குலோத்துங்கன்
‘சோழன் அதிராஜேந்திரன் மர்ம மரணம்! அடுத்த மன்னர் யார்’ என்று அந்நாளில் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. நாட்டில், குழப்பம் குடிகொண்டிருந்தது. அடுத்த சோழமன்னன் ‘யாரோ’ என்று மக்கள் குழம்பியிருக்க, அநபாயன் சோழமன்னன் ஆனான். குலோத்துங்கன் என்ற பட்டப்பெயர் கொண்டான். அந்த சந்தர்ப்பங்களைப் பற்றியோ, அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியோ விவரங்கள் கிடைக்கவில்லை. அதைப்பற்றி நாம் ஏதாவது எழுதி, நமக்கு எதுக்கு வம்பு! விஜயாலய சோழனின் நேரடி வாரிசு இன்றி, அதிராஜேந்திரனின் மறைவில், சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது.
குலோத்துங்கனுடைய குலக் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்: முதலாம் ராஜராஜ சோழனுடைய மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனுக்கும் பிறந்து, கீழைச் சாளுக்கிய நாட்டை, வேங்கியைத் தலைநகராகக் கொண்டு, ராஜராஜ நரேந்திரன் (கி.பி. 1011-1060) ஆண்டான். முதலாம் ராஜேந்திர சோழன், தன் மகள் அம்மங்காதேவியை ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் முடித்துத் தந்திருந்தான். ராஜராஜ நரேந்திரனுக்கும் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன் இந்த இரண்டாம் ராஜேந்திரன் (நமது குலோத்துங்கன்). சோழ நாட்டில், தாய் வீட்டில் பிறந்து, தாய்ப்பாட்டனுடன் வளர்ந்து, தமிழ் கற்று, போர்க்கலைகளையும் பயின்றான். இளம்பருவத்திலேயே சோழநாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருந்தான். கி.பி. 1060 இல் தந்தை ராஜராஜ நரேந்திரன் இறந்தது முதல், சுமார் பத்து ஆண்டுகள் இவனது வரலாறு அறியப்படவில்லை. அதை சாண்டில்யன் கடல்புறாவில் காட்டியிருப்பார். இக்காலத்தில், கீழைச் சாளுக்கிய நாட்டை, அநபாயனின் சிற்றப்பன் மகன் இரண்டாம் சக்திவர்மன், சிற்றப்பன் ஏழாம் விசயாதித்தன் ஆகியோர் அடுத்தடுத்து ஆண்டனர். (நீங்கள் நினைத்தது சரி தான்..மகன் சக்திவர்மன் இறந்த பிறகு தான் தந்தை விசயாதித்தன் ஆண்டான்)
குலோத்துங்கனின் ஆரம்ப காலங்கள் போர்க்காலங்கள். ஆட்சியை நிலைப்படுத்தும் பொருட்டு ஏற்பட்ட போர்கள் ஆதலால், அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் இருந்தது. துணை நின்று போர் புரிய தலை சிறந்த படைத் தலைவர்கள் இருந்தனர்.
பட்டமேற்ற உடனே, சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றனர். சில காலங்கள் போரிலும், கலகங்களை அடக்குவதிலுமே செலவிட நேர்ந்தது. இவ்வாறு, அருகே நிகழ்ந்த குழப்பத்தினில், நூறு ஆண்டுகள் இருந்து வந்த ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப்பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.
அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆறாம் விக்கிரமாதித்தன், சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான். குலோத்துங்கன், விக்ரமாதித்த சாளுக்கியனுடன் போர் புரிந்தான். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவியாக (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனைப் பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழப் படைகளோ சாளுக்கியப் படைகளை முன்னே வேகமாக தாக்க ஆரம்பித்தன. குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை வென்று, சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து, சோழநாடு திரும்பினான். வழியில், கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.
சாளுக்கியப் போரினை வென்று, அவன் நேராக பாண்டிய நாடு நோக்கி சென்றான். சோழப்படைத்தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே, அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான். சோழர்களின் படைத் தளபதி கருணாகரத்தொண்டைமானும், உடையான் ஆதித்த வேடவனாமுடையானும், பொன்னமராவதி அருகே முகாமிட்டு, குலோத்துங்கனுக்காகக் காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன், படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து, கலகத்தில் ஈடுபட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கினர். குலோத்துங்கன், இளவரசன் விக்கிரமனைப் பாண்டிய சோழன் என்ற பெயருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான்.
சேர யுத்தம்:
ராஜராஜ சோழனின் காலம் தொட்டு, காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. ஆயுதக் கிடங்காக இருந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள், பாண்டியர்கள் தோற்பதைக் கண்டு பின்வாங்கினர். காந்தளூர் அருகே, சேரமன்னன் ரவி மார்த்தாண்டவர்மன் தயாராக இருந்தான்- குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கலகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன், சேரர்களை எதிர்நோக்கிச் சென்றான். சேரர்கள், பாண்டியர்களைவிட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை, பின் வாங்கி கடலோடியது. பாண்டியப்படையும், இலங்கைப்படையும், சேரப் படைக்கு உதவினார்கள்.
கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் இருவரது தலைமையில் போரில் ஈடுபட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால், அவர் நேராக காந்தளூர் போரிற்குப் படையுடன் வந்தார். குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்துப் போரிட்டான். சேர ரவி மார்த்தாண்டவர்மன், குலோத்துங்கனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து, மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு, உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும், கப்பம் வாங்கவும் ஆணையிட்டுத் திரும்பினான் சோழன்.
இலங்கைப் போர் :
வீரராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய சிங்களத்து விஜயபாகு, குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக்காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். விஜயபாகு, சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்கச் செய்தான். குலோத்துங்கன், சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில், இலங்கை தேசத்தில், சோழ அரசின் பலம் குன்றியது. சிங்கள தேசத்தை இழக்க விருப்பப்படாத குலோத்துங்கன், தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே, சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கத் தொடங்கி இருந்தனர்.
ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள், அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். இத்தோல்வியினால் மனம் குன்றாத விஜயபாகு, புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து, சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும், அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான். சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.
குலோத்துங்கன், ராஜேந்திரனை சோழதேசம் திரும்பும்படிக் கட்டளை இட்டான். விஜயபாகு, சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும், வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது.
குலோத்துங்கன் காலத்துப் போர்கள் முடிந்து விட்டது என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்தே போவீர்கள். ரத்தக்களரியான ஒரு கொடூரமான பெரும்போர் வரவிருக்கிறது!
சோழநாட்டின் பொற்காலக் கதைகளை, சரித்திரம், இன்னும் பேசும்.
