“இந்தூ, பால் வந்துடுத்தா, பேப்பர் வந்து எடுத்துண்டு வந்துட்டயா”‘ இந்துவாஸன் குரல். “பழைய பேப்பரை எடுத்து வச்சுட்டயா”
“ஊம்” இந்திராவின் பதில் இவ்வளவுதான்.
“காபி குடுத்தா குடிச்சுட்டு குளிக்க போய் விடுவேன். பூஜை இடத்தை ரெடி பண்ணிடு. நிர்மால்ய பூ எல்லாம் எடுத்து வை. இன்னிக்கு என்ன பூ கொண்டு போட்டிருக்கிறான்.அரளின்னா படத்துக்கும் வச்சு நைவேத்தியத்திற்கும் இருக்கும். ரோஜான்னா கொஞ்சம்தான் கொடுத்திருப்பான்.பூச்சட்டியிலிருந்து கொஞ்சம் மரு பத்திரம் துளசி. எடுத்துவை.””
சந்திரா,இந்துவின் அத்தை பெண்.வந்த நான்கு நாட்களாக இதை கேட்கிறாள். தினம் இதே கேள்வி. எல்லாவற்றிற்கும் இந்துவின் பதில் ஊம்தான்.ஒரு நாளாவது தினம்தான் செய்கிறேனே என்று சொல்ல மாட்டாளோ மனதில் தோன்றியது. இந்திராவும்,சந்திராவும் மாமா பெண் அத்தைபெண். குழந்தையிருந்தே ரொம்ப பாசம் நெருக்கம்.ஒரு பத்து நாள் இந்துவுடன் இருக்க ஆசைப்பட்டு வந்திருக்கிறாள்.தூரத்து உறவு முறையில் இந்துவாஸனும் அவளுக்கு அண்ணா முறை.
மாலை எல்லா வேலைகளும் முடிந்ததும்
“இன்று ப்ரதோஷமாயிருக்கு. கோயிலுக்கு போகலாமா இந்தூ”
.”தாராளமா” என்ற இந்து கணவரிடம் “நாங்கள் இருவரும் கோயிலுக்கு போயிட்டு வர்ரோம். நீங்களும் வர்ரேளா”.
“என் ஃப்ரெண்ட் விசு வருவதாக சொல்லியிருக்கிறான்.நீங்கள் இருவரும் ஜாக்கிரதை யாக போய்ட்டு வாங்கோ”.,.
இந்திராவும், சந்திராவும் ஸ்வாமி தரிசனம் முடிந்ததும், சந்திரா “இந்தூ இந்த பிரஹாரத்தில் கொஞ்சம் உட்கார்ந்து பேசிட்டு போகலாமா” .
“ஆஹா”.
“ இந்தூ,உன்னிடம் ஒன்று கேட்கிறேன் கோச்சுக்காதே.நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். அண்ணா தினமும் காலையில் உன்னிடம் ஒரே மாதிரி கேள்வி, கட்டளை மாதிரி பேச்சு. தினம்தான் செய்கிறேனே என்றுசொல்லமாட்டாயா.உனக்கும்தான் 65வயசாகிறது. ஆனாலும் இவ்வளவு பொறுமை கூடாதும்மா.என்னால் இப்படி இருக்க முடியாது”.
“அதெல்லாம் ஓரு புரிதல் சந்திரா” சிரித்துகொண்டே சொன்னாள் இந்தூ.
“என்ன புரிதல் கிரிதல்னு இலக்கியவாதி மாதிரி பேச்சு”
“எனக்கு நம்ம சின்ன வயசு ஞாபகம்தான் வரது. நம்ம தாத்தா பாட்டிக்கு நாம் ஓரு 30,36 பேரக்குழந்தைகள். கோடை விடுமுறையில் ஒரு 15,20 பேராவது கிராமத்திற்கு தாத்தா பாட்டியிடம் வருவோம்.அதில் நீயும் நானும் ரொம்ப நெருக்கம். நெருக்கம்கிறதைவிட உனக்கு என்மேல் ஒரு பொஸஸிவ் நேட்சர். நான் உன்னைவிட மத்தவாகிட்ட அதிகம் பேசினாளோ,இல்லை தாயக்கட்டம்,கேரம்போர்டு விளையாடும்போது எதிர் கூட்டாளியுடன்நான் சேர்ந்து விளையாடினால் 2நாள் என்னோடு பேச மாட்டாய். நமக்கு ஒரு 13,14வயதிருக்கும். நீ தெய்வ உருவங்கள் எல்லாம் கலர் கோலம் போடுவாய்.இப்போது யு ட்யூப் மூலம் ஈஸியாக போடும் முறை எல்லாம் அப்போது தெரியாது. சுயமாக ஃப்ரீ ஹான்டாக போடுவாய்.நீ என்னோடு பேசாத நாட்களிலும், நீ பேப்பரில் கலந்து காண்பிக்கறமாதிர உனக்கு கலர் பௌடர் கலந்து கொடுப்பேன். ஞாபகம் இருக்கா?ஏன்? உனக்கு என் மேல் பாசம் அதிகம் என்ற புரிதல்தான்.”
“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”
“ உனக்குத்தான் தெரியுமே, உன் அண்ணா ஒரு பீங்கான் தொழிற்சாலையில் ஆஃபீஸராக வேலை பார்த்தார். அந்த ஆலையின் சங்கு காலை 6.30, 7.00, 7.20, 7.30 மணிக்கு ஒலிக்கும். நம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான் தொழிற்சாலை. பணியாளர்கள் 7.30 .மணிக்குதான் உள்ளே வரணும். உன் அண்ணா ஆஃபீஸர் என்பதால் எப்போது வேண்டுமானாலும் போகலாம். இவர் 6.45. மணிக்கே அங்கு போய்விடுவார். அதே தெருவில் இருக்கும் மற்றொரு ஆஃபீஸர் 7.20.க்கு கிளம்பி போவார். என் மாமனார் கேட்பார் “ஏம்மா இவன் ஃபாக்டரியையே பெருக்கி சுத்தம் பண்ணவே போகிறாணோ”? நீங்களே உங்க பிள்ளையை கேளுங்கோ ” என்று நான் சிரிப்பேன்.
“இவர் எல்லாவிஷயத்திலும் ஓவர் perfection. தொழிலாளர்கள் வருவதற்குள் யார் யாருக்கு என்ன வேலை என்று தயார் செய்து அவர்கள் உள்ளே வந்ததும் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உத்தரவிட்டு வேலைக்கு முடுக்கி விட்டு விடுவார். Production side ல் இருந்ததால் எல்லா சாமான்களும் பழுதில்லாமல் தரமானதாக குறை இல்லாமல் வரவேண்டும் என்கிற தீர்மானம். சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு வருத்தமாயிருக்கும்.
ரிடையர் ஆனபின்னும் அதே சுறுசுறுப்புதான் அவரை அப்படி சொல்ல வைக்கிறது. முதலில் எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்து. அப்புறம் நீ ஒன்று கவனித்தாயோ எட்டரை மணிக்குமேல் அந்த மாதிரி பேச்சே வராது .நம்ம லேடீஸுக்கு மெனோபாஸ் மாதிரி ஆண்களுக்கு இது ரிடையர்மென்ட்பாஸ் என்ற புரிதல் எனக்கு தோன்றியது. அவ்வளவுதான்.”
அப்படியே இந்துவை கட்டிக்கொண்டு “என் அம்மாவுக்கு, அதான் உன் அத்தைக்கு என்னைவிட உன் மேல் ப்ரியம் ஜாஸ்தின்னு எனக்கு தோணும். இந்துவின் மனசு வித்தியாசமானதுன்னு சொல்லிண்டே இருப்பா.அது சரின்னு இப்போது தோணறது “.
இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக பற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.
மறுநாள் காலை இந்துவாஸன் “இந்தூ” என்று கூப்பிட்டதும் ரிடையர்மென்ட்பாஸ் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் சந்திரா.
