(கண்ணனைக் கொல்லக் கம்சன் அனுப்பிய கேசி என்ற குதிரை வடிவம் கொண்ட அரக்கனைக் கண்ணன் கொல்கிறான்….)
கம்சன் புலம்பல்
பூதனை மாண்டாள், பின்னர்ப் போனபல் லரக்கர் மாண்டார்;
ஏதமே செய்யும் கேசி இன்றவன் கையால் மாண்டான்;
மீதமே உள்ளார் யாரோ? வெல்லுதல் கானல் நீரோ?
யாதினிச் செய்வன் நானே? யாதவன் தப்பித் தானே!
( ஏதம்- துனபம்)
கம்சன் திட்டம்
(தந்திரமாகக் கண்ணனையும், பலராமனையும் வடமதுரைக்கு வரச் செய்து , குவலயாபீடம் என்ற யானையை விட்டுக் கொல்லலாம் என்றும், அது தவறினால் பெரும் வலிமையும் ஆற்றலும் உள்ள சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களை விட்டுக் கொல்லலாம் என்றும் கம்சன் திட்டமிட்டான்)
முந்திநான் செய்த வற்றால் மூள்பயன் ஏதும் இல்லை.
வெந்திறல் அரக்கர் ஆற்றல் வீணென ஆன தந்தோ
தந்திர வழியில், நந்தன் தன்னிரு மிக்க ளோடு
வந்திடச் செய்வேன் இங்கு, மதுரையில் எளிதில் மாய்ப்பேன்
கூரிய கோட்டு வேழம் குவலயா பீடம் கொண்டு
நாரெனச் சிறுவன் மேனி நலிவுறக் கிழிக்கச் செய்வேன்
காரியம் தவறி விட்டால் கைகளால் நசுக்கிக் கொல்ல
யாருமே வெல்ல ஒண்ணா என்னிரு மல்லர் உள்ளார்
(தனுர் யாகம் செய்வதாகவும், அதைக் காண்பதற்குச் சிற்றரசனான நந்தன் தன் மக்களான கண்ணன், பலராமன் இருவருடன் வர வேண்டும் என்றும்,அவர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டுமென்றும் சொல்லி, யாதவர்களின் நண்பராகிய அக்ரூரர் என்பவரைக் கம்சன் அனுப்பி வைத்தான்)
நந்தனை மக்களோடு அழைத்து வர அக்ரூரரை அனுப்புதல்
வெல்வேந்தன் நான்செய்யும் வில்வேள்வி விழவிற்கு
நல்வேந்தன் சிற்றரசன் நந்தனவன் மக்களொடு
செல்வங்கள் திறையோடு சீர்கொண்டு வரச்சொல்லச்
செல்வீர்நீர் எனவுரைக்கச் சென்றாரே அக்ரூரர்
(வில்வேள்வி- தனுர் யாகம்)
அக்ரூரர் அழைப்பு
(கம்சன் ஆணையைக் கூறிய அக்ரூரர்,தனியே அழைத்து, அவன் வஞ்சகத் திட்டத்தையும் எடுத்துரைத்தார்)
அறம்தழைக்கும் அக்ரூரர் ஆணையினைக் கூறியபின்
புறமழைத்து வஞ்சகனின் பொல்லாத சூதுரைத்தார் .
நிறம்கறுத்த சின்னவனும் நெடுங்கலப்பை முன்னவனும்
திறங்கொழிக்கும் மன்னவனும் தேரேறிப் புறப்பட்டார்
(நெடுங்கலப்பை முன்னவன்- கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அண்ணன் பலராமன்)
கண்ணன் பிரிவினால் வருந்திய கோபியரின் கூற்று
பொற்றேர் ஏறிப் போவதுமேன் பொன்னே மின்னும் கருமணியே
நற்றேன் பிலிற்றும் குழலிசையை நாளும் பருகி உயிர்வளர்த்தோம்
உற்றே உனக்கே ஆளானோம் உன்னில் கலந்தோம் ஒன்றானோம்
எற்றே புரிவோம் இதுமுறையோ ஏங்கித் தவித்தல் எதுவரையோ
பெற்றம் கன்று புல்மறந்து பேத லித்து நிற்றல்காண்
அற்றார் துயர்கள் தீர்ப்பவனே ஆரோ உள்ளார் குறைகளைய
சிற்றில் சிதைத்து விளையாடிச் சிரித்து மகிழ யாருள்ளார்
முற்றம் நிறைந்த பால்வெண்ணெய் முழுதும் கொள்ள யாருள்ளார்
(பெற்றம். – மாடு / பசு)
வஞ்சி யர்கள் குழல்பின்னல் மறைந்து வந்து பிடித்திழுத்துக்
கெஞ்சிக் கொஞ்சிப் பேசியதைக் கிளிகள் சொல்லக் கேட்டிலையோ
மஞ்சு சிந்தும் மழைத்துளியும் வருந்தும் மடவார் கண்ணீரே
தஞ்சம் என்றே உனையடைந்த தைய லரைநீ எண்ணாயோ
கரிய முகிலின் நிறத்தினிலே கண்ணன் மேனிச் சிறப்பிருக்கும்
அரிய மலரின் இதழ்விரிப்பில் அழகன் குறும்பின் குறிப்பிருக்கும்
பெரிய மலையின் வீழருவி பிள்ளை முத்துச் சிரிப்பிருக்கும்
பிரியும் வேளை வந்துவிட்டால் பேதை எங்கள் தவிப்பிருக்கும்.
கண்ணன் கோபியரைத் தேற்றுதல்
கடமையைப் புரிவ தற்குக் கடிதுநான் போக வேண்டும்
மடமயில் அனையீர் நீவிர் வருந்துதல் விடுவீர், நெஞ்சத்
திடமுடன் இருப்பீர், மீண்டும் திரும்புவேன் விரைவில் என்று
கடல்வணன் உறுதி கூறக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
காற்றில் அசையும் மதுரையின் கோட்டைக் கொடிகள் கண்ணனை வரவேற்றல்
ஆற்றலே, அருளே, வாவா! அறிவதன் பொருளே வாவா!
சாற்றிய மறையே வாவா! தண்மலர் நறையே வாவா!
போற்றிடும் மதுரை என்னும் புகழ்நகர் வாவா!, என்று
காற்றினில் கோட்டை உச்சிக் கொடிகளும் அசைந்து கூறும்!
தனுர் யாக வில்லை முறித்தல்
வில்வேள்வி இயற்றுமிடம் போனார், அங்கு
மின்னுமொளிர் மணிபதித்த வில்லைக் கண்டார்
நல்வேலி போல்வீரர் சுற்றி நின்றார்
நண்ணியவர் தமையண்ணன் தாக்கித் தள்ள,
வல்வேழம் இளையவனும் வில்லெ டுத்து
வாகாக நாணேற்றி முறிந்தெ றிந்தான்
கொல்வாளை ஓங்கிவந்த வீரர் எல்லாம்
குலைவுறவே தாக்கிப்பின் கொன்று போட்டார்.
கம்சனின் கனவில் வந்த தீக்குறிகள்
கொலைசெய்யும் கொடுங்கம்சன், தீக்குறிகள் காட்டிக்
குலைநடுங்க வைக்கின்ற கனவுபல கண்டான்.
தலையற்ற தன்னுடலைக் கண்ணாடி தன்னில்
தவிப்புடனே தான்நோக்கும் தீக்கனவு கண்டான்;
நிலையற்றுப் போகுமவன் வாழ்வென்று காட்டும்
நிழல்தனிலே ஓட்டைவிழும் நெடுங்கனவு கண்டான்;
அலைகின்ற கழுதையதன் மீதேறி ஊரை
ஆடையின்றிச் சுற்றுவதாய் இழிகனவு கண்டான்!
( தொடரும்)

கண்ணன் கதையமுது படிக்க படிக்க தெவிட்டா கவி அமுது
LikeLike