”அண்ணா.. உங்க பொண்ணுக்கு அகாடமில மத்தியானம் 2.30 மணி ஸ்லாட் பிடிச்சுட்டேன்”
சந்தோஷமாகச் சொன்ன வரதனை கொஞ்சம் ஏமாற்றத்தோடு பார்த்தார் ராமாம்ருதம்..
“என்ன வரதன்.. 2.30 மணி ஸ்லாட்டா? கிருஷ்ணமூர்த்தி பையனுக்கு 4.30 மணி ஸ்லாட் கிடைச்சிருக்கே”
“அண்ணா.. அந்தப் பையன் கொஞ்சம் சீனியர்.. ஏற்கனவே 2.30 மணி ஸ்லாட்டுல ரெண்டு வருஷம் முன்னால பாடியிருக்கான்.. கவலைப் படாதேங்கோ.. இந்தத் தடவை பைரவியை பிசிரு தட்டாம எடுத்து விடச் சொல்லுங்கோ.. அதை வெச்சே அடுத்த தடவை உங்க பொண்ணுக்கு எல்லாத்தையும் பை பாஸ் பண்ணி நேர 6.30 மணி ஸ்லாட்டே பிடிச்சுடறேன்”
ராமாம்ருதத்துக்கு திருப்தி ஏற்படாவிட்டாலும் அவர் மகளுக்கு அகாடமியில் பாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷம் தான்.. எல்லாம் வரதனின் தயவு..
வரதன்.. வயது நாற்பத்தைந்து.. ஐந்தரை அடி உயரம்.. எலுமிச்சை நிறம்.. மேலே தூக்கி வாரிய முடி.. நெற்றியில் சின்ன புள்ளியாகக் குங்குமப் பொட்டு.. மீசையில்லாமல் மழ மழவென்று சவரம் செய்யப் பட்ட முகம்.. எப்பவும் உதட்டில் பளிச்சிடும் புன்னகை.. சீருடை போல் தினமும் வெள்ளை ஜிப்பா.. வேஷ்டி.. கையில் ஒரு டயரி.. அபார சங்கீத ஞானம் என்று சொல்ல முடியாது.. அவன் அப்பாவும் தாத்தாவும் சங்கீத வித்வான்கள்.. உழைப்பால் திறமையால் முன்னுக்கு வந்தவர்கள்.. ஆனால் வரதனுக்கு சின்ன வயதிலிருந்தே சங்கீதத்தில் ஆர்வமும் கிடையாது.. சாரீரமும் கிடையாது.. ஞானமும் கிடையாது.. அப்பா மற்றவர்களுக்குச் பாடம் எடுக்கும் போது சில ராகங்களை அஹஸ்மாத்தாகத் தெரிந்து வைத்திருந்தான்.. ஆனால் சங்கீதத்தை வைத்துத் தான் இன்று அவன் பிழைப்பு நடந்துக் கொண்டிருக்கிறது..
எந்த சபாவில் கச்சேரிக்கு வாய்ப்பு வேண்டும் என்றாலும் வரதனிடம் சொன்னால் போதும்.. எப்படியாவது சிபாரிசு செய்து வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விடுவான்.. அதற்கு அவன் சர்வீஸ் சார்ஜாக குறிப்பிட்ட தொகையை வசூலித்து விடுவான்.. சங்கீத சீசன் என்றில்லாமல் சபாக்களின் மாதாந்திர கச்சேரிகளில் பங்கேற்கவும் வரதனின் தயவு பலருக்குத் தேவைப் பட்டது.. வரதனும் எல்லா சபா காரியதரசிகளுடனும் சகஜமாகப் பழகுவதோடு சபாவுக்காக அடிக்கடி ஏதாவது காரியம் சாதித்துக் கொடுத்து அவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.. அதனால் எல்லா சபாக்களிலும் அவன் பேச்சுக்கு செல்வாக்கு உண்டு..
இதோடு காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றம் வேண்டுமே..
சில டி.வி. சேனல்களிலும் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டு அங்கு நடக்கும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சிலருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.. இதற்கு ஏக டிமாண்ட்.. அதனால் சர்வீஸ் சார்ஜும் கொஞ்சம் அதிகம்..
ஆக வருடம் முழுவது வரதனுக்கு பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.. மைலாபூர் நாட்டு முத்து முதலித் தெருவில் சிக்கனமான ஒரு சிங்கிள் பெட்-ரூம் பிளாட் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாகத் தான் இருக்கிறான்..
வரதனுக்கு ஒரு மகனும் மகளும்.. மகள் கோதை பிளஸ்-டூ படிக்கிறாள். கூடவே அவள் அம்மா வத்சலாவின் விருப்பப் படி பாட்டும் கற்றுக் கொள்கிறாள். தாத்தா கொள்ளுத் தாத்தாவைப் போல் அவளுக்கும் பாட்டில் நிறைய ஆர்வம் இருப்பதைக் கண்டு வரதனுக்கே ஆச்சர்யம்.. மகன் ரகு பத்தாவதில்..
வரதன் ராமாம்ருதத்துடன் பேசிக் கொண்டிருந்த போதே ”யாரோ.. இவர் யாரோ.. என்ன பேரோ” என்று சுதா ரகுநாதன் அவனுடைய மொபைலில் ரிங்டோனாகப் பாடி அழைத்தார்.
“ஹலோ..”
“வரதன்.. ஸ்ரீநிவாசன் பேசறேன்”
“மாம்பலம் மூர்த்தி தெரு பாகவதர் ஸ்ரீநிவாசன்.. சென்னை கல்சரல்ல இருபத்தி நாலாம் தேதி சாயந்தரம் ஏழு மணி ஸ்லாட் கன்பர்ம்ட்..”
”அப்படியா? ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப காம்படீஷன் இருந்துதே.. எப்படி சாதிச்சீர்?”
”அண்ணா.. எல்லாம் பெரியவா அனுக்ரஹம்..”
”இல்லை வரதன்.. எல்லாம் உம்ம வாக்கு சாதுர்யம் தான்.. உம்ம பேச்சைக் கேட்டா யாராலயும் எதையும் மறுக்க முடியாதே”
”அதெல்லாம் இருக்கட்டும்.. உடனே பக்கவாத்தியம் யாருன்னு மட்டும் டெக்ஸ்ட் பண்ணிடுங்கோ.. சபாகாராளுக்குச் சொல்லணும்”
“கண்டிப்பா.. மறுபடியும் சொல்றேன்.. உம்ம சிபாரிசு இல்லைன்னா நிச்சயமா இந்த சான்ஸ் கிடைச்சிருக்காது.. கமிஷனை கூகுள் பே பண்ணிடறேன்”
“அண்ணா.. கமிஷன்னு சொல்லாதேங்கோ.. தப்பு அர்த்தமாப் படறது.. சர்வீஸ் சார்ஜஸ்னு சொல்லுங்கோ”
“சரி.. சர்வீஸ் சார்ஜஸ்”
இதற்குள் டிவி சேனலிலிருந்து கால் வந்தது..
“சொல்லுங்கோ அருண்.. நாலாம் தேதி ரெகார்டிங்க்னு தான் ஏற்கனவே சொன்னேளே.. ஓ.. மியூசிக் சீசன் அப்படிங்கறதுனால சங்கீதம் பத்தி டிஸ்கஷனா? இருபது பேரா?.. சரி ஏற்பாடு பண்ணிரலாம்.. அந்த இருபது பேரும் கொஞ்சம் சங்கீத ஞானம் இருக்கறவாளா இருக்கணும்.. கூடவே கொஞ்சம் சினிமாப் பாட்டும் தெரிஞ்சிருக்கணும்.. அவ்வளவு தானே? ரெண்டு நாள் டைம் கொடுங்கோ.. ஏற்பாடு பண்ணிட்டுக் கூப்பிடறேன்”
இது வரதனுக்கு விழாக்கால போனஸ் மாதிரி.. இருபது பேரிடமிருந்தும் சர்வீஸ் சார்ஜ் வாங்கி விடுவான்.. அவர்களும் டிவியில் முகம் தெரியும் என்பதால் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்..
நாளாக நாளாக வரதனின் இந்த சேவை ரொம்பவே பிரபலமாகி விட்டது.. பிஸியாகி விட்டான்.. பண வரத்துக்கும் குறைவில்லை.. நாட்டு முத்து முதலித் தெருவிலிருந்த சிக்கனமான வீட்டை வாடகைக்கு விட்டு ரங்கா ரோடில் கொஞ்சம் விஸ்தாரமான பிளாட் வாங்கிக் குடியேறினான்.. புது மாருதி ஸ்விப்ட் கார் பார்க்கிங்கை அலங்கரித்தது.
வத்சலா குழந்தைகளிடம் அடிக்கடி கிண்டல் அடிப்பாள்..
“உங்க தாத்தாக்கள் பாடி சம்பாதிச்சா.. உங்கப்பா பேசியே சம்பாதிக்கறார்”
வரதனின் இந்த சேவையைப் பாராட்டி ஒரு பிரபல சபா “சங்கீத சிபாரிசுத் திலகா” அப்படின்னு விருது கொடுக்க ஏற்பாடு பண்ணி பல பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள்..
“சங்கீத உலகத்துக்கு இப்படி ஒரு சேவை அவசியம் தேவை.. வரதன் இன்னும் பல கலைஞர்களை ஊக்குவிச்சு அவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணம்னு கேட்டுக்கறேன்”
ஒரு பிரபல வித்வான் இப்படிப் பேசியவுடன் அரங்கமே கரகோஷித்தது..
அன்று வரதனுக்கு சால்வை, தங்க மெடல், பாராட்டு மடல்.. கூடவே ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை..
வரதன் தன் ஏற்புறையில்..
“எல்லாம் எங்க அப்பா தாத்தாவோட ஆசிர்வாதம் தான்.. எங்கப்பா என்னை சங்கீதம் கத்துக்கோன்னு முட்டிப்பார்.. ஆனா எனக்கு அதுல அப்ப விருப்பம் இருக்கலை.. கத்துண்டிருக்கலாமோன்னு இப்பத் தோணறது.. ஆனா அவர் கூடவே இருந்து இருந்து ஏதோ ஒரு வகைல சங்கீதம் என் ரத்தத்துல கலந்துருத்து.. அதனால தான் நான் பாடலைன்னாலும் பாட ஆசைப் படறவாளுக்கு சிபாரிசு பண்ணலாம்னு விளையாட்டா ஆரம்பிச்சேன்.. அது இன்னிக்கு பகவான் அருளால இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கு”
விழா லைவாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது..
விழா முடிந்தவுடன் சிலர் வரதனை சூழ்ந்துக் கொண்டு..
“சார்.. நாங்க இஞ்சியரிங் கிராஜுவேட்ஸ்.. உங்க பேச்சைக் கேட்டதுலேர்ந்து இஞ்சினியரிங்லாம் வேஸ்ட்.. டென்ஷன் இல்லாம.. மூலதனம் இல்லாம சம்பாதிக்க இது எவ்வளவு நல்ல வழின்னு புரிஞ்சுது.. இதுல என்ன பண்ணணும்.. எப்படிப் பண்ணணும்னு எங்களுக்கு கிளாஸ் எடுக்கறீங்களா? ஃபீஸ் கொடுத்துடறோம்.. அப்புறம் நாங்களும் பல பேருக்கு சிபாரிசு பண்ணறோம்”
இதைக் கேட்டு வரதனுக்கு சிரிப்புத் தான் வந்தது..
ஹும்.. சிபாரிசுக்கு இவ்வளவு மகிமையா?
அவர்களிடம் பிறகு பார்க்கலாம் என்று சொல்விட்டு வீடு திரும்பினான்..
அதுவரை எட்டிக் கூடப் பார்க்காத பக்கத்து வீட்டுக் காரர்களெல்லாம் டி.வி. பார்த்த பாதிப்பில் வரதனுக்கு வாழ்த்து சொன்னார்கள்..
ஏற்கனவே தயார் பண்ணி வைத்திருந்த பாதாம் கேக்கை வத்சலா எல்லோருக்கும் விநியோகம் பண்ணினாள்..
மறுநாள் பத்திரிகைகளில் வரதன் விருது வாங்கும் செய்தியும் படமும் வெளியாகின..
அன்று வரதன் வெளியே போய் விட்டு வீடு திரும்பும் சமயம் கோதை பாட்டு சாதகம் செய்துக் கொண்டிருந்தாள்.
அவள் பாடுவதைக் கேட்ட வரதன்..
“நல்லாத் தான் பாடறா”
மனதில் நினைத்து சந்தோஷப் பட்டான்.. ஆனால் எதுவும் சொல்லவில்லை..
காப்பி கொடுத்த வத்சலா அவனருகில் உட்கார்ந்து..
“கோதையோட பாட்டு வாத்தியார் உங்க கிட்டப் பேசணம்னு சொன்னார்”
வரதன் காப்பியை ருசித்துக் கொண்டே..
“என்னவாம்?”
“கோதைக்கு அபாரமான சங்கீத ஞானம்.. ஒண்ணு சொன்னா பத்து புரிஞ்சுக்கறா.. குடும்ப ரத்தத்துல சங்கீதம் இருக்கே.. ஞானம் இல்லாமப் போகுமா அப்படின்னார்”
“ம்ம்..”
“இப்பவே ஆலாபனையெல்லாம் அமர்க்களமா பண்ணறா.. அதனால கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிரலாம்னு சொன்னார்”
“ம்ம்..”
வத்சலாவுக்கு எரிச்சல் வந்தது..
“நான் என்ன கதையா சொல்லிண்டிருக்கேன்? ம்ம்.ம்ம்.னு ராகம் இழுத்துண்டு”
காப்பி டம்ளரை கீழே வைத்த வரதன்..
“இப்ப என்ன பண்ணணுங்கறே?”
“ஊருல இருக்கறவாளுக்கெல்லாம் சிபாரிசு பண்ணறார் உங்க ஆத்துக்காரர்.. சொந்த பொண்ணுக்குப் பண்ண மாட்டாரா? உடனே ஏதாவது பிரபல சபாவுல கோதையோட கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்கோன்னு பாட்டு வாத்தியார் சொன்னார்”
இதைக் கேட்டு வரதன் மௌனமாக இருந்தான்..
“என்னன்னா.. எதுவும் சொல்லாம மௌனமா இருக்கேள்? உடனே கோதையோட கச்சேரிக்கு சிபாரிசு பண்ணுங்கோ”
வரதன் அவளை தீர்கமாகப் பார்த்தான்.
“முடியாது”
இதைக் கேட்டு வத்சலாவுக்கு அதிர்ச்சி..
“முடியாதா? ஏன்?”
“என்னால கோதைக்கு சிபாரிசு பண்ண முடியாது”
“அதான் ஏன்னு கேட்கறேன்?”
“எல்லாம் எங்கப்பா சொன்ன பாடம் தான்”
வத்சலா புரியாமல் பார்த்தாள்.
“என்ன சொல்றேள்?”
“எங்கப்பா அவர் கிட்ட பாட்டு கத்துண்டவா கிட்டலாம் சொல்லுவார்.. சிபாரிசுல வாய்ப்பு தேடிக்காதே.. அது நிலைக்காது.. உன் திறமையை நிரூபிச்சு வாய்ப்பு தேடிக்கோ.. அது தான் என்னிக்கும் நிலைச்சு நிக்கும்னு.. எவ்வளவு பெரிய உண்மை.. நான் பிழைப்புக்காக சிபாரிசு பண்ணறேன்.. நிச்சயமா சுயநலம் தான்.. ஆனா அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அப்படித் தான் வரணும்..”
“… …”
“கவலைப் படாதே.. நம்ம தெரு பிள்ளையார் கோவில்ல பொங்கலுக்கு லோக்கல் டேலண்ஸ்களோட கச்சேரி ஏற்பாடு பண்ணப் போறாளாம்.. அதுல நம்ம கோதையோட கச்சேரியை வெச்சுக்கலாமான்னு கோவில் கமிட்டி சேர்மேன் எங்கிட்டக் கேட்டுட்டார்.. நானும் சரின்னு சொல்லிட்டேன்.. அந்தக் கச்சேரிக்கு எனக்கு ரொம்ப நெருக்கமான ரெண்டு சபா காரியதரசிகளைக் கூட்டிண்டு வரேன்.. அவா கோதை பாடறதை கேட்கட்டும்.. கோதை தன் திறமையை நிரூபிச்சா நான் சிபாரிசு பண்ணாமலே அவளுக்கு அவ திறமைனால பல வாய்ப்புகள் கிடைக்கலாம்.. கிடைக்கும்.. எனக்கு என் பொண்ணு பேருல நம்பிக்கை இருக்கு..”
என்று மகளைத் திரும்பிப் பார்த்தான்..
கோதை தோடி ஆலாபனையை ஆனந்தமாக அலசிக் கொண்டிருந்தாள்.
சங்கப் பலகை ஸ்ரீ அனந்தநாராயணன் சிறுகதைப் போட்டி 2023ல் மூன்றாம் பரிசு பெற்றது
