“உன் புள்ளை என்ன பண்ணியிருக்கான் பார்த்தியா?”
மேகலா உரக்கக் கத்தியும் படுக்கையில் அரைத் தூக்கத்தில் இருந்த பார்வதி அம்மாளுக்கு ஒன்றும் சரியாகப் புரியவில்லை. வலது கையை சற்றே உயர்த்தி ‘என்ன?’ என்பது போல அவளைப் பார்த்து கையசைத்தாள் அந்தத் தொண்ணூறு வயது மூதாட்டி.
“உன் புள்ளை வாசல்லே இருக்கிற காம்பவுண்ட் கேட்டைப் பூட்டி சாவியை அவனோட வைச்சுகிட்டான். இனிமே நாம யாரும் வீட்டுக்கு வெளியே போக முடியாது. யாரும் உள்ளேயும் வர முடியாது”
இப்போது ஏதோ பாதி புரிந்தது போல இருந்தது பார்வதிக்கு. எச்சிலை விழுங்கி தொண்டையைச் செருமிக் கொண்டு, ”ஆடு, மாடு உள்ளே வந்துடும்னு பூட்டி இருப்பான். நாம கேட்டா கேட்டை திறந்து விடுவான்” என்றாள் மெதுவாக.
“அதெல்லாம் இல்லைம்மா. ‘வீடு இருக்கிற நிலம் என்னுது. அதனாலே கேட்டும் என்னுதுதான். நான் அப்படித்தான் பூட்டுவேன்’ன்னு சொல்றான்”
”அப்படியெல்லாம் இருக்காது மேகலா” என்றாள் அம்மா ஈனக் குரலில். மேகலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “அப்போ நான் பொய் சொல்றேனா? ’நாங்க எப்படி வீட்டை விட்டு வெளியே போறதுன்னு’ உன் மாப்பிள்ளை கேட்டதுக்கு ’சுவர் ஏறிக் குதிச்சுப் போங்க’ ன்னு திமிரா பதில் சொன்னானாம்” என்றாள்.
பார்வதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன பதிலையே காணும்? சரி, நீ என்ன பதில் சொல்லப் போறே? அவன் உன் புள்ளை. செத்தா கொள்ளி போட வேண்டியவன். அவனை நீ எங்கே விட்டுக் கொடுக்கப் போறே? இருக்கட்டும்….எல்லாத்துக்கும் ஒரு வழி பண்றேன்” என்று கருவிக் கொண்டே மேகலா சட்டென்று அறையை விட்டு வெளியேறினாள்.
மேகலாவுக்கும் தாமோதரனுக்கும் இடையேயான சண்டைக்கு இன்றைக்கு நாற்பது வயதாகிறது. அப்பா ஜகந்நாதன் அந்தக் காலத்தில் சென்னையில் ஒரு பெரிய கட்டிட எஞ்சினீயர். பெரிய கட்டிடங்கள் நிறையக் கட்டினார். அதோடு தன் வீட்டையும் பெரிதாகக் கட்டினார். காந்தி நகரில் இரண்டரை கிரவுண்ட் நிலத்தில் கீழே பெரிய அளவில் ஒரு அலுவலகமும் தான் குடியிருக்க மேலே நான்கு அறைகள் கொண்ட பெரிய வீடும் கட்டினார். மேகலா மூத்த பெண். பிள்ளை தாமோதரன், அவளை விட மூன்று வயது சிறியவன். பி.ஏ. படித்த மேகலாவை தன் உறவினர் பிள்ளை இஞ்சினீயர் ரத்தினத்திற்கு மண முடித்து அவனைத் தன் கம்பெனியிலேயே மானேஜர் ஆக்கி, வீட்டு மாப்பிள்ளையாகவும் ஆக்கிக் கொண்டார் ஜகந்நாதன். தாமோதரனுக்கு படிப்பு சரியாக ஏறவில்லை. ஏதோ டிப்ளமோ படித்து முடித்து வேறு வேலை செய்யத் தெரியாதவனை தன் கம்பெனியில் கட்டிட வேலை நடக்கும் இடங்களில் சூப்ரவைசர் வேலை செய்யச் சொன்னார். தாமோதரன் எதற்கும் ரத்தினத்திடம் கை கட்டி நிற்க வேண்டிய நிலைமை. அப்போது ஆரம்பித்தது பகைமை. இன்றும் ஒயவில்லை. அப்பா போன பிறகு கட்டிடத் தொழிலே நின்று போனாலும் சண்டை மட்டும் இன்னும் நிற்கவில்லை.
“ஏங்க! என்னங்க பண்றது இப்போ? காலையிலே பால் பாக்கெட்டை சுவத்திலே வைச்சிட்டுப் போயிட்டாங்க. காக்கா கொத்தி கொத்தி பாதி பால் வேஸ்ட். பேப்பர்காரன் உள்ளே தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டான். வேலைக்காரி வந்து பார்த்துட்டு என்னாலே சுவர் ஏறி குதிக்க முடியாதுன்னு போயே போயிட்டா”
ரத்தினத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. “என்ன… என்னை பயமுறுத்தி பார்க்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்கானா உன் தம்பி? அவன் ரௌடின்னா நான் அவனை விடப் பெரிய ரௌடி. பூட்டை உடைக்கிறேன். இல்லை அவன் போட்ட பூட்டுக்கு மேலே பெரிய பூட்டா நான் போடறேன். கேட்டுக்கு இல்லை, அவன் வீட்டு முன் வாசல், பின் வாசல் கதவுக்கு. எப்படி வெளியே வரான்னு பார்க்கிறேன்” என்று உறுமினார்.
”அட என்னங்க? எதுக்குங்க ஏட்டிக்குப் போட்டி? அவன் வீட்டைப் பூட்டிட்டா பிரச்சனை தீர்ந்துடுமா? இன்னும் பெரிசாத்தான் போகும்”
“போகட்டும் பார்த்துடலாம். சரி, உங்க அம்மா என்ன சொன்னாங்க?”
“அவங்க என்ன சொல்லுவாங்க? சண்டைவேணாம்னுதான் சொல்லுவாங்க”
“அப்போ இங்கேயே இந்த வீட்டு உள்ளேயே நாம மூணு பேரும் முடங்கிக் கிடந்து சோறு தண்ணி இல்லாம செத்துப் போயிடுவோம். அப்புறம் பொணத்தை எடுக்க கார்ப்பொரேஷனிலிருந்து ஆள் வருவாங்க இல்லை? அப்போ அவன் கேட்டைத் திறந்துதானே ஆகணும்”
”ஏங்க வேண்டாததை எல்லாம் பேசிகிட்டு! சரி விடுங்க…என் தம்பி கிட்டே நானே பேசறேன்”
தாமோதரனுக்கு தாமதமாகத்தான் கல்யாணம் நடந்தது. ஏழைக் குடும்பமானாலும் மனைவி மனோன்மணி நல்ல பெண். ஆனாலும் நீண்ட நாள் அவளோடு வாழ அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. பிள்ளைக்கு மூன்று வயதாயிருக்கும் போது மனோன்மணி கண்ணை மூடிவிட்டாள். குழந்தை தினகரனை வளர்த்தது பாட்டி பார்வதிதான். குழந்தை பாக்கியம் இல்லாத அத்தை மேகலாவும் அவனுக்கு ஒரு தாயாக இருந்து வளர்த்தாள். அவன் இப்போது படித்து முடித்துவிட்டு கல்யாணமாகி அமெரிக்காவில் மனைவி குழந்தைகளோடு இருக்கிறான். தனித்து விடப்பட்ட தாமோதரன் பத்து வருஷமாக கீழே முன்னே அலுவலகமாக இருந்த வீட்டில் குடியிருக்கிறான். அம்மாவைப் பார்த்துக் கொண்டு மேகலாவும் ரத்தினமும் மேல் வீட்டில் இருக்கிறார்கள்.
”ஏண்டா நீ செய்யிறது உனக்கே நல்லா இருக்கா? இப்படி கேட்டைப் பூட்டிகிட்டு எங்களை வெளியே போக முடியாம பண்ணிட்டியே? இது அநியாயமில்லை?”
”என்ன அநியாயம்? என் நிலம்… என் கேட்டு… நான் பூட்டியிருக்கேன். அதுக்கு உனக்கென்ன?”
”எனக்கென்னவா? நாங்களும் இதே வீட்டிலேதான் இருக்கோம். அப்பா போகும் போது, வீட்டை அம்மா, நீ, நான் மூணு பேருக்கும் சேர்த்துதான் எழுதி வைச்சிட்டுப் போயிருக்காரு. அதனாலே எனக்கும் அம்மாவுக்கும் கீழே நிலத்திலே பங்கு உண்டு”
“அப்போ அந்தப் பங்கு எங்கே இருக்கு சொல்லு?”
“அதை இங்கேதான் இருக்குன்னு பிரிச்சுக் காட்ட முடியாது. தனியே பிரிக்க முடியாத பொது சொத்து…ஜாயிண்ட் ப்ராப்பெர்டி. உனக்கு எங்கே அதெல்லாம் புரியப் போவுது? நம்ம சண்டை இப்போ வீட்டோட நிக்குது. அது போலீஸ், கோர்ட் வரைக்கும் போக வேண்டாம். வீணா தகராறு பண்ணாம கேட்டைத் திறந்து விடு”
“என்ன போலீஸ், கோர்ட், அது இதுன்னு பயமுறுத்திறியா? நான் பயப்பட மாட்டேன். சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்”
“சரி… இப்போ உனக்கு என்ன வேணும்?”
“அதான் முன்னமே சொன்னேன்லே… இந்த வீட்டை நான் விக்கப் போறேன். வித்துட்டு கோயமுத்தூர்லே ஒரு சீனியர் சிட்டிசன் ஹோம்லே வீடு வாங்கிட்டு அங்கே போய் செட்டில் ஆகப் போறேன். அதனாலே வீட்டை விக்கிறதுக்கு அம்மாவும் நீயும் கையெழுத்துப் போடணும். அவ்வளவுதான். அப்புறம் நீங்க இருக்கிற பக்கமே நான் தலை வைச்சுப் படுக்க மாட்டேன்”
“ஏய்… இது நம்ம அப்பா ஆசையா கட்டின வீடுடா… அம்மா மேலே ஆசைப்பட்டு அப்பா பார்த்துப் பார்த்து கட்டின வீடு. அதான் ”பார்வதி இல்லம்”ன்னு அம்மா பெயரையே வீட்டுக்கு வைச்சாங்க. அதைப் போய் விக்கணுங்கிறே?”
“எல்லாம் சரி… நான் ஒண்டி ஆளு. இவ்வளவு பெரிய வீடு எனக்கு எதுக்கு? ஒரு சின்ன வீடு போதும். அதான் என் பங்கை விக்கணும்னு சொல்றேன். ஆனால் நான் தனியா என் பங்கை மட்டும் விக்க முடியலை. அதான் பிரச்சனை”
“சரி, இருக்கட்டும். இது நம்ம அம்மா, அப்பாவோட சேர்ந்து மனசு நிறைஞ்சு சந்தோஷமா இருந்த வீடு. இப்போ அவங்களுக்கு தொண்ணூறு வயசாகுது. ஏதோ இன்னும் கொஞ்ச நாள். அவங்க உசிரோட இருக்கிற வரைக்குமாவது இங்கேயே இருந்துட்டுப் போகட்டும். கொஞ்சம் பொறுத்துக்கோ”
“இங்கே பாரு மேகலா! எனக்கே இப்போ அறுபதெட்டு வயசாயிடுச்சு. இன்னும் பொறுத்துகிட்டு இருந்தா என் ஆயுசே முடிஞ்சு போயிடும்”
“நீதானே அவங்களுக்கு ஒரே புள்ளை? அம்மாவைப் பார்த்துகிறதுக்கும் அவங்களுக்கு காரியம் செய்யறதுக்கும் உனக்கு ஏதும் பொறுப்பில்லையா?”
“அதான் புள்ளைக்கு புள்ளையா நீயும் உங்க வீட்டுக்காரரும் இருக்கீங்களே? சொத்திலே பங்கு அனுபவிக்கிறவங்க அதையும் சேர்த்து அனுபவிங்களேன்”
இதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்று மேகலா முடிவெடுத்து விலகிப் போனாள்.
“என்ன சார்! இதெல்லாம் ஒரு கேஸா?”
“பின்னே என்ன இன்ஸ்பெக்டர் சார்! ஒருத்தன் எங்க வீட்டு கேட்டைப் பூட்டிட்டு ’சுவர் ஏறிக் குதிச்சுப் போ’ன்னு சொல்றான். அதை நாங்க கேட்டுகிட்டு சும்மா இருக்கணுமா?”
“சார்! சொத்து தகராறு எல்லாம் சிவில் கேஸ் சார். நீங்க ஒரு நல்ல வக்கீலா பார்த்துப் பேசி, அவர் மேலே கோர்ட்லே ஒரு கேஸ் போடுங்க. கோர்ட் பார்த்து கேஸை முடிச்சுத் தரும்”
“சார்! இது சொத்து தகராறு இல்லை சார். “Infringement of right to pathway”. இது கிரிமினல் கேஸ். அவர் மேலே ஒரு புகார் கொடுக்கிறேன். நீங்க F I R போடுங்க”
“என்ன சார்! ஏற்கனவே, கொலை, ரேப், கொள்ளைன்னு ஏதேதோ கேஸெல்லாம் வைச்சுகிட்டு திண்டாடிகிட்டு இருக்கோம். அதிலே இது வேறேயா?”
“நீங்க இப்போ கம்ளைண்டை எடுத்துக்கிறீங்களா, இல்லை நான் போலீஸ் கமிஷனர் கிட்டே பேசட்டுமா?
”உடனே மேலே போறேங்கிறீங்களே? சரி சார்! எழுதிக் கொடுங்க பார்க்கலாம்”
ரத்தினம் மணி மணியான தன் கையெழுத்தில் புகார் எழுதி காவல் நிலையத்தில் கொடுத்து விட்டு திருப்தியுடன் வெளியேறினார். ஆனால் புகார் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் போலீஸிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. ரத்தினம் ஸ்டூல் போட்டு சுவர் ஏறிக் குதிக்கும் வைபவத்திற்கும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
“நல்ல வேளை, எங்க அப்பா மாடிப்படியை வீட்டுக்கு வெளியே வைச்சுக் கட்டிட்டாரு. இல்லேன்னா அவன் அதையும் அடைச்சிருப்பான். இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினவரு, கூடவே இன்னொரு கேட் வைச்சிருக்கக் கூடாதா?”
மேகலா இப்படிச் சொன்னவுடன் ரத்தினத்தின் மூளையில் மின்னல் பளிச்சிட்டது. “இப்போ என் வேலையைப் பாரு மேகலா” என்றார் துள்ளி எழுந்து.
அடுத்த இரண்டாம் நாள் காலையில் நான்கு வேலையாட்கள் வந்து காம்பவுண்ட் சுவரின் தெற்கு மூலையில் இடிக்கத் தொடங்கினார்கள். தாமோதரன் வந்து பெரிதாகச் சத்தம் போட்டான். மேகலாவும் ரத்தினமும் ஜோடி சேர்ந்து அவனுக்கு மேல் சத்தம் போட்டு அவனைச் சரணடையச் செய்தார்கள். மாலையில் ஒரு புது இரும்பு கேட் வந்து இறங்கியது. பத்தடி நீளமுள்ள கேட்டை சுவற்றில் துளையிட்டுப் பொறுத்தி சிமெண்ட் போட்டுவிட்டு, அது அசையாமலிருக்க நான்கு சவுக்குக் கட்டைகளையும் கட்டி வேலையாட்கள் நிறுத்திவிட்டுப் போனார்கள். புது கேட்டைப் பார்க்கப் பார்க்க ரத்தினத்தின் முகம் பாரதப் போரில் பத்தாம் நாள் சண்டையில் மச்சினனை வீழ்த்திவிட்ட பெருமையில் பூரித்திருந்தது.
அன்று நள்ளிரவில், கீழ் வீட்டில் “ஐயோ! அம்மா!” என்று தாமோதரனின் குரல் அலறலாகக் கேட்டது. முதலில் மேகலாவும் ரத்தினமும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலறல் தொடர்ந்து வந்ததும் பயந்து போய் அவசரமாகக் கீழிறங்கி வந்து வாசற் கதவை இடித்துத் திறந்து பார்த்த போது தாமோதரன் மார்பைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் துடித்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் மயங்கிச் சாய்ந்தான்.
“ஹார்ட் அட்டாக் மாதிரி இருக்கு மேகலா. உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்” என்று சொல்லி விட்டு ரத்தினம் ஆம்புலன்ஸுக்குப் ஃபோன் செய்தார்.
”ஆம்புலன்ஸ் எப்படிங்க உள்ளே வரும்? கேட் பூட்டி இருக்கே! சாவியை எங்கே வைச்சிருக்கானோ தெரியலையே?”
இருவரும் சேர்ந்து சாவி மாட்டும் கொக்கி, ஆணி, மேஜை, கட்டிலின் பக்கத்தில் இருந்த சிறு ஸ்டூல் எல்லா இடங்களிலும் தேடினார்கள். ஒரு சாவியும் கிடைக்கவில்லை.
“நேரமாகுது. வேறே வழியில்லை. புதுசா நாம வைச்ச கேட்டைத் திறக்க வேண்டியதுதான்”
“எப்படி முடியும் மேகலா? இன்னும் சிமெண்ட் காய்ஞ்சிருக்காதே! கேட்டை எடுத்துட்டா மறுபடியும் சிமெண்ட் வைக்கணும்”
“பரவாயில்லைங்க. இப்போ கேட் முக்கியமில்லை. தம்பி உசிருதான் முக்கியம்”
ரத்தினத்துக்கும் அது சரிதான் என்று தோன்றியது. அடுத்த பத்து நிமிடத்தில் கட்டைகள் அவிழ்க்கப்பட்டு தெற்குப் புற வாசல் திறக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்து தாமோதரனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது.
“எங்க அப்பா பொழைச்சதுக்கு நீங்கதான் காரணம் அத்தை. நீங்களும் மாமாவும் சரியான நேரத்திலே ஹாஸ்பிடல் கொண்டு வரலைன்னா அப்பா இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பாரு. புதுசா வைச்ச கேட்டை கழட்டிப் போட்டுட்டு, சரியான நேரத்திலே ஆம்புலன்ஸ்லே கொண்டு வந்ததாலேதான் இப்போ அவரு பொழைச்சிருக்காரு” என்றான் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தினகரன். தொடர்ந்து, “கேட்டைப் பூட்டினதெல்லாம் ரொம்ப தப்பு அத்தை. இவரு இப்படித்தான் ஏதாவது கிறுக்குத்தனமா பண்ணிகிட்டே இருக்காரு. அவருக்கு மூளை கெட்டுப் போச்சு” என்றான் ஆஸ்பத்திரி கட்டிலில் தூக்கத்தில் இருந்த தாமோதரனைக் காட்டி.
“விடுப்பா! ஏதோ கூடப் பொறந்த பாசம் எனக்கு இன்னும் விடலை. அதான் அவன் எங்க கிட்டே எப்படி நடந்துகிட்டாலும் உசிருக்கு ஆபத்துன்னு சொன்ன உடனே மனசு கேட்கலை.”
அதே சமயம் ரத்தினம் ஆஸ்பத்திரி அறையில் நுழைந்து கொண்டே, ”நாளைக்கு வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. இந்த தடவை மகாராசா வடக்கு வாசல் வழியாகவே அவரோட கோட்டைக்குள்ளே போயிடலாம். தினகரா! சாவி கிடைச்சிடுச்சா இல்லை பூட்டை உடைக்கணுமா?” என்றார்.
”சாவி கிடைச்சிருச்சு மாமா. அப்பா சட்டை பாக்கெட்லேயே இருந்தது. ஆனால் இனிமே அந்த கேட்டுக்கு பூட்டே வேண்டாம். திறந்தே இருக்கட்டும்”
“தேவையில்லை தினகரா. புது கேட் மறுபடியும் போட்டு முடிச்சாச்சு. நாங்க இனிமே அந்த கேட் வழியாகவே போய் வந்துக்கிறோம்” என்று சொன்னாள் மேகலா கொஞ்சம் வருத்தத்துடன்.
“வாழ்க்கையிலே கடவுள் ஒரு வாசலை மூடினா, இன்னொரு வாசலைத் திறப்பாருன்னு சொல்லுவாங்க. நம்ம விஷயத்திலே கடவுள் இரண்டு வாசலையும் திறந்து வைச்சிட்டாரு” என்றார் ரத்தினம் சிரித்துக் கொண்டே.
தினகரனும் பெரிதாகச் சிரித்து அதை ஆமோதித்தான்.
