வேப்பமரம்! - 11: தினேஷின் உலகம்!- Dinamani

“மாமா! இப்போல்லாம் ஏன்  எல்லா சன்னதியும் மூடி இருக்கு? ராமர் சன்னதியில் இருக்கும் சேஷாத்ரி மாமாவ என்ன கொஞ்ச நாளா காணும்?” என்று அர்ச்சகர் ராகவனிடம் கோயிலுக்கு வந்த ஒரு பெண் விசாரித்தார்.

“அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியல… போன வாரம் இறந்து போயிட்டார். நாளைக்கு சன்னதிய திறந்துடறேன்.” என்று ஏதோ சிந்தித்தபடி விடையளித்தார் ராகவன்.

“அட பாவமே! நல்ல மனுஷன்… இப்படி பகவானுக்காக உழைக்கறவாள, அவர் சீக்கிரம் கூட்டிண்டு போயிடராறே !” என்று கூறிய அந்த பக்தை தீபாராதனை தட்டில் பத்து ரூபாய் போட்டுவிட்டு நகர்ந்தார்.

அந்த பத்து ரூபாயை தனது வேட்டியில் எடுத்து சொருகிக்கொண்ட ராகவனது அன்றைய வருமானம் எழுபது ரூபாய். பெருந்தொற்று பயத்தில் உலகமே ஒடுங்கிப்போக… அவ்வப்போது அரசாணையின் பேரில் திறக்கும் அந்த பெருமாள் கோயில் போன்ற சிறிய கோயில்களில் பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. 

“இந்தா ராகவா அஞ்சு கிலோ அரிசி. தினமும் ஒரு அரை ஆழக்காவது வடிச்சு, தயிர் சாதமாவது பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணிடு. நா போய் கிருஷ்ணர் சன்னதிய திறக்கறேன். உங்க அப்பா வீட்ல சும்மா தானே இருக்கார்? வந்து ராமர் சன்னதிய பார்த்துக்க சொல்லேன்? தட்டுல நாலு காசு வரும்ல?” என்று அறிவுரை கொடுத்தார் கோயிலின் அருகே வசிக்கும் சாரதா மாமி. அவர் நோய்த்தொற்று காலத்தில் தன்னால் இயன்ற சேவைகளை இறைவனுக்காக செய்து கொண்டிருந்தார் . சாரதா மாமியைப் போலவே, அருகே பூக்கடை வைத்திருந்த புவனா, பழம் மற்றும் காய்கறி கடை போட்டிருந்த ரத்னம், ஆட்டோ ஓட்டும் துரை, என்று சிலர் தங்கள் கஷ்டத்திலும் கோயிலுக்கு தங்களால் இயன்றதை செய்து வந்தனர். இருந்தும் கோயிலை தினமும் திறந்து, சுத்தம் செய்து, இரு வேளை பூஜை செய்வதே ராகவனுக்கு பெரும் சவாலாக இருந்தது. 

அன்று இரவு வீட்டுக்கு வந்த ராகவன்,  இரும்புக் கட்டிலில் படுத்திருந்த தனது அப்பாவிடம் வந்து, “ அப்பா, இந்த சேஷாத்ரி மாமா செத்து  போயிட்டார்ல… நீங்க வந்து ராமர் சன்னதிய பார்த்துக்கரேளா?” என்றார் தயங்கியபடி.

ராகவனை ஏற இறங்க பார்த்த பார்த்தசாரதி, “சேஷாத்ரிக்கு குடுத்த 3000 ரூபாய அரசாங்கம் எனக்கு தருமா?” என்றார்.

“அப்பா! அவர் அறநிலையத்துறைக்கு கீழ வேலை செஞ்சவர்… இப்போ கோயில்ல வருமானமே கம்மி, உங்கள வேலைக்கு எடுக்கச்சொல்லி எல்லாம் கேட்க முடியாது, புரிஞ்சுக்கோங்கோ பா!”

“சீ! என்னடா பொழப்பு இது ராகவா? கோயில் வாசல்ல நிக்கற செக்கியூரிட்டி கோயிலோட நிரந்தர ஊழியராம், அவனுக்கு 13,000 சம்பளம். கோயில் கட்டிய காலத்துல இருந்து பரம்பரை பரம்பரையா சேவகம் பண்ற நம்ப தற்காலிக ஊழியர்களாம், கோயில் வருமானத்துக்கு ஏற்ப குருக்கள் வருமானம் நிர்ணயிக்க படுமாம். உனக்கு மாசம் 3000 சம்பளம், எனக்கு அந்த 3000த்துக்கு கூட வக்கில்ல. இந்த பணத்த வச்சுண்டு எப்படி டா குடும்பம் நடத்தறது?” 

“ அப்பா! செக்கியூரிட்டியா இருந்தாலும் மரியாதையா அவர்னு சொல்லுங்கோ. பாவம் அவராவது நன்னா இருக்கட்டுமே. இன்னிக்கு நமக்கு நிலைமை சரியில்ல, ஆனா, பெருமாள் நம்மள கைவிடமாட்டார் பா!”

“இந்த சேஷாத்ரி எப்படி செத்துப்போனான்? நெஞ்சு வலிக்கறது, மூச்சு முட்டறதுன்னு தனியார் ஆஸ்பத்திரிக்கு போனான். அங்கேயிருந்து காசில்லன்னு அரசு மருத்துவமனைல போட்டுட்டா. ரெண்டு நாள் அங்க பத்தோட பதினொண்ணா ஜெனரல் வார்டுல கிடந்தான். மூணாவது நாள் பிணத்தை எடுத்துட்டு போங்கன்னு சொல்லி அனுப்பிட்டா! நீங்க அரசு பணியாளர்கள் தானே, உங்களுக்கு ஏதாவது மருத்துவ காப்பீடு இருக்கா? இல்ல விரைந்து மருத்துவ சேவை கிடைக்க வழி இருக்கா? போடா ராகவா… இழுக்காத போனா பெருமாள் காப்பாத்திட்டாருன்னு சொல்றேன்!” என்று முணுமுணுத்துக்கொண்டே கோயிலுக்கு வர சம்மதித்தார் பார்த்தசாரதி.

அவ்வப்போது ராகவன் ஏதாவது வைதீக காரியங்களுக்காக வெளியில் சென்றால், கோயிலுக்கு வருவோரிடம் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பார் பார்த்தசாரதி. “வருமானம் நெறைய வர கோயில்ல இருந்து பைசாவ எங்கள போல சின்ன கோயில்களுக்கு தரலாம்ல? அதென்ன அந்த காசுல ஜீப் வாங்கறது, ஏ சி வாங்கறது, காலேஜ் கட்டறது, இதெல்லாம் கேட்க நாதி இல்லையா? நீங்க எல்லாம் லெட்டர் எழுதி போடுங்கோ அரசாங்கத்துக்கு. பத்திரிகைகளுக்கு எங்க நிலைய பத்தி சொல்லுங்கோ… ,” என்று அங்கலாய்ப்பார். கோயிலுக்கு வந்தவர்கள் செய்வதறியாது திகைத்துப்போவார்கள். 

ஒரு சில நபர்களிடம், “3000 வச்சுண்டு மளிகை சாமான், கரண்டு பில், வீட்டு வாடகை எல்லாம் எப்படி தர முடியும்? உண்டியல்ல  காசு போடறா, ஆனா தட்டுல காசு போட யோசிக்கறா!” என்பார். அப்போது வந்தவர்கள் அவர்களால் இயன்ற 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் தட்டில் போட்டுவிட்டு செல்வர். ஒரு சிலர், “இந்த கச்சி மூதூர் அர்ச்சகாஸ் வெல்ஃபேர் ட்ரஸ்ட்ல கேட்டுப்பாருங்கோ,” என்று அறிவுரை கொடுத்துவிட்டும் சென்றனர்.

ஒரு சில நேரங்களில், தனக்காக மட்டும் கேட்காமல், “ஏம்பா! இந்த லைட்  பியூஸ் ஆயிடுத்து பார், சன்னதியே இருட்டா இருக்கு. ஒரு லைட் வாங்கிக் கொடேன், உனக்கு புண்ணியமா போகும்,” என்று கோயில் காரியங்களுக்காகவும் யாசகம் கேட்பார்.  ராகவனுக்கு அவர் அப்பா இதுபோல கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பேசுவது தெரிந்தால் கடிந்து கொள்வார், “ அவாளே குடுத்தா வாங்கிக்கோங்கோ, நீங்களா கேட்காதீங்கோ,” என்பார். அதனை பெரிதாக பொருட்படுத்த மாட்டார் அந்த பெரியவர். எது எப்படியோ, அடுத்த இரண்டு மாதங்களில் ராகவன் நம்பியது போல ‘பெருமாள் புண்ணியத்தில்’ கோயிலுக்கு மக்கள் வருகை அதிகமாக, அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்பட்டது. 

ஆனால், அவர்களது சந்தோஷம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. மறுபடியும் கோயில்களை மூடும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பார்த்தசாரதி, வீட்டில் வாடிய முகத்துடன் ரேஷன் அரிசியில் கல்லையும், நெல்லையும் பொருக்கிக் கொண்டிருந்தார். “ அப்பா, வீட்ல சமைச்சு வெச்சுட்டேன். நா இன்னும் ரெண்டு வீட்ல சமைச்சுட்டு வரணும். சாயங்காலம் ஆயிடும். பார்த்துக்கோங்கோ,” என்று கூறி  வேலைக்குக் கிளம்பினாள் அவரது மருமகள் காயத்ரி. அருகில் பேரன் மாதவன் ஸ்மார்ட் ஃபோனில் பள்ளியின் பாட வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

ராகவன், அதிகாலையில் கோயில் பூஜையை முடித்துவிட்டு, வெளியில் எங்கோ சென்று காலை 10 மணிக்கு அயர்ந்த முகத்துடன் வீட்டுக்கு திரும்பினார். “குழந்தை ஃபீஸ் கட்ட அந்த புண்ணியவான் பைசா கொடுத்தாரா?” என்றார் மகனைப் பார்த்து பார்த்தசாரதி.

“இன்னிக்கு அவர் ஆத்துல இல்ல, நாளைக்கு வர சொல்லிருக்கா, கண்டிப்பா குடுப்பா பா, நீங்க கவலைப்படாதீங்கோ,” என்றார் ராகவன் தனது அப்பாவை தேற்றியபடி.

“ப்ச்… நம்ம நிலைமை இப்படி ஆயிடுத்தே! எப்போதும் ஏதாவது யாசகம் கேட்டுண்டு… உன்ன நா நன்னா படிக்க வச்சிருந்தா… நீயும் இப்படி அஞ்சுக்கும், பத்துக்கும் கஷ்டபடமாட்டியே டா…” என்றார் பார்த்தசாரதி கண்களில் நீர் மல்க.

“அப்பா! நம்ம யாசகம் கேக்கறது என்ன புதுசா? நம்ம தர்மத்துலியே அது இருக்கே. எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்ல பா,” என்றார் சிரித்தபடி ராகவன்.

“நீ சிரிக்கற… எனக்கு வயிறு எரியரது… முன்ன கடவுளுக்கு கைங்கரியம் பண்ணறவான்னு மரியாதை இருந்தது… இப்போ எதுக்கெடுத்தாலும் நம்மை குறை சொல்றா.  எனக்கு மனசே ரணமா இருக்கு ராகவா!”

“அப்பா, அப்படி சொல்ற கும்பல் ஒரு சின்ன பகுதி தான். அதுக்காக எல்லாரையும் குறை சொல்லக்கூடாது. இன்னிக்கு கார்த்தால கோவில் மூடிட்டாங்கன்னு, மளிகை கடைக்காரர் 2000 ரூபாய்க்கு மளிகை சாமான் காசு வாங்காம கொடுத்தார். புவனா அவளுக்கு வியாபாரம் ஆறதோ இல்லையோ, தினமும் பெருமாளுக்கு ஐந்து மொழம் பூ குடுத்துட்டு போறா. ரத்னம் கூட நேத்து காயத்ரி கிட்ட பணம் வாங்காம காய் கொடுத்துருக்கார். நல்ல மக்களும் நெறைய பேர் இருக்கா பா, நீங்க பார்க்கும் கண்ணோட்டத்த மாத்திக்கோங்கோ,” என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தார் ராகவன்.

அப்பாவை வாயளவில் ராகவன் தேற்றி இருந்தாலும் , மனதளவில் அவரும் நொந்துதான் போயிருந்தார். கட்டிய மனைவியை தன் வீட்டு வேலை போக மேலும் இரண்டு வீடுகளில் சமையல் வேலைக்கு அனுப்புவது அவருக்கு மிகவும் மன வேதனையை அளித்தது. தன்னைவிட பத்து வயது சின்னப்பெண்ணை ஊரிலிருந்து மணம்முடித்து அழைத்து வந்து, இங்கு சென்னை நகரத்தில் வீட்டுச் செலவை குறைக்க சமையல் செய்ய  அனுப்புவது அவருக்கு மிகவும் நெருடலாக இருந்தது. அவர்களது பன்னிரண்டு வருட மண வாழ்க்கையில் அவளுக்கென அவர் எதுவும் செய்ததில்லை. அவர்களது ஒரே மகன் மாதவனுக்கு ஒன்பது வயதில் பூணூல் போட்டு அவனுக்கு வேதம் பயிற்று வைக்க நல்ல ஆசானை அவர் தேடிக்கொண்டிருந்த நிலையில், இந்த பெருந்தொற்று வந்து அதுவும் தள்ளிப்போனது.

கைக்கும் வாய்க்கும் சரியாக கோயிலிலிருந்து பணவரவு இருந்த போதிலும், சேஷாத்ரி மாமாவின் மறைவு ராகவனை மிகவும் வாட்டியது. அவரது மனைவி உதவி என்று கேட்டபோது ராகவனால் எதுவும் தர முடியாமல் போனது. இதெல்லாம் எண்ணி கலக்கத்துடன் அன்று மாலை கோயிலுக்கு சென்ற ராகவன், ஶ்ரீதேவி பூதேவி சமேதராய் உயர்ந்த மூர்த்தியாய், ஆனந்தமாக காட்சி தந்த பெருமாளை  பார்த்தவுடன், குழந்தை போல தேம்பி தேம்பி அழுதார். ‘ திக்கற்றவருக்கு தெய்வமே துணை’ என்பதைப் போல, தெய்வத்திடம் தனது பாரத்தை அவர் இறக்கி வைத்தார். 

சிறிது நேரத்தில், கும்பகோணத்திலிருந்து அவர் எதிர்பார்த்திருந்த அழைப்பு வந்தது. அங்கு பெரிய குருகுலம் வைத்து வேத பாடம் நடத்தும் ஓர் வேத விற்பன்னர், ராகவன் நிலை அறிந்து அவரது மகனுக்கு பணம் எதுவும் வாங்காமல் வேதம் கற்றுத்தர சம்மதித்தார். அதனால் ராகவன் ஆங்கில முறை கல்விக்கு ஃபீஸ் கட்ட பணம் கடன் வாங்கத் தேவையில்லை. எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மாலை பூஜையை முடித்துவிட்டு குதூகலமாக வீடு திரும்பினார் ராகவன்.

“அப்பா! நம்மள பெருமாள் கைவிடல… உங்க பேரன் மாதவனுக்கு வேதம் சொல்லிக்குடுக்க ஒருத்தர் சம்மதிச்சுட்டார். அங்க அவனுக்கு தேவையானது எல்லாம் அவாளே பார்த்துப்பா. அப்பப்போ பெரிய பூஜைகள், கோயில் கும்பாபிஷேகம், ஹோமம்னு வேற அழச்சுண்டு போவார். நல்ல பயிற்சி ஆகும். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!” என்றார் ராகவன் உற்சாகமாக.

அப்பாவின் சந்தோஷத்தையும் அவர் சொன்ன செய்தியையும் கேட்ட மாதவன் அமைதியாக இருந்தான். “ என்ன மாதவா எதுவும் சொல்ல மாட்டேங்குற… உனக்கு சந்தோஷம் தானே?” என்றார் ராகவன்.

“அப்பா! இப்போ தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாமே? எல்லாரும் வேதம் கத்துக்கட்டும், பூஜை பண்ணட்டும்… எல்லாரும் அர்ச்சகர்களா ஆகட்டும்! எனக்கு டிகிரி வாங்கி வேற வேலைக்குப் போகாணும்னு ஆசை … பிளீஸ் பா…” என்றான் மாதவன் தீர்மானமாக.