ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

‘கேள்வியை நீர் கேட்கிறீரா ? அல்லது நான் கேட்கட்டுமா?
“இல்ல இல்ல நானே கேட்கிறேன்” என்பார் நடிகர் நாகேஷ் சிவாஜியிடம்; திருவிளையாடல் படத்தின் பாப்புலர் டயலாக்.
ஆக கேள்வி கேட்பது சுலபம்; பதில் சொல்வதே கடினம் என்பது பல பேர்களின் கருத்து. ஆனால் ஒரு குவிஸ் மாஸ்டராக கேள்விகள் தயாரிக்க நான் பட்ட கஷ்டம் தாளம் படுமோ? தறிதான் படுமோ ?
நினைவாற்றலைச் சோதிக்காமல் அறிவாற்றலைச் சோதிக்குமாறு வினாக்கள் தயார் செய்வது மிகக் கடினம். அதற்கு நம் அறிவை அதிகம் செலவழிக்க வேண்டும். அதென்ன ? நினைவாற்றல் அறிவாற்றல் வித்தியாசம்? கேள்விக்கு ஆன் தி ஸ்பாட் சிந்தித்து பதில் சொல்லவேண்டும்.
வினாடி வினா நிகழ்வில் இதற்காக பல வித்தியாசமான சுற்றுக்களை அறிமுகம் செய்தேன். ( இப்ப அதெல்லாம் பழசு. நான் சொல்லறது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் செய்தது சென்னைத் தொலைக்காட்சிக்கு .. அப்ப அது புதுசு.)
மறைபொருள் சுற்று: விஷுவலாக பல பொருட்கள் உள்ள ஒரு படத்தை பதினைந்து வினாடிகள் காட்டுவோம். பிறகு பதினைந்து விநாடிக்குள் எந்த அணி அதிகமான பொருட்களைக் கண்டு சொல்கிறதோ அது வெற்றி அடையும்.
சரியா? தவறா? சுற்று . குவிஸ் மாஸ்டர் ஒரு வாக்கியத்தைப் படிப்பார். அது சரியா தவறா என்று சொல்லவேண்டும். இதில் நான் பலதுறைக் கருத்துகளையும் வாக்கியங்களாக்கிக் கேள்வி கேட்டுள்ளேன்.
வீட்டுச் சுவற்றில் பல்லி இருப்பது நல்லது
சோப்புத் தயாரிப்பில் எண்ணெய் கலப்பார்கள்
சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்று மகாத்மா காந்தி கூறினார்.
எல்லா ரத்தமும் சிவப்பு அல்ல.
இது போன்று பல கேள்விகள். பதில் சொல்ல வரப்போகும் ஆடியன்ஸ் எப்படிப் பட்ட பின்னணி கொண்டவர்கள் என்று தெரியாத நேரத்தில் இது போன்ற சுற்றுக்கள் கை கொடுக்கும். கேள்வியை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கேட்டுக் கொள்ளலாம்.
பத்து செகண்ட் பதில்: இந்தச் சுற்றில் விடையை பத்து செகண்டிற்குள் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு ஒரு கணக்கு. இதுல இரண்டுக்கு வேல்யூ மூன்று; மூன்றுக்கு வேல்யூ இரண்டு. இப்ப பதில் சொல்லுங்க. இருபத்து மூன்றையும் முப்பத்து இரண்டையும் கூட்டினால் என்ன விடை ? எந்த அணி முந்திச் சொல்கிறதோ அதற்கே மதிப்பெண். பத்து செகண்டுக்கு மேல யோசித்தால் எல்லாரும் இதற்கு விடை சொல்லிடலாம் ; ஆனால் டி. வி. நிகழ்ச்சியில் உடனே சொல்பவரே வெற்றி அடைவார். இது போன்ற வினாக்கள் என் புரோக்கிராமில் இருந்ததால் சுறுசுறுப்பானவர்கள் வெற்றி பெற்று நிகழ்ச்சிக்கு சுவையைச் சேர்த்தார்கள்.
ஆடியோ சுற்று: ஒலிச்சுற்று என்றும் இதனை நான் குறிப்பதுண்டு. பொதுவாக யாரேனும் பாடியதை வினாவாகக் கேட்பார்கள். பாட்டு என்ன ? பாடியது யார்? பாடலை எழுதியது யார் என்றெல்லாம் கேட்பதுண்டு. நான் இதிலே பேச்சுகளையும் இடம்பெறச் செய்தேன். இரண்டு மூன்று பிரபலங்கள் பேசியதை எடிட் செய்து இணைத்து அதிலிருந்து கேள்விகள் கேட்பேன்.
ஒருமுறை ஐ. டி. பி. ஐ வங்கிக்காக நான் நடத்திய இண்டர் பேங்க் குவிஸ் நிகழ்ச்சியில் ஆடியோ சுற்றில் இந்தியாவின் பல மாநில மொழிகளை ஒலிக்கச் செய்து அது என்ன மொழி என்று கண்டு பிடிக்கச் சொன்னேன். அஸ்ஸாமீஸ் , பங்காளி, ஒரியா ,மராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகளை அன்று பலர் கண்டுபிடிக்கவே இல்லை. ( செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்ற தலைப்பில் வானொலிக்காக இதையே ஒரு தனி நிகழ்ச்சியாக அமைக்க அந்த வினாடி வினா எனக்கொரு தூண்டுதலாக அமைந்தது. )
இலக்கியம் தமிழ் இரண்டையும் இணைத்து “வினாடி வினா” நிகழ்த்தினால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் சொல்ல எனது தொலைக்காட்சி தயாரிப்பாளர் திருமதி புவனேஸ்வரி சந்திரசேகர் அதற்கு உடனே ஒப்புதல் தந்தார். அப்படிப் பிறந்ததுதான் எனது “சொல் என்ன சொல்” என்ற தமிழ்ச் சொல் விளையாட்டுத் தொடர். அதிலிருந்து சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உதாரணத்திற்குச் சில கேள்விகள் .
அந்தப்புரத்தைப் பார்த்தால் ஆண்டவனின் நினைவு வரும் – இது ஒரு நான்கு எழுத்துத் தமிழ்ச் சொல்லுக்கான குறிப்பு.
குத்துகின்ற மேலாடை குழம்புக்கும் உதவும். – இது ஐந்து எழுத்துச் சொல்லுக்கான குறிப்பு.
வாசிக்கவும் செய்யலாம் வாரி முடியவும் செய்யலாம்.- மூன்று எழுத்துச் சொல்லுக்கான குறிப்பு.
காவியுடை தரித்த வேந்தரிவர் நம்புங்கள். ( இந்த வாக்கியத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி , ஓர் ஏழு எழுத்து ஆளுமையைக் கண்டுபிடிக்க வேண்டும்.)
விடை என்னவா ? தொலைக்காட்சியில் இதற்கு விடை சொல்ல பதினைந்து நொடிகளே தரப்படும். எளிதாக நீங்களே கண்டுபிடித்து விடலாம். இதைப் போல ,புதிர்க்கட்டம், பழமொழிச் சுற்று, ஒரு சொல் பலபொருள் சுற்று, தமிழ் இலக்கண இலக்கிய சுற்று எனப் பலவகைகள். அனைத்துக்கும் வரவேற்பு அதிகரிக்க மேலும் புதியதாக ஏதேனும் செய்ய விரும்பினேன்.
பல பத்திரிக்கைகளில் அக்காலத்தில் இடம் பெற்றுவந்த “கிராஸ் வேர்ட்” புதிரை தொலைக்காட்சியில் நடத்த நினைத்தேன். ஆனால் அதில் பல சவால்கள் இருந்தன.
முதல் சவால் :குறுக்கெழுத்துப் புதிரை இதழ்களில் விடுவிப்போர் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக்காட்சியிலோ ஒரு சில நிமிடங்களுக்குள் அவர்கள் பதில் சொல்லவேண்டும். எனவே கேள்விகள் எளிமையாக அமையவேண்டும். எனினும் அதற்காக “ கம்பராமாயணத்தை எழுதியது யார்? இரண்டெழுத்து பூனையின் இரண்டெழுத்து எதிரி எது?” போன்ற நகைப்புக்கு இடம் தரும் கேள்விகளையும் கேட்க இயலாது. அரை நொடிக்குள் பொறிதட்டி பதில் சொல்லக் கூடிய “பளிச்” கேள்விகளைத் தயார் செய்வது மிகக் கடினம்.
இரண்டாவது சவால்: குறுக்கெழுத்துக் கட்டத்தை தயார் செய்வது. நான்கு அணிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எல்லோருக்கும் சுற்றுகள் சமமாக இருக்கவேண்டும். மொத்தம் பதினாறு கேள்விகள் நான்கு சுற்றுக்கள் என வைத்துக் கொண்டால் , ஒவ்வொரு சுற்றிலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய சொற்களின் எழுத்தெண்ணிக்கை ஒரே அளவாக அமையவேண்டும். ஒரு சுற்றில் முதல் அணிக்கான விடை நான்கு எழுத்து கொண்ட சொல்லாக அமையும் என்றால் ,மற்ற மூன்று அணிகளுக்கும் அதே போன்றுதான் அமையவேண்டும். இல்லையென்றால் “அவுங்களுக்கு ஈஸி எங்களுக்கு கஷ்டம்” என்று குறை சொல்லிவிடுவார்கள். இத்தகைய விமரிசனம் வராமல் கவனமாக இருக்கவேண்டும். அக்காலத்தில் எங்கள் நிகழ்ச்சி பாப்புலர் ஆக இருந்ததால் இதை கவனத்தில் கொண்டோம். அப்படியும் சில எதிர் மறைக் கடிதங்கள் எதிரொலி நிகழ்ச்சிக்கு வந்துள்ளன.
மூன்றாவது சவால்: இப்போதுள்ள தொழிநுட்பம் அப்போது கிடையாது. “நேரடி” நிகழ்ச்சியாக எடுக்கும் போது பலகையில் எழுதி அழித்துக் கொண்டிருக்கமுடியாது. எனவே ஒரு “மேக்னேடிக் பலகை “ யில் எழுத்துக்களை ஒட்டுமாறு செய்தோம். அணியினர் பதில் சொன்னவுடன் ஒரு அசிஸ்டெண்ட் அந்த எழுத்தைப் பலகையில் ஒட்டுவார். தவறென்று குவிஸ் மாஸ்டர் சொன்னால் அதை எடுத்துவிடுவார் ; அடுத்த அணிக்கு வாய்ப்பு செல்லும். (சில ஆண்டுகள் கழித்து நான் தொலைக்காட்சியிலும் , வேறு சேனல்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது கம்ப்யூட்டர் உதவியில் இவையெல்லாம் மிக எளிதாகிவிட்டன,)
நான்காவது சவால்: ஒரு குவிஸ் நிகழ்ச்சி சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நடக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக இருக்க வேண்டிய இரண்டு விஷயங்கள், கேள்விகளும், பங்கேற்பவர்களும்; கேள்விகளை நான் தயார் செய்துவிடுவேன். பங்கேற்பவர் திறமையை எப்படி கண்டறிவது? இதற்காகவும் நான் தயாரிப்பாளரிடம் விவாதித்து ஒரு தீர்வு கண்டேன்.
தொலைக்காட்சியிலே குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பெற விரும்புவோர்க்கு எங்கள் அறிவிப்பின் மூலமாகவே அழைப்பு அனுப்பி அவர்களுக்குள் போட்டி வைத்து அதில் முதல் எட்டு இடங்களில் வந்தவர்களை நான்கு அணிகளாக அமைத்தோம். பிறகு போட்டியில் அறுபது விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களை பார்வையாளராக அமரவைத்தோம். இதனால் அணிகள் சொல்லாத சில கடினமான விடைகளையும் பார்வையாளர்கள் சொல்லிவிட்டனர். நிகழ்ச்சி சூப்பர் சக்ஸஸ்.
(பார்வையாளர்கள் உறங்க வந்த போர்வையாளர்கள் அல்ல: அவர்களும் பதில் சொல்வார்கள் – என்பது எனது பாப்புலர் டேக் லைன்)
“குறுக்கும் நெடுக்கும் “ என்பது எங்கள் நிகழ்ச்சியின் பெயர். தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் இதை நடத்தினேன்.
தூர்தர்ஷனில் ( அது அரசாங்க அமைப்பு என்பதால்) இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எனது அடுத்த தயாரிப்பாளர் திரு டி. கே. அஸ்வினிகுமார் . சிறந்த இலக்கியப் படைப்பாளியும், தாகூர் தொடங்கி பல வங்காள எழுத்தாளர்களைத் தமிழில் மொழிபெயர்த்தவருமான திரு. த. நா. குமாரசுவாமியின் புதல்வர். அவர் வானொலியில் பணிபுரிந்த காலத்திலிருந்தே என் நண்பர்.
நிகழ்ச்சிப் பொறுப்பேற்றவுடன் அவர் என்னை அழைத்தார். “ விவிஎஸ் ! பதினைந்து நாட்களுக்கு ஒரு குவிஸ் நடத்த வேண்டும். நீங்களே தொடர்ந்து குவிஸ் மாஸ்டராக இருக்கவேண்டும். நீங்க பல குவிஸ் நடத்தி இருக்கீங்க .. அவை போல இல்லாமல் வேறு ஏதேனும் புதியதாகச் செய்யவேண்டும். யோசித்துச் சொல்லுங்கள் “ என்றார்.
ஒவ்வொரு குவிஸ் நிகழ்விலும் வெவ்வேறு வித்தியாசமான சுற்றுக்களைப் புகுத்தி இருக்கிறேன். புதிர்கட்டம், சொல் என்ன சொல் , கண்ணாமூச்சி , சரியா தவறா, வாக்கியச் சுற்று, ஒலிச் சுற்று, (ஆடியோ), படச் சுற்று {வீடியோ) , குறுக்கெழுத்து, என்று பல வகைகள் . இவற்றை எல்லாம் தாண்டி வேறென்ன புதிதாக செய்ய முடியும் ?
அஸ்வினி குமார் சொன்னதை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவந்து யோசித்துப் பார்த்தேன். “ ஏதாவது ஸ்பெஷலா செய்யணும் விவிஎஸ் .. வித்தியாசமா இருக்கணும்.. அதாவது ஒவ்வொரு குவிஸும் வித்தியாசமா இருக்கணும் “ என்ற வார்த்தைகள் மனத்துள் ஓடியன.
அடுத்த வாரம் அவரிடம் சென்று “இதோ நீங்கள் கேட்ட ஸ்பெஷல் குவிஸ் “ என்று ஒரு “ முன் மாதிரியை” (ஃபார்மட் ) அளித்தேன்.
அது என்ன ஃபார்மட் ? அப்புறம் என்ன ஆச்சு ?
அடுத்த இதழில் பார்க்கலாம். சரியா !
