நல்ல வாழ்வு

“மாமி! இன்றைக்குத் தான் பார்க்கிறேன். ஆமாம், உங்கள் மேசையில் இருக்கும் இந்த போட்டோவில் இருக்கும் இந்த இளம் பெண் யார்? என்ன அழகு, என்ன உடல் வாகு?” என்று சிலாகித்தாள் அல்லிராணி. மாமி சற்று வெட்கப்பட்டு விட்டுச் சொன்னாள்
”அது நான் தான்..”. வாயைப்பிளந்த அல்லியிடம், மாமி சொன்னாள். “அது ஒரு கனாக்காலம்..தினமும் உடற்பயற்சி. நாட்டியப் பயிற்சி. ஸ்விம்மிங். என்று இருந்த நாட்கள் அது” என்றவள். இன்னிக்குப் பாரு பீப்பாயாட்டம் ஆயிட்டேன். ஆர்த்தரிடிஸ் வந்து, நடப்பதே சிரமமாக இருக்க, உடற்பயற்சி செய்ய முடியாமல்.. இப்படி ஆச்சு. எப்படி இருந்தவள் இப்படி ஆயிட்டேன்” என்று அங்கலாய்த்த அங்கயற்கண்ணி மாமி மீண்டும் சொன்னாள்:
”எங்களைப் போன்ற ஆட்களுக்காக, அறிவியலில் புது கண்டு பிடிப்பு ஏதாவது உள்ளதா?” என்று கொஞ்சம் கேலியுடனும், கொஞ்சம் ஆதங்கத்துடனும் கேட்டாள். அல்லி, “என்ன ஆச்சரியம்! இன்றைக்குத்தான் படித்தேன், கேளுங்கள்” என்றாள். மாமி, உடனே ”சொல்.. சொல் ..” என்றாள்.
அல்லி தொடர்ந்தாள். ”மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ, உடற்பயற்சி இன்றியமையாதது. இன்றைக்கு நான் படித்த செய்தியில் ‘உடற்பயிற்சி செய்யாமல், உடற்பயிற்சியின் பலனைப் பெற, ஒரு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு வெற்றியுமடைந்துள்ளதாம். இந்த மருந்து, நோயாளியின் வளர்சிதை மாற்றம்(metabolism), சதை குறைப்பு (fat loss), தசைப் பெருக்கம் (gaining muscle mass) அனைத்துக்கும் உதவுகிறது. மாமி, புளோரிடா பல்கலைக்கழக்கத்தில் இது எலிகளிடம் வெற்றிகரமாகி விட்டதாம்.
அதன் சாராம்சம் இதுதான்: தாமஸ் பரிஸ் (Thomas Burris) தலைமையில் நடந்த ஆராய்ச்சியில், SLU-PP-332 என்ற மூலக்கூறு (molecule) உள்ள மருந்தை 28 நாட்கள் செலுத்தி வெற்றி கண்டுள்ளனர். இது மனிதர்களுக்கும் ஒரு நாள் வெற்றிகரமாக நடக்க வாய்ப்புகள் உள்ளதாம்” என்று முடித்தாள்.
மாமி, ”இதற்குப் பின் விளைவுகள் (ஸைட் எஃபக்ட்) என்னவோ? ‘ஐ’ படத்தில் வர்ர மாதிரி விகாரம் ஆயிடுச்சுன்னா” என்றாள் மாமி. அல்லி சொன்னாள்” அந்த ஆராய்ச்சிகளெல்லாம் செய்யாமல் மருந்து வெளிவராது. மொத்தத்தில், நீங்கள் அந்தபோட்டோவில் இருப்பது போல வருவீர்கள்” என்றாள் அல்லி. அவள் முகத்திலிருந்த சிறிய புன்னகையைப் பார்த்த மாமி “ ம்ம்ம். என்னெ வைச்சு காமெடி நல்லாத்தான் செய்யரே” என்றாள்.
இது ஒரு அதிசய உலகம்!
