்களா ஒரு குட்டி அரண்மனை போலிருக்கும். வெள்ளைக் காரன் கட்டி அனுபவித்தது. ஆனால் புலியும் கரடியும்தான் இரவு விருந்தினர்களாக வருவர். அங்கு போகும் சாக்கில் ஊ்ட்டி, பைகாரா, கூடலூரைச் சுற்றிப் பார்த்து விடலாம்.
ஆடிட்டர் இருவரையும் அழைத்துச் செல்ல நாள் குறித்து டிரைவர் செபஸ்டியனிடமும் சொல்லியாகி விட்டது. பொல்லாதவன் திரைப் படத்தில் ரஜனி சொல்வதையெலாம் அவர் கார் கேட்கும். அது போலத்தான் மலைப் பாதையில் செபஸ்டியனுடைய அம்பாசடர் காரும். ஒரே பயம் கீழ் இறங்கும் பொழுது எஞ்சினை நிறுத்தி நியூட்ரலில் இறக்குவார். பெட்ரோலை சேமிக்கிறாராம். அவர் ஹாயாக இறங்குவார். நமக்கு பயத்தில் வயிற்றை கலக்கும்.
குறித்த நாளன்று ஆடிட்டர் இருவருடன் கிளம்பினேன். நான் முன் சீட்டில். கூடலூர் தாண்டி ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு கொண்டை ஊசி வளைவில் மார்க் 1 அம்பாசடர் காரின் மேனுவல் ஸ்டியரிங் வீலை சிரமப்பட்டு திருப்பினார் நம் டிரைவர். சில அடிகள் தூரத்தில் ஒற்றை யானை எங்கள் காரை எதிர்பார்த்து நின்றது போல நடு ரோட்டில்.

டிரைவர் கார் எஞ்சினை நிறுத்தினார். பின்னால் அமர்ந்திருந்த ஆடிட்டர்களுக்கு தமிழ் தெரியாததால் என்னிடம் கூறச் சொன்னது “ சார்! யானை அப்படியே போயிட்டா நல்லது. நம்மள பாத்து வந்துச்சுன்னா, காரை விட்டு இறங்கி நான் ஓடிடுவேன். நீங்களும் ஓடிடுங்க. மேட்ல ஏறாதிங்க. பள்ளமா பார்த்து இறங்குங்க. ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுங்க” என்றார். யாரைத் துரத்துவது என்ற choice ஐ யானையிடமே விட்டு விட்டார்.
பின் சீட்டிலிருந்து சுலோகங்கள் சற்று சத்தமாக வர ஆரம்பித்தன. அதன் பயனோ, இல்லை முன் சீட்டில் என்னைப் பார்த்து மிரண்டோ சற்று நேரம் தலையை ஆட்டி நின்று பின் மேலே ஏறிச் சென்று விட்டது அந்த ஒற்றை யானை.
ஆடிட்டர் இருவரும் எஸ்டேட்டில் குன்னூர் திரும்ப மாற்று வழி உண்டா என விசாரித்துக் கொண்டிருந்தனர்.
வேறு ஒரு கேள்வியும் இல்லை வேறு ஒன்றையும் பார்க்கவுமில்லை.
