திருமதி பக்கங்கள்: அந்த நாளும் வந்ததேதிருமதி பக்கங்கள்: அந்த நாளும் வந்ததேவானொலி நினைவுகள் - Her Stories
நான் ரசித்த / 45-50 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் ரேடியோ நாடகங்கள், மேடை நாடகங்கள், படித்த கதைகள் வரிசையில் இரண்டாவது பகுதி

ரேடியோவில் அகில பாரத நாடக நிகழ்ச்சியில் கேட்டது – பெயர் “மைனா” என்று நினைக்கிறேன். ஒரியா மொழிக் கதை என்று நினைவு

அப்பா, அம்மா மற்றும் ஒரு பெண் என்ற குடும்பத்தைப் பற்றியது. பெண்ணிற்கு 40 வயதாகிவிட்டது. கொஞ்சம்கூட அழகில்லாததால் கல்யாணம் ஆகவில்லை. எல்லோராலும் பரிதாபமாகப் பார்க்கப்புகிறாள். ஏதோ ஒரு அலுவலகத்தில் சில மணி நேரம் கணக்கு எழுதிவிட்டு, டைப் அடித்துவிட்டு வீட்டுக்கு வந்து விடுவாள். வீட்டில் புகை போல ஒரு சோகம் சூழ்ந்திருக்கும்.

அவளுடைய ஒரே துணை ஒரு மைனா. அதை ஒரு கூண்டில் வைத்திருப்பாள். வேளா வேளைக்கு சோறு கொடுப்பார். கூட்டை திறந்து வைத்தாலும் அது எங்கும் போகாது. வீட்டை சுற்றி இருக்கும் மரங்களில் சில நேரம் உக்காந்து விட்டு மீண்டும் தானே கூட்டில் வந்து உக்காந்து விடும். பூனைகளுக்கு பயந்து பூட்டி வைப்பாள். வெளியே போய் அதுவாகவே உணவு உண்ணும் பழக்கமும் இல்லை. வீட்டுக்கு வந்தால் அதோடு விளையாடுவாள், பேசுவாள். அகோரமாக  இருந்ததால் நண்பர்கள்கூட கிடைப்பதில்லை. ஒருவேளை இவளுக்கேகூடத்  தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்.

பார்ப்பவர்கள் , பரிதாபத்தோடோ அல்லது கொஞ்சம் அசூயையோட பார்ப்பதால் அவள் நிறைய பேருடன் பழகுவதில்லை.

யார் யாரோ பெண் பார்க்க வந்து வேண்டாம் என்று சொல்லி விட்டதால் இனி யாரையும் கூப்பிட வேண்டாம் என்று எப்போதோ சொல்லி விட்டாள்.

ஒருமுறை 4/5 நாட்களுக்கு மும்பை போகவேண்டிய வேலை வந்தது.அம்மா கேட்கிறாள் ” தனியா போறயேமா… நான் வேணும்னா கூட வரட்டுமா? பெண்பிள்ளை தனியா அந்த ஊருக்கு…..
பெண்ணின் பதில் “என்னை யார் என்ன செய்து விடுவார்கள்? எனக்கு ஒன்றும் ஆகாது”.. என்று சோகத்துடன் சொல்லிவிட்டு கொஞ்சம் சிரிப்பாள். போய்விடுவாள்.அதுவரை வீட்டைவிட்டு எங்கேயும் போகாமல் இருந்த அப்பா, அம்மா உறவினர்கள் வீட்டுக்கு போகிறார்கள். பின் கண்காட்சி, கடற்கரை, சினிமா என்று அவர்கள் கட்டாயப்படுத்தியதால் செல்கிறார்கள். அவர்களுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.பெண் திரும்பி வருவதற்குள் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்.

“மும்பை போன வேலை நன்றாக முடிந்ததா? வசதியா இருந்ததா? நல்ல சாப்பாடு கிடைத்ததா?” என்று கேட்க, “நல்லபடியா முடிஞ்சது. எல்லாம் வசதியா, நன்றாக இருந்தது” என்று சொல்லிவிட்டு குளிக்கப் போகிறாள். பின் அவசர அவசரமாக கூண்டு கிட்ட வந்து மைனாவை பார்க்கிறாள். அது இறந்து கிடக்கிறது.

உள்ளே உணவு இல்லை. அது கூண்டிலேயே அது இறந்து கிடக்கிறது. துக்கம் தாங்காமல் வெடித்து அழுகிறாள். அப்பா அம்மாவுக்கு எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை. அவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. அவள் அப்படியே படுத்து தூங்கி விடுகிறாள். மறுநாள் வெகு சீக்கிரமே அப்பா அம்மா எழும் முன்பே எழுந்துவிடுகிறாள். வீடு முழுவதும் பார்க்கிறாள். பஸ் டிக்கட், சினிமா டிக்கட் கிடைக்கிறது. தான் இல்லாதபோது இவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்.

வீட்டில் ஒரு நிரந்தர நோயாளி படுத்த படுக்கையாக இருந்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எவ்வளவு கஷ்டம். யாராவது வந்து சிலநாட்கள் அழைத்துப் போனால் எவ்வளவு சுதந்திரமாக/நிம்மதியாக இருக்கும். என்னால் இவர்களுக்கு எவ்வளவு கஷ்டம், மன வேதனை. நான் இல்லாதபோதுதான் கொஞ்சம் நிம்மதி கிடைத்திருக்கிறது. என் ஒருத்தியால் இவர்கள் நிம்மதி இல்லாமல், எதையும் அனுபவிக்காமல் வாழ்ந்திருக்கிறார்கள்” என்று எண்ணியபடியே மீண்டும் தன் அறைக்குள் போய் படுத்துக் கொள்கிறாள். மீண்டும் எழவே இல்லை. அப்பா, அம்மா கதறி அழுகிறார்கள்.

அதோடு முடிகிறது.

எனக்கு ஒன்றும் ஆகாது (நான் அழகில்லை) என்னை யார் என்ன செய்து விடுவார்கள் என்று சொல்லும் போதும். தன் ஒருத்தி யால் இவர்கள் இரண்டு பேரும் எதையும் அனுபவிக்கவில்லை என்று எண்ணும் போதும். மைனாவாக தன்னை எண்ணி கவனிப்பு இல்லாமல் அது இறந்ததை கண்டு அவள் கலங்கும் போதும் — எனக்கு கண் கலங்கியது. அன்று கேட்ட போது மட்டுமில்லை இப்போது எழுதும் போதும்