ஒடிஸி – ஒரு முன்னோட்டம்
நம் இந்தியாவில் மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தை வியாசர் எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மகாபாரத்தில் வரும் கண்ணனை மையமாகக் கொண்டு பாகவதம் என்ற நூலைப் படைத்தவரும் அவரே !


அதுபோலத்தான் ஹோமரும். அவர் எழுதிய இலியட் என்ற இதிகாசம் கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் நடைபெற்ற பத்தாண்டுப் போரின் இறுதிக்கட்டத்தை விவரிக்கிறது. இலியட்டின் முக்கிய நாயகன் அகிலியஸ் . அவனுடன் இணைந்து போரிட்ட பல முக்கிய தளபதிகளில் ஒருவன் ஓடிசியஸ். அகிலியசின் மரணத்திற்குப் பிறகு டிராய் நகரை தனது ராஜதந்திரத்தால் -டிராஜன் குதிரையால் மண்ணோடு மண்ணாக்கி அழித்தவனும் அவன்தான்.
இலியட் போருக்குப் ஓடிசியஸ் தன் சொந்த நாடான இதாகாவிற்குத் திரும்புவதற்கு பத்து ஆண்டுகளாகின்றன. அதற்கு முக்கியக் காரணம் கிரேக்கர்களை ஆதரித்த கடவுளர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியதுதான். அந்தப் பத்து ஆண்டுகளில் அவன் மேற்கொண்ட கடல் பயணத்தைப் பற்றியும் அவன் சந்தித்த ஆபத்துக்கள் பற்றியும் அவற்றை வெற்றி கொள்ள அவன் செய்த வீர தீர பராக்கிரமங்களைப் பற்றியும் விவரிப்பதே ஹோமரின் ஒடிஸி என்ற இதிகாசம்.
கிரேக்க இதிகாசமான இலியட் கதையை மையமாக வைத்து ஷேக்ஸ்பியர் எழுதிய டிராய்லஸ் மற்றும் கிரெசிடா ‘ என்ற காதல் காவியத்தைப் பற்றி சிலவரிகள்:
ஜுலியஸ் சீசர், ஆண்டனி யும் கிளியோபாட்ராவும் போன்ற ரோமானிய சாம்ராஜ்ய பாத்திரங்களை நாடக மாந்தர்களாக உலவ விட்ட ஷேக்ஸ்பியர் ஹோமரின் இலியட் கதையை எப்படி விட்டு வைக்க முடியும்? அந்த முயற்சியில் வந்ததுதான் டிராய்லஸ் மற்றும் கிரெசிடா. டிராய்லஸ் டிராய் நாட்டு சக்கரவர்த்தி பிரியமின் இன்னொரு மகன். இந்த மகன் உயிரோடிருக்கும் வரை டிராய் நாட்டைக் கைப்பற்ற முடியாது என்ற கடவுளரின் வரத்தை அறிந்துகொண்ட மாவீரன் அக்கிலியஸ் டிராய்லசை அவன் வணங்கும் தெய்வத்தின் திருக் கோவில் வளாகத்திலேயே கொல்கிறான். அதுவே அக்கிலியசின் மரணத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டது. இந்த நாடகத்தில் அக்கிலிஸின் கோபத்தையும் கிரேக்க படையில் இருந்த பிளவைப் பற்றியும் விவரமாக எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர்.
இனி ஓடிஸி பிறந்த கதையைப் பார்ப்போம்.
டிராய் நகரத்தை வீழ்த்திய பிறகு அங்கிருந்த அரச மகளிர் அனைவரையும் அடிமைகளாக்கி தங்கள் கிரேக்க நகரத்திற்கு கப்பலில் இழுத்துச் செல்லும் அவல நிலையைக் கண்ணில் காட்டி சோகத்துடன் முடித்திருப்பார் ஹோமர் தன் இலியட் என்ற காவியத்தை!
கப்பலில் ஏற்றப்பட்ட அந்த டிராய் நாட்டின் ராணிகளும், இளவரசிகளும் கண்ணீரும் கம்பலையுமாக தங்கள் பிரியமான டிராய் நகருக்கு விடை கொடுத்தனர்:
எங்கள் அருமை டிராய் நகரமே! நீயா அழிந்து விட்டாய்? எவ்வளவு பெரிய நகரம் நீ? தற்போது சிவப்பு நெருப்பு கோளங்கள் தான் அங்கிருக்கின்றன. எல்லா இடங்களிலும் தூசிப்படலம் எழும்பி இருக்கிறது. புகை போல படர்ந்து இருக்கிறது. மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எதுவும் கண்ணிற்கு புலப்படவில்லை. நாமும் ஒருவர் ஒருவராக மறைகிறோம். டிராய் நகரம் மீண்டு வர இயலாத இடத்திற்கு போய்விட்டது.
கிரேக்க கப்பல்கள் எங்களை அடிமைகளாக்கி இழுத்துச் செல்ல காத்துக் கொண்டிருக்கின்றன
போய்வா எங்கள் பிரியமான டிராய் நகரமே! போய் வா!
எங்கள் குழந்தைகள் தவழ்ந்த இனிய பொன் நாடே! எங்களுக்கு விடை கொடு! டிராய் நகரமே எங்களுக்கு விடை கொடு !
இந்த சோகத்திற்குப் பின் துவங்குகிறது ஒடிசி!
அதேசமயம் கிரேக்கப் படையினரிடம் வெற்றிக் களிப்புகொந்தளித்துக் கொண்டிருந்தது .
வெற்றியின் மமதை பத்து ஆண்டுகளாக போரிட்டு வெற்றி பெற்ற ஒவ்வொரு கிரேக்க வீரனிடமும் இருந்தது. டிராஜன்களை கண்ட இடங்களில் எல்லாம் கொன்று குவித்தனர். மாடமாளிகைளை எரித்து சாம்பலாக்கினர். இஷ்டப்பட்ட பெண்களை துரத்தி அனுபவித்தனர். வெற்றியின் வெறிக் கூச்சல் கிரேக்க கப்பல்கள் அனைத்திலும் நிரம்பி வழிந்தது. வெற்றிக் களிப்பில் அவர்கள் தங்களுக்கு உதவிய தெய்வங்களையும் கடவுள்களையும் சுத்தமாக மறந்து விட்டார்கள்
கடவுள் அதினியையும் சமுத்திரராஜன் பொசைடனையும் அவர்கள் மறந்தது மட்டுமில்லாமல் அவமரியாதையாகவும் பேசத் தொடங்கினர். தங்கள் வீரத்தாலும் விவேகத்தாலும் தான் வெற்றி கொண்டோம் என்ற எக்களிப்பு அனைவரிடமும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் கடவுளர்களுக்கு கொடுக்கும் பலியையும் தர அவர்கள் மறந்து விட்டார்கள். இல்லை , இனி அதற்கு அவசியமில்லை என்று எண்ணி விட்டார்கள்!
விளைவு, கடவுளர்களின் கோபம் இப்பொழுது கிரேக்கப் படை மீது படர ஆரம்பித்தது. கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து கடவுள்களும் தற்போது அவர்களுக்கு விரோதிகள் ஆனார்கள். அவர்களின் கோபம் தலைக்கு மேல் ஏறி கிரேக்கர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்ல இயலாத அளவிற்கு அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.
இதற்கு முகாந்திரமாக ஒரு கதை உண்டு.
மறைந்த டிராஜன் சக்கரவர்த்தி பிரியமின் மகள் இளவரசி கசந்திரா. அவளுக்கு நாளைய நடப்பை அறிந்து குறி சொல்லும் திறமையை அப்பல்லோ கடவுள் அவள் மீது கொண்ட காதலால் அளித்திருந்தார். ஆனால் அவள் அப்பல்லோவை காதலிக்க மறுத்ததால் அவளை பைத்தியக்காரி ஆக்கி அவள் சொல்லும் நாளைய நடப்பை யாரும் நம்ப முடியாத அளவிற்கு செய்துவிட்டார் அப்பல்லோ கடவுள். டிராய் நாட்டு மன்னனிடமும் மக்களிடமும் மரக் குதிரைக்குள் எதிரி வீரர்கள் ஒளிந்து இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறினாள் கசாந்திரா. பைத்தியக்காரி என்று அவள் பேச்சை யாரும் கேட்கவில்லை .
விளைவு டிராய் நகரமே அழிந்தது .
கிரேக்கர் டிராய் நாட்டைச் சூறையாடும் போது இளவரசி கசாந்திரா அதினா கடவுளின் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தாள் . கிரேக்க தளபதி சிறிய அஜாக்ஸ் அவளைக் கோவிலிலிருந்து தரதர என்று அலங்கோலமாக இழுத்துக் கொண்டு வந்தான். கிரேக்க நாட்டு எந்த வீரனும் இப்படி ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதை தடுக்கவில்லை. அஜாக்ஸ் அவளைத் தன் சேனாதிபதி அகெம்னன் அனுபவிக்கப் பரிசாக கொடுத்தான்.
தன்னை அவமானப்படுத்திய கிரேக்கப்படையை அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்ட கசாந்திரா தான் மிகவும் மரியாதையுடன் பூஜிக்கும் தன் ஆருயிர் கடவுள் பொசைடனை மானசீகமாக அழைத்தாள் . கடலுக்கு அதிபதி சமுத்திர ராஜன் பொசைடனிடம், தன்னை அவமதித்து தன் நாட்டைக் கொளுத்திய கிரேக்கர்களை பழிவாங்கும்படி வேண்டுகோள் விடுத்தாள்.
“ஏ சமுத்திர ராஜனே! உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்! தங்களின் நாட்டுக்குத் திரும்பக் கப்பலில் செல்லும் கிரேக்கர்களுக்கு மிகவும் கசப்பான பயணத்தை கொடுத்துவிடு! உன் கடல் பிராந்தியத்தைப் பிரளயமாக்கு! சூறாவளிக் காற்றை அவர்கள் மீது ஏவு! கோரப்புயலை அவர்கள் கப்பல்கள் சந்திக்கட்டும். கடலின் ஆழத்தில் அந்த வெறிபிடித்த கிரேக்க வீரர்கள் மூச்சுத் திணறி மடியவேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள்.
தனது பிரிய சகியின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்களித்தார் பொசைடன். அதன்படி தன்னிடம் உள்ள அதிபயங்கரமான ஆயுதங்களை வீசினார் பொசைடன். புயல், சூறாவளி,சுழற்காற்று போன்ற அனைத்தையும் தங்கள் தாயகத்திற்கு திரும்பச் செல்லும் கிரேக்க கப்பல்கள் மீது ஏவினார்.
அதன் விளைவு அதி பயங்கரமாக இருந்தது!
எந்தக் கைகளால் கசாந்தராவை இழுத்து வந்து அவமானப்படுத்தினானோ அந்த அஜாக்ஸ் சென்ற கப்பலை புயலின் தாண்டவத்தில் அலைக்கழித்து தூள் தூளாக உடையும்படி செய்தார். உடைந்த கப்பலிலிருந்து குதித்த அஜாக்ஸ் கரை அருகே இருந்த ஒரு பாறையைப் பிடித்துக் கொண்டு, தன்னை எந்தப் புயலும் அழிக்க முடியாது என்று கொக்கரித்தான். அது பொசைடனின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது . அவர் அனுப்பிய பேரலைகள் அந்தப் பாறையை உடைத்து அஜாக்சை கடலின் அடிவாரத்திற்கு இழுத்துச் சென்று கொடூரமாக கொன்றன .
கிரேக்கப் படையின் முக்கிய தளபதி அகம்னன் கூட வந்த அனைத்து கப்பல்களையும் புயலில் திசை தடுமாறி ஒன்றோடு ஒன்று மோதி அழியும்படி செய்தார் பொசைடன்.
ஹெலனை மீட்ட மகிழ்ச்சியில் சென்று கொண்டிருந்த மெனிலியஸ் கப்பலைக் கிரேக்க நாட்டிற்குப் பதிலாக எகிப்து கடற்கரையில் தரை இறங்கும்படிச் செய்தார் பொசைடன்.
கிரேக்கப் படையில் அக்கிலிசுக்கு அடுத்த படியாக இருந்து வெற்றிக் கனியைப் பறித்துத் தந்த மாவீரன் ஓடிசியசும் பொசைடன் கடவுளின் தீட்சண்யப் பார்வையிலிருந்து தப்பவில்லை. அவன் மற்ற கிரேக்க வீரர்களைவிட அதிக துன்பத்திற்கு ஆளாயினான். பத்து ஆண்டுகளை டிராய்ப் போரில் செலவழித்துவிட்டு திரும்ப ஊருக்குப் போய் மனைவியையும் மகனையும் காணலாம் என்றிருந்தவனை கடவுளர்களின் சாபம் அவனை இன்னும் பத்து ஆண்டுகள் அவன் குடும்பத்திலிருந்து பிரித்து வைத்தது.
ஆனால் அந்தப் பத்து ஆண்டுகளில் அவன் சந்தித்த ஆபத்துக்கள் அதிலிருந்து அவன் மீள அவன் செய்த சாகசங்கள், கடவுளர்களின் உதவிகள் அனைத்தும் அவனை ஒரு மாபெரும் வீர புருஷனாக மாற்றிவிட்டது.
அந்த சாகசங்களை ஹோமர் 24 அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.
முதல் 9 அத்தியாயங்களில் ஓடிசியஸ் ஊரான இதாகாவில் அவன் மனைவியும் மகனும் அவனை 20 ஆண்டுகள் பிரிந்து வருந்தும் நிலையைக் விவரிப்பார். அவர் மகன் தன் தந்தையைதேடி திரும்ப சொந்த நாட்டிற்கு வந்துவிட்ட மற்ற கிரேக்க தளபதிகளான நெஸ்டர், மெனிலியஸ் போன்றவறைச் சந்தித்து தன் தந்தையைப் பற்றிய தகவல் அறிய முயலும் நிகழ்வுகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
அதன்பின் அடுத்த 8 அத்தியாயங்களில் ஓடிசியசின் திக் விஜயங்கள் பற்றிய விவரம் இருக்கும்.
அடுத்த 7 அத்தியாயங்களில் ஓடிசியஸ் தன் சொந்த ஊர் வந்த பின்னும் அவனுக்கு அங்கே இருந்த எதிர்ப்பை எப்படி சமாளித்து வெற்றி கொள்கிறான் என்பதை விளக்கியிருப்பார்.
நம் நாயகன் ஓடிசியஸை ரோம இலக்கியத்தில் யுலிஸஸ் என்றும் அழைத்தனர்.
கோமரின் பார்வையில் நம் ஓடிஸி பயணம் தொடரும்..
