உயரங்களும் கோபுரங்களும்!
உலகத்தின் உயரமான கோபுரங்களில் (Tower என்பதன் தமிழாக்கம் ‘கோபுரம்’ என்கிறது கூகிள் சாமி) ஒன்றான கனடாவின் “சி.என் கோபுரம்” பார்க்கச் சமீபத்தில் சென்றேன். அதற்கு முன், ‘கோபுரம்’ என்றாலே நம்ம ஊர் கோபுரங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. தஞ்சைப் பெரிய கோயில், ஶ்ரீவில்லிபுத்தூர், சிதம்பரம் கோயில்களின் கோபுரங்கள் வியக்க வைப்பவை. அவை கட்டப்பட்ட காலங்களில் எந்த மாதிரியான வசதிகள் இருந்தன? எப்படி பெரிய பாறைகளையும், கற்களையும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் சென்றார்கள்? அவ்வளவு உயரத்திற்கு சாளரங்கள் கட்டினார்கள் என்றால், அது எப்படி சாத்தியமாயிற்று என்றெல்லாம் தோன்றுகின்றன. இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், எதுவும் சாத்தியமே என்பதை நிரூபிக்கின்றன சி என் டவர் போன்ற கட்டடங்கள். மனதில் கோபுரங்கள் வேறு மாதிரியாக இருப்பதால், பழக்கத்திற்கு வந்துவிட்ட ‘டவர்’ என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று தோன்றுகின்றது.
ஓக்வில்லில் இருந்து, ரயிலில் பயணம் செய்து யூனியன் ஸ்டேஷன் அடைந்தோம். நம்ம ஊர் தாம்பரம், எக்மோர் மாதிரி அது ஒரு ரயில் நிலைய சந்திப்பு. 7 -8 பிளாட்ஃபாரங்கள், மின் தூக்கிகள் என மேலும் கீழுமாக அமைந்துள்ள மிகவும் பிஸியான ரயில் நிலையம். அதிலிருந்தே ‘ஸ்கை வாக்’ (1989) வழியே நடந்து, அழகிய கூண்டு போன்ற அமைப்புடைய ‘ஸ்கை டோம்’ நடைவழியைக் கடந்து, சி என்.டவரை அடைந்துவிடலாம். கூண்டின் கூரை கண்ணாடியால் ஆனது. அண்ணாந்து பார்த்தால் வானம் பார்த்துக் குத்திட்டு நிற்கும் சி.என் டவர் தெரியும். அவ்வளவு அருகிலிருந்து கிட்டத்தட்ட 1900 அடிகள் உயர டவரைப் பார்ப்பது பிரமிப்புதான் – வயதானவர்கள், கழுத்து வலியிருப்பவர்கள் கவனமாக முயற்சிக்கலாம். டவரின் அடிவாரத்தில் அழகிய மரங்கள், பூந்தொட்டிகள் (எல்லாம் கான்கிரீட் தரையின் மீதுதான்) என அழகாகப் பராமரிக்கிறார்கள்.
டிக்கட் கவுண்டரில் அமைதியான ஒழுங்குடன் கியூ – டிக்கட் வாங்கி, வரிசையில் நின்று, 10 முதல் 15 பேர் வரை மின்தூக்கியில் செல்லாம். அதிவேக மின்தூக்கிகள் தரைதளத்திலிருந்து, மேலே மெயின் பார்வை தளத்திற்கு (observation level) 58 நொடிகளில் – 22 கிமீ / மணி வேகத்தில் செல்கின்றன! ‘ஒரு நிமிடத்தில்’ கிட்டத்தட்ட ஆயிரத்தி அறநூறு அடிகள், ஒரு ஆட்டம் அசைவில்லாமல், நம்மை உயரத்திற்குக் கொண்டு செல்கின்றன. உலகத்திலேயே அதிக உயரத்திற்கு (346 மீட்டர்) கண்ணாடியில் தரை அமைக்கப்பட்ட மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன.
லிஃப்டிலிருந்து வெளியே வந்தால், வட்ட வடிவ பார்வையாளர்கள் தளம். முழுவதும் கண்ணாடிச் சுவர் – சுற்றிலும் டொராண்டோவின் எழில் மிகு கட்டடங்கள், சீட்டுக்கட்டு அடுக்கி வைத்தாற்போல! தூரத்தில் டொராண்டோ தீவுகள், ‘பில்லி பிஷப்’ டொராண்டோ நகர் விமான நிலையம், பாம்புகளாய் நெளிந்து செல்லும் ரயிவே லைன்கள், சாலைகளில் பலவண்ணங்களில் பூச்சிகளாய்க் கார்கள், தீவுகளையும் டொராண்டோவையும் பிரிக்கும் பெரிய ஏரி – கழுகுப்பார்வையில் ஓர் அழகிய, மறக்க முடியாத காட்சி!
பார்வையாளர் தளத்தின் கூரை கண்ணாடியால் – இது ரஸம் பூசப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி!- ஆனது. நடந்து செல்பவர்கள் தலைகீழாக, வித்தியாசமாகத் தெரிகிறார்கள். சுற்றிலும் அமர்வதற்கு வசதியாக மேடைகள். அங்கங்கே வட்ட வடிவ டிஸ்குகள் – எந்த மாதிரி செல் போனையும் அதன் மேல் வைத்தால் சார்ஜ் ஆகிவிடும் அதிசயம் (எடுக்கின்ற போட்டோக்களுக்கு, இரண்டு மூன்று தடவை சார்ஜ் செய்ய வேண்டியிருக்குமோ என்னவோ!).
10 – 15 மேஜை நாற்காலிகளுடன் ஓர் உணவகம் – எல்லாம் கிடைக்கும், ஆனால் விலை மட்டும் இரண்டு மடங்கு! அவ்வளவு உயரம் தூக்கி வந்து, கடை அமைத்துக் கொடுக்கிறார்ளே, அதற்கான விலை!
அப்படியே சுற்றிச் சென்றால் மறுபக்கம் சுவற்றில் கனடாவின் சீசன்கள் வண்ணங்களில் பெரிய எல்சிடி ஸ்கிரீன்களில் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன. அதற்குக் கீழே தரை கண்ணாடியால் ஆனது (Glass Floor) – அதிலிருந்து பார்த்தால், கீ ..ஈ.. ஈ..ழே சிறு புள்ளிகளாய்க் கார்கள், மனிதர்கள், சாலைகள் – கண்னாடியில் கால் வைத்து நடக்கவே, தயக்கமாக இருக்கும்! குழந்தைகளும், சில இளவட்டங்களும், பல பெரிசுகளும் கண்ணாடி மீது நடந்தும், கிடந்தும் போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தன! Back projection ஸ்கிரீன் போல, ஒளிரும் எல் சி டி ஸ்கிரீன் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டவர்கள் முகம் முழுவதும பரவசம்.
மூன்று முக்கியமான பார்வையாளர் இடங்கள் – Glass Floor, Outdoor Observation Terrace, (342 மீ உயரம்), Indoor Observation level (346 மீ உயரம்) – உள்ளன. இவை தவிர, ‘Edge Walk’ (2010) – மெயின் பாட் மேல், அதைச்சுற்றி நடப்பது. 356 மீ (1168 அடி) உயரத்தில் கைகளில் பிடித்துக்கொள்ளாமல் நடக்கலாம்! தலைக்கு மேல் உள்ள Head rail system டவரைச் சுற்றி வருகிறது. விசிட்டர்கள் இவற்றுடன் இணைக்கப் படுகிறார்கள் – அந்த உயரத்தில் டவரின் விளிம்பில் திறந்த வெளியில் நடக்கலாம்! இதயம் பலவீனமாக உள்ளவர்கள் தவிர்க்கலாம்!
சி.என். டவர் (CN Tower – Canadian National Tower) டொராண்டோ, Daவுன் Taவுனில் வானளாவிய கட்டடங்களுக்கு நடுவில் உயர்ந்து நிற்கும் ஒரு ஸ்தூபியைப் போன்ற கட்டடம். 1,815.3 அடி உயரம் (553.3 மீட்டர்); எங்கிருந்து பார்த்தாலும் தனித்து நிற்கும் வடிவம். பூமிக்கடியில் கிட்டத்தட்ட 50 அடி (15 மீட்டர்) ஆழத்திற்கு அத்திவாரம், அதன்மேல் அறுகோண வடிவில் தூண்கள். மாடிப்படிகள், மின் இணைப்புகள், தண்ணீர்க் குழாய்கள் எல்லாம் இந்த அறுகோணத்தின் உள்ளே நடுவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய முக்காலியைப் போன்ற அமைப்பின் மேல் இந்த டவர் அமைந்துள்ளது. மொத்தம் 8 தளங்கள்; அதில் 7 தளங்கள் ‘மெயின் பாட்’ எனப்படும். 8 வது தளம் ‘ஸ்கை பாட்’, கட்டடத்தின் உச்சி வரை! மூலைக்கொன்றாக ஒன்பது லிஃப்டுகள் உள்ளன.
‘கனடா ரயில்வே’ க்குச் சொந்தமான இடத்தில் 1973 ஆம் ஆண்டு தொடங்கி, 1976 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது சி.என்.டவர். தரைமட்டத்திலிருந்து, எப்படிக் கட்டப்பட்டது என்பதை, வருடம் வாரியாகப் புகைப் படங்களுடன் செல்லும் வழியில் வைத்திருக்கிறார்கள். 630,00,000 லட்சம் கனடியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டதாகக் குறிப்பொன்று கூறுகின்றது! டெலிகம்யூனிகேஷன், பருந்துப் பார்வையில் கனடவைப் பார்க்க, டூரிஸம், சுழலும் உணவகம் போன்றவற்றுக்காக இந்த டவர் எழுப்பப்பட்டதாம்!
வருடத்திற்கு இரண்டு மில்லியன் உல்லாசப் பயணிகள், பல நாடுகளிலிருந்தும் இங்கு வந்து செல்வதாகச் சொல்லப்படுகிறது.
செப்டம்பர் 11 ட்வின் டவர் தகர்க்கப்பட்ட போதும், G20 சம்மிட் போதும், 2020-21 கொரோனா தொற்றின் போதும் சி என் டவர் மூடப்பட்டது. 2021 ல் காற்றில் கண்ணாடி ஒன்று கழன்று விழுந்ததால், ஒரு முறை மூடப்பட்டது.
தரை தளத்தில் பெரிய கிப்ட் ஷொப் இருக்கிறது – பார்த்துவிட்டு வரலாம்!
ஏறிய வேகத்தில் தரையிறக்கிவிடும் மின்தூக்கிகளுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தோம்.
உலகிலேயே உயரமான டவராக இருந்த சி என் டவர், இன்று 10 வது இடத்தில் இருக்கிறது. துபாயின் புர்ஜ் கலீஃபா (828 மீ) முதலிடத்தில் இருக்கிறது! இப்படியே உயரங்கள் அதிகரிக்க, ஒரு நாள் அதிவேக மின்தூக்கியில், அருகில் இருக்கும் வேற்று கிரகத்திற்குப் பயணிப்போம் என்று தோன்றுகின்றது!





