கவிஞர் மாயவநாதன் திரைப்பட பாடல்கள் | MAYAVANATHAN Hits | Evergreen Tamil Old Songs - YouTube

இந்த மாதக் கவிஞர் பூலாங்குளம் மாயவனாதன்

  • தண்ணிலவு தேனிறைக்க (படித்தால் மட்டும் போதுமா)
  • நித்தம் நித்தம் (பந்த பாசம்)
  • என்ன கொடுப்பாய் (தொழிலாளி)
  • அந்தி வெயில் (பூம்புகார்)
  • கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
  • சித்திரப்பூவிழி வாசலிலே (இதயத்தில் நீ)
  • காவிரிப் பெண்ணே வாழ்க
  • பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே (என்ன தான் முடிவு)
  • அழகு ரதம் பிறக்கும் (கற்பூரம)
  • அய்யனாரு நிரஞ்ச வாழ்வு கொடுக்கணும் (காவல் தெய்வம்)
  • தனக்கு தனக்கு என்று ஒதுக்காதே (மகிழம்பூ)
  • மல்லிகை பூப்பொட்டு கண்ணனுக்கு (தாலாட்டு)
  • கந்தனின் தேரோட்டம் ((தேரோட்டம்)
  • மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க (திருவருள்)

திரையுலகில் சில காலமே வலம் வந்தாலும், இது போன்ற,  அழியாப் புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர்.

ஒன்று பட்ட நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள பூலாங்குளம் என்ற கிராமத்தில் இருந்து வந்த இந்தக் கவித் தென்றல்,   இள வயதிலேயே மறைந்து போனது மிகத்துயரமான ஒன்று.

மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன். விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன். கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பாடலாசிரியர்.

விளம்பர வெளிச்சம் இல்லாமல் இருட்டுக்குள்ளே மறைந்து அல்லது மறைக்கப்பட்டு, அடையாளம் இல்லாமல் அடங்கிப் போன ஏராளமான திறனாளர், நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.
சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு.

மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.

அவரின் பாடல்களின் கவிநயம்,  கவியரசு பாடல்களுக்கு இணையாக இருக்கும்.

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு

அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது

நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது

நீதியே நீ இன்னும் இருக்கிறாயா 

இல்லை நீயும் அந்தக்கொலைக் காலத்தில் உயிர் விட்டாயா

அந்தி வெயில் பட்டு உடல் பொண்ணாகட்டும்

கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ?

சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ?

பொங்கி வரும் மலைகளின் முதல் இரவோ? வண்ணப்

பூவோடு மாவிலைத் தோரணமோ?”

 

 

முத்துநகைப்- – – பெட்டகமோ
முன்கதவு- – – – – ரத்தினமோ

முத்துப்பற்களின் புன்சிரிப்பு வாய் என்ற பெட்டகத்திலிருந்து வருவதாகவும்,அந்த
பெட்டகத்திற்கு, ரத்தின நிறமமைந்த இதழ்கள் கதவுகளாகவும், உள்ளதாகவும் உவமையழகில்உருவாக்கிய வரிகளிவை.

“இதயத்தில் நீ” திரைப்படத்தில் கவிஞர் மாயவநாதன்  – “சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ” என்ற பாடல்.

காதலியிடம் தோழி அவள் காதலிக்கும் நாயகனைப் பற்றி அவர் எப்படிப்படவர்? என்று கேட்கிறார். காதலிக்கு வெட்கம் மேலிடுகிறது. வெட்கத்தால் பதில் வர மறுக்கிறது. அதைப் புரிந்து கொண்ட தோழி அவர் இப்படியிருப்பாரா? அப்படியிருப்பாரா? என்றெல்லாம் கேட்டு அவளிடமிருந்து எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்கிறாள்.

“சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ? – இந்தக்

கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ?

யார் நின்றவரோ?  யார் வந்தவரோ?  இதற்கு காதலி பதில்  –

தென்றல் அழைத்துவரத் தங்கத்தேரினில் வந்தாரே

புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே  – இடம் தந்த என் மன்னவரே

இப்போது தோழி காதலியைப் பார்த்து இப்படி கேட்கிறார்.

கட்டழகினில் பாதி கம்பன் மகனுடன் ஒட்டி இருந்தவரோ? – இந்த

பட்டு உடலினைத் தொட்டணைக்கும் கலைக் கற்றுத் தெரிந்தவரோ? – உனை

மட்டும் அருகினில் வைத்து தினம் தினம் சுற்றி வருபவரோ? – நீ

கற்றுக் கொடுத்ததை ஒத்திகைப் பார்த்திடும் முத்தமிழ் வித்தகரோ?

கலை முற்றும் அறிந்தவரோ? (இதற்கு காதலி இல்லை என்பது போல் தலையசைப்பார்)

காதல் மட்டும் தெரிந்தவரோ? (இதற்கு காதலி ஆம் என்பது போல் தலையசைப்பார்)

ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து இலக்கிய நயத்தோடு புனைந்திருப்பார் கவிஞர் மாயவநாதன்.

தமிழக அரசு விருது கொடுக்கத் தவறிய பாடல் இது என்றே கூறலாம்.

“என்னதான் முடிவு” திரைப்படத்தில்,

“பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே – செய்த

பாவமெல்லாம் தீருமுன்னே இறக்கவைக்காதே

பாவத்திற்கும் கூலிதன்னை நிறுத்தி வைக்காதே – எனைப்போல்

பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே” என்று மிக அழுத்தமாக எழுதி இருப்பார்.

படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும்,

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னி மகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்,

என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல்.

விண்ணளந்த மனம் இருக்க.

மண்ணளந்த நடை எடுக்க

பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்

ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்

அழகியல் ,உணர்ச்சி, வடிவம் , கருத்து  என எல்லாமே இந்த வரிகளில் உள்ளன

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ,  என்ற பாடலில்,

இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது

குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது

காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது

மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்று கூறுவார்.

காதலை ஒரு பூவாக உருவகம் செய்தது. அருமையான வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பாடல் என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..

கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா…உவமை அழகு.  அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில் கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பூம்புகார் திரைப்படத்தில் மாதவியிடம் இருந்து நீண்ட காலம் கழித்து நல்ல புத்தியோடு திரும்பி, கண்ணகியிடம் கோவலன் வருகின்றபோது, பின்னணியில் கே.பி சுந்தராம்பாள் குரலில் கணீரென்று ஒலிக்கும் ஒரு பாடல்,

தப்பித்து வந்தானம்மா

தன்னந்தனியாக நின்றானம்மா

காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்

தப்பித்து வந்தானம்மா

ஆகா என்ன அருமையான வரிகள். காலம் தவறு செய்யும் எல்லோருக்கும், ஒரு பாடம் கற்பிக்கும் அது மாபெரும் அடியாக இருக்கும்… அந்த அடியைத் தாங்க முடியாது… அப்போது தப்பித்து ஓடத் தான் தோன்றும்.

ஒரு கலகலப்பான விஷயம்.

மறக்க முடியுமா எனும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகச் சென்றார் மாயவநாதன். சற்று தாமதம் ஆகிவிட்டது. வழக்கமாக அமைத்த இசைக்கு தத்தகாரம் போட்டுக் காட்டுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் அன்று பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி, பாடலாசிரியர் தாமதமாக வந்ததால், வேடிக்கையாக, தத்தகாரம் சொல்லாமல் கவிஞரின் பெயரையே அவர் உருவாக்கிய இசைக்கு வரிகளாக,  மாயவநாதன் ….மாயவநாதன்…. மாயவநாதன்….. என்று பாட,  உடனே கவிகளுக்கே உரிய கவி கோபம் இவருக்கு வந்துவிட ,”பாட்டு எழுத முடியாது”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.

பின்னர் அப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய திரு  கருணாநிதி ,  அப்பாடலை, காகித ஓடம் கடலலை மேலே போவதைப்போல மூவரும் போவோம் என்று எழுதினார். இப்படி கோபித்துச் சென்றது கவிஞர்களின் இயல்பு. வித்யா கர்வம் என்றுஅதைச் சொல்வார்கள்.

கவிஞர் நா.காமராசன் தன்னுடைய நூல் ஒன்றில் மாயவநாதனை,  படிக்காத இந்த பாமர விவசாயி தனக்குள்ளே, கவித்துவம் நிறைந்தவனாக இருந்தான்.
கவிஞர் கண்ணதாசன் ஒருவரே கவிஞர் என்று அறியப்பட்ட காலம் அது. அவரது பாடல்களுக்கு ஈடும் இணையும் இல்லை. எவரும் அவரைப் போல எழுதி இனிமேல் சாதிக்க முடியாது என்று இருந்த காலம் அது. கவியரசர் பாடலை தவிர வேறு எவருடைய பாடலும் அங்கீகரிக்கப்படாத காலம் மாயவநாதன் வாழ்ந்த காலம்.   அந்தக் காலகட்டத்தில் அழியாத பாடல்களை தந்தவர், கவிஞர் மாயவநாதன்.

காவிரிப் பெண்ணே வாழ்க

உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

பூம்புகார் படத்தில் இவர் எழுதியது, கானல் வரிப் பாடல் என்று  பாடப் புத்தகத்தில் பள்ளிக் காலங்களில் புரியாதது இந்தப் பாடலில் எளிமையாக்கிக் கொடுத்தது. சமீபத்தில் சிலப்பதிகாரம் கண்ட கானல் வரிகளை அந்த மருதத் திணை, நெய்தல் திணை என்று பாகுபடுத்திப் பார்க்க இப்போது புரிகிறது.  இதனை, தவறாகப் புரிதல் நிலை என்பார்கள். .

எப்படியும் இந்தப் பாடல் காவியத்திற்கே திருப்பு முனையாயிற்று. கோவலன் , காவிரியைச் சோழன் காதலியாகப் பார்த்து சிவன் கங்கையையும் கொண்டும் கன்னிக்குமரியையும் இணைத்ததால் கசப்பேதும் உனக்கில்லை …அது உன் பெண்மைஎனும் பெருமையின் சிறப்பு என மாதவி தான் கணிகை குலத்தவள் என்றே இடிக்கிறான் என்றுணர்ந்து பதிலடி எடுத்து வைப்பதை…..இங்கு கவிஞர் மாயவநாதன் கூறுகிறார்.

மாயவநாதனின் கவியாளுமை மிகச் சிறப்பு.

“நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? – நெஞ்சில்

நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?

கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?

குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?”

என்ற பாடல்,

அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.

பாலும் பழமும் – திரைப்படத்தில் ஒரு பாடல். (படத்தில் இடம் பெறவில்லை)

“பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு

பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு

எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு

இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?”

வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். “இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?” அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.

என்னதான் முடிவு – திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

“பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே – செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே”

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார். நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.

திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.

1936 ஆம் ஆண்டு பிறந்து, .1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே வாழ்ந்து,  தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன். “டெல்லி டூ மெட்ராஸ்’ – திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

மீண்டும் அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி.