இராமாயணம், மகாபாரதம், மற்றும் சில உபநிடதங்களில் வணக்கத்திற்கு உரியவராகப் போற்றப்படும் அஷ்டவக்கிரன் தான் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான ஆன்மீகச் சிந்தனையை வளர்த்தவர். அஷ்டம் என்றால் எட்டு என்றும், வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருள். பிறக்கும்போதே இரு பாதங்கள்,இரு கால் மூட்டுகள், இரு கைமூட்டுகள் மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டதால் இது அவருக்கு காரணப் பெயராகிறது. அவருடைய தந்தையின் சாபத்தால் இக்குறை அவருக்கு ஏற்படுகிறது.
அவர் தாயின் கருப்பையிலிருந்த போது, முனிவரான அவருடைய தந்தை கஹோதா அவருக்கு பல்வேறுவகையான பாடங்கள் விவரித்துச் சொல்லுவார். அதனால் பிறப்பதற்கு முன்னால் கருவிலிருக்கும் போதே ’தன்னிலை ’என்பது குறித்து பல்வேறு விளக்கங்களை அறிந்தவராகிறார். ஒரு நாள் அவ்வகையான பாட விளக்கத்தின் போது தந்தை ஏதோ ஒன்றைத் தவறாகச் சொல்லிவிடுகிறார். அதைச் சுட்டிக் காட்டுவது போலக் குழந்தை’ ஹும் ’ என்கிறது துரதிர்ஷ்டவசமாக தந்தை கோபமடைந்து எட்டு விதமான ஊனத்தோடு குழந்தை பிறக்கட்டும் என்று சாபமிடுகிறார். அதனால் உடல் ரீதியான குறைகளோடு குழந்தை பிறக்கிறது.
அவன் இளைஞனான பிறகு ஒரு முறை தன் தந்தையோடு ஜனக மன்னரால் நடத்தப்படும் மிக உயர்ந்த விவாதத்திற்கு போகி்றான். ஜனகர் அரசனாக இருந்த போதிலும் மெய்யறிவு தேடுபவர்.ஞானம் பெறத் துடிப்பவர்.அதனால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து ஆன்மீகவாதிகளையும் தன் அவையில் ஒன்று சேர்க்கிற அளவுக்கு அரசனின் தேடல் அமைகிறது. தினமும் தன் அன்றாடப் பணிகளை விரைவாக முடித்து, அவையிலுள்ள அறிஞர்களின் விவாதங்களில், பேச்சுக்களில் கலந்து கொள்வார். வெவ்வேறு வகையான துறைகளில் மேம்பட்டிருக்கிற அறிஞர்களின் விவாதங்கள் நாட்கள்,வாரங்கள் ,மாதங்கள் என்று கால எல்லையின்றி நடக்கும்.அவற்றில் தொடர்ந்து பங்குகொள்வார். எனினும் அவர் தேடிய ஞானத்தைத் தருபவர்களில்லை.
ஒரு முறை அம்மாதிரியான ஒரு விவாதத்திற்கு அஷ்டவக்கிரனின் தந்தை கஹோதா அழைக்கப்பட தந்தையோடு அவனும் செல்கிறான்.விவாதம் தொடங்கி அறிஞர்கள் இடையே பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது அப்போது எழுந்து நின்று “இவையனைத்தும் வீண் பேச்சு. இவர்கள் யாருக்குமே ’தன்னிலை ’என்பது குறித்து எதுவும் தெரியாதெனினும் எல்லோரும் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். எனினும்,என் தந்தை உள்பட யாருக்கும்’ தன்னிலை ’பற்றி எதுவும் தெரியாது” என்கிறான்.
ஜனகர் அவனைப் பார்த்து “நீ சொன்னதை உன்னால் நிரூபிக்க முடியுமா? இல்லையெனில் இந்த உடலைக் கூட நீ இழந்து விடக்கூடும்” என்கிறார்.
“என்னால் நிரூபிக்க முடியும்.”அவன் பதில் சொல்கிறான்
“அதற்காக உனக்கு என்ன வேண்டும் ?”ஜனகர் கேட்கிறார்.
“அதற்கு நான் சொல்வதை முழுவதுமாக நீங்கள் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.அதற்கு உடன்பட்டால்தான் நான் விளக்க முடியும்.நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீங்கள் செய்தால் ’உங்களை’ நீங்கள் அறிய நான் உதவமுடியும் .”
அவனுடைய நேர்மையைப் பாராட்டிய ஜனகர் “சரி,நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் “ என்கிறார்.
“நான் காட்டில் வசிக்கிறேன்.அங்கு வாருங்கள் “என்று விடை பெறுகிறான்.
சில நாட்களுக்குப் பிறகு ஜனகர் காட்டிற்குப் போக படை,பட்டாளம் தொடர்கிறது.உள்ளே செல்லச் செல்ல காடு அடர்த்தியாகிக் கொண்டே போகிறது.நீண்ட தேடலின் போது ஜனகர் தனித்துப் போகிறார்.காட்டை விட்டு வெளியேற முயலும் போது திடீரென ஒரு மரத்தினடியில் அஷ்டவக்கிரன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.உடனே குதிரையை விட்டிறங்கும் போது ,ஒரு கால் சேணை வளையத்திலும் மற்றொரு கால் மேலே தூக்கியுமிருக்க ”நில்லுங்கள்.அப்படியே நில்லுங்கள்”என்று அஷ்டவக்கிரன் சொல்ல ஜனகர் அப்படியே வசதியற்ற ஒரு நிலையில் ஒரு கால் மேலே இருக்க, குதிரையில் தொங்கியபடி இருக்கிறார்.
அந்தத் தடுமாற்றமான நிலையில் நின்றிருக்கும் நிலை– அது கணப் பொழுது எனவும்,நீண்டகாலமெனவும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அஷ்டவக்கிரன் சொன்ன அந்த நிலையிலேயே நின்று ’தன்னிலை’ உணர்ந்திருக்கிறார். ஜனகரின் ஐயங்களும் அதை அஷ்டவக்கிரன் தீர்த்து வைக்க ஜனகர் ஞானம் பெறுகிறார் குதிரையிலிருந்து இறங்கி அஷ்ட வக்கிரனின் திருவடி தொட்டு “அரண்மனையும், அரசாட்சியும் எனக்கு முக்கியமில்லை.நான் உன்னுடன் இருக்கிறேன் “என்கிறார்.ஆனால் அவனோ “ஞானம் பெற்ற அரசன் மக்களுக்கு வேண்டுமெனச் “சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி வைக்கிறான். ஜனகர் அஷ்டவக்கிரனின் ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகிறார்
ஆசிரமத்திலுள்ளவர்கள் இதை விரும்பவில்லை.அரசனான இவரிடம் நம் குரு என்ன ஆன்மீகம் கண்டார்?வாழ்வையே அர்ப்பணித்து வந்த துறவி களான நம்மைப் புறக்கணிப்பது நியாயமானதா? எனத் தமக்குள் பேசிக் கொண்டனர்.இதை உணர்ந்த அஷ்டவக்கிரன் தவறான அவர்களின் பார்வையைச் சரிசெய்ய முடிவுசெய்கிறான். ஒருநாள் அவன் ஆசிரமத் துறவிகளோடு விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜனகரும் வந்து கலந்து கொள்கிறார்.சிறிது நேரத்தில் அங்கு ஓடி வந்த வீரனொருவன் ஜனகரை வணங்கி “அரசனே, அரண்மனை பற்றியெரிகிறது. அனைவரும் நிலை குலைந்துள்ளனர் ”என்கிறான். கோபத்துடன் எழுந்த அரசன் “இந்தக் கூட்டத்திற்குள் வந்த குறுக்கிட உனக்கு எவ்வளவு துணிவு வேண்டும்? வெளியே போ’ என்று விரட்டுகிறார். அவன் அங்கிருந்து ஓட விவாதம் மீண்டும் தொடர்கிறது.
சிறிது நாட்கள் கழித்து, அஷ்டவக்கிரன் மற்றுமொரு திட்டமிடுகிறான். துறவிகள் கூடியிருக்க அவன் சொற்பொழிவு நிகழ்த்துகிறான்.திடீரென அங்கு ஓடிவரும் ஆசிரம உதவியாளன் “குரங்குகள் துறவிகளின் ஆடைகள் உலர்த்தியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து ஆடைகளை நாசம் செய்கின்றன’ என்று பதட்டத்தோடு சொல்கிறான்.
துறவிகள் வேகமாக எழுந்து தங்கள் ஆடைகளைப் பாதுகாக்க ஓடுகின்றனர்.அங்கு சென்ற போது குரங்குகள் இல்லாததையும், அவர்களது உடைகள் அப்படியே உலர்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றனர்.என்ன நடந்ததென்றுணர்ந்து கொண்டு தலைகுனிந்து திரும்புகின்றனர்.விவாதம் தொடர்கிறது.அதனிடையே ’தன் அரண்மனை பற்றியெரிந்து கொண்டிருந்த போதும் அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி அரசன் சொற்பொழிவின் போது குறுக்கிட்ட வீரன் மீது கோபம் கொண்டான்.அவன் சிந்தனை அது. துறவிகளான உங்களுக்கு உடைமை என்று எதுவுமில்லாத போதும், செய்தி கேட்டதும் ஓடீனீர்கள், நான் பேசுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் எவருமே சீண்டாத அந்த உடைகளைப் பாதுகாக்க ஓடினீர்கள்.உங்கள் துறவு எங்கே ?அவன் அரசன் ,ஆனாலும் துறவி. “என்று அவர்களின் தவறான பார்வையை மாற்றுகிறான். ஒரு மனிதனுக்குள்ளான வளர்ச்சியென்பது அவன் வெளியுலகில் என்ன செய்கிறான் என்பதல்ல, தனக்குள் அவன் எப்படிச் செயல்படுகிறான் என்பதில்தானுள்ளது என்பதை அறிவித்த உயர்விது.
தன்னிலை, மெய்ம்மை, தன்னையுணர்தல், விடுதலை ஆகியவை குறித்து அஷ்டவக்கிரனுக்கும் ஜனகருக்குமிடையே நடந்த உரையாடலை விளக்குவதுதான் அஷ்டவக்கிர கீதை. இதற்கு அஷ்ட சம்ஹிதை என்ற பெயருமுண்டு. இது பகவத்கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பினும் தத்துவத்தைப் பற்றி அது முன்னிறுத்தும் பார்வை வேறுபடுகிறது. ஞானவிடியலும் ஏற்படுகிறது.அதுவே அஷ்டவக்கிர கீதை. இது இருபது அத்தியாயங்கள் கொண்டது.
அஷ்டவக்கிரரின் கீதையிலிருந்து சில கருத்துக்கள்:
• எப்போது மனம் ஏதோ ஒன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதும், உவப்பதும் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.
• .எப்போது சித்தம் எதையும் விரும்பாது வருந்தாது தள்ளாது மகிழாது சீறாதிருக்குமோ ,அப்போதே முக்தி
• நினைப்பாலன்றி வேறெவ்வாறும் துக்கம் இங்கு ஏற்படாதெனத் தெரிந்து கவலையற்று அனைத்திலும் ஆசை தீர்ந்தவனே இன்பமும் அமைதியும் அடைந்தவன்.
• கண்ணாடிக்குள் உள்ளும்,புறமும் எப்படியோ அவ்வாறே இவ்வுடலின் உள்ளும் புறமும்.
• அலைகளும், நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது “ போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறி்ல்லை.
