
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைக்கப்பட்டிருப்பது திருமுருகாற்றுப்படை ஆகும். இந்நூலை இயற்றியவர் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் ஆவார். இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றும் கூறுவர்.
முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள் தருவதாகும். “முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.
இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை. ஆற்றுப்படைகள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பதிப்பித்தார். 1851- நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லை. உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துப்பாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.

இந்நூலானது உலகம் எனும் மங்கலச்சொல்லைக் கொண்டு தொடங்குகிறது.
உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .[05]
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
”உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.. அதன் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இருக்கிகிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து எங்கும் பாய்கிறது. அது நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது. அவனது திருவடிகள் துன்பத்தைப் போக்கும். அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.”என்பது இதன்பொருளாகும்.
முதலில் திருப்பரங்குன்றத்தைச் சொல்லவருவதால் அங்கு முருகப்பெருமான் திருமணம் செய்துகொண்ட தெய்வயானையும் நூலின் தொடக்கத்திலேயே நக்கீரர் கூறிவிடுகிறார்.
அடுத்துத் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரைக் காட்டுகிறார். இந்தப் படைவீட்டில் முருகப்பெருமான் யானை மீது திருவீதி உலா வரும் காட்சி காட்டப்டுகிறது.
கூற்றம் போல் முருகனின் யானை விரைந்து நடக்கும். அப்போது இருமருங்கிலும் தொங்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த வேழம் வலிமையில் புயல் காற்று கிளர்ந்து வீசுவது போன்றது. அம்பின் நுனி குத்தி ஆறிய வடுக்களைப் புள்ளிகளாகக் கொண்ட நெற்றியை உடையது. நெற்றியில் வாடா மாலையும், ஓடை என்னும் அணிகலனும் அதற்கு உண்டு. இத்தகைய யானைமேல் முருகன் காட்சி தந்தான்.
”வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் . . . .[80]
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்” என்பன பாடல் அடிகளாகும்.
திருவாவினன்குடி எனும் பழநியைப் பற்றி இப்பாடல் அடிகள் பேசுகின்றன
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் . . . .[170]
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் . . . .(175)
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று, . . . .(175 – 17×
அவனைக் காண வருவோர் எந்தப் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் ஒன்றாகக் கூடிக் கண்டு களித்தனர். எல்லாருமே உலகம் உயர்நிலை பெறுவதற்காக வானத்தில் விண்மீன் பூத்திருப்பது போல் தோன்றி முருகனை வழிபட்டனர். இவர்கள் அனைவரும் காற்றைப்போல் விரைந்து செல்லக் கூடியவர்கள். தீயைப்போல் அழிக்கும் திறம் பெற்றவர்கள். முருகன் பெயரை மின்னலில் தோன்றும் இடியைப்போல் முழங்கினர். வரிசை முறையில் காத்திருந்து தம் குறையைச் சொல்லி வரம் பெற வேண்டி அந்தரத்திலும் சுழன்று வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கெல்லாம் தன் மனைவியோடு காட்சி தந்தவண்ணம் முருகன் ஆவினன்குடியில் சிலநாள் அசைந்தாடும் உரிமையும் உடையவனனாக வீற்றிருந்தான்..
அடுத்துத் திருஏரகம் என்னும் சுவாமிமலை கீழ்க்கண்ட பாடல் அடிகளில் காட்டப்படுகிறது
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து . . . .(185)
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, . . . .(183 – 189)
திருஏரகம் என்னும் சுவாமிமலையில் இருபிறப்பாளர் வழிபாடு காட்டப்படுகிறது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன், பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக்கும் உணவு சமைப்பதே முத்தீ. பூணூலுக்குமுன் பூணூலுக்குப்பின் என்று அவர்களுக்கு இரண்டு பிறப்புக்கள் உண்டு. முப்புரிநூல் ஒன்பது கொண்டது அவர்களின் பூணூல். இவர்கள் நல்லநேரம் பார்ப்பவர்கள். ஈர ஆடையை உடுத்திக்கொண்டு புலர விடுபவர்கள். உச்சியில் கைகளைக் கூப்பித் தாம் வழிவழியாகச் சொல்லக் கேட்ட ஆறெழுத்து மந்திரத்தைத் தாமும் சொல்லி முருகனைப் புகழ்ந்து வாய்விட்டுப் பாடுவர். மணம் மிக்க மலர்களைத் தூவிப் பூசை செய்வர். இதனை விரும்பி முருகன் ஏரகத்தில் வாழ்தலும் உண்டு.
குன்றுதோறாடல் எனப்படும் திருத்தணியைப் பற்றி நக்கீரர் குறிப்பிடும்பொழுது முருகப்பெருமானின் தோற்றத்தையும் ஆட்டத்தையும் காட்டுகிறார்.
“செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .[210]
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையி னியல வேந்தி . . . .[215]
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே, யதாஅன்று
முருகப்பெருமான் சிவந்த மேனியும் சிவந்த ஆடையும் கொண்டிருப்பவன்; தளிர் ஆடும் காதுடையவன்; இடுப்பில் கச்சும் காலில் கழலும் அணிந்திருப்பவன்; தலையிலே வெட்சிப்பூக்களால் ஆன கண்ணி சூடியவன்; கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைக் கொண்ட தோளை உடையவன்; செம்மறியாட்டுக் கடாமீதும் மயில்மீதும் ஏறி வருபவன்; உயர்ந்த சேவல்கொடி கொண்டவன்; தொடி அணிந்த தோளுடன் யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டுடன் உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடையுடன் கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடையுடையவன். இப்படிப்பட்ட நிலையில் உள்ள அவன் மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் குன்றிருக்கும் இடமெல்லாம் கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.
அடுத்துப் பழமுதிர்சோலை காட்டப்படுகிறது.
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .(220)
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், . . . .(225)
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் . . . .(218 – 226)
”பழமையான முதிர்ந்த மலையில் சோலைகள் நிறைய உள்ளன. அங்கே தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்கு ஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா கொண்டாடுவார்கள். ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சி தரும் நிலையில் வேலன் வெறியாட்டம் நிகழும். ஆடுகளங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்; ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிருக்கும் துருத்தி நிலம்; ஆறு, குளம், வளைநிலம், ஊர்மேடை, தெரு முட்டுமிடம், பூத்திருக்கும் கடம்ப மரத்தடி, பொதுமக்கள் விளையாடும் மன்றம், பொதுமக்கள் கூடிப்பேசும் பொதியில் நிழலுக்காக அமைத்த தூண் மண்டபங்கள், ஆண்டலை என்னும் போர்ச்சேவல் கொடிநட்ட இடம் முதலான இடங்களில் முருகன் ஆங்காங்கு குடிகொண்டிருப்பான் என்று நக்கீரர் பழமுதிர்சோலையைக் காட்டுகிறார்.
அடுத்துத் தாங்கள் கருதிவந்ததைக் கூறுகின்றனர் அவர்கள் முருகனிடம் பரிந்துரை செய்தனர். ”முருகா ! உன்னிடம் வேண்டும் இவன் இரங்கத் தக்கவன். மழைபோல் அருள் பொழியத் தக்கவன். முதிர்ச்சி பெற்ற வாயால் ஏதோ சொல்லி இரக்கிறான். இரந்தாலும் இரக்காவிட்டாலும் உன் புகழைக் கேட்டு நயந்து உன்னை நாடி வந்திருப்பவன்.”என்றெல்லாம் இனியனவும் நல்லனவுமான சொற்களால் எடுத்துச் சொல்லி முருகனைப் புகழ்ந்தனர்.
அடுத்து அவர்கள் வேண்டுவதை இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.
“தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி . . . .[290]
யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் . . . .[295]
முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டுக் கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குபவன். இந்தத் தன்மையையெல்லாம் அவன் என்னிடம் வெளிப்படுத்த வேண்டும். அஞ்சாதே என்று சொல்லிப் பாதுகாக்க வேண்டும். நின் வரவை அறிவேன் என்று ஆறுதல் கூற வேண்டும். அன்பு மொழி கலந்து பேச வேண்டும். இருண்ட கடலால் சூழப்பட்ட உலகில் காத்தளிக்கும் கடவுளாக நீ மட்டுமே விளங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டும் பரிசில்”
இப்படித் தங்கள் தன்னலத்துகாக எவற்றையும் வேண்டாத அந்த அடியார்களைத் திருமுருகாற்றுப்படை காட்டுகிறது.
