புத்தகம் : “பாரதி கண்ட தெய்வ தரிசனம்”
எழுதியவர் : நஜன்
இது பிரதிபா பிரசுரத்தின் 61 வது வெளியீடு. முதல் பதிப்பு ஆகஸ்ட் 1981 .விலை ரூ 5.00. தமிழ் செல்வி அச்சகம், சென்னை 14 இல் அச்சிடப்பட்டது.
நான் கல்லூரி மாணவனாக இருந்த பருவத்தில் ஃப்ளாட்பாரக் கடைகளில் இங்குமங்கும் தேடி பழைய புத்தகங்கள் வாங்குவது வழக்கம். அப்படி நான் கண்டெடுத்த புதையல்தான் நஜனின் இந்த “பாரதி கண்ட தெய்வ தரிசனம்”. 80 பக்கங்களே உள்ள சிறு புத்தகம். ஆனால், பாரதி பக்தர்களுக்கு பாரதி என்ற பக்தனைப் பற்றி பல அரிய தகவல்கள் இச்சிறு நூலிலே பொதிந்திருக்கிறது.
இப்புத்தக ஆசிரியர் ஸ்ரீவித்யா ஞான பாஸ்கர நஜன். பத்திரிகா சிரியராகவும் தமிழ்நாடு அரசு செய்தித்துறை அலுவலராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சமயம், தத்துவார்த்தம், கலாச்சாரம் முதலியவைகள் பற்றிய நூல்களை வெளியிட்டு ஒரு ஞான யக்ஞத்தையே நடத்தினார். அந்த ஞான யக்ஞத்தின் 61வது ஆகுதியாகவும், பிரதிபாவின் 61வது நூலாகவும் “பாரதி கண்ட தெய்வ தரிசனம்” என்னும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. 108 புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பது நஜன் தம்பதிகளின் சங்கல்பம் (இதில் எத்தனை நூல்கள் வெளிவந்தன என்பது தெரியவில்லை). இவர்கள் முயற்சிகளுக்கு காஞ்சி காமகோடி பெரியவர்கள், சிருங்கேரி சாரதா பீடப் பெரியவர்கள், சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை ஆதீன கர்த்தர்கள், மதுரை சித்த குரு சுவாமிகள், கைலாச ஆசிரமம் திருச்சி சுவாமிகள் – இவர்கள் எல்லோரும் அருளாசி வழங்கியிருக்கிறார்கள்.
இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு :
- பாரதியார் – ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டி
- குரு தரிசனம்
- விநாயக தரிசனம்
- சக்தி தரிசனம்
- பாரதமாதா தரிசனம்
- கண்ணன் தரிசனம்
- நரசிம்மம், எம தரிசனம்
- ஆத்ம தரிசனம்
- நல்வாழ்வுக்கு பாரதி காட்டும் வழி
இந்நூலின் ஆசிரியர் நஜனை எழுத்துலகில் ஊக்குவித்தவர்களில் முதல்வரானவர் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவரும் “பாரதி தேவி” (வார இதழ்) ஆசிரியராக பணி புரிந்தவரும், “மணிக்கொடி” எழுத்தாளர்களுக்கெல்லாம் மூத்தவருமான வ.ரா (வ. ராமஸ்வாமி அய்யங்கார்) அவர்களே. அதனால் நஜன் அவர்கள் இந்நூலை வராவிற்கே அர்ப்பணித்திருக்கிறார். கதைகள் எழுதி வந்த நஜனை வ.ரா தான் கட்டுரையாளராக மாற்றிவிட்டதாக இந்நூலின் தொடக்கத்தில் நஜன் குறிப்பிடுகிறார்.
இந்நூலுக்கு பாரதி நிலையம் ஸ்ரீ ரா.அ.பத்மநாபன் அணிந்துரை நல்கியுள்ளார்.
பொருளடக்கத்தைப் பார்த்தாலே பாரதி அன்பர்களுக்கு படித்து மகிழ வேண்டும் என்ற பேராசை வந்துவிடும். குவிகம் அமைப்பு தொடர்ந்து நடத்திவரும் வ வே சு வின் “மஹாகவியின் மந்திரச் சொற்கள்” நிகழ்வைத் தொடர்ந்து கேட்டு ரசிப்பவர்கள் இந்நூலையும் தேடிப்பிடித்துப் படிக்கலாம்.
வாழ்க பாரதி புகழ் !



ஆஹா முண்டாசுக்கவி பற்றியது வாழ்த்துக்கள்
LikeLike