
================================================================================
செப்டம்பர் 2023 ல் வெளியான சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் நான் இம்மாதச் சிறந்த சிறுகதையாக நான் தேர்ந்தெடுத்த கதை கல்லடிப் பாலம்
===============================================================================
செப்டம் பர் 2023 ல் வெளியான சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் பற்றிய எனது பார்வை
கதை 1: கல்லடிப் பாலம்
SOURCE : குங்குமம் 01.09.2023
ஆசிரியர் : ஹெச் . என் . ஹரிஹரன்
இன்ஸ்பெக்டர் கந்தவேல் அந்தப் பாலத்தில் நடந்து வருகிறார். அந்தப் பாலத்தில் இருந்து பலர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நிகழ்கிறது. அன்றும் ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. அந்தப் பாலத்திற்கு கல்லடிப் பாலம் என்று பெயர் வந்திருக்கிறது. பாலத்தில் இருந்து குதிக்கும் இடத்தில் பரவிக் கிடந்த பாறாங்கற்களால் அந்தப் பெயர்.
அன்றைய தற்கொலை நிகழ்வை டீல் செய்து விட்டு வீட்டுக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர். அந்த நேரத்திலும் அவரது மகனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்க , பையன் டேபிளில் கவிழ்ந்தபடி தூங்கிக் கொண்டிருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு வரை நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பையன் இன்ஜினியரிங் கல்லூரிக்குப் போகத் தொடங்கியதும் முற்றிலும் மாறிப் போய்விட்டான். ஹாஸ்டலில் இருந்த காலத்தில் போதைப் பழக்கமும் சேர்ந்திருக்கிறது. இரவில் தூக்கமின்றித் தவிக்கிறான்.
இன்ஸ்பெக்டருக்கு அன்றைய தற்கொலை பற்றிய அப்டேட் வருகிறது.
அன்று தற்கொலை செய்து கொண்டவன் காதல் தோல்வியால் அந்த முடிவுக்கு வந்தான் என்றும் அவனது பெற்றோர் அவன் பிரச்னையைப் பற்றி காது கொடுத்துக் கூட கேட்காததால் அப்படி முடிவெடுத்தான் என்றும் அவருக்கு செய்தி எட்டுகிறது.
தானும் கூடத் தன் மகனுடன் பேசுவதே இல்லை என்ற உண்மை அவரை உறுத்துகிறது. மகனிடம் பேசுவதை இன்னமும் தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்கிறார். அவர் வீட்டினுள் நுழையும் போது அவன் வெளியே கிளம்பிக் கொண்டிருக்கிறான். அவனுடன் பேச முற்படுவதற்குள் அவன் கடந்து போய் விடுகிறான்.
அவனது தாயோ டிவி சீரியல்களில் மூழ்கி இருப்பவள்.அவரது மகன் ஒரு ‘ தற்கொலை குறிப்பு’ எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான். ‘ யாரும் தன்னோடு பேசுவது இல்லை என்றும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறான். அவன் கிளம்பி போன போது நிறுத்தி ஒரு வார்த்தை பேசி இருந்தால் அவன் தற்கொலையைத் தடுத்திருக்கலாமோ எனத் தவித்து கல்லடிப் பாலத்திற்ககு விரைகிறார்.
அவனைத் தடுத்து ,வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்புகிறார் . இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள் ; கதை முடிகிறது.
மன அழுத்தம் என்பது சாதரணமாகி விட்ட இந்த தலைமுறையில் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்படும் தொடர்பு இடைவெளியையும் அது எத்தனை எளிதாக தீர்க்கப் படக் கூடியது என்பதையும் இயல்பான நடையில் தந்திருக்கிறார் இந்தக் கதையின் ஆசிரியர். காலத்திற்கேற்ற கருத்து அமைந்த சிறுகதை.
“ சிறு கதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை “ என்று எளிமையாக வரையறை செய்யலாம் “ என்று ஜெயமோகன் ஒரு புத்தகத்தில் கூறியிருப்பார். “ சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது என்பார். இந்தச் சிறுகதையின் முடிவும் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது.
கதை 2 : மணம்
SOURCE : தினமணி கதிர் 24 .09.2023
ஆசிரியர் :
ரோஜா ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிகிறாள் . அவளது பள்ளியில் படிக்கும் மாணவிகள் மனோரஞ்சிதமும் செண்பகமும். விளையாட்டு நேரத்தில் இரண்டு மாணவிகளும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். செண்பகம் தன் ஆடையில் சேற்றை வீசி அழுக்காக்கி விட்டதாகப் புகார் கூறுகிறாள் மனோரஞ்சிதம். அவளது அம்மாவிற்கு சிறிய கறை கூடப் பிடிக்காதாம். அம்மாவின் தண்டனையிலிருந்து அவளைக் காப்பாற்ற பழியைத் தான் ஏற்றுக்கொண்டு அவள் அம்மாவின் திட்டையும் வாங்கிக் கொள்கிறாள் ரோஜா.
ரோஜாவின் அப்பா காச நோயால் மரணம் அடைந்ததையும் குடும்பத்தை காப்பாற்ற வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததையும் அந்த விஷயம் தெரிந்த போது ரோஜாவின் அம்மா அவருடன் சண்டையிட்டுப் பிரிந்ததையும் நினைத்துப் பார்க்கிறாள். அவள் வீட்டு ஜன்னலை திறந்த போது துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்து முடித்த ஒரு தொழிலாளி வெளியே வருகிறார். அவரிடம் பேச்சு கொடுத்த போது அவர் மாணவி மனோவின் தந்தை என்பதும் வீட்டுக்கு தெரியாமல் அந்த வேலையை செய்து வருவதும் தெரிய வருகிறது. அப்பாவின் திதி செலவுக்காக வைத்திருந்த இருபதாயிரம் ரூபாய் அடங்கிய கவரை அவரிடம் கொடுத்து ஒரு தொழிலை ஆரம்பித்து வாழ்க்கையை நடத்துமாறு அறிவுறுத்துகிறாள் ரோஜா என முடிகிறது கதை.
சிறுகதை இலக்கணத்தை ஒட்டி சரியாகத் துவங்கி மையக் கருத்தையொட்டிப் பயணித்து தலைப்பை நியாயப் படுத்தி முடித்து வைத்திருப்பது சிறப்பு.
கதை 3 : கரித்த முகங்கள்
SOURCE : உயிரெழுத்து 23..09.2023
ஆசிரியர் : கு . இலக்கியன்
மார்க்கெட்டில் துப்புரவுத் தொழில் செய்து வருகிறாள் கடுகி. அத்தனை கடை வாசல்களையும் கூட்டிப் பெருக்கி சாணம் மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு வருவது அவள் வேலை. அவளது நிஜப் பெயர் கற்பகம். எப்போதும் முகத்தை கடு கடு என வைத்திருப்பாள் ; எனவே கடுகி என்று பெயர் சூட்டி இருந்தனர் மற்றவர்கள். அவளது வேலையைக் கச்சிதமாக செய்பவள். மார்க்கெட்டின் மதில் சுவரோடு இணைத்து தகரத்தால் வேய்ந்த சின்னஞ்சிறு குடிசையில் வசித்து வரும் கடுகி தன் வயோதிகத் தாயைத் தன்னோடு வைத்துக் கொண்டு வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வருகிறாள்.
ஒருநாள் விடியற் காலை கடைகளின் வாசல்களில் குவீந்திருந்த குப்பை கூளங்களை கூட்டிப் பெருக்கிக் குவித்து வைத்து தீ இடுகிறாள். காகிதங்களோடு நெகிழிப் பைகளும் சருகுகளும் கனன்று எரிய ஆரம்பித்து ஒரு பந்தல் தீ பற்றிக்கொண்டு அவள் கன்னத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட, மயங்கி விடுகிறாள். ஆஸ்பிட்டலில் சேர்க்கப்படுகிறாள். ஆனால் மார்க்கெட்டின் கடைக் காரர்கள் யாரும் கடுகியை எட்டிக் கூடப் பார்க்க வரவில்லை. அவளது தாய் யாராலும் கவனிக்கப் படாமல் மரணம் அடைந்திருக்கிறாள். தன்னைப் பற்றியும் தன் தாயின் மரணம் பற்றியும் ஒரு வார்த்தை கூடக் கேட்காத அந்தக் கடை வீதிக காரர்களை விட்டு வெளியேறுகிறாள். அந்த மனிதாபிமானமற்ற மனிதர்களின் முகங்கள் கடுகியின் மனத் தீயில் வெந்து கருகத் தொடங்கின எனச் சிறு கதையை முடிக்கிறார் ஆசிரியர் .
மனிதர்களின் சுயநலம், குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட மறந்து விடுகிற ஒரு மக்கள் கூட்டத்தின் இயல்பு என்பன மிகச் சரியாக வெளி வந்திருக்கிறது இந்தக் கதையில். கரித்த முகங்கள் என்ற தலைப்பும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
கதை 4 : ஃபங்ஷன்
SOURCE : குங்குமம் 15 ..09.2023
ஆசிரியர் : எம். எஸ் அனுசுயா
ஆதி , அகிலேஷ் என இரண்டு ஆண் குழந்தைகளின் தாய் வாணி. ஆதிக்கு 13 வயது. ஆகிலேஷூக்கு 5. சிறிய மகனுக்கு இருந்த ஆட்டிசம் பாதிப்பு அவளைக் கவலை கொள்ள வைக்கிறது. ஆதிக்கும் ஆகிலேஷுக்கும் ஒத்து வருவதில்லை. ஆகிலேஷூக்கு அண்ணனுடன் விளையாட ஆசை. ஆனால் அதை உணர்த்த தெரியாமல் அவஸ்தைப் படுகிறான்.
ஆதி தனது தம்பியை அவமான சின்னமாகக் கருதுகிறானோ என வருந்துகிறாள் வாணி. ஆதி தனது நண்பர்களோடு விளையாட செல்லும் போது தம்பி உடன் வருவதை விரும்புவதில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்கள் கூட தங்கள் குழந்தைகளை அகிலேஷுடன் விளையாட அனுப்புவதில்லை.
ஓரு நாள் எதிர் வீட்டுப் பிள்ளைக்குப் பிறந்த நாள் வருகிறது. அந்தக் கொண்டாட்டத்திற்கு ஆதியை மட்டும் அனுப்பும்படி வாணியிடம் கேட்கிறார்கள். அவனை மட்டும் அனுப்புவதா எனக் குழம்புகிறாள் அவள். அவள் கணவனோ ஆதி இப்படி ஃபங்ஷனுக்கு சென்று பல நாட்களாகி விட்டன என்றும் தான் போக முடியவில்லையே என்ற கோபத்தை அகிலேஷ் மீது காட்டக் கூடும் என்றும் கூறி ஆதியை அந்த பிறந்த நாள் விழாவிற்கு அனுப்பச் சொல்கிறான்.
நல்ல சட்டை, பேண்ட்டை எடுத்து ஆதியிடம் கொடுத்த வாணி “ பரிசுப் பொருள் ஒன்றும் வாங்கி வைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு எதிர் வீட்டுப் பிள்ளையின் பிறந்த நாள் விழாவிற்க்கு போகுமாறு சொல்கிறாள். ‘ நீ புறப்படும் முன்னால் சொல்லி விடு . இல்லாவிட்டால் உன் தம்பியும் வருவேன் என்று அடம் பிடிப்பான். ‘ என்கிறாள்.
‘ தம்பி வரவில்லையா? ‘ எனக் கேட்கிறான் ஆதி. “ இல்லை ; உன்னை மட்டும் தான் அழைத்திருக்கிறார்கள்” என்கிறாள் வாணி. ‘ தம்பியை அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்களா? ‘ என்று கேட்டவன் தன் உடையை அணிய மறுத்து ‘ நான் போகவில்லை’ என்கிறான். “ என தம்பியை வேண்டாம் என்று சொன்னால் அவங்க எனக்கும் வேண்டாம் “ என்று கூறியவாறு தம்பியின் அருகில் அமர்ந்து கொள்கிறான்.
ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தையைப் பெற்றவள் மன நிலை, சிறு வயதுக் குழந்தையின் முதிர்ச்சியான அணுகுமுறை என மனதைத் தொடும் கதையாக வந்திருப்பது சிறப்பு.
